ஸ்ரீமுஷ்ணம் : 
          எழுத்தாளர்களின் பேனா குனிவதால்  சமூகம் தலை நிமிர வேண்டும்  என எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினர். ஸ்ரீமுஷ்ணம் வாசவி கப்புள்ஸ் கிளப்,  நிவேதிதா பதிப்பகம் சார்பில் புத்தக கண்காட்சி திறப்பு விழா மற்றும்  நூல்  வெளியீட்டு விழா நடந்தது. வாசவி கிளப் கப்புள்ஸ் தலைவர் ஜெகதீசன் தலைமை  தாங்கினார். நிவேதிதா பதிப்பகம் தேவகி வரவேற்றார். 
பிரபல எழுத்தாளர்  பிரபஞ்சன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆர்.சி.  சம்பத் எழுதிய "அந்த  நாள் நினைவுகள்', சபீதா ஜோசப் எழுதிய  "வ.உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு'  ஆகிய புத்தகங்களை வெளியிட்டு  பேசியது :
 
         தமிழகத்தில் புத்தக  கண்காட்சிகள் நடத்துவது மிகவும் அரிதான விஷயம்.  நகரின் வளர்ச்சி என்பது  கட்டடங்கள், அடிப்படை வசதிகள் வளர்வதில் இல்லை. நகரில் எத்தனை நூலகங்கள்,  தனியார் நூலகங்கள் வளர்ந்துள்ளன என்பதை பொறுத்து அமையும். இந்தியாவில்  கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் படிப்புக்கு விண்ணப்பங்கள் வினியோகம்  செய்யும் நிலை உள்ளது. நகரினை மையமாக வைத்து பள்ளிகளை உருவாக்குகிறார்கள்.  ஆனால் பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகள் இல்லாமல் நகரினை உருவாக்குவது  கிடையாது.  குழந்தை பிறக்கும் போது அவற்றை பள்ளியில் சேர்ப்பது குறித்த  கவலை இல்லை.
 
       குழந்தை பிறந்த 3 ஆண்டுகள் கழித்து அரசிடம் இருந்து  குழந்தையின் பெற்றோர்களுக்கு  பிறந்த குழந்தைக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி  குறித்த அறிவிப்பு தபால் மூலம் தெரிவித்து பள்ளியில் சேர்க்க வைக்கின்றனர்.  ஆனால் இந்தியாவில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இரவு பகலாக  பள்ளிக்கூட  வாசலில் தவம் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. வெளிநாடுகளில் விண்ணப்பம் தரும்  பழக்கமே இல்லை.   குழந்தைகளின் மனதில் கற்பிக்கும் திறனை வளர்க்க  வேண்டும். புத்தகங்களை வாங்கிக்கொடுத்து படிக்க பழக்க வேண்டும்.பெற்றோர்கள்  வீடுகளில் பூஜை அறை ஒதுக்குவது போல் புத்தகங்களுக்கு என தனியாக அறை ஒதுக்க  வேண்டும். குழந்தைகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து விரிவாக  தெரியப்படுத்த வேண்டும்.
 
          புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களின் பேனா  குனிவதால்  சமூகம் தலை நிமிர வேண்டும். மனிதனுக்கு அழகு என்பது அறிவும்,  ஆரோக்கியமும் தான். அழகிய முகம் உடையவர்கள்  வரலாற்றிலே இடம் பிடிக்க  முடியாது. வீரமாக வாழ்ந்தால் தான் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்.  எழுத்தாளர்கள் மனிதர்களுக்காக எழுதுகிறார்கள். ஆகவே அனைவரும் புத்தகம்  படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு எழுத்தாளர்  பிரபஞ்சன் பேசினார்.
          தொடர்ந்து கவிஞர் இன்பா சுப்ரமணியன் வாசவி வாசகர்  வட்டத்தை துவக்கி வைத்தார். இதில்  எழுத்தாளர்கள் சம்பத், சபீதா ஜோசப், ஆரிய  வைசிய சங்க தலைவர் ராஜேந்திரன், வாசவி கிளப் கப்புள்ஸ் சாசன தலைவர்  பத்மநாபன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கழுகுப்பார்வை   ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.