உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




எம்.எல்.ஏ.சபா ராஜேந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எல்.ஏ.சபா ராஜேந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 29, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை


கடலூர் :

     பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


     முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் போது துணிப்பை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இன்று எண்ணெய் கூட பாலித்தின் கவரில் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறிவிட்டது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வீதிகளில் எறியப்படுகிறது. இவை எளிதில் மக்குவதில்லை. இதனால் மண்ணில் மழை நீர் இறங்குவதை தடை செய்வதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதோடு, மண்ணின் வளமும் குறைந்து வருகிறது. இயற்கை வளத்தை மாசுபடுத்தும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயற்கை வள ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர ரத்னு, மாவட்டத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


     அதனையொட்டி சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் பாழ்படுத்தி வரும் மக்கா தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். அதனையொட்டி அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு நோட்டீஸ் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில், பீச், பஸ் நிலையங்களில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


              அதற்கு முன்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விட்டு எறிவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை மக்கள் உணரும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை இயற்கை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.  மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக்கிட கலெக்டர் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













Read more »

புதன், நவம்பர் 16, 2011

மக்கள் நலப்பணியாளர் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம்: கடலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

          மக்கள் நலப்பணியாளர் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பண்ருட்டி தணிகை செல்வன் தலைமையில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் எம்பி கணேசன், சபா.ராஜேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Read more »

ஞாயிறு, மே 29, 2011

கடலூர் மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசலே சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு காரணம்

         கட்சியில் புரையோடியுள்ள ஜாதிய உணர்வு மற்றும் கோஷ்டி அரசியல் காரணமாக, தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள, 20 தொகுதிகளிலும் தி.மு.க., படுதோல்வி அடைய நேரிட்டுள்ளது' என கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியது:

             ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த தற்போதைய கடலூர், விழுப்புரம் மாவட்டம், தி.மு.க., தேர்தலை சந்தித்த காலத்தில் இருந்தே கோட்டையாக விளங்கி வந்தது.அந்த கால கட்டத்தில் தொண்டர்கள் ஜாதி, மதங்களை மறந்து கொள்கை பிடிப்போடு இருந்தனர். தொண்டர்களை வழி நடத்திய நிர்வாகிகளும் அவ்வாறே செயல்பட்டனர். கொள்கை ஈடுபாடும், ஆற்றல் மிக்கவர்கள் நிர்வாகிகளாக இருந்ததால், மாவட்டமே தி.மு.க.,வின் கோட்டையாக விளங்கியது.

           ஒருங்கிணைந்த மாவட்ட செயலராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது கட்சியில் ஜாதிய உணர்வு மேலோங்கியதால், தொண்டர்கள் ஜாதி வாரியாக பிளவுபட்டனர். அதேகால கட்டத்தில், கட்சியின் பொறுப்புகளுக்கு ஏற்கனவே பொறுப்புகளில் இருந்தவர்களின் வாரிசுகளே நியமிக்கப்பட்டனர். இதனால், காலம் காலமாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் பதவிக்கு வரமுடியாததால் அவர்களின் செயல்பாடு குறைந்தது.

           இந்நிலையில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தை, கட்சியின் நிர்வாக வசதிக்காக, கடலூர் மற்றும் விழுப்புரம் என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கடலூர் மாவட்ட செயலர் பதவிகளுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், விழுப்புரம் மாவட்ட செயலர் பொன்முடியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல், ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வன்னியர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அல்லாதவர்களே, கட்சிப் பதவிகளுக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்கினர்.

           அனைத்திற்கும் மேலாக, மாவட்டத்தில் கட்சி பொறுப்புகளுக்கு வருபவர்கள் தங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். இவர்களை மீறி, கட்சியில் கோலோச்ச முயன்றவர்கள், மாவட்ட செயலர்களால் பல்வேறு வழிகளில் ஓரம் கட்டப்பட்டனர்.

          இவ்வாறு கட்சி ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் மகன் சம்பத், பழனியப்பன், கடலூர் மாவட்ட செயலராக இருந்த மருதூர் ராமலிங்கம், துரை கிருஷ்ணமூர்த்தியின் மகன் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் உள்ளிட்ட பலர் ஓரம் கட்டப்பட்டனர். இவர்களுக்கு கட்சி பதவி முதல் எம்.எல்.ஏ., சீட் பெற முடியாமல் மாவட்ட செயலர்கள் தடை ஏற்படுத்தி வந்தனர். இதே பாணியை கடந்த தேர்தலிலும் கையாண்டனர். தனது எதிர்ப்பாளர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே, வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குத் தள்ளி விட்டனர்.

        இவர்களால் ஓரம் கட்டப்பட்ட நிர்வாகிகள், கட்சியில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க சொந்த கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க, உள்ளடி வேலைகளில் ஈடுபடத் துவங்கியதால் கோட்டையில் ஓட்டை விழத் துவங்கியது. இதே நிலைதான் நடந்து முடிந்த தேர்தலிலும் நீடித்தது.

          கடலூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த அய்யப்பனுக்கு "சீட்' மறுக்கப்பட்டது. அந்த விரக்தியில் அவர் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க உள்ளடி வேலை செய்தார். அவரை அழைத்து சமாதானம் செய்வதற்கு பதிலாக, அவரை கட்சியை விட்டு நீக்கச் செய்தனர். அவர் வேறு வழியின்றி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அ.தி.மு.க.,வில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக மாவட்டத்தின் தலைநகர் தொகுதியான, கடலூரில் தி.மு.க., வேட்பாளர் வரலாறு காணாத வகையில் படுதோல்வி அடைய நேரிட்டது.

           பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட சபா ராஜேந்திரன், மாவட்ட செயலரின் எதிரணி என்பதால், அவரை தோற்கடிக்க உள்ளடி வேலைகள் படு ஜோராக நடந்தது. இதேபோன்று மாவட்ட செயலரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிட்ட, குறிஞ்சிப்பாடி தொகுதியில் அவரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து முழுவீச்சில் உள்ளடி வேலைகளை செய்தனர். இதில் உச்சகட்டமாக பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க விழுப்புரம் மாவட்ட செயலரான பொன்முடியும், அவரை தோற்கடிக்க மற்றொரு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் முன்னோடி அமைச்சர் ஒருவரும் உள்ளடி வேலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

        இதே உள்ளடி வேலை விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அரங்கேறியது. இழந்த பெருமையை மீட்க, கட்சியின் தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, எங்களைப் போன்ற மூத்த தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. இவ்வாறு தி.மு.க., மூத்த நிர்வாகி கூறினார்.


Read more »

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு



தொலைநோக்கு பார்வையில்

 

 திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் கருணாநிதி;

 

 தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பேச்சு

நெல்லிக்குப்பம்:
             பண்ருட்டி தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன், நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட விஸ்வாதபுரத்தில் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார். பின்னர் வான்பாக்கம், கீழ்பட்டாம்பாக்கம், காமராஜர் நகர், அண்ணா நகர் உள்பட 15 வார்டுகளில் வாக்கு சேகரித்தார்.


அப்போது பண்ருட்டி தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன்  பேசியது:- 



               தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சொன்னதையும், சொல்லாததையும் சேர்த்து திட்டப்பணிகளை செய்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. தமிழ்நாட்டில் தொலை நோக்கு பார்வையில் திட்டங்களை செய்தவர் முதல்-அமைச்சர் கலைஞர். நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிக்கு மட்டும் இதுவரை ரூ.10 கோடி நிதி உதவி திட்டங்களை செய்தவர் முதல்-அமைச்சர். தமிழ்நாட்டில் மீண்டும் திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற 6-வது முறையாக கலைஞர் முதல்-அமைச்சராகி பணிகள் செய்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பேசினார்.



             வேட்பாளருடன் நகரமன்ற தலைவர்கள் கெய்க்வாட்பாபு, பச்சையப்பன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், காந்திராஜ், நகர தலைவர் திலகர், பா.ம.க. நகர செயலாளர் வேலாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிசாமி, தி.மு.க. நிர்வாகிகள் ஜெயசீலன், முகமது அனீப், சம்பத், தனகோடி, நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

செவ்வாய், மார்ச் 22, 2011

கடலூர் மாவட்டத்தில் தி மு.க.கூட்டணி மற்றும் ஐ.ஜே.கே. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி மற்றும் ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். 

 குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி

            கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் பன்னீர்செல்வம், பண்ருட்டியில் சபா ராஜேந்திரன், கடலூரில் புகழேந்தி போட்டியிடுகின்றனர். 

              மூவரும் நேற்று 12.45 மணிக்கு கடலூர் நகர தி.மு.க., அலுவலகத்திலிருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ., முருகேசனிடம் புகழேந்தி மனுத்தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று குறிஞ்சிப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி துணை கலெக்டர் (முத்திரைத்தாள்) நடராஜனிடம் பகல் 1.10 மணிக்கு மனு தாக்கல் செய்தார். பண்ருட்டி வேட்பாளர் சபா ராஜேந்திரன் ,தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரியுமான திருவேங்கடத்திடம் மனு தாக்கல் செய்தார். 

சிதம்பரம்

                 சிதம்பரம் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் மூவேந்தர் முன்னேற்றக்கழக ஸ்ரீதர் வாண்டையார் கூட்டணி கட்சியினருடன் தெற்கு வீதியில் இருந்து ஊர்வலமாக வந்தார். வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி இந்துமதியிடம் மனு தாக்கல் செயதார். 

விருத்தாசலம்

              விருத்தாசலம் தொகுதியில் ஐ.ஜே.கே., (இந்திய ஜனநாயக கட்சி) வேட்பாளர் சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த, மாநில இளைஞர் அணி செயலர் கிருஷ்ணமூர்த்தி கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வழிபட்டார். பின் ஊர்வலமாக சென்று நேற்று மதியம் 12.40 மணிக்கு தொகுதி தேர்தல் அலுவலர் ஆர்.டி.ஓ., முருகேசனிடம் மனு தாக்கல் செய்தார். 

ஐ.ஜே.கே. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,

             " நான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தொகுதி வளர்ச்சிக்கு நிச்சயம் பாடுபடுவேன். பொழுது போக்கு பூங்கா மற்றும் நகரை அழகு படுத்தும் திட்டம் செயல்படுத்தி விருத்தாசலத்தை அழகு நகரமாக மாற்றுவேன்' என்றார்.

Read more »

சனி, மார்ச் 19, 2011

பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பிரசாரம் தொடக்கம்

பண்ருட்டி:

          பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சபா.ராஜேந்திரன், திமுக, கூட்டணிக் கட்சி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.

               பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சபா.ராஜேந்திரன் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கடலூர் மாவட்டச் செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரு பிரிவினராக செயல்பட்டு வந்தனர்.தொகுதி மறுசீரமைப்புக் காரணமாக நெல்லிக்குப்பம் தொகுதி பண்ருட்டி தொகுதியுடன் சேர்த்தும், பண்ருட்டி தொகுதியில் இருந்த 30 பஞ்சாயத்துக்களை புதிதாக உருவான நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டது.

                தற்போது நடைபெற உள்ள தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் சபா.ராஜேந்திரனும், மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், அண்ணாகிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன் ஆகியோர் விருப்ப மனு செய்தனர். இதில் கடும் போட்டிகளுக்கு இடையே சபா.ராஜேந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்ததாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறினர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பண்ருட்டி வந்த திமுக வேட்பாளர் சபா.இராஜேந்திரன் அண்ணா, காமராஜர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

Read more »

வெள்ளி, மார்ச் 18, 2011

பண்ருட்டி திமுக வேட்பாளர் - சபா.ராஜேந்திரன் வரலாறு

தொகுதி : 
  பண்ருட்டி 
 
பெயர் :
 
  சபா.ராஜேந்திரன்
 
வயது :
                49  
 
பிறந்த ஊர் :  
 
         சொரத்தூர்,  பண்ருட்டி தாலுக்கா, கடலூர் மாவட்டம்  
 
தந்தை :  
 
       சி.சபாபதி படையாச்சி  
 
 தாய் : 
 
       எஸ்.பவுனாம்பாள்.
 
 மனைவி :  
 
எஸ்.அங்கையர்கண்ணி, எம்.எஸ்சி.,  
 
 மகன் :
 
 எஸ்.சுமந்த்  
 
சகோதரர்கள் :
 
2  
 
சகோதரிகள் :
 
2   
 
படிப்பு :  
 
பி.எஸ்சி.,(கணிதம்) பி.இ., (மெக்கானிக்கல்)  
 
இனம் :  
 
இந்து, வன்னியர்.  
 
 
கட்சி, பொதுப்பணி :   
 
            1981 முதல் கட்சி உறுப்பினர்,  2004 முதல் பண்ருட்டி ஒன்றிய செயலர். 1996-ல் சொரத்தூர் ஊராட்சி தலைவர்.  தற்போது நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.   
 

Read more »

சனி, மார்ச் 12, 2011

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்ற தி.மு.க.வினருக்குள் போட்டி


சபா.இராஜேந்திரன். - டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் - வி.கே.வெங்கட்ராமன்
பண்ருட்டி:
 
           2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் நிற்பதற்கு தி.மு.க.வினருக்குள் கடுமையான போட்டி நிலவுகிறது. 
 
               இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், தற்போதைய நெல்லிக்குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் சபா.இராஜேந்திரன், அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன் ஆகிய மூன்று பேரும் தங்களின் மேலிட செல்வாக்கை பயன்படுத்தி பண்ருட்டி தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரையில் தனியாக இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி தற்போது பண்ருட்டி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 
 
               பண்ருட்டி தொகுதியில் இருந்த பெரும்பாலான ஒன்றிய கிராமங்கள் புதிதாக உறுவாக்கப்பட்டுள்ள நெய்வேலி தொகுதிக்கு சென்று விட்டன. தற்போதைய பண்ருட்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,89,368. இதில் 95,037 ஆண் வாக்காளர்களும், 94,331 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.2001-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியிலும், 2006-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியிலும் இருந்த பா.ம.க.வுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் இரண்டு முறையும் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட தி.வேல்முருகன் வெற்றி பெற்றார்.
 
                இந்நிலையில் நெய்வேலி தொகுதியை பெற பா.ம.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் தி.வேல்முருகன் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வருகின்றன. 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.வேல்முருகனை எதிர்த்து போட்டியிட்ட சொரத்தூர் இரா.இராஜேந்திரன் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும் பா.ம.க.வின் செல்வாக்கு நிறைந்த பண்ருட்டி ஒன்றிய கிராமங்கள் தற்போது நெய்வேலி தொகுக்கு சென்று விட்டதால் பா.ம.க. பண்ருட்டியை தவிர்த்து நெய்வேலிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.      
 
                தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. பண்ருட்டி அருகே உள்ள நெய்வேலி தொகுதிக்கு குறிவைத்துள்ளதால் பண்ருட்டி தொகுதி தி.மு.க.வுக்குதான என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்து பின்னர் ம.தி.மு.க., அ.தி.மு.க. என பல்வேறு கட்சிகளுக்கு சென்று தற்போது மீண்டும் திமுகவுக்கு வந்துள்ள டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் பண்ருட்டி தொகுதியை பெற தீவிரம் காட்டி வருகிறார்.
 
           2006 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்ற சபா.இராஜேந்திரன், கருணாநிதியின் மகன் தமிழரசன் ஆதரவுடன் பண்ருட்டி தொகுதியை பெற்று விட்டதாக கூறி கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து தேர்தல் பணியில் களம் இறங்கி விட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதேபோல் அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன். 
 
                மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தியின் மகனாவார். இவர் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கி பழகிய தற்போதைய தி.மு.க. அமைச்சர்கள் வீரப்பாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி மூலம் பண்ருட்டி தொகுதியை பெற தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.இந்நிலையில் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.வான சபா.இராஜேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு பலமாக உள்ளது. 
 
                 இதனால் அமைச்சரின் ஆதரவாளர்களான டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணனுக்கோ, அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமனுக்கோ அல்லது கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ மாவட்ட அமைச்சர் ஆதரவு தெரிவிக்கலாம் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு மறுபுறம் உட்கட்சி பூசல் இருக்கையில் எது எப்படி இருந்தாலும் பண்ருட்டி தொகுதியை பெற்று விட்டதாக எண்ணி சபா.இராஜேந்திரன் தேர்தல் பணியை தொடங்கி விட்டார்

Read more »

செவ்வாய், நவம்பர் 30, 2010

மலட்டாறில் தண்ணீர்: விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லிக்குப்பம் : 

               மலட்டாறு தூர் வாரியதால் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

                திருக்கோவிலூர் பெண்ணையாற்றில் இருந்து உபரி நீர் மலட்டாறில் திருப்பி விடப்படும். விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த ஆறு பண்ருட்டி அடுத்த கட்டமுத்து பாளையம் வரை செல்கிறது. கடந்த 1972ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது மலட்டாறு மணல் மேடானது. இதனால் மலட்டாறுக்கு நீர் வரத்து நின்றது. ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சிக் கூடல் தலைவர் தட்சணாமூர்த்தி, இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் இ.ஐ.டி., சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் இணைந்து தூர் வார முயற்சி மேற்கொண்டனர்.

                    இதற்கிடையே கடந்த 2008ம் ஆண்டு எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் முயற்சியால் அரசூர் முதல் கட்டமுத்துப்பாளையம் வரை 17 கி.மீ., தூரம் தூர் வாரப்பட்டது. கடந்த ஆண்டு மழையின் போது ஆற்றில் நீர்வரத்து துவங்கியது. தற்போது பெண்ணையாற்று வெள்ளத்தால் மலட்டாறின் தண்ணீர் ஓடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் 66 கிராம மக்களும் விவசாயிகளும் பயனடைந்துள்ளனர். 

                   மேலும் மலட்டாற்றில் 50 அடிக்கும்மேல் மணல் இருப்பதால் தூர் வாரிய மண் சரிகிறது. விவசாயிகள் நலன் கருதி ஆற்றின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்க வேண்டும். அரசூரில் ஷட்டர் அமைப்பது, கரும்பூர், திருத்துறையூர், கட்டமுத்துப்பாளையம் பகுதிகளில் பாலம் கட்டும் பணியும் நிலுவையில் உள்ளது. இப்பணிகளையும் முடித்தால் 66 கிராம விவசாயிகள்  நிரந்தரமாக பயன் பெறுவார்கள்.

Read more »

வியாழன், அக்டோபர் 21, 2010

கடலூர் மாவட்டத்தில் முதலாவது சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறை

நெல்லிக்குப்பம் : 

                   வரக்கால்பட்டு பள்ளியில் சுற்றுச்சூழல் மேம் பாட்டு கழிவறையை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார். நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளியில் வேர்எவர் இந்தியா சர்வீஸ் அமைப்பினர் சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறை கட்டியுள்ளனர். இங்கு ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் இருக்கும். முதலில் ஒன்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

                     மலம் கழித்தவுடன் தண்ணீர் ஊற்றாமல் சாம்பல் போட வேண்டும். துர்நாற்றம் இருக்காது. அந்த டாங்க் நிரம்பியவுடன் காற்று புகாமல் மூடிவிட்டு அடுத்த கழிவறையை பயன்படுத்த வேண்டும். மூடி வைத்த டாங்கில் உள்ள மனித மலம் சில மாதங்களில் மக்கி தரமான விவசாய உரமாகிவிடும். மனித சிறுநீரையும் வீணாக்காமல் தொட்டியில் பிடித்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

                     இதுபோன்ற கழிவறைக்கு தண்ணீர் தேவையும் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று இருபது பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்படுகிறது. மாவட்டத்திலேயே முதன் முதலாக வரக்கால்பட்டு பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஜெயா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பிளஸ் தொண்டு நிறுவன தேசிய இயக்குனர் பரமசிவம், ஆறுமுகம், அனுகிரகா சேட்டிலைட் டவுன் நிர்வாக இயக்குனர் மணிரத்தினம், அந்தோணிசாமி, அங்கமுத்து, கவுன்சிலர்கள் விஜயகுமார், தமிழ்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் சுற்றுச்சூழல் கழிவறையை திறந்து வைத்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசுகையில், 

                          "தமிழக முதல்வர் கருணாநிதி வழியில் தொடர்ந்து நாங்களும் பாடுபடுகிறோம். கழிவறை கட்டுவது முக்கியமல்ல. மாணவர்கள் முறையாக பயன்படுத்தினால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். மாணவர்கள் நன்றாக படித்து தனியார் பள்ளிகளை விட நன்கு மதிப் பெண் பெற வேண்டும்' என பேசினார்.

எம்.எல்.ஏ., வருத்தம் : தற்போது வரை வரக்கால்பட்டு பகுதி என் தொகுதியில் உள் ளது. தொகுதி மறு சீரமைப்புக்குப்பின் இந்த ஊர் குறிஞ்சிப்பாடியில் சேர்வது வருத்தமாக உள்ளது. என்னால் முடிந்தவரை பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட் டேன் என வருத்தத்துடன் பேசினார்.

Read more »

புதன், அக்டோபர் 06, 2010

நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., முயற்சியில் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி ஆப்சென்ட்

நடுவீரப்பட்டு : 

                சாத்திப்பட்டு மற்றும் நடுவீரப்பட்டு பகுதிக்கு நெல்லிக்குப்பம் எம். எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி "ஆப்சென்ட்' ஆவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

                  பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்ல பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சாத்திப்பட்டிலிருந்து  சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர் வழியாக கடலூருக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண். 27 எஸ்) காலை மற்றும் மாலை என இரு வேளை இயக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே மகிழ்ச்சி நீடித்த நிலையில் தற் போது எவ்வித முன் அறிவிப்புமின்றி மாதத்தின் பல நாட்கள் பஸ் இயக்கப்படுவதே இல்லை.

                 திடீரென பஸ் நிறுத்தப்படுவதால் இப் பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்குச் செல்பவர்கள் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் அடுத்த பஸ் பிடித்துச் செல்ல 10 மணிக்கு மேல் ஆகிறது. ஒவ்வொரு நாளும் பஸ் வருமோ? வராதோ? என சந்தேகத்தின் பேரிலேயே பஸ் நிறுத்தத்தில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உள்ளது. 

                        எம்.எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்லும் ஒரே அரசு பஸ் இதுதான் என்பதால் இந்த பஸ்சை காலை முதல் இரவு வரை இதே வழி தடத்தில் தொடர்ந்து இயக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சனி, ஜூலை 31, 2010

கிராமப் பகுதியில் குறைகளை கேட்டறிந்தார் நெல்லிக்குப்பம் எம்எல்ஏ

பண்ருட்டி:

           நெல்லிக்குப்பம் தொகுதியில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் பொதுமக்களிடம் இருந்து குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

              நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட எய்தனூர், கீழ்அருங்குணம், பல்லவராயநத்தம், நத்தம், சுந்தரவாண்டி ஆகிய கிராமப் பகுதியில் மக்கள் குறை சார்ந்த மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ சபா.இராஜேந்திரன், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்திக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார். 5 பஞ்சாயத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபா.இராஜேந்திரன் கூறினார்.

                 ஊராட்சி மன்றத்தலைவி சுந்தரி தலைமையில் நடைபெற்ற விழாவில், பண்ருட்டி வட்டாட்சியர்  பி.பன்னீர்செல்வம், அண்ணாகிராம ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகர், தமிழரசி, திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் பலராமன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

திங்கள், ஜூலை 19, 2010

நெல்லிக்குப்பதில் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதியுதவி

நெல்லிக்குப்பம் : 

          தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் கூரை வீடு தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது. தீ விபத்தில் வீட்டை இழந்த கலியபெருமாளுக்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வேட்டி, சேலை, அரிசி, ரொக்கப்பணம் வழங்கினார். நிகழ்ச்சியில் சேர்மன் கெய்க்வாட்பாபு, துணைத் தலைவர் புகழேந்தி, தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் அங்கமுத்து, பழனிவேல், கவுன்சிலர்கள் நிர் மலா, வீரமணி, காங்., பார்த்திபன், விடுதலை சிறுத்தைகள் புரு÷ஷாத்தமன், புலிகொடியான் உட் பட பலர் உடனிருந்தனர்.

Read more »

வியாழன், ஜூலை 15, 2010

பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் இலவச "டிவி' வழங்கும் விழா

பண்ருட்டி: 

              தொரப்பாடியில் 2035 பயனாளிகளுக்கு இலவச "டிவி'க்களை எம்.எல்.ஏ., வழங்கினார். பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு சேர்மன் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் பன்னீர்செல்வம், துயர்துடைப்பு தாசில்தார் மங்கலம் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் அருணாசலம் வரவேற்றார். எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் 2035 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி'க்களை வழங்கினார். னழாவில் அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் செயலாளர் பலராமன், பேரூர் செயலாளர் கலியமூர்த்தி, பண்ரடக் கோட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், ராகவன், கவுன்சிலர்கள் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளி, ஜூலை 09, 2010

கூரைவீடுகளே இல்லாத மாநிலமாக மாறப்போகிறது: எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் பேச்சு

நெல்லிக்குப்பம் : 

            நெல்லிக்குப்பம் நகராட்சி வைடப்பாக்கத்தில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடந்தது.

              கவுன்சிலர் சித்ரா, ரவிராஜன் தலைமை தாங்கினர். தாசில்தார் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். 307 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வழங்கினார். மேலும், வீட்டு மனைப்பட்டா வழங்கி மரக்கன்றுகள் நட்டார். கல்விக்குழு மூலம் வழங்கிய 5,000 ரூபாய் நிதியை துவக்கப் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார். சேர்மன் கெய்க்வாட் பாபு, துணைத் தலைவர் புகழேந்தி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன், கவுன்சிலர்கள் தமிழ்மாறன், விஜயகுமார், அசல்அலி, தி.மு.க., பழனிவேல், அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசுகையில்,

               தமிழகத்தில் மட்டுமே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழைக்களுக்காக பல நல்ல திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி வருகிறார். கூரை வீடுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற போகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஒருநாளில் மட்டும் ஆயிரம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளோம். விரைவில் நகராட்சி பகுதியில் இலவச "டிவி' வழங்கப்படும். இதுபோன்ற நல்ல திட்டங்கள் தொடர முதல்வர் கருணாநிதியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்' என பேசினார்.

Read more »

புதன், ஜூன் 30, 2010

பள்ளியில் அரசு விழா: மாணவர்களின் படிப்பு பாதிப்பு

நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் பகுதிகளில் அரசு விழா என்றால் பெரும்பாலும் பள்ளிகளிலேயே நடத்தப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

                அண்ணாகிராமம் ஒன்றியம் எழுமேடு ஊராட்சி முத்துக்கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் அபூர்வம் தலைமை தாங்கினார். பலராமன், சங்கர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பன்னீர்செல் வம் வரவேற்றார்.   டி.ஆர்.ஓ., நடராஜன், எம்.எல். ஏ., சபாராஜேந்திரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். சமூக  நல பாதுகாப்பு தாசில்தார் மங்களம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன் உட்பட பலதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் 25 பேருக்கு வீட்டுமனைப்பட்டா 14 பேருக்கு உதவித்தொகை ஆறு பேருக்கு பட்டா மாற்றம் உத்தரவுகள் வழங்கப்பட்டது.

இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் திறந்து வைத்து பேசுகையில், 

                   "அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களால் வருவாய் துறையினருக்கு ஓய்வே இல்லை. குடிசை வீடுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறப்போகிறது. மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். உங்களுக்காக பணியாற்றவே நாங்கள் இருக்கிறோம்' என கூறினார். அரசு சார்பில் நடைபெறும் மருத்துவ முகாம், மனுநீதிநாள், மக்கள் குறைகேட்பு என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அப்பகுதிகளில் உள்ள பள்ளியிலேயே அதுவும் வேலை நாட்களில் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சி துவங்குவதற்கு இரண்டு மணிநேரம் முன்பே மைக் செட்கட்டப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படுவதுடன் அன்று முழுவதும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

Read more »

செவ்வாய், ஜூன் 15, 2010

நடுவீரப்பட்டு உயர்மட்ட பாலம் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., ஆய்வு

நடுவீரப்பட்டு :

                    நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் பார்வையிட்டார். அப்போது அவரிடம் பாலத்திற்கான இணைப்பு சாலை போட்டு உடனடியாக பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் அருகில் நடுவீரப்பட்டு பகுதியில் ஹைமாஸ் விளக்கு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

                      அண்ணா கிராம முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், ஒன்றிய கவுன்சிலர் கந்தசாமி, ஊராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், நடுப்பேட்டை கிளை செயலாளர் நடராஜன், சி.என்.பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், அப்துல் அஜிஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

காடாம்புலியூர் அருகே அழகப்பசமுத்திரத்தில்குறிஞ்சி மழலையர் பள்ளி திறப்பு விழா

கடலூர் : 

               காடாம்புலியூர் அருகே அழகப்பசமுத்திரத்தில் குறிஞ்சி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியை எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

                 காடாம்புலியூர் அடுத்த அழகப்பசமுத்திரத்தில் குறிஞ்சி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி திறப்பு விழா நடந்தது. ரட்சகர் தலைமை தாங்கினார். புதிய பள்ளி கட்டடத்தை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் திறந்து வைத்து பேசினார். ஆசிரியர் ஜான்போஸ்கோ வரவேற்றார். பெருமாள், அறக்கட் டளை தலைவர் ஜெயந்தி, செயலாளர் கலாராணி குத்துவிளக் கேற்றி வைத்தனர். உறுப் பினர்கள் சாந்தி, அமுதா, வித்யா, மஞ்சுளா, சுதா முன்னிலை வகித்தனர்.

                 விழாவில் என்.ஜி.ஓ., சங்க மாநில நிர்வாகி கார்மேகவண்ணன், மாவட்ட தலைவர் செல்வம், வன்னியர் சங்க துணைத் தலைவர் திருமால்வளவன், கவுன்சிலர்கள் ராஜா, சுப்ரமணியன், ஊராட்சி தலைவர் ஆரோக்கியதாஸ், கோதண்டராமன், ஓய்வு பெற்ற மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், கிரீடு நடனசபாபதி, டாக்டர் கலைநேசன் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை குறிஞ்சி மழலையர் பள்ளி உறுப்பினர்கள் பூங்கொடி, ருக்மணி, ஆர்த்தி, ஜெயந்தி, லட்சுமி, முத்துலட்சுமி, மைதிலி, ஜெயந்தி, ராஜலட்சுமி, ரேணுகாம்பாள் ஆகியோர் செய்திருந் தனர்.

Read more »

திங்கள், ஏப்ரல் 26, 2010

உழவர் அடையாள அட்டை ஆலோசனைக் கூட்டம்

 பண்ருட்டி : 

             நெல்லிக்குப்பம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உழவர் அடையாள அட்டை  அனைவருக்கும் வழங்குவது குறித்து வி.ஏ.ஓ.க்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
 
              எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்  மங்கலம், தனி தாசில்தார் பன்னீர்செல்வம்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார்கள் முத்துராமன், நசீர், வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், வி.ஏ.ஓ.,க் கள் சம்பத், முருகவேல், ஜோதிமணி, சரவணன், சங்கரநாராயணன், வீரராவ், முன்னாள் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பலராமன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் உழவர் அடையாள அட்டை விரைவில் வழங்க வேண்டும். முதியோர் உதவி தொகை, 'கான்கிரீட்' வீடுகள் கணக்கெடுப்பில் தகுதியுள்ளவர்கள் பெயர்களை விடுபடாமல் சேர்க்க வி.ஏ.ஓ.,க்கள்  விரைந்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வெள்ளி, ஏப்ரல் 23, 2010

சாத்திப்பட்டில் கால்நடை மருத்துவமனை சட்டசபையில் அமைச்சர் உறுதி


நெல்லிக்குப்பம்:

                 சாத்திப்பட்டு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை துவங்கப்படுமென அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நெல்லிக்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் பேசும் போது, 'என் தொகுதிக்குட்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம் சாத்திப் பட்டு கிராமத்தில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். இவர்களிடம் ஆடு, மாடு கோழி என 7,000 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
 
                    அருகில் உள்ள ஊர்களிலும் அதிகளவு கால்நடைகள் உள்ளன. முந்திரி விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் கால்நடை வளர்ப்பை நம்பியே வாழ்கின்றனர். அப்பகுதியில் குறைந்த பட்சம் கால்நடை கிளை நிலையம் அமைத்து தர வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த கால்நடை துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி 'ஒரு கிராமத்தில் 3,000 மேல் கால்நடை இருந் தால் கிளை நிலையமும், 10 ஆயிரத்திற் கும் மேல் இருந்தால் கால்நடை மருந்தகமும் துவங்க முடியும். சாத்திபட்டு கிராமத்தில் எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் கூறியபடி எண்ணிக்கைக்கு தகுந்த படி கிளை நிலையம் துவக்கப்படும்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior