உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் மாவட்ட செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாவட்ட செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 14, 2010

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணி: 115 பேர் தேர்வு

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் 108  ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர்காணலில் 115 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் சார்பில் 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர்காணல் கடந்த 11ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றார். 

                108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான  நடந்த நேர்காணலில் குறித்த விவரங்களை மண்டல மேலாளர் பிரபுதாஸ் மற்றும் மனித வள மேம்பாடு  நிறுவனர் அப்பாதுரை ஆகியோர் எடுத்துக் கூறினர். பின்னர் நடந்த நேர்காணலில் மெடிக்கல் டெக்னீஷியன் பதவிக்கு 52 பேரும், ஆம்புலன்ஸ் டிரைவர் பதவிக்கு 63 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வரும் ஜனவரி 3ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சென்னை அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டு பின் பணி நியமனம் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 115 பேருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) வைத்தியநாதன் வாழ்த்து தெரிவித்தார். 

Read more »

சனி, டிசம்பர் 11, 2010

சிதம்பரத்தில் 112 வயதிலும் உழைக்கும் "இளைஞர்"



சிதம்பரம் : 

               யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது "இளைஞர்' ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

                கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார்.எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். ஆனால், தனது மகள்கள் வீட்டில் தங்காமல் தள்ளாத வயதிலும், யார் தயவும் இன்றி தனியாக வசித்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்தும், தனக்கு தெரிந்த கயிறு திரிக்கும் தொழிலைக் கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார்.


                      ஆடு மேய்த்த நேரம் போக, கிழிந்த நைலான் சாக்குகளைக் கொண்டு கயிறு செய்து விற்பனை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என வெறு மனே வாயால் கயிறு திரித்து  உழைக்க விரும்பாமல், அடுத்தவர்களை நம்பியே காலத்தை ஓட்டும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், தள்ளாத வயதிலும்,  யாருடைய தயவையும் எதிர்பாராமல் உழைத்து சாப்பிடும் முதியவரை, இல்லை, இல்லை இந்த 112 வயது "இளைஞரை' நினைத்தால் பெருமைப்படாமல் இருக்கமுடியாது.

Read more »

வெள்ளி, டிசம்பர் 10, 2010

என்.எல்.சி. சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து 16 பேர் காயம்

நெய்வேலி:

               நெய்வேலி என்.எல்.சி. முதலாவது சுரங்கத்தில் வேலை பார்ப்பதற்காக வி.பாயிண்டிலிருந்து சுரங்கத்திற்கு தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு லாரி சென்றது. இந்த லாரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் எந்திரம் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

                இந்த விபத்தில் லாரியில் இருந்த 16 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ஆரோக்கியதாசன், தர்மலிங்கம் ஆகியோர் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
 
 

Read more »

புதன், டிசம்பர் 08, 2010

கடலூர் நகராட்சிக்கு மத்திய அரசின் மதிப்பெண்

கடலூர்:
              
             சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரம் கடலூர். 500 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த நகரம் இது.

                ஆங்கிலேயர்கள் வணிகத்துக்காகத் தமிழகத்துக்குள் நுழைந்தபோது அமைத்துக் கொண்ட முதல் தலைநகரம் கடலூர். அவர்கள் கட்டிய முதல் கோட்டை, கடலூர் புனித டேவிட் கோட்டை. சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் இருப்பதால், அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களுக்காக மாநிலத் தலைமை அலுவலகங்களைத் தொடர்பு கொள்வது கூட, கடலூர் மாவட்ட நிர்வாகத் தலைவர்களுக்கு எளிதான விஷயம்.

               நூற்றுக்கணக்கான கோடி முதலீட்டில் ரசாயனத் தொழிற்சாலைகளை, பன்னாட்டு நிறுவனங்கள் அமைத்துக் கொள்ள மத்திய அரசு, தாராளமாக இடம் ஒதுக்கி இருக்கும் நிலங்கள், கடலூரை அடுத்துள்ள கடற்கரையில்தான் அமைந்துள்ளன. இத்தகைய புகழ்மிக்க நகரம் சுகாதாரக் கேட்டின் விளிம்பில் உள்ளது.கடலூர் மக்கள் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரியாகச் செலுத்துகிறார்கள். ஆனால் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறுவதில் கடலூர் மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

                மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அண்மையில் இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கும், இந்திய நகராட்சிகளின் சுகாதாரம் மற்றும் குடிநீர் தரம் பற்றிய அறிக்கையில் (ரிப்போர்ட் கார்டு) கடலூர் நகராட்சிக்கு அளித்து இருக்கும் சான்றிதழ் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.அந்த அறிக்கையில் ஒவ்வொரு, இனங்களிலும் 

கடலூர் நகராட்சிக்கு அளித்திருக்கும் மதிப்பெண் கீழே தரப்படுகிறது 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது பெறவேண்டிய மொத்த மதிப்பெண்):
நகரில் ஏழைகளுக்குக் கிடைத்துள்ள தனிப்பட்ட மற்றும் சமூக கழிப்பிட  சுகாதார வசதிகள்: 0 (4). 

நகருக்குள் வந்து போகும் மக்கள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த மக்களுக்குக் கிடைத்திருக்கும் கழிப்பறை வசதிகள்: 1.48 (4).

நகரில் திறந்தவெளிகளை கழிப்பிடமாகப் பயன்படுத்தாமல் இருப்பது: 0 (4).

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றி இருப்பது: 4 (4). 

மனிதக் கழிவுகளை பாதுகாப்புடன் சேகரிப்பது: 3 (6). 

நகரில் உற்பத்தியாகும் மிக மோசமான கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்புடன் வெளியேற்றுவதல்: 0 (6). 

நகரில் உற்பத்தியாகும் நடுத்தர கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்புடன் வெளியேற்றுதல்: 0 (3).

நகரில் உற்பத்தியாகும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து உபயோகித்தல்: 0 (3). 

மழைநீரை பாதுகாப்புடன் வெளியேற்றுதல்: 1 (3). 

மொத்த திடக் கழிவுகளையும் அவ்வப்போது சேகரித்தல்: 1 (4). 

மொத்த திடக்கழிவுகளையும் சுத்திகரித்து பாதுப்புடன் அகற்றுதல்: 0 (4).

நகரக் கழிவுகளால் சுற்றுப் புறங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருத்தல்: 0 (5). 

திறந்தவெளிகள் கழிப்பிடமாக மாற்றுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள்: 0 (4). 

கழிவுகள் அகற்றும் அமைப்புகளின் சரியான செயல்பாடுகள்: 0 (5). 

மழைநீர் அகற்றும் அமைப்புகள் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள்: 2 (4).

நகர மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரின் தரம்: 1.75 (7). 

நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீராதாரங்களின் தரம்: 0 (7). 

தண்ணீரால் உண்டாகும் நோய்களை கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள்: 3 (6).

                 ஏனைய நகராட்சிகளுக்கு வழங்குவதைப் போல் கடலூர் நகராட்சிக்கும் அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. இருப்பினும் இந்த அவலநிலை ஏன் என்று தெரியவில்லை.சுனாமி நிவாரணப் பணிகளுக்காக மட்டும், கடலூர் நகராட்சிக்கு ரூ. 35 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மட்டும் கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 2 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுளளது. ஆனால் அவை எல்லாம் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன.

               கடலூர் நகராட்சிக்கு வரவேண்டிய வரிபாக்கி மட்டும் ரூ. 17 கோடி என்று அண்மையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. தற்போது வசூலிக்கப்படும் வரி முழுவதும் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியமாகவும், மின் கட்டணம் மற்றும் குடிநீர் திட்டப் பராமரிப்புப் பணிகளுக்குச் சரியாகிவிடுவதாகக் கூறப்படுகிறது.இதனால் பொதுநிதியில் பணம் இல்லை. பொதுநிதியில் பணம் இருந்தால்தான் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளமுடியும் என்கிறது நகாராட்சி நிர்வாகம். சில சிறப்பு திட்டங்களுக்கு அரசு நிதி வழங்குகிறது என்றும் நகராட்சி தெரிவிக்கிறது.

Read more »

நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில் நண்டுவாக்களிகள் பிடிபட்டன



கடலூர் : 

             கடலூர் நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில், தினமலர் செய்தி எதிரொலியால் புதர்கள் அகற்றப்பட்ட போது நண்டுவாக்களி மற்றும் பாம்புகள் பிடிபட்டன.

              கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் கோட்டப் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கோட்டப் பொறியாளர் அலுவலகம் பழமையான கட்டடம் என்பதாலும், மேல் தளத்தில் அதிகளவில் இலைச் சருகுகள் இருந்ததாலும் தண்ணீர் தேங்கி கட்டடத்தினுள் கசிந்தது. மேலும், இக்கட்டடத்தைச் சுற்றிலும் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தன. 

                   புதர்களில் இருந்து வரும் பாம்புகள் அலுவலகத்தில் படையெடுக்க துவங்கியதால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்திலேயே பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து, பொறியாளர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் இருந்த மரங்கள், செடி, கொடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின், பாம்புகளை பிடிக்க கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம் சந்த் வரவழைக்கப்பட்டார். இவர் எட்டு காளியாங்குட்டி பாம்புகளை பிடித்தார். இவை அனைத்தும் இரண்டரை அடி முதல் மூன்றடி நீளம் வரை இருந்தன. மேலும், 40 நண்டுவாக்களிகளும் பிடிபட்டன.

Read more »

செவ்வாய், டிசம்பர் 07, 2010

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு 29 பேர் உயிரிழந்தனர்

கடலூர்:
 
                வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

                   நேற்று இரவு மழை நின்றதால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 29 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior