உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கரும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 06, 2012

கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பன்னீர்கள் கரும்பு நாசம்: பொங்கலுக்கு விலை கடுமையாக அதிகரிக்கும்

கடலூர்:

           கரும்பு அதிகம் விளையும் மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் ஒன்று. இங்கு சர்க்கரை உற்பத்தி செய்ய தேவைப்படும் வெள்ளை கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு கடித்து சாப்பிடும் கறுப்பு கரும்பு ஆகிய இரு வகைகளும் பயிரிடப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் ஏக்கர் கறுப்பு கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தன.

              சிதம்பரம் பகுதியில் உள்ள வல்லம்படுகை, வேலக்குடி, காந்தியமேடு, கடவாக்குறிச்சி, பண்ருட்டி பகுதியில் உள்ள கொரணாப்பட்டு, சத்திரம், சிவானந்தபுரம், பட்டினக்கோட்டை, மதன கோபாலபுரம் மற்றும் நெய்வேலி பகுதியிலும் கறுப்பு கரும்புகள் பயிரிட்டிருந்தனர். “தானே” புயலால் இந்த கரும்புகள் அடியோடு நாசமாகிவிட்டது.

             எனவே பொங்கலுக்கு கரும்பு அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது. சாதாரணமாக ஒரு கரும்பு 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த கரும்புகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இவற்றை வெட்டி வெளி மார்க்கெட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்தனர்.

             இதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்திருந்தனர்.ஆனால் இப்போது கரும்பு முற்றிலும் நாசமாகி விட்டதால் இவற்றை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கரும்பு விலை கடுமையாக அதிகரிக்கும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் ரசாயன உரங்களின் விலை உயர்வு


கடலூர்:
 
             ரசாயன உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.  
 
                தமிழகத்தில் விவசாயப் பணிகள் பெரும்பாலும் ஆடிப் பட்டத்தில்தான் தொடங்குகின்றன. தென்மேற்குப் பருவழை பெய்து வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.  ஆடி மாதம் 18-ம் தேதிக்குப் பிறகு கரும்பு விதைக் கரணைகள் பதிப்பது, சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தொடங்க இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏனைய பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் நிலங்களில், சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தொடங்க இருக்கின்றன.  இந்நிலையில் ரசாயன உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.  
 
                   1-4-2010-க்குப் பிறகு மத்திய அரசு புதிய உரக் கொள்கையை அறிவித்தது. அதன் பிறகு யூரியா உரம் தவிர, ஏனைய உரங்களின் விலைகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டன.  உரத்துக்கான மானியம் ரூ.1 லட்சம் கோடி, உரத் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் யூரியை தவிர மற்ற ரசாயன உரங்களின் விலைகள், வாரம்தோறும் உயர்த்தப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். உர மூட்டைகளில் அச்சிட்டு இருக்கும் விலையைவிட கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வேளாண்துறை அறிவிக்கிறது. 
 
              6 மாதங்களுக்கு முன் டி.ஏ.பி. உரம், மூட்டை (50 கிலோ) ரூ. 480 ஆக இருந்தது, தற்போது ரூ. 610 முல் ரூ. 656 வரை விற்பனை செய்யப்படுகிறது.  பொட்டாஷ் உரம் மூட்டை ரூ. 260 ஆக இருந்தது, தற்போது ரூ. 312 ஆக மூட்டைகளில் அச்சிடப்பட்டு இருந்தும், ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொட்டாஷ் உரம் பெருமளவுக்கு தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 6 மாதங்களுக்கு முன் 17-17-17 கலப்பு உரம் மூட்டை ரூ. 450 ஆக இருந்தது, தற்போது ரூ. 550 ஆகவும், 20-20-13 கலப்பு உரம் மூட்டை ரூ. 355 ஆக இருந்தது தற்போது, ரூ.510 ஆகவும், சூப்பர் பாஸ்பேட் உரம் மூட்டை ரூ. 180 ஆக இருந்தது ரூ. 240 ஆகவும் உயர்ந்து விட்டது.  யூரியா தவிர மற்ற உரங்களில் விலைகள் வாரம் தோறும் உயர்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
 
              ஆகஸ்ட் முதல் வாரத்தில் சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற இருக்கும் நிலையில், உரங்களின் விலையேற்றம் விவசாயிகளை பெரிதும் கவலைக் கொள்ளச் செய்து உள்ளது.  ஆகஸ்ட் மாதத்துக்கு மேல், கடலூர் மாவட்ட சம்பா சாகுபடிக்கு மட்டும், குறைந்தபட்சம் டி.ஏ.பி. உரம் 3 லட்சம் மூட்டைகளும், யூரியா 1.5 லட்சம் மூட்டைகளும், பொட்டாஷ் உரம் 50 ஆயிரம் மூட்டைகளும் தேவைப்படும் என்று வேளாண் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
 
இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
 
          "யூரியா தவிர மற்ற ரசாயன உரங்களின் விலைகள், அரசின் கட்டுப்பாடு இல்லாததால், கடுமையாக உயர்ந்து வருகின்றன.வாரம்தோறும் விலைகள் அதிகரிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் உரங்களின் தேவை அதிகரிக்கும் நிலையில், விலைகள் மேலும் தாறுமாறாக உயரும் அபாயம் உள்ளது. பொட்டாஷ் உரம் பற்றாக்குறையாக இருப்பதால், மூட்டைகளில் அச்சிட்ட விலைகளை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.நெல், கரும்பு உள்ளிட்ட விளை பொருள்களுக்கு, ஆதார விலைகளை உயர்த்தாதபோது, உரங்களின் விலைகளை மட்டும் உயர்த்துவதில் நியாயமில்லை' என்றார். 
 
 பெண்ணாடம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், 
 
              "பொட்டாஷ் உரம் 45 நாள்களாகக் கிடைக்கவில்லை. தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்' என்றார். 
 
இது குறித்து வேளாண் அலுவலர் ஒருவர் கூறுகையில், 
 
               "யூரியா உரம் விலை மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற உரங்களின் விலைகள் மூட்டைகளில் அச்சிட்டதைவிடக் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆனால் உரங்களின் விலைகளை உர உற்பத்தி நிறுவனங்கள் வாரம் தோறும் உயர்த்துகின்றன. அதிக விலைக்கு விற்பதாகப் புகார் வந்து, நடவடிக்கை எடுக்கச் செல்வதற்குள், விலை உயர்ந்து விடுகிறது. இதனால் நடவடிக்கை எடுப்பதிலும் பெரிதும் குழப்பம் ஏற்படுகிறது' என்றார்.
 
 
 
 

Read more »

புதன், ஜூலை 06, 2011

விருத்தாசலத்தில் கரும்பு சாறிலிருந்து பானம் தயாரித்தல் பயிற்சி

விருத்தாசலம் : 

        விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கரும்பு சாறிலிருந்து பதப்படுத்தப்பட்ட பானம் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

         விருத்தாசலத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இம்மாதம் இரண்டாம் வாரத்தில் கரும்பு சாறிலிருந்து பதப்படுத்தப்பட்ட பானம் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

                கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணை சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு முதலில் வரும் நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால், கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரிடையாக வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





Read more »

வியாழன், மே 26, 2011

கரும்பில் அதிக மகசூலுக்கு சொட்டுநீர்ப் பாசன முறை




கடலூர் அருகே மருதாடு கிராமத்தில் கரும்புப் பயிருக்கு சொட்டுநீர்ப் பாசன வசதி செய்யப்பட்டு இருப்பதை பார்வையிடுகிறார் வேளாண் துணை இயக்குநர் சந்திரமோகன்
 
கடலூர்:
 
             கரும்புப் பயிருக்கு சொட்டுநீர் பாசனம் கடலூர் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. 
 
              பாரம்பரிய விவசாயத்தில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் மகசூல் கிடைக்கிறது. கரும்புப் பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்வதால் ஏக்கருக்கு கரும்பு மகசூல் 100 டன் வரை கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.தண்ணீர் தேவையும் உரத் தேவையும் குறைகிறது. உரம் தண்ணீரில் கரைத்து அளிக்கப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கரும்புப் பயிரில் சொட்டு நீர்ப்பாசனம் பிரபலம் ஆகி வருகிறது. கரும்புக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ள அரசு 65 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. 
 
             டான்ஹோடா என்ற அமைப்பின் மூலமாகவும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாகவும் இந்த மானியம் வழங்கப்படுகிறது. மானியத் தொகையில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு கரைசல் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுகின்றன. மீதம் உள்ள தொகை சொட்டுநீர்ப் பாசனத்துக்கான கருவிகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த மானியம் தனிநபர் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் 20 அல்லது 25 பேரை ஒருங்கிணைத்து குழு ஒன்று பதிவு செய்யப்படுகிறது. இக்குழு மூலம் அதில் உறுப்பினர்களாக உள்ள கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 
 
            கடலூர் வட்டாரத்தில் கரும்பு துல்லியப் பண்ணை திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மறுதாடு கிராமத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ள கரும்பு வயல்களை வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வீ.சந்திரமோகன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திருப்தி தெரிவித்ததாக கடலூர் வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரன் தெரிவித்தார். துல்லியப் பண்ணை விவசாய திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொள்வதால் பாசன நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகிறது.  நீரில் கரையும் உரங்களை இடுவதால் நிறைந்த மகசூலுக்கு வழிவகுக்கிறது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்ததாக இளவரசன் குறிப்பிட்டார்.
 
 
 

Read more »

சனி, பிப்ரவரி 05, 2011

கடலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் இயந்திரம் பற்றாக்குறை விவசாயிகள் தவிப்பு

நெல்லிக்குப்பம் : 
 
            கரும்பு வெட்டுவதற்கு போதுமான இயந்திரம் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக அதிகளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. 

                கடந்த சில ஆண்டுகளாக அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் கரும்பு பயிரிடும் பரப்பளவும் குறைந்து வருகிறது. ஆனால் அகலக்கால் முறையில் கரும்பு நடவு செய்தால் களை எடுப்பது, அறுவடை செய்வது போன்ற பணிகளை இயந்திரங்கள் மூலம் செய்யலாம் என ஆலை நிர்வாகம் கூறியது. இதனை நம்பி அகலக்கால் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பெரும்பாலான விவசாயிகள் அதிகளவிலான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

                ஆலை நிர்வாகத்திடம் உள்ள ஒரே ஒரு இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 200 டன் மட்டுமே கரும்பு வெட்ட முடியும். தற்போது பயிரிடப்பட்டுள்ள கரும்புகளை ஒரே இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்வது என்பது இயலாத காரியம். இதனால் குறிப்பிட்ட காலத்தில் கரும்பு வெட்ட முடியுமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கரும்பு அறுவடை இயந்திரத்தை வாங்க ஆலை நிர்வாகம், தனியாருக்கு வங்கிக் கடன் வசதி செய்து தந்தால் வாங்கத் தயாராக உள்ளனர். ஆலை நிர்வாகம் அதற்கான முயற்சி செய்ய வேண்டும்

Read more »

வியாழன், பிப்ரவரி 03, 2011

கரும்பு தோகையை உரமாக்குவது எப்படி?


 
                 கரும்பு தோகையை எரிக்காமல் அதை உரமாக்கி பயன்படுத்தும் முறை குறித்து வேளாண் துறையினர் யோசனை கூறியுள்ளனர்.  கரும்பு அறுவடைக்குப் பிறகு பெரும்பாலான விவசாயிகள் கரும்பு தோகையை வயலிலேயே எரித்து விடுகின்றனர். 
 
             இதனால் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் இயற்கை எரு வீணாகிறது.  எருவின் மூலம் கிடைக்கக் கூடிய 100 கிலோ தழைச்சத்து (220 கிலோ யூரியாவுக்கு சமம்) 50 கிலோ மணிச்சத்து (315 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுக்கு சமம்), கந்தகச் சத்துகள் கிடைப்பதில்லை. மேலும் மறுதாம்பு கரும்பின் முளைப்புத்திறன் 30 சதவீதம் குறைகிறது. வளர்ச்சியும் தடைபடுகிறது.  மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் அழிக்கப்படுகின்றன. எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே கரும்புத் தோகையை எரிக்காமல் உரமாக்கி நிலத்தை வளப்படுத்தலாம். 
 
 உரமாக்கும் முறை:  
 
                கரும்பு வயலின் ஒரு மூலையில் 1 மீட்டர் அளவில் குழி எடுக்க வேண்டும். அக்குழியில் 500 கிலோ கரும்பு தோகையினை போட வேண்டும். அதன் மேல் வயல் மண் (அ) கரும்பு ஆலைக்கழிவு (பிரஸ்மட்) 500 கிலோவை இட்டு, அதன் மேல் 10 கிலோ பாறை பாஸ்பேட், 10 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ யூரியா கலவையை தூவ வேண்டும். மேற்கூறிய அனைத்தும் நன்கு நனையும்படி நீர்த் தெளிக்க வேண்டும். 
 
                இவ்வாறு உருவாக்கிய அடுக்கின் மேல் மாட்டுச்சாணம், மக்கிய எரு மற்றும் வயல் மண் கலந்த கரைசலை 500 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். இவ்வாறாக குழி நிரம்பும் வண்ணம் 10 முதல் 15 அடுக்குகள் இடுவதன் மூலம் 5 டன் கரும்பு தோகையை உரமாக்கலாம்.  இறுதியாக உரக்குழியை நில மட்டத்துக்கு மேல் அரை அடி உயரம் மேடாகும் வண்ணம் மண் கொண்டு மெழுகி மூடிவிட வேண்டும்.  மூன்று மாதங்கள் கழித்து குழி முழுவதையும் நன்கு மக்குமாறு கலக்கிவிடவேண்டும். 
 
                      மக்கும் எரு நன்கு நனையுமாறு வாரம் ஒருமுறை நீர்த் தெளித்து பராமரித்தால் ஆறு மாதத்துக்குள் மக்கிய கரும்பு தோகை உரம் தயாராகிவிடும். இதை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தி நல்ல பயன் பெறலாம் என செய்யாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவுத்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior