உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கல்வித்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வித்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் 44 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு

கடலூர் : 

         கடலூர் மாவட்டத்தில் 44 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

           பள்ளி கல்வித் துறையின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12ம் கல்வி ஆண்டிற்கு தமிழ்நாட்டில் 710 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றில் கடலூர் மாவட்டத்தில் 44 பள்ளிகள் அடங்கும்.
 

கம்மாபுரம் ஒன்றியத்தில் 

இருளக்குறிச்சி, பெரியகாப்பன்குளம் பள்ளிகள். 

காட்டுமன்னார்கோவிலில் 

              கொழை, ஓமாம்புலியூர், கீரப்பாளையம் ஒன்றியத்தில் ராமாபுரம், வெய்யலூர், குமராட்சியில் கூடுவெளிச்சாவடி, சிவபுரி, குறிஞ்சிப்பாடியில் பொன்னன்குப்பம், சந்தவெளிப்பேட்டை, நாகம்மபேட்டை, எஸ்.புதூர், கல்குணம், மருவாய், அம்பலவாணன்பேட்டை.
 

மங்களூரில்

எழுத்தூர், கொரக்கவாடி, பனையந்தூர், வையங்குடி, கொரக்கை, தச்சூர், சிறுமுளை, வெங்கனூர், இடைசெருவாய், நல்லூரில் மானாம்பாடி, சாத்தியம், 

பண்ருட்டியில் 

கருக்கை, கீழ்மாம்பட்டு, தாழம்பட்டு.
 

பரங்கிப்பேட்டையில் 

முடசல்ஓடை, விருத்தாசலத்தில் புலியூர், எடச்சித்தூர், ராஜேந்திரபட்டினம், வண்ணாங்குடி, 

அண்ணாகிராமம் ஒன்றியத்தில் 

மேல்குமாரங்கலம், புவனகிரியில் வடக்குத்திட்டை, ஆதனூர், சேத்தியாத்தோப்பு, பச்சையாங்குப்பம், குணவாசல், விளாகம், சாக்கங்குடி, நெய்வாசல், திருநாரையூர் ஆகிய 44 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 








Read more »

வியாழன், டிசம்பர் 08, 2011

கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்பு பாடத்திட்ட கையேடு

கடலூர்:

            தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

            கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக ஜோசப் அந்தோனிராஜ் அண்மையில் பதவி ஏற்றார். தொடர்ந்து கடலூர் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் புதன்கிழமை நடந்தது.  

கூட்டத்துக்குப்பின் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  ஜோசப் அந்தோனிராஜ் கூறியது: 

            கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.


            குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்களின் தற்கொலை  எண்ணத்தை மாற்ற உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி அளிப்பார்கள்.   

            அரசின் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தாமல் இருக்க அரசு வழங்கும் ஊக்கத் தொகைகள் மற்றும் உதவித் தொகையை முழுமையாகப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.    மாவட்டக் கல்வி அலுவலர்கள் வசந்தா, கணேசமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 











Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்படுகிறது

                  தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. எந்தெந்தப் பள்ளிகள் என்பது குறித்தும், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் பற்றியும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். 

                 அதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் மட்டும், அதிகபட்சமாக 12 பள்ளிகள் நிலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.  நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  

எந்தெந்த மாவட்டங்கள்: 

                தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. 

               இந்த மாவட்டத்தில் 12 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. 

            இதேபோன்று, காஞ்சிபுரத்தில் ஆறு பள்ளிகளும், 

             திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூரில் தலா 2 பள்ளிகளும், 

          கடலூரில் நான்கு பள்ளிகளும், வேலூரில் ஏழு பள்ளிகளும் நிலை உயர்த்தப்படுகின்றன.  

              திருவண்ணாமலை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரையில் தலா நான்கும், 

தருமபுரியில் ஐந்து பள்ளிகளும், 

கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல்லில் தலா மூன்று பள்ளிகளும், 

சேலத்தில் ஐந்து பள்ளிகளும், 

நாமக்கல், திருப்பூரில் தலா ஒரு பள்ளியும், 

கோவையில் ஆறு பள்ளிகளும் நிலை உயர்த்தப்படுகின்றன. 

 தேனியில் நான்கு பள்ளிகளும், 

சிவகங்கையில் இரண்டு பள்ளிகளும், 

விருதுநகர், தூத்துக்குடியில் தலா ஒரு பள்ளியும்,

திருநெல்வேலியில் மூன்று பள்ளிகளும்,  

கன்னியாகுமரியில் ஒரு பள்ளியும் மேல்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்படுகின்றன. 

 900 புதிய ஆசிரியர்கள் நியமனம்: 

            நிலை உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

இந்தப் பள்ளிகளில் ரூ.9,300-ரூ.34,800 மற்றும் நிலை ஊதியம் ரூ.4,800 என்ற ஊதிய விகிதத்தில் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

       அவை நிரப்பப்படும் நாளில் இருந்து ஓராண்டு காலத்துக்கு தாற்காலிகமாக அந்தப் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 

 எந்தெந்தப் பாடங்களுக்கு நியமனம்: 

                 தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிகள் நிலை உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதன் மூலம், புதிதாக படித்த பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. நிலை உயர்த்தப்படும் பள்ளிகளில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ளவை என்பதால், அங்குள்ள மாணவர்களும் பயன்பெறுவர்.  








Read more »

வெள்ளி, மார்ச் 25, 2011

தொலைநிலைக் கல்வியின் தரம் பாதுகாக்கப்பட வேண்டும்: வா.செ. குழந்தைசாமி

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக 5-வது பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு பட்டம் வழங்குகிறார் பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா

               
                தொலைநிலைக் கல்வியின் தரம் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி கூறினார்.
 
         தனியார் துறையிலும், பொதுத் துறையிலும் சில தகுதியற்ற, நேர்மையற்ற நிர்வாகத்தினரின் செயல்பாடுதான் இதற்கு காரணம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக 5-வது பட்டமளிப்பு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 
விழாவில் வா.செ. குழந்தைசாமி பேசியது:- 
               ""இந்தியாவில் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்ற சொல் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தவறான வழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நிர்வாக அலுவலர்களாலும், நீதிமன்றத்தால் பணியமர்த்தம் செய்பவர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்படும், குறைகாணப்படும் நிறுவனமாக திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இருக்கிறது. ஆனால், மேலை நாடுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் தரத்திலும், தகுதியிலும் மரபு வழிப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. உயர் கல்வியில், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேவை முறையாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 
                ஒருவர் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பெற்ற கல்வி அறிவை வைத்துக்கொண்டு தனது வாழ்நாள் முழுவதும் திறனுடன் செயல்பட முடியாது. ஒவ்வொருவரும் தமது கல்வியறிவை உயர்த்தவேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் அல்லது விரிவுபடுத்த வேண்டும். எனவே, கல்வி 6 முதல் 23 வயது வரை பெறக்கூடிய ஒன்றாக இல்லாமல், வாழ்நாள் முழுவதும் பெற வேண்டிய பொருளாகிவிட்டது. அத்தகைய கல்வியை, ஒருவர் தொடர்ந்து வகுப்பறைக்குச் சென்று முழு நேர மாணவனாகப் பெற முடியாது. அலுவலகத்தில், தொழில் சாலையில், வீட்டில் அவரவர் வசதிக்கேற்ப கற்கும் வாய்ப்பு உருவாக வேண்டும். 
                 இதுபோல் 1990-ல் தாய்லாந்து ஜாம்டியன் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் அனைவருக்கும் கல்வி என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மரபு வழிக் கல்வியால் மட்டும் பூர்த்தி செய்துவிட முடியாது. இதற்கு தொலைதூரக் கல்வி முறை மிக அவசியம். எனவே, பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், கல்வியாளர்களும், நீதிமன்றங்களும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை எளிதான ஒன்றாக எடைபோட்டு விடக் கூடாது. தொலைநிலைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் நாம், தொலைநிலைக் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், தரத்தை பாதுகாக்கவும் தேவையான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் அவர் கூறினார். 
           பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் 27 ஆயிரத்து 261 மாணவ, மாணவிகளில், 3 ஆயிரம் பேருக்கு விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.
மாணவிக்கு பதக்கம்
 
                பேச்சு-கேட்பியல் பட்டப்படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஜி.சரண்யாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையுடன் இணைந்த பேச்சு-கேட்பியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் (பி.ஏ.எஸ்.எல்.பி.) முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஆளுநர் பர்னாலா அவருக்கு தங்கப் பதக்கம் அணிவித்தார். 
               பல்வேறு படிப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற 167 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை காது-மூக்கு-தொண்டை பேச்சு-கேட்பியல் மையத்தில் நாட்டிலேயே பிரத்யேகமாக நடத்தப்பட்டு வரும் முதுநிலை கேட்பியல் மறுவாழ்வு பட்டயப் படிப்பை( "பி.ஜி. டிப்ளமோ இன் ஆடிட்டரி ஹாபிட்டேஷன்') முடித்த நான்கு மாணவர்களும் விழாவில் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்



             தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை அறிமுகம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 412 பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

              தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம் அறிமுகம் செய்துள்ள செயல் வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகிய கல்வி முறைகளால் ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள், பாடங்களை ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் கற்கின்றனர். இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையும் அறிமுகமாகியுள்ளதால், கல்வித் தரம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இதனால், தனியார் பள்ளி மாணவர்களில் பலர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் அடுத்த முயற்சியாக, வகுப்பறைகளில், "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது

                  புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதை விட, செயல் வழி மற்றும் "விஷுவல்' முறையில் படிப்பது அதிக பலன் அளிக்கிறது. வெளிநாட்டு பள்ளிகளில் இந்த திட்டம் மூலம் படிக்கும் மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விஷுவல் கல்வி வழங்கும் நோக்கத்துடன், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் துவக்கப்படுகிறது.

                  முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 412 பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை நடத்த தேர்வு செய்யப்படும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படும். சமச்சீர் கல்வி முறையுடன் இணைத்து பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்து விஷயங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவு செய்யப்பட்டு விடும். அதன் பின், நடப்பு கல்வியாண்டிலேயே இத்திட்டம் துவங்கப்படும்.

                   412 பள்ளிகளில் இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் படித்து 10ம் வகுப்பு முடித்து வெளியேறும் மாணவன், கம்ப்யூட்டர் கல்வியில் ஆர்வமிக்கவனாக வெளியேறுவான். உயர்கல்வியில் கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளில் மிளிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் கைகொடுக்கும். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி கூறுகையில், 

                 ""ஒன்றியங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பள்ளிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்கட்டமைப்பு வசதியின் அடிப்படையில் பள்ளி தேர்வு செய்யப்படும். இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் தமிழகத்தில் தான், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களால், எதிர்காலத்தில் சர்வதேச அளவுக்கு அனைத்து துறைகளிலும் எளிதில் வெற்றி பெற முடியும்,'' என்றார்.

வகுப்பறைகள் "டிஜிட்டல் மயம்'

              திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபா மனோன்மணி கூறுகையில், ""இத்திட்டம் தற்போதைய பாடத்திட்டத்தின்படி செயல்படுத்தப்படும். இதற்கான பாடங்கள், "இன்டர்ஆக்டிவ் போர்டில்' தயாரிப்பின்போதே புகுத்தப்படும். பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்களே திரையில் விடையை கண்டுபிடிக்க முடியும். ஜீரண மண்டலம் போன்ற பாடங்களை அசையும் படங்களுடன் வண்ணமயமாக சினிமா போல் திரையில் காண முடிவதால், பாடங்கள் எளிதில் மனதில் பதியும். தேர்வுக்கென தனியாக படிக்க வேண்டியதில்லை; அனைத்தையும் தமிழில் படிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பு,'' என்றார்.

                   ""இத்திட்டத்தை அரசுப் பள்ளி வகுப்பறையில் துவக்குவதற்கான கம்ப்யூட்டர், "இன்டர்ஆக்டிவ் ஒயிட் போர்டு,' ஆம்பிளிபையர், எல்.சி.டி.புரொஜக்டர், டிஜிட்டல் கேமரா வாங்கப்படவுள்ளன. மைக்ரோசாப்ட், இன்டெல், எஜுகாம்ப் போன்ற நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது,'' என இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

Read more »

திங்கள், பிப்ரவரி 15, 2010

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் தாமதம்:மாணவர்கள் கல்வித் தரம் பாதிப்பு

நடுவீரப்பட்டு:

               சி.என்.பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவ,மாணவிகளின் கல்வி தரம் பாதிப்படையும் நிலை உள்ளது. பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கடைவீதி மற்றும் மழவராயநல்லூர் காலனி ஆகிய இரண்டு இடங்களில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த சில மாதங்களுக்கு முன் தான் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவது இல்லை. ஆசிரிய, ஆசிரியைகள் கடலூரிலிருந்து வேன் மூலம் மிகவும் தாமதமாக வருகின்றனர். வகுப்புக்கு செல்ல காலை 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.

             தனித்தனியாக பஸ்சில் வரும் போதாவது ஒரு சில ஆசிரியைகளை தவிர மற்றவர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்தனர். ஆனால் வேன் வசதி ஏற்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியைகளும் தாமதமாக வருவதே வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் காலை 11 மணி வரையில் மாணவர்கள் அதிகளவு ரோட்டு பகுதியில் சுற்றித்திரிகின்றனர். இதனால் கல்வித்தரம் குறைவதோடு விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆசிரிய, ஆசிரியைகள் தாமதமாக வருவதை தவிர்க்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மாணவர்கள் கல்வித்தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior