உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




காவிரி டெல்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவிரி டெல்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்


ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் திருமண மாலையை தண்ணீரில் விடும் புதுமணத் தம்பதி. நாள்: புதன்கிழமை.
சிதம்பரம்:

          ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரித் தாயை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் வல்லம்படுகை அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் புதன்கிழமை குவிந்தனர்.  

               காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் புதன்கிழமை, சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்துடன் வந்து காவிரி அன்னையை வழிபட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.   ஓடும் ஆற்று நீரில் திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வச் செழிப்போடும், புதுமணத் தம்பதிகள் வளத்தோடும் இருப்பர் என்பது ஐதீகம். இதனால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை நீரில் விட்டு மங்கல நாணை பிரித்து, கோர்த்து காவிரி அன்னைக்கு படையல் வைத்து வணங்குவர்.  

                   திரளான மக்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். 






Read more »

புதன், ஜூன் 29, 2011

கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயத்துக்கு கொள்ளிடம் கீழணைக்கு கூடுதல் காவிரி நீர்


எப்போதும் கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரிக்கு, போதிய தண்ணீர் வராததால் தோட்டி வாய்க்காலில் மட்டும் நீர் நிரம்பி இருக்கும் காட்சி.
 
கடலூர்:
 
           கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் வகையில், கொள்ளிடம் கீழணைக்குக் கல்லணையில் இருந்து கூடுதலாக காவிரி நீர் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
 
                       கொள்ளிடம் கீழணையில் இருந்து கடலூர் மாவட்ட டெல்டா நிலங்கள் 1.5 லட்சம் ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கும், தஞ்சை மாவட்டத்தில் 1,500 ஏக்கருக்கும் காவிரி நீர் வழங்கப்பட்டு வருகிறது. கல்லணைக்குக் கிடைக்கும் காவிரி நீரில் 10 சதவீதம், பாரம்பரியமாகக் கொள்ளிடம் கீழணைக்கு திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கொள்ளிடம் கீழணைக்கு கல்லணையில் இருந்து விநாடிக்கு 1,002 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் இந்த நீர் கொள்ளிடம் ஆற்றில் 67 மைல் தூரத்தைக் கடந்து, கீழணைக்கு வரும்போது 700 கனஅடிதான் கிடைக்கிறது.இதனால் 9 அடி உயரம் கொண்ட கீழணை நீர் மட்டம், கடந்த 5 நாள்களாக 3.5 அடியாகவே உள்ளது.
 
                இருப்பினும் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு, வடவாறு வாய்க்கால் வழியாக 296 கனஅடி திறந்து விடப்பட்டு உள்ளது. வீராணம் ஏரி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் பிடிக்கால் வறண்டு கிடந்தது. தற்போது பெறப்படும் நீர், கடுமையான வெயிலில் ஆவியாதல், பூமிக்குள் கசிதல் காரணமாக, ஏரியின் நீர் மட்டமும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயரவில்லை.ஏரிக்குள் கிழக்குக் கரையோரமாக உள்ள தோட்டி வாய்க்காலில் மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது. இதனால் வீராணம் ஏரியில் இருந்து, பாசனத்துக்கோ, சென்னைக் குடிநீருக்குக்கோ நீர் வழங்க முடியாத நிலை நீடித்து வருகிறது. 
 
             மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே திறக்கப்பட்டும், கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில், குறுவை நெல் சாகுபடிக்கு இன்னமும் தண்ணீர் வந்து சேரவில்லை என்பது, குறுவை விவசாயிகளின் கவலை. இந்நிலையில் நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளும், குறுவை சாகுபடிக்குக் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் தற்போது, ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசன வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே, குறுவை சாகுபடி செய்து உள்ளனர். 
 
                தற்போது 30 நாள் பயிராக உள்ளது. 20 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகக் கடலூர் மாவட்ட வேளாண் துறை அறிவித்து உள்ளது. தொடர் மின் வெட்டால், ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் குறுவை விவசாயிகளை பெரிதும் கவலைக் கொள்ளச் செய்துள்ளது. கடந்த ஆண்டு டெல்டா பாசனப் பகுதிகளில் 1.42 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. குறித்த காலத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற சங்கடம் கடந்த ஆண்டே இருந்தது.
 
                இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால், சம்பா சாகுபடியை முன்னரே தொடங்கி, வடகிழக்குப் பருவமழையின் தாக்குதலுக்கு முன்பே, பாதுகாப்புடன் அறுவடையை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
 
இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், 
 
                 "நாகை மாவட்ட 22 ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்காக, கீழணைத் திறப்பதனால், கடலூர் மாவட்டத்தின் 1.5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கா வண்ணம், உரிய நேரத்தில் கீழணைக்குக் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். கல்லணையில் இருந்து 10 சதவீதம் கீழணைக்கு என்ற பாரம்பரியத்தை விட்டுவிட்டு, 1.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான நீரைக் கணக்கிட்டு வழங்க வேண்டும்' என்றார்.
 
கொள்ளிடம் கீழணை விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.கண்ணன் கூறுகையில், 
 
              "கல்லணையில் திறந்து விடப்பட்டுள்ள நீரில், 700 கன அடிதான் கீழணைக்கு வந்து சேருகிறது. வீராணம் ஏரியும் வறண்டு கிடக்கிறது.தோட்டி வாய்க்காலில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கூடுதல் நீர் திறக்க வேண்டும். கடலூர் டெல்டா பகுதியில் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமான நிலங்களில் செய்யப்படும் குறுவை சாகுபடிக்கு, காவிரி நீரை எப்படி பயன்படுத்த முடியும் நீர் வீணாகி விடக் கூடாது என்ற கவலை விவசாயிகளுக்கு உள்ளது. வடக்குராஜன் வாய்க்காலில் மராமத்துப் பணிகள் முடிவடையவில்லை. கொள்ளிடக் கரையை பலப்படுத்தும் பணிக்கு, வீராணம் ஏரியில் மண் எடுப்பதும் தடைபடாமல் இருக்க வேண்டும். எனவேதான் ஜூலை 15-ல் கீழணையைப் பாசனத்துக்குத் திறக்கலாம் என்று தெரிவித்தோம். நாகை விவசாயிகளின் கோரிக்கை காரணமாக, முன்னரே கீழணையைத் திறக்கிறார்கள் என கருதுகிறேன்' என்றார்.
 
 
 
 
 
 

Read more »

வியாழன், பிப்ரவரி 03, 2011

உழவர்களுக்கு ஊக்கம் தரும் உளுந்து சாகுபடி


கடலூர்: 

              குறைந்த காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் விவசாயமாக உளுந்து சாகுபடி உள்ளது.  நிறைந்த ஊட்டச்சத்தும் சிறந்த மருத்துவக் குணங்களும் கொண்டது உளுந்து. எனவேதான் உளுந்தின் தேவை, தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதுக்கும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.  

              இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் உளுந்து பயிரிடப்படுகிறது. எனினும் தேவையில் 85 சதவீதத்தை பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் 1990-91ல் 3.36 லட்சம் ஏக்கரில் 1.35 லட்சம் டன் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டது. 2000-2001ல் 2.75 லட்சம் ஏக்கரில் 1.32 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.  
 
                தமிழகத்தில் உளுந்து உற்பத்தி பெரும்பாலும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளையே நம்பி இருக்கிறது. காவிரி பாசனப் பகுதிகளான சுமார் 16 லட்சம் ஏக்கரில் உளுந்து சாகுபடிக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து பயிரிடப்பட்டது.  சம்பா நெல் அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன் வயல்களில் உளுந்து விதைகளை விதைத்து விடுவார்கள். வயல்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் பனியால் உளுந்துப்பயிர் வளர்ந்து 60 நாள்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இதற்குச் செலவு இல்லை. ஏக்கருக்கு குறைந்தபட்சம் 150 கிலோ வரை உளுந்து கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

            இந்த ஆண்டு உரிய காலத்தில் காவிரி நீர் கிடைத்து இருப்பதால் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.  தமிழகத்தில் தற்போது ஏடிடி 3, டி 9, டி.ஓ.யூ.1 வண்பன் ஆகிய உளுந்து ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஏடிடி 3 டெல்டா பகுதிகளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தேவையைக் கருத்தில் கொண்டு, உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  

இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

              "காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு உளுந்து சாகுபடிக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி மூலம் செலவு இல்லாமலேயே ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்.  உளுந்தை தனிப்பயிராக இறவை பாசனத்தில் சாகுபடி செய்தால் 60 நாள்களில் ரூ. 30 ஆயிரத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும். எனவே உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்யவும், நேரடிகொள்முதல் செய்யவும் தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.  

இதுகுறித்து வேளாண்துறை அளிக்கும் தகவல்கள்: 

                 தேசிய உணவு பாதுகாப்பு மிஷன் மற்றும் விரைவுபடுத்தப்பட்ட பயறு வகைகள் சாகுபடித் திட்டம் தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.  இத்திட்டங்களில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் வட்டாரங்களில் தலா 1,000 ஹெக்டேரில் உளுந்து பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  மேற்கண்ட திட்டங்களில் உளுந்து விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், இடுபொருள்கள், பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள், சொட்டு நீர் பாசனக் கருவிகள் வழங்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.     

Read more »

செவ்வாய், ஜனவரி 04, 2011

கடலூர் மாவட்டத்தில் சூதாட்டமாக மாறிய டெல்டா விவசாயம்!


கடலூர்:

               தமிழக அரசின் நீர் மேலாண்மைக் குறைபாடுகள் காரணமாக, காவிரி டெல்டா பாசன விவசாயம் ஆண்டுதோறும் சூதாட்டமாக மாறியிருக்கிறது. அதாவது ஒன்று தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அல்லது அதிகப்படியான மழை நீரால் பயிர்கள் சேதமடையும்.

               வெள்ளப் பாதிப்பு காலங்களில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ரூ. 200 கோடியைத் தாண்டும்.தமிழகத்தில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை நம்பி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனப் பகுதிகளாகும். டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்தான், தமிழகத்தின் அரிசி விலையை நிர்ணயிக்கிறது.கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர் கதையாகி விட்டது. 

                2005ல் ரூ. 44 கோடியும், 2008-ல் ரூ. 36 கோடியும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல்கட்டமாக ரூ. 23 கோடி வழங்கப்பட்டு உள்ளது.முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டு இழப்பீடு அதிகமாகும் என்கிறார்கள் அதிகாரிகள். இந்த இழப்பீட்டுத் தொகைகள் விவசாயிகளின் இழப்புக்கு, எந்த வகையிலும் ஈடாக முடியாது. நெல்லுக்கு இழப்பீடு 2005 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.இவ்வாண்டு ரூ. 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

             டெல்டா நிலங்களில்  ஒரு ஏக்கருக்கு சாகுபடிச் செலவு ரூ. 14 ஆயிரம். மகசூல் மதிப்பு, பயிர் காப்பீட்டு நிறுவனக் கணக்குப்படி ரூ. 24 ஆயிரம்.  ஒரு டி.எம்.சி. நீரில் 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் விவசாயிகள். எனவே காவிரி டெல்டா பாசன நிலங்களுக்கு, சம்பா சாகுபடிக்கு 170 டி.எம்.சி.  தண்ணீர் தேவை.  மேட்டூர் அணையின் கொள்ளளவு 94 டி.எம்.சி. எனவே அணை இருமுறை நிரம்பினால், 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா சாகுபடியை, நிறைவாகச் செய்யலாம். 

              அரசு முறையாக நீர் மேலாண்மை செய்தால், இதை எளிதாக நிறைவேற்ற முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.மேட்டூர் அணைக்கு இயல்பாகக் கிடைக்கும் நீர், நீதிமன்ற உத்தரவுகளின்படி  கர்நாடகத்திடம் பெறவேண்டிய நீர், ஆகியவற்றைக் கணக்கிட்டு, உரிய காலத்தில் மேட்டூர் அணையைத் திறந்து, கடைமடைப் பகுதிவரை குறித்த காலத்தில் நீர் கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட நீர் மேலாண்மையை மேற்கொள்வதன் மூலம், 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களையும் பொன் விளையும் பூமியாக மாற்ற முடியும் என்கிறார்கள் முன்னோடி விவசாயிகள்.

             கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் 70 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் அழிந்து விட்டது. வீராணத்தின் துணை ஏரிகளான வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி பாசனப் பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கி சாகுபடி செய்ய முடியாத நிலை அல்லது கதிர் முற்றும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறது.  கடலூர் டெல்டா பாசனப் பகுதிகளில் வடிகால் வசதிகளை மேம்படுத்தாததும், வீராணம் ஏரியில் முறையாக நீர் மேலாண்மை செய்யாததுமே, கடலூர் மாவட்ட பயிர் பாதிப்புகளுக்குக் காரணம். இவ்வாண்டு கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் தாமதமானதே, 50 ஆயிரம் ஏக்கரில் 15 முதல் 25 நாள் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகக் காரணம் என்கிறார் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

               கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் தாமதமாவதால், மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் சேதமாவதுடன், 1 லட்சம் ஏக்கர் உளுந்து சாகுபடியும் இல்லாமல் போகிறது. கடலூர் டெல்டா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நெல் பயிரில் நஷ்டம்  ரூ.140 கோடி, உளுந்து சாகுபடியில் நஷ்டம் ரூ. 60 கோடி. கர்நாடகத்திடம் நமது உரிமையக் கேட்டுப் பெறாததும்,  உரிய காலத்தில் காவிரி நீர் கிடைக்கச் செய்யாததும், சரியான நீர் நிர்வாகம் இல்லாததுமே இந்த நஷ்டத்துக்குக் காரணம் என்கிறார் ரவீந்திரன்.

Read more »

திங்கள், டிசம்பர் 06, 2010

கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் அழுகும் அபாயம்: விவசாயிகள் கவலை


பலத்த மழையால் கடலூர் வேளாண் பல்கலைக்கழக கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் மூழ்கிய நெல் பயிர்.
 
கடலூர்:

                   கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள், 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

                 கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனம் மூலம் பயன் பெறுகின்றன. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து ஆகஸ்ட் 7-ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக தண்ணீர் கிடைத்ததால், கடலூர் மாவட்டக் கடைமடைப் பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கு முன்புதான், சம்பா நடவுப் பணிகள் முடிவடைந்தன. 

              சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் நட்டு 10 முதல் 15 நாள்கள் பயிராக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைவிட, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த மழையினால், கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் மிகவும் அதிகம் என்று, விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

               பிற மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, மணிமுத்தாறு, கெடிலம், பெண்ணையாறு ஆகியவற்றின் வழியாகப் பாய்ந்து ஓடி, வடிகால் வசதியற்ற கடலூர் மாவட்டத்தை வெள்ளக் காடாக மாற்றி விட்டது. இதனால் 250 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. 

              கடலூர் டெல்டா பாசனப் பகுதிகளில் திருநாரையூர், எடையார், பிள்ளையார் தாங்கல், வையூர், கண்டியமேடு, அகரநல்லூர், பெராம்பட்டு, கீழத்திருக்கள்ளிப் பாலை, கோவிலாம் பூண்டி, மீதிக்குடி, கீழ் அணுவம்பட்டு, மடுவங்கரை, நஞ்சைமகத்து வாழ்க்கை, கீழச்சாவடி, பூவாலை, வயலாமூர், எல்லைகுடி, கல்குணம், சின்ன குமட்டி, பி.முட்லூர், கொமட்டிக் கொல்லை மற்றும் இக்கிராமங்களை அடுத்துள்ள பகுதிகளில், 10 முதல் 15 நாள் நெல் பயிர்கள், 8  முதல் 10 நாள்களாகத் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இவை 90 சதவீதம் அழுகி வீணாகி விடும் என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                ""வடகிழக்குப் பருவ மழையால் கடலோர மாவட்டங்களில் இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் என்று, வானிலை ஆய்வு மையத் தகவலை மேற்கோள் காட்டி, மேட்டூர் அணையே முன்னரே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரினோம். மேலும் கடலூர் மாவட்டத்தில் பெய்யும் மழையைவிட பிற மாவட்டங்களில் பெய்யும் மழையால், வடிகால் வசதியற்ற, கடலூர் மாவட்ட கடைமடைப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தோம். 

                ஆனால் அதிகாரிகள் எங்கள் ஆலோசனையை புறம் தள்ளினர்.நாங்கள் பயந்தபடி நடந்து விட்டது. சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 25 ஆயிரம் ஏக்கரில் மூழ்கி இருக்கும் பயிர்கள் தேறாது, அழுகிவிடும்'' என்றார்.

Read more »

ஞாயிறு, நவம்பர் 28, 2010

கடலூரில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் மூழ்கின


கடலூர் சிப்காட் அருகே நடுத்திட்டு கிராமத்தில் உப்பனாற்றின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பு.
கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணிரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 
            கடலூர் மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நாற்று நட்டு, 20 நாளுக்குள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள், வாலாஜா, பெருமாள் ஏரி பாசனப் பகுதிகள், பரவனாற்றின் கரைகள், புவனகிரி, பரங்கிப்பேட்டை வட்டாரங்களில்  வெள்ளாற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
 
          வெள்ளியங்கால ஓடையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாலும், மணவாய்க்காலில் வெள்ளம் அதிகரித்து இருப்பதாலும் சிறகிழந்த நல்லூர், எடையார், திருநாரையூர், மேலவன்னியூர், வீரநத்தம் உள்ளிட்ட 15 கிராமங்களில் வெள்ளம் புகுந்து, நட்டு 2 மாதங்கள் ஆன நெல் பயிர்கள், தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
 
               வெள்ளாற்றில் பெருமளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மடுவங்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை, வானம்பாடி, கீழ்அணுவம்பட்டு, சி.முட்லூர், கீழமூங்கிலடி உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன.÷1,800 கன அடி நீர் செல்லும் திறன் கொண்ட பாசிமுத்தான் ஓடையில், 2100 கனஅடி உபரிநீர் வழிந்து சென்று கொண்டு இருப்பதாகவும் பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.
 
           என்எல்சி சுரங்கங்களில் இருந்து அபரிமிதமான நீர் வெளியேற்றப் படுவதாலும், பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும், வடலூரை அடுத்த மறுவாய் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பண்ருட்டி- கும்பகோணம் சாலை துண்டிக்கப்பட்டது.÷மணிமுக்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விருத்தாசலம்- சேலம் சாலையில் பெருளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விருத்தாசலம்- சேலம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
             நந்திமங்கலம், நாச்சியார் பேட்டை, அகரப்புத்தூர் பகுதிகளில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கடலூரில் கெடிலம் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. கூத்தப்பாக்கம், புருஷோத்தமன் நகர், பாதிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும், முதுநகர் ஏணிக்காரன் தோட்டம், பீமாராவ் நகர், வண்டிப் பாளையம், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் 3 உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.
 
                 கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதியின்றி, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், வண்டிப்பாளையம் சாலையில் சனிக்கிழமை  காலை, மறியலில் ஈடுபட்டனர்.கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர். தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
                    பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கடலூர்- தாழங்குடா தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடலூர்- தாழங்குடா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம்- ஸ்ரீமுஷ்ணம் சாலை, விருத்தாசலம்- வேப்பூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளன.  பெண்ணாடம் அருகே முருகன்குடி- திருமங்கலம் சாலை வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டது. ஆலடி பாலக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் விதைக்கப்பட்டு இருந்த மணிலா, உளுந்து சேதம் அடைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior