உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கொத்தட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொத்தட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 20, 2011

சிதம்பரம் அருகே 1100 ஏக்கரில் 3600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின் நிலையம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை அருகே 1100 ஏக்கரில் ஐஎல் எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி 3,600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின்நிலையத்தை தொடங்கவுள்ளது.  தற்போது நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் மின்நிலையம் இயங்கும் என தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.  

இதுகுறித்து சிதம்பரத்தில் புதன்கிழமை தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தது:  

              இந்த மின்நிலையம் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தோனேசியாவிருந்து நிலக்கரி கொண்டு வரப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக 1,200 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்.  

            மேலும் தமிழ்நாடு பவர் கம்பெனி, ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து புதுச்சத்திரத்தில் கிராமப்புற மகளிர் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது. இதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் இயந்திரங்களும், உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.  கொத்தட்டை மற்றும் வில்லியநல்லூருக்கு உட்பட்ட கிராமங்களான பஞ்சங்குப்பம், கரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் இயங்கும் சுமார் 20 மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் மகளிர் சுமார் 60 பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு தொழிற்பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.  

           தொழிற்பயிற்சி முடிந்தவுடன் அதில் தேர்வு பெறும் மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க ஏதுவாக மேலும் 70 தையல் இயந்திரங்களை நிறுவவும் ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி திட்டமிட்டுள்ளது.  கொத்தட்டை, அரியகோஷ்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கரிக்குப்பம், வி.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, இந்திராநகர், சின்னூர் பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வெல்டிங், பிட்டர் போன்ற தொழிற்கல்வி வழங்க எங்களது நிறுவனம் மங்களம் ஐடிஐ, முருகேசன் ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களில் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்களின் முழுகல்வி கட்டணத்தையும் வழங்கி படிக்க வைக்கவுள்ளோம்.  

             இதன் மூலம் 2011-ம் ஆண்டில் மட்டும் 75 மாணவர்களை வேலைத் தகுதி பெற முடியும் என எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார். ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் என்.ரமேஷ் உடனிருந்தார்.

Read more »

புதன், ஆகஸ்ட் 11, 2010

பரங்கிப்பேட்டையில் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை : டாஸ்மாக் கடை இடமாற்றம்

பரங்கிப்பேட்டை : 

           பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனை இரண்டாவது நாளாக முற்றுகையிட்டதால் கடை மாற்றப்பட்டது. 

              கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பரங்கிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று மாலை அதே இடத்தில் மீண்டும் கடையை திறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டது.

Read more »

வியாழன், மே 27, 2010

கொத்தட்டை கோவில் திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கியதால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை : 

              கோயில் திருவிழாவில் போலீஸ்காரை மர்ம ஆசாமிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

               பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையில் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் அரவாணிகள் திருவிழா நடந்தது. இந்த விழாவில் அரவாணிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் பங்கேற்க வந்தததால் பரங்கிப் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலையோரங்களில் கும்பலாக நின்றுகொண்டு அரவாணிகளை கிண்டல் செய்து கொண்டிருந்த சின்னகுமட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை போலீஸ் செந்தில் விரட்டிச் சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாக இரண்டு பேர் போலீஸ்காரர் செந் திலை கல்லால் தாக்கினர். இதில் செந்தில் படுகாயமடைந்து புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர் பைக்கில் சென்ற போது கடலூரைச் சேர்ந்த கனிவளவன் என்பவர் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

செவ்வாய், மே 18, 2010

கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் 25ம் தேதி அரவாணிகள் திருவிழா

பரங்கிப்பேட்டை: 

                  பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் வரும் 25ம் தேதி அரவாணிகள் திருவிழா நடக்கிறது. பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள் ளது. இங்கு ஆண்டுதோறும் அரவாணிகள் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு வரும் 25ம் தேதி நடக்கிறது. நேற்று முன்தினம் கொடியேற் றத்துடன் விழா துவங்கியது. 21ம் தேதி அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணம் மற்றும் சுவாமி வீதியுலாவும், 23ம் தேதி மாடுபிடி சண்டை நிகழ்ச்சியும், முக்கிய விழாவான 25ம் தேதி சுவாமி முத்துப் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், மாலை அரவாண் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில் ஆந்திரா, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரவாணிகள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் தில்லை கோவிந்தன், ஜனார்த்தனன், ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 06, 2010

பாழாகி வரும் தாய், சேய் நல விடுதி கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை


திட்டக்குடி: 

                    பெண்ணாடம் அருகே பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள தாய், சேய் நல விடுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  பெண்ணாடம் அடுத்த கொத் தட்டை ஊராட்சியில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட தாய்சேய் நல விடுதி இன்னும் திறப்பு விழா காணப்படாமலேயே புதர்கள் மண் டிப்போய் பாழடைந்து வருகிறது. இதனால் கொத்தட்டை, எரப்பாவூர், அருகேரி, கீழ்நெம்மேலி, மேல்நெம் மேலி, மருவத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த உடல் நிலை சரியில்லாதவர்களும், பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்களும் பஸ் வசதி இல்லாத நிலையிலும் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இப்பகுதி பிரசவ காலங்களில் கர்ப்பிணி பெண்கள் படும் பாடு திண்டாட்டம்தான். சுகப்பிரசவமாக இருந்தால் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அறுவை சிகிச்சை என்றால் திட்டக்குடிக்கும் வரவேண்டிய சூழல் உள்ளது. இதுபோன்ற நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது.

                       கர்ப்ப காலங்களில் தாய், சேய் இறப்பு குறைந்துள்ளதாக அரசு அறிவித்து வரும் நிலையில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து வரும் தாய், சேய் நல விடுதி சீரமைக்காத நிலை சுகாதாரத்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது. சுகாதாரத் துறையில் மாவட்ட அமைச்சராக இருந்தும் அவரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். கொத்தட்டை ஊராட்சியை சுற்றியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடனடி மருத்துவ வசதி கிடைக்காமல் தவித்து வரும் நிலையை போக்க உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டு பாழாகி வரும் தாய், சேய் நல விடுதியை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

புதன், பிப்ரவரி 24, 2010

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பதாக குடிபிரியர்கள் புலம்பல்

பரங்கிப்பேட்டை: 

                   பரங்கிப்பேட்டை பகுதி டாஸ்மாக் கடைகளில் பிராந்திகள் கூடுதல் விலைக்கு விற்பதாக குடிபிரியர்கள் புலம்புகின்றனர். பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், தச்சக்காடு, கொத்தட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடை உள்ளன. இங்கு பிராந்தி உள்ளிட்ட சரக்குகளுக்கு அரசு விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக குடிபிரியர்கள் புலம்புகின்றனர். பீர், பிராந்தி, ஓல்டு மங்க், விஸ்கி, வி.எஸ். ஓ.பி., ஆகிய பிராண்டுகள் குவாட்டருக்கு அரசு விலையைவிட கூடுதலாக 2லிருந்து 3 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் விற்பனையாளருக்கும், குடிபிரியருக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால் டாஸ்மாக் அதிகாரிகள் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிபிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior