உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நிவாரணத் தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிவாரணத் தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 11, 2012

"தானே" புயல் நிவாரணம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.103.87 கோடி

           "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.103.87 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

         பல்வேறு தொழிலதிபர்கள், திரைப்பட பிரமுகர்கள் என பலரும் தாங்களாக முன்வந்து நிதியை அளித்து வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்து 25 பேர் நிதி அளித்தனர். வருவாய்த் துறை சார்பில் அதன் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.1.88 கோடியையும், தொழில் துறை சார்பில் அமைச்சர் பி.தங்கமணி ரூ.1.64 கோடியையும் முதல்வரிடம் வழங்கினர். பள்ளிக் கல்வி சார்பில் ரூ.25 கோடி அளிக்கப்பட்டது.செய்தித் துறை சார்பில் ரூ.13.23 லட்சத்தையும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ரூ.10 லட்சத்தையும் அளித்தனர்.எம்.ஆர்.எப். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம்.மேமன் ரூ.1 கோடியும், அப்போலோ மருத்துவமனை சார்பில் ரூ.1.5 கோடியும், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா ரூ.1 கோடியும் அளித்தனர்.தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.75 லட்சமும், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஊழியர்கள் சார்பில் ரூ.50 லட்சமும், எம்.பி. குழுமம் சார்பில் ரூ.25 லட்சமும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரூ.20 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது.

                கோவை கே.ஜி. மருத்துவமனை சார்பில் ரூ.15 லட்சமும், கோவை பிரிகால் நிறுவனத்தின் சார்பில் ரூ.15 லட்சமும், மாதா குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.பீட்டர் சார்பில் ரூ.10 லட்சமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது.சிரைன் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி சார்பில் ரூ.10 லட்சமும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சார்பில் ரூ.10 லட்சமும், அம்மன் குழுமம் சார்பில் ரூ.7 லட்சமும், இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ரூ.7.10 லட்சமும் நிதி வழங்கப்பட்டது.

               பாரதியார் பல்கலைக்கழகம் ரூ.7 லட்சமும், ஆசான் மெமோரியல் சங்கம் ரூ.6 லட்சமும், திரைப்பட நடிகை நயன்தாரா ரூ.5 லட்சமும் நிதி அளித்தனர். சர்ச் பார்க் பள்ளி மாணவிகள் ஜெய்வர்ஷினி, மனிஷா, சுஜித்ரா ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அளித்தனர்.தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.35 கோடி வழங்கப்பட்டது. நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ.103.87 கோடி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Read more »

செவ்வாய், ஜனவரி 31, 2012

தானே புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

கடலூர்:
 
           புயலில் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார். 
 
            புயலினால் கடலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, தென்னை, மணிலா, உளுந்து, பருத்தி, எண்ணெய் பனை உள்ளிட்ட பயிர்கள் 92,627.33 ஹெக்டேர் பரப்பளவிலும், முந்திரி, பலா, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, பாக்கு, வாழை, மரவள்ளி, வெற்றிலை, மஞ்சள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் 38,155.58 ஹெக்டேர் பரப்பளவிலும் சேதமடைந்து உள்ளன.பயிர் பாதிப்புக்கான நிவாரணம் குறித்து புகார்கள் இருந்தால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் தெரிவிக்க, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
 
           கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள புகார் மையங்களை, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.  பயிர் சேதத்துக்கு நிவாரணம் கேட்டு மனு அளித்த விவசாயிகளிடம் ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.
 
           விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரூ. 120.16 கோடி நிதி ஒதுக்கி, நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் பெறப்பட்டு, அவற்றின் நகல்கள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 
 
            பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டு முழுத் தொகையும் ஒரே தவணையில் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை, வேறு எந்தக் கடனுக்கும் வரவு வைக்கப்படாமல், பிடித்தம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. 28.1.2012 வரை பயிர்ச்சேத நிவாரணமாக ரூ.107 கோடி வரை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. புகார் மையங்களில் அளிக்கப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, வேளாண்துறை, மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்டு நேரடி விசாரணை செய்யப்படும். தகுதியான மனுதாரர்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்குள் தீர்வு காணப்பட்டு நிவாரணத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார் ஆட்சியர். 
 
           சார் கிரண் குராலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிருந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோகன், வேளாண் அலுவலர் பூவராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

புதன், டிசம்பர் 22, 2010

வெள்ள நிவாரணம் வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்; விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு

நெய்வேலி:

             நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் தொழிலாளர் விடுதலை முன்னணி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது.

            நகர அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். கிழக்கு நகர செயலாளர் அன்பழகன், தெற்கு நகர செயலாளர் பாண்டியன், மேற்கு நகர செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருமாறன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலாளர் துரை.மருதமுத்து, நகர துணை செயலாளர்கள் சுரேஷ், பாட்ஷாபன்னீர், முருகன், ரமேஷ், பூசைமணி, புரட்சிபாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.

*வருகிற 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் தமிழர் இறையாண்மை மாநில மாநாட்டில் சுமார் 1000-க்கும் அதிகமான வாகனங்களில் பங்கெடுப்பது.

*இலங்கை குடியிருப்பு பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை அளிக்காவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது.

*கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
முடிவில் ராசா நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண நிதி

கிள்ளை: 

             சிதம்பரம் அருகே டி.எஸ்.பேட்டையில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

             மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இதற்கு தடைக்கால நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா 500 ரூபாய் தமிழக அரசின் மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை 800 ரூபாயாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை அடுத்த டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் விழா நடந்தது. 

                    ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன்காந்தி வரவேற்றார். மீன்வள ஆய்வாளர் நாபிராஜ், மேற்பார்வையாளர் புண்ணியராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, மீன்வள உதவி இயக்குனர் இளம்பரிதி ஆகியோர் 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒருலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வழங்கினர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாகிகள் கருணாமூர்த்தி, அன்பழகன், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

செவ்வாய், ஜூன் 29, 2010

ரூ.1 கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணம்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14,160மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.1.13 கோடியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.

               ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்க,​​ மீனவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.​ இந்தக் காலம் மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால்,​​ கடலில் மீன் வளம் குறையாமல் இருக்க,​​ தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.​ கடந்த 9 ஆண்டுகளாக இந்தத் தடை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் கடலோர மீனவர் குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில்,​​ தமிழக அரசின் மீன் வளத்துறை நிவாரணத் தொகை வழங்கி வருகிறது.​ கடந்த ஆண்டு தலா ரூ.500 வீதம் 13,625 குடும்பங்களுக்கு ரூ.68,12,500 வழங்கப்பட்டது.​ இந்த ஆண்டு நிவாரணத் தொகை ரூ.800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.​ அதன்படி 14,160 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.1,13,28,000 வழங்கப்படுகிறது.​ ​ ​

                திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிவாரணத் தொகை மீனவர்களுக்கு வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார்.​ நிவாரணத் தொகை வழங்கும் பணி மீன்வளத் துறை மூலம் தொடர்ந்து நடைபெறும்.​ ​இந்த நிகழ்ச்சியில்,​​ விபத்தில் இறந்த இரு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலமாக தலா ரூ.1,02,500 வீதம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior