உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நுழைவுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நுழைவுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 24, 2011

டான்செட் நுழைவுத் தேர்வு 28ம் தேதி ஆரம்பம்

                  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ படிப்பில் சேர வரும் 28ம் தேதி முதல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 99 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 


      தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வின் (டான்செட்) கீழ் கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்சிஏ., எம்பிஏ., எம்.இ., மற்றும் எம்.டெக்., சேர்க்கை நடைபெறுகிறது. இதன் கீழ் சுமார் 200 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகின்றன. டான்செட் மூலம் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் நிரப்பப்படுகின்றன.

                 இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் இறுதிவரை மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் 99 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் கணிதம், ரீசனிங், ஆங்கிலம், டேட்டா இன்டர்ப்ரேட்டசன் போன்ற பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு மதிப்பெண். தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். இதில் 40 மதிப்பெண்கள் எடுத்தாலே சிறந்த கல்லூரிகளில் சேரலாம்.


             இந்தாண்டு எம்பிஏ., க்கான நுழைவுத் தேர்வு வரும் 28 காலை 10 மணிக்கும் எம்சிஏ.,விற்கு மதியம் 2.30 மணிக்கும் நடைபெறுகிறது. மே 29ல் எம்.இ., மற்றும் எம்.டெக்., தேர்வுகள் காலையில் நடைபெறும். ஜூன் 3ம் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில் 


           ‘இந்தாண்டு அதிகளவிலான மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் மேற்படிப்பிற்கான டான்செட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கை போல் டான்செட்டிலும் காலியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இளங்கலை படிக்கும் போதே நன்றாக படித்தால் டான்செட்டில் அதிக மதிப்பெண் பெறமுடியும்’ என்றார்.

 

Read more »

சனி, மே 21, 2011

பாரதிதாசன் பல்கலை.யில் 6 ஆண்டு எம்.டெக். படிப்புக்கு மே 28-ல் நுழைவுத் தேர்வு

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 6 ஆண்டு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 28-ம் தேதி நடைபெறவுள்ளது. 

 இதுகுறித்து பல் கலைக்கழகப் பதிவாளர் த. ராமசாமி தெரிவித்திருப்பது: 

             "ஆறாண்டு ஒருங்கிணைந்த எம்.டெக். (உயிரித் தொழில்நுட்பவியல், உயிரித் தகவலியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், புவிநுட்பவியல், புவித் தகவலியல்) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 28 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. கேள்விகள் 12 ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் அமையும். ஆங்கிலம், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டையும், 12 ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் கொண்டு வர வேண்டும். எனவே, விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்' என்றார் ராமசாமி.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு

                 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான -எஸ்.ஆர்.எம்.இ.இ.இ. 2011- நுழைவுத் தேர்வு சனிக்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.  

இது குறித்து பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னவைக்கோ கூறியது: 

                     எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளில் 5,500 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 115 நகரங்களில் 190 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.  காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்காக 1 லட்சத்து 36 ஆயிரத்து 126 பேர் பதிவு செய்துள்ளனர்.  நுழைவுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். கலந்தாய்வுக்கு 14 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்படுவர் என்றார்.    

Read more »

திங்கள், ஏப்ரல் 18, 2011

வேலூர் விஐடி நுழைவுத் தேர்வு: 1.66 லட்சம் பேர் பங்கேற்பு

வேலூர்:

               விஐடி பல்கலைக் கழகத்தின் பி.டெக் நுழைவுத் தேர்வை 1 லட்சத்து 66 ஆயிரத்து 493 மாணவ, மாணவியர் சனிக்கிழமை எழுதினர்.

              பல்கலைக் கழகத்தில் 2011-12-ம் கல்வியாண்டில் பி.டெக் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட 13 பாடப் பிரிவுகளில் சேருவதற்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. நாட்டில் 105 நகரங்களிலும், துபாய், ரியாத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இத்தேர்வு நடத்தப்பட்டது. 

              மொத்தம் 243 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தில்லியில் நடந்த தேர்வை வேந்தர் ஜி. விஸ்வநாதன், துணைத் தலைவர் ஜி.வி. சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர். மும்பையில் நடந்த தேர்வை துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதனும், சென்னையில் நடந்த தேர்வை ஜி.வி. செல்வமும், துபாயில் நடந்த தேர்வை துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதனும் பார்வையிட்டனர். நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்படுகிறது. 

நுழைவுத் தேர்வில் தகுதி பெறுவோருக்கு ரேங்க் அடிப்படையில் பி.டெக். பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூன் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேலூர் மற்றும் சென்னை விஐடி வளாகங்களில் நடைபெறுகிறது.

 மேலும் விபரங்களுக்கு 



Read more »

திங்கள், ஏப்ரல் 11, 2011

ஐஐடி நுழைவுத் தேர்வு: நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் பங்கேற்ப்பு

            ஐஐடி-க்களில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  

              புவனேசுவரம், சென்னை, தில்லி, காந்தி நகர், குவாஹாட்டி, ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், கரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ரோப்பர், ரூர்க்கி உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஐஐடி-ஜீ நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.  நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடாகம் உள்ளிட்டப் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரத்து 650 பேர் தேர்வு எழுதினர்.  

            நாடு முழுவதும் 130 நகரங்கள், துபையில் ஒரு மையம் என மொத்தம் 1,051 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.  நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி வெளியிடப்படும். எந்த ஐஐடி நிறுவனத்தில் படிக்க விருப்பம் உள்ளது என்பதை மே 30-ம் தேதியிலிருந்து ஜூன் 13-ம் தேதிக்குள் மாணவர்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Read more »

சனி, பிப்ரவரி 26, 2011

அண்ணாமலை பல்கலைக்கழக நுழைவு தேர்வு விண்ணப்பம் விற்பனை

சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2011-12-ம் கல்வி ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்மஸி போன்ற பட்ட படிப்பு வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

               பி.இ., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை) போன்ற பட்டபடிப்பு வகுப்புகளுக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தின் விலை ரூ.400. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்மசி போன்ற பட்ட படிப்பு வகுப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை ரூ.300 ஆகும்.    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31-3-2011. பல்கலைக்கழகத்தின் வகுப்புகளில் இந்த கல்வியாண்டில் சேர்ந்து பயில இந்த நுழைவுத்தேர்வு அவசியம் என்றும் இந்த மார்ச் மாதம் பிளஸ்2- தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.

            மேலும் இந்த விண்ணப்பங்களை வேலை நாட்களில் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பணம் செலுத்தியோ அல்லது தபால் மூலமாகவோ மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior