உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பன்றி காய்ச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பன்றி காய்ச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி பிரிவு

கடலூர்:

      பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

      தமிழகத்தின் பல பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவிவருகிறது. இந்நிலையில் பல மாவட்டங்களில் பன்றி காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது: 

       தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி உடன் மூச்சு திணறல் இருந்தால் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். மேற்கண்ட வகையில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் வந்து பரிசோதனை செய்துகொள்ளலாம் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.



Read more »

செவ்வாய், அக்டோபர் 19, 2010

6 மாவட்டங்களில் ஓரிரு நாளில் பன்றிக் காய்ச்சல் இலவச தடுப்பூசி



   
                   பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை, வேலூர், கடலூர் உள்பட 6 மாவட்டங்களில் ஓரிரு நாளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்தை இலவசமாகப் போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  
 
                 தென் மேற்குப் பருவமழை காரணமாக கடந்த மாதம் சென்னை, வேலூர், கடலூர், கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது.  அரசு மருத்துவமனைகளில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். எச்1என்1 வைரஸ் மூலம் பரவும் பன்றிக் காய்ச்சல் காரணமாக மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். 
 
 தடுப்பூசி மருந்து: 
 
                   சென்னை கிங் ஆய்வு மையம், சென்னை மாநகராட்சி பரிசோதனைக் கூடங்களில் கட்டண அடிப்படையில் தடுப்பூசி மருந்து போடும் பணி தொடங்கப்பட்டது. ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். 
  
யாருக்கு இலவசம்? 
 
                  கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வைத்துள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் சொட்டு மருந்து (மூக்கில் விடுதல்) அல்லது தடுப்பூசி மருந்தை இலவசமாகப் போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சொட்டு மருந்து, தடுப்பூசி மருந்தை மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற ரூ.15 கோடியை அரசு ஒதுக்கியது.  டெண்டர் நடைமுறைகள் முடிவடைந்து, சென்னை உள்பட மேலே குறிப்பிட்ட 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு ஓரிரு நாளில் தடுப்பூசி மருந்து விநியோகம் நடைபெறும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
 ஓர் ஆண்டுவரை நோய் தடுப்பு சக்தி: 
 
              பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தின் ஆற்றல் ஓர் ஆண்டு வரை நீடித்து, உடலுக்கு நோய் தடுப்புச் சக்தியை அளிக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  
 
அறிகுறிகள் என்ன? 
 
                பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னை, கோவை உள்பட அரசு மருத்துவமனைகளின் தனி சிகிச்சைப் பிரிவுகளில் ஒரு சிலர் மட்டுமே இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இருமல்-சளியுடன் வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி, தலை வலி, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.  
 
                            இந்த அறிகுறிகள் தொடரும் நிலையில், தாமதிக்காமல் பன்றிக் காய்ச்சலுக்கு உரிய தொண்டைச் சளி பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.  ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை பெற்றால், உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

Read more »

புதன், அக்டோபர் 13, 2010

சிதம்பரம் நகரில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி தட்டுப்பாடு

சிதம்பரம்:

                   சிதம்பரம் நகரில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு அதிகம் பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிதம்பரம் பகுதியில் மெட்ராஸ்-ஐ நோயும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

                மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பன்றிக்காய்ச்சல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்காததால் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு சென்று பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுமா என கேட்டால், "கடலூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றுதான் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்' என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

                    சிதம்பரம் பகுதியில் ஒருசில தனியார் மருத்துவமனைகளில் | 600-க்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள் கடலூர் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. எனவே சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பன்றிக்காயச்சல் தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்னி சிறகுகள் இயக்கத் தலைவர் ஆ.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

திங்கள், அக்டோபர் 11, 2010

சிதம்பரம் பகுதியில் மர்மக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சலா என மக்கள் அச்சம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பன்றிக்காய்ச்சலா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

                       சிதம்பரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிகம் பேர் மர்மக் காய்ச்சலால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 100க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் மர்மக் காய்ச்சல் சிகிச்சைக்காக புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இல்லை என அங்குள்ள டாக்டர்கள் தெரிவிப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். 

                      தனியார் மருத்துவமனைகளில் |600க்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

                      மேலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய் விழிப்புணர்வு குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து ஆலோசனைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

புதன், செப்டம்பர் 22, 2010

பன்றிக் காய்ச்சலை முழுவதுமாக தடுக்க முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி



                  முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வறுமை கோட்டுக்குக் கீழ் அல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடுவது தொடரும் என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர், பன்றிக் காய்ச்சலை முழுவதுமாக தடுக்க, மருத்துவக் குழு அமைத்து, வீடு, வீடாகச் சென்று ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். 
 
                     இந்த நடவடிக்கையை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அதன்படி, நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ராஜாகலிஃபுல்லா ஆஜராகி பதில் மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கிண்டியில் உள்ள கிங் மருத்துவ நிறுவனம் மற்றும் 9 தனியார் ஆய்வுக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
 
                  மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு  1.55 கோடி மதிப்பிலான சிறப்பு மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆய்வுக் கூடங்களை வலுப்படுத்த கூடுதலாக  2.49 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள், ஊசிகள் போன்றவை தேவையான அளவுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நோயை எதிர்கொள்ளும் முறை பற்றி தனியார் மருத்துவர்களுக்கும் வழிகாட்டப்பட்டுள்ளது.   கன்னியாகுமரி, சென்னை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளது. 
 
                    இந்த இடங்களில் வீடு வீடாகச் சென்று நோயைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நோய் தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்தும் நிலை, அவர்களுக்கு தடுப்பு மருந்து கொடுப்பது, சிகிச்சை அளிப்பது  என நோய் தாக்கியவர்களைப் பிரித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை தொடர்பான அதிகாரிகள் மூலம் இந்த நோயின் நிலை நாள்தோறும் கவனிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3,596 நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 774 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களில் 635 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
 
                  இந்த நோய் தாக்கி 9 பேர் இறந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு  15 கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 
 
                         இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த நோய் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பற்றிய விவரங்களை அரசு அளிக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கை அக்டோபர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Read more »

பன்றிக் காய்ச்சல்: விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

நெய்வேலி:

                     நெய்வேலி நகரில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தை என்எல்சி நகர நிர்வாகம் பொது மக்களுக்கு விநியோகித்து வருகிறது. 

                   நெய்வேலியில் பன்றிக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என்எல்சி நகர நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில், பன்றிக்காய்ச்சல் குறித்த அச்சத்தை போக்குதல், மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அறிகுறிகள், பன்றிக் காய்ச்சலை தவிர்க்க செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது. மேலும் நகரில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் பொருட்டு நகர நிர்வாகம் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் எனவும் என்எல்சி நகர நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read more »

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

பன்றிக் காய்ச்சல்: என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சாவு

நெய்வேலி:

                     பன்றிக் காய்ச்சலால் என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சொக்கலிங்கம்(46) வெள்ளிக்கிழமை இறந்தார். தொமுசவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துவந்தார். இவர் இம்மாத தொடக்கத்தில் உறவினர் இல்ல திருமணத்துக்காக ராஜபாளையம் சென்றுவந்தார்.

                 வீடு திரும்பிய சொக்கலிங்கத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 2-ல் என்எல்சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சொக்கலிங்கத்துக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவே, செப்டம்பர் 3-ம் தேதி அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சொக்கலிங்கம், வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்துவிட்டார். 

                    இதைத் தொடர்ந்து சொக்கலிங்கத்தின் உடல் நெய்வேலிக்கு கொண்டுவரப்பட்டு, வெள்ளிக்கிழமை பகலிலேயே மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த சொக்கலிங்கத்துக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

Read more »

புதன், ஆகஸ்ட் 18, 2010

"பன்றிக் காய்ச்சல் அச்சம் தேவையில்லை" : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விருத்தாசலம்:
 
            பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மருத்துவர்கள் குழு முடுக்கிவிடப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் குறித்த அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
 
விருத்தாசலம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:
 
              விருத்தாசலம் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக |11 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அமைச்சர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மட்டும்தான் செய்கிறார் என்பது தவறு. அரசின் திட்டங்கள் அனைத்து தொகுதி மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த மாவட்ட முழுவதும் எனது தொகுதியைப் போல் நினைத்து செயல்படுகிறேன். 
 
               இந்த மருத்துவமனையில் |1.20 கோடி செலவில் மேலும் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும். இதேபோல் 29 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் |95 கோடி மதிப்பில் மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. தேர்தல் அறிக்கைகளில் சொன்னதை எல்லாம் திமுக அரசு கொடுத்திருக்கிறது. 
 
                சில ஆண்டுகளுக்கு முன் கேஸ் இணைப்பு பெறுவது சிரமம். ஆனால் திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எளிமையாக இலவச கேஸ் அடுப்பு கிடைக்கிறது. மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளன. கடந்த ஆண்டைவிட தற்போது பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் 28 பேருக்குத்தான் பன்றி காய்ச்சல் தாக்கம் இருக்கிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சல் நோயை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் மருத்துவர்கள் குழு முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பன்றி காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றார்.

Read more »

புதன், ஜூன் 30, 2010

பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 21 பேர் பாதிப்பு







                  ""பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளது,'' என்று, சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

              பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.  சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை கமிஷனர் ஜோதி நிர்மலா, மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்,  அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: 

                  "எச்1என்1' எனப்படும் பன்றிக் காய்ச்சல், கேரளாவில் பரவுவதாக செய்தி வந்ததும், அந்த நோயை தடுப்பது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இதன்பின், கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் ஆறு மாவட்டங்களின் துணை சுகாதார இயக்குனர்களை தொடர்பு கொண்டு, இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை தெரிவித்தோம். பஸ் ஸ்டாண்ட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரிசோதனை நடத்தப்படுகிறது.  தமிழகத்தில் இதுவரை 21 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 பேர், சென்னையில் மூன்று பேர், திருவள்ளூரில் இரண்டு பேர், நாகை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

              இந்த காய்ச்சலால் ஒருவர் கூட இறக்கவில்லை. மக்கள் வீண் பீதியை பரப்பக் கூடாது. இந்நோயின் வீரியம் குறைந்துள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான, "டாமி ப்ளூ' மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளன. அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருந்து அனுப்பப்பட்டுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குனர் தலைமையிலான குழு, கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்றுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை இக்குழு கண்காணிக்கும். அரசு மருத்துவமனைகளில், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

                  நோய் அறிகுறிகளான இருமல், சளி, காய்ச்சல் இருந்தால், உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தும்மல் வரும் போது, துணியால் மூக்கை பொத்த வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு, வேறு மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கக் கூடாது. நோய் முற்றிய பின் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Read more »

வியாழன், அக்டோபர் 08, 2009

கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லை: சுகாதாரத்துறை

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று கடலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஜெயவீர குமார் கூறினார். மத்திய அரசின் சார்பில் சிதம்பரத்தில் பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்கம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசிய டாக்டர் ஜெயவீர குமார் கூறுகையில், 

                    "கடலூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே இந்த நோய் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை" என்றார். பன்றிக்காய்ச்சல், காசநோய், எய்ட்ஸ், மலேரியா, யானைக்கால் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்துவதில் பள்ளி மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior