உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பாடலீஸ்வரர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடலீஸ்வரர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 07, 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா

 
கடலூர்:

      கடலூர் திருப்பாபுலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 
 
          
                அதுபோல் இந்த ஆண்டு வைகாசி திருவிழா திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 9 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மற்றும் சேக்கிழார் வீதி உலா நடைபெறுகிறது.

              தொடர்ந்து 13-ந் தேதி வரை காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், மண்டகப்படியும் நடக்கிறது.   விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது.  தேர் திருவிழாவில் கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெகநாதன், செயல் அலுவலர் மேனகா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
 
 
 

Read more »

திங்கள், மே 30, 2011

கடலூர் கோயில்களில் அக்னி நட்சத்திர தோஷம் நீங்க சிறப்புப் பூஜை

கடலூர்:

           அக்னி நட்சத்திரத் தோஷம் நீங்க கடலூர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  

             கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கியது. இதனால் கடலூரில் கடும் வெயில் தகித்தது.   பல நாள்களில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டியது. மக்களை வாட்டி வதைத்த அக்கினி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. அக்கினி நட்சத்திர காலத்தில் மக்களுக்கு பலவேறு தோஷங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தோஷங்களை நிவர்த்தி செய்ய கடலூர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.  

              கடலூர் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவு சிறப்பு பூஜை சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிவரை நடந்தது.  108 கலசங்களில் புனித நீர் ஊற்றி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு, பாடலீஸ்வரருக்கு அந்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.  மகாதேவ குருக்கள், நாகராஜ குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகளைச் செய்தனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெகந்நாதன், செயல் அலுவலர் மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read more »

வியாழன், ஜனவரி 27, 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொது அமைப்புகள் சார்பில் அன்னதானம்



கடலூர்:

         கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் 274 சிவதலங்களுள் ஒன்றாகும். 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி 1 1/2 கோடி ரூபாய் செலவில் கோவில் திருப்பணிகள் நடை பெற்றன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

                 இதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. மகா கும்பாபிஷேகம் இன்று (26-ந்தேதி) நடை பெற்றது. காலை 5 மணி முதல் 7 மணிவரை யாகபூஜையும், 7.30 மணி முதல் 8 மணிவரை மஹா பூர்ணாஹ¨தி, தீபாராதனை யாத்ரா தானம் ஆகிய பூஜைகளும் நடைபெற்றன. இது முடிந்த பின்னர் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ராஜகோபுரம் மற்றும் சகல விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பாலமணி, மகாதேவன், நாகராஜன் ஆகியோர் தலைமையில் 108 சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர்.

                 விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி மாலா, அய்யப்பன் எம்.எல்.ஏ., நீதிபதி ராமபத்ரன் ஆகியோர் பங்கேற்றனர். அங்காளபரமேஸ்வரி ஆலய தக்கார் அரிமா ஆர்.வி. நாகராஜன், சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் வி.பி.எஸ். கணேசன், ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன், புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நியூ அழகப்பா ஜுவல்லரி உரிமையாளர்கள் அழகப்பா ராஜகோபால், ரமேஷ்குமார், தமிழ்நாடு வெஜிடேரியன் ரெஸ்டாரண்டு உரிமையாளர் ராஜமாணிக்கம், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேவல்குமார், தொகுதி இணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மாதவன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி கல்யாண சுந்தரம், பி.கே. ரியல் எஸ்டேட் உரிமையாளர் வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமணன், சூர்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நாராயணன், முத்து கலர் லேப் உரிமையாளர் முத்து உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

                     கும்பாபிஷேகத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், குப்புசாமி, பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் சுந்தரவடி வேலு, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு உள்பட 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  200 தன்னார்வ தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். 5 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். கும்பாபிஷேகத்தை யொட்டி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. பொது அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றம் குடிநீர் வழங்கப்பட்டது.  கடலூர் நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈஷா யோகா மையம் மற்றும் வெளிநாட்டினர் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

                கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் ஜெகநாதன், கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், ஆய்வாளர் வெங்கடேசன், வழிபடுவோர் சங்க தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Read more »

வெள்ளி, ஜனவரி 21, 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

கடலூர் :

            கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 26ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 

         தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்கள் அடங்கிய பாடல் பெற்ற தலம் பாடலீஸ்வரர் கோவில். இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்ற மகான்கள் வழிபட்ட திருத்தலமாகும். சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட இக்கோவிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்யப்பட்டது. 

           அதன் பின் கடந்த 1917 ஆண்டும், அதனைத்தொடர்ந்து 1973ம் ஆண்டிலும், 1996ம் ஆண்டும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கடலூர் அருள்மிகு பெரியநாயகி சமேத பாடலீஸ்வர் ஆலய வழிபடுவோர் சங்கம் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திகேயன், கணேசன், லேனா நாகப்பன், பாலதண்டாயுதம், நடராஜன், பாண்டுரங்கன் உள்ளிட்ட வழிபடுவோர் சங்கத்தினர் முயற்சியில் ரூ.1.35 கோடி ரூபாய் செலவில், கோவிலின் பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கருங்கற்கள் பதிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது.

                  இந்து அறநிலையத்துறை சார்பில் ராஜகோபுரம் 8 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவிலின் தூய்மை கெடாமால் இருக்க மூன்று அடுக்கு தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து யாகசாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Read more »

சனி, மே 29, 2010

அக்னி நட்சத்திரம் நிறைவு: பாடலீஸ்வரர் கோயிலில் மூலவரை குளிர்விக்க சிறப்பு பூஜை


கடலூர்:
 
             அக்னி நட்சத்திரம் (கத்திரிவெயில்) வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதை முன்னிட்டு, கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் மூலவரைக் குளிர்விக்க சிறப்பு பூஜைகள் நடந்தன.கடந்த 14 நாள்களாக வாட்டி வதைத்த, அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில், வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. கத்திரிவெயில் காரணமாக கடலூரில் வெப்பம் 106 டிகிரி வரை வெயில் உயர்ந்துள்ளது. கத்திரிவெயிலின் தாக்கத்தை மனிதர்கள் அனுபவிப்பதுபோல், கடவுள்களும் மனமுவந்து ஏற்றுக் கொள்வதாக புராணங்கள் கூறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கோடைக் காலத்தில் குறிப்பாகக் கத்திரிவெயில் தாக்கும் காலத்தில் சிவன் கோயில்களில், மூலவர் விக்கிரகங்களுக்கு மேலே, குளிர்ந்த நீர் இறைவனின் மேல் தாராபாத்திரத்தில் இருந்து தண்ணீர் சொட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். 
 
                   கடலூர் பாடலீஸ்வரர் கோயிலிலும் இதேபோல கடந்த 14 நாள்களாக தாராபாத்திரத்தில் இருந்து குளிர்ந்த நீர் மூலவர் தலையில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெள்ளிக்கிழமை தாராபாத்திரத்தை அகற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூமி குளிரவும், பருவமழை உரிய காலத்தில் பெய்யவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி, ஆகம விதிகளின்படி பாடலீஸ்வரர் கோயிலில் 108 வெள்ளிக் கலச பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றன. கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி, சிந்து, சரஸ்வதி, நர்மதை ஆறுகளில் இருந்து தருவிக்கப்பட்ட புனித நீர், 108 வெள்ளிக் கலசங்களில் நிரப்பப்பட்டு இருந்தன. தாமரை வாகனத்தில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் அமர்ந்து இருக்க, எதிரில் புனித நீர் வெள்ளிக் கலசங்கள் வைக்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன.வெள்ளிக்கிழமை புனித நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கருவறையில் கட்டப்பட்டு இருந்த தாராபாத்திரம் அகற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளை மகாதேவ குருக்கள் தலைமையில், நாகராஜ குருக்கள், ராஜேஷ் குருக்கள் ஆகியோர் நடத்தினர். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் நிர்வாக அலுவலர் மேனகா, அலுவலக மேலாளர் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more »

சனி, மார்ச் 13, 2010

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி உற்சவம்

கடலூர்:

                      கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று (13ம் தேதி) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விழாக்களில் முதன்மையும், பெருமையும் கொண் டது மகா சிவராத்திரி விழா. பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் அருள்பாலிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவலிங்கமேனி கொண்ட காலமே மகா சிவராத்திரி என்றும், அன்று இரவு நான்கு ஜாமத் திலும் சிவபெருமானை உமா தேவி வழிபட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.சிவராத்திரி என்பது துக் கங்களை போக்கி சுகம் கொடுப்பதாகும். அன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு நான்கு கால சிறப்பு பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை இந்து அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ஜெகன் னாதன், செயல் அலுவலர் மேனகா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர். 
 
திருவதிகை:

                    வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று (13ம்தேதி) காலை 6 மணிக்கு அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடக்கிறது.விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சரக் கொன்றைநாதர் சுவாமிக்கு பஞ்ச தீர்த்தங்களால் பக்தர் களே நேரடியாக அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய் யப்பட் டுள்ளது. மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாள் சுவாமிக்கு இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11மணிக்கு 2ம் கால பூஜையும், 2 மணிக்கு 3ம் கால பூஜையும், 4மணிக்கு 4ம் கால பூஜையும், நாளை விடியற்காலை தீபாராதனை நடக்கிறது.

Read more »

திங்கள், பிப்ரவரி 15, 2010

உடல் உறுப்பு தானம் குறித்துவிழிப்புணர்வு பிரசாரம்

கடலூர்: 

             கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேசக்கரங்கள் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம், விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் முரளி தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் திருமார்பன், மாவட்ட துணை தலைவர் தமிழ்ச் செல்வம் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் வாழுமுனி வரவேற்றார். யார் யார் உறுப்புகளை தானம் செய்யலாம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ரமேஷ், கண்ணன், பாஸ்கரன், குமார், ஆண்டனி பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் மணிவண் ணன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior