உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பெண்ணையாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்ணையாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

ஆங்கிலேயர் காலத்து கடலூர் பெண்ணையாற்று பாலம் சீரமைக்க கோரிக்கை

கடலூர் :
 
            கடலூர் பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதே பாலம் போக்குவரத்துக்கு சரியில்லாமல் பலவீனமாக இருந்தது. அதே சமயம் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் கீழ் கடலூர் பெண்ணை ஆற்றின் மேல் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.

               இதனால் பழைய பாலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. காலத்துக்கேற்ப மக்கள் தொகை பெருகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது.

              இந்த நிலையில் பழைய பாலத்தின் மேல் மரம், செடி கொடிகள் வளர்ந்து வீணாகி வருகிறது. எனவே ஆங்கிலேயர் காலத்துக்கு பழைய பாலத்தை சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், விபத்துகள் தவிர்க்கப்படும். பழைய பாலத்தை சீரமைப்பதன் மூலம் அது மக்களின் பயன்பாட்டுக்கு விடலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அமுதவல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
 
 
 
 

Read more »

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

ரூ. 30 கோடியில் கடலூரில் கரைகள் பலப்படுத்தும் திட்டம்


கடலூர் ஆல்பேட்டை அருகே நகராட்சி கரும காரிய கொட்டகையின் குறுக்காகப் போடப்பட்டிருக்கும் பெண்ணையாற்றின் தெற்குக் கரை. க
கடலூர்:

           கரைகள் பலப்படுத்தும் திட்டத்தில் கடலூரில் ரூ. 30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆற்றங்கரைகள், அரைகுறையாகப் போடப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  

              கெடிலம், பெண்ணையாறு ஆகியன கடலூர் நகருக்குள் புகுந்து வங்கக் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் கடலூர் நகராட்சி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைகின்றன.  விளைநிலங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் அரசு இழப்பீடு வழங்க வேண்டியது இருக்கிறது. இதனால் ரூ. 30 கோடியில், பெண்ணையாறு கெடிலம் ஆறு ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்தும் திட்டம், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.  தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவு அடைந்து விட்டன.

                இரு ஆறுகளின் கரைகளிலும் 4 சக்கர வாகனங்கள் சென்று வருவதற்கு வசதியாக, சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கரைகளுக்கு மேல் சுமார் 3 அங்குல கனத்தில் சரளைக் கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளன.  இக்கரைகளின் வலிமை எத்தகையது என்பது வரவிருக்கும் வடகிழக்குப் பருவ மழையின் போதுதான் உறுதிபடுத்தப்படும். மேலும் கரைகள் பல இடங்களில், அமைக்கப்படாமல் விடுபட்டுள்ளன.   குறிப்பாக கெடிலம் ஆற்றில் கம்மியம்பேட்டை பாலம் அருகே இரு கரையிலும், தலா 100 மீட்டர் தூரத்துக்குக் கரைகள் அமைக்கப்படவில்லை. இப் பகுதியில்தான் ஆண்டுதோறும் கெடிலம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு, பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

               கரைகள் அமைக்கப்படாத பகுதிகளில் இருந்து, ஆற்று வெள்ளம் நகருக்குள் புகும் அபாயம் நிறைய இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  மேலும் ஆல்பேட்டை அருகே பெண்ணை ஆற்றங்கரையில் சுடுகாடு அருகே, நகராட்சி பல லட்சம் செலவில் கட்டியிருக்கும் கரும காரியக் கொட்டகையை மூழ்கடித்துக் கரை அமைக்கப்பட்டு உள்ளது. வெள்ளக் காலங்களில் இதன் வழியாக மஞ்சக்குப்பம் பகுதிக்குள் வெள்ளம் புகவும், கரும காரியக் கொட்டகை இடிந்து, வெள்ளத்தில் அடித்துக் செல்லும் அபாயமும் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.  

இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டடைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 

                கெடிலம், பெண்ணை ஆறு ஆகியவற்கு தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் கரைகள் பல இடங்களில் விடுபட்டுள்ளன. இது மிகவும் ஆபத்தானது. அப்பகுதிகள் வழியாக நகருக்குள் வெள்ளம் புகுந்து, பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  ஆல்பேட்டையில் பெண்ணை ஆற்றங்கரையில், நகராட்சி கருமாதிக் கொட்டகையின் குறுக்காக, கரை அமைக்கப்பட்டு இருப்பது, கரும காரியங்கள் நடத்துவோருக்கு இடையூறாக அமைந்துள்ளது. இதனால் கரும காரியக் கொட்டகை வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அபாயமும், அதன் வழியாக ஊருக்குள் வெள்ளம் புகும் ஆபத்தும் உள்ளது.  ஆக்கிரமிப்புகள் அகற்றப் படாமல், இருப்பது இருக்கிறபடியே கரைகள் அமைக்கப்படுவதாலும், தனி நபர்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும் இவ்வாறு கரைகள் அரைகுறையாக அமைக்கப்படுகின்றன. 

                 இதனால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது. எதிர்பார்த்த வெள்ளப் பாதுகாப்பு, மக்களுக்குக் கிடைக்க வில்லை என்றார்.  

இதுகுறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சின்னராஜ் கூறியது 

                    மேற்கண்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரைகள் பலப்படுத்தும் பணிகளைப் பார்வையிட சிறப்புக் குழு ஒன்று வர இருக்கிறது என்றார்.  




Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

கடலூரில் பயன்பாட்டுக்கு வராத ரூ. 1 கோடி செலவிட்ட நவீன எரிவாயு தகன மேடை


செயல்படாமல் கிடக்கும் கடலூர் நகராட்சி எரிவாயு தகன மேடை.
கடலூர்:
 
            கடலூரில் இரு எரிவாயு தகன மேடைகள், ரூ. 1 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன.  

             கடலூர் நகராட்சி எல்லைக்குள் பெண்ணையாற்றங்கரையில் 11 இடங்களிலும், கெடிலம் ஆற்றங்கரையில் 7 இடங்களிலும் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒரு சடலத்தை எரிக்க ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.  எனவே சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருக்கவும், குறைந்த செலவில் சடலங்களை எரிக்கவும், பெண்ணை ஆற்றங்கரையிலும், கெடிலம் ஆற்றங்கரையிலும் மின்சார தகன மேடைகள் அமைக்க, 4 ஆண்டுகளுக்கு முன், கடலூர் நகராட்சி முடிவு எடுத்தது. 

               பின்னர் இதற்கு செலவு அதிகம் ஆகும் என்று கருதிய நகராட்சி நிர்வாகம், எரிவாயு தகன மேடையை அமைக்க முடிவு எடுத்தது.  அதன்படி தலா ரூ. 50 லட்சம் செலவில் ஆல்பேட்டை பெண்ணை ஆற்றங்கரையிலும், செம்மண்டலம் கெடிலம் ஆற்றங்கரையிலும் இரு எரிவாயு தகன மேடைகளை நகராட்சி நிர்வாகம் கட்டியது. ஓராண்டுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நீடித்த இத் திட்டம், 2 ஆண்டுகளுக்கு முன் முடிவுற்றது. ஆனாலும் இதுவரை பயன்பாட்டுக்கு வந்தபாடில்லை.  எரிவாயு தகன மேடைகளின் நிர்வாகத்தை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது. 

              ரோட்டரி, அரிமா போன்ற தொண்டு நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளை மூலமே நிர்வகிக்க வேண்டும் என்று நகராட்சித்துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.  கடலூரில் நீண்ட காலம் எந்த தொண்டு நிறுவனமும், அறக்கட்டளையும் இச்சேவைப் பணியை எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. இறுதியாக வழக்கறிஞர் ரங்கநாதன் தலைமையில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை இச்சேவைப் பணியை ஏற்று நடத்த முன்வந்தது. முதலில் அறக்கட்டளைக்கு குறைந்த பட்ச நிதியை திரட்ட வேண்டும். அதற்காக அந்த அறக்கட்டளை பெயரில் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது. 

                 அதே நேரத்தில் நகராட்சி ஆணையர் பெயரில் கடலூர் பரோடா வங்கியில் மற்றொரு கணக்கு தொடங்கப் பட்டது. ஆணையர் வங்கிக் கணக்கில்தால் நன்கொடைகள் டெபாஸிட் செய்ய வேண்டும் என்று, நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இந்த வங்கிக் கணக்கில் இருந்துதான், அறக்கட்டளை வங்கிக் கணக்கிற்கு பணம் வழங்க முடியும் என்றும் கூறியது.  இதனால் இரட்டை நிர்வாக முறை அமையும், திட்டத்தை சுமூகமாக செயல்படுத்துவது சிரமம் என்று அறக்கட்டளை கருதியதால், அறக்கட்டளை நிர்வாகம் செயல்படாமல் முடங்கிக் கொண்டது. நகராட்சி நிர்வாகத்துக்கும், அறக்கட்டளைக்கும் இடையே எழுந்த எண்ணச் சிதைவுகளே, இத்திட்டம் கேட்பாரற்றுக் கிடப்பதற்குக் காரணம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

             இந்த நிலையில் இரு எரிவாயு தகன மேடைகளின் இயந்திரங்களும், கடற்கரை உப்பங்கழிகள் ஓரமாக அமைந்து இருப்பதால், கடல் காற்றினால் துருப்பிடித்துச் சேதம் அடையத் தொடங்கி விட்டன. இதனால் கடலூரில் வழக்கம்போல், நல்ல திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாதியற்ற நிலை உருவாகி இருக்கிறது.  கடலூர் மாவட்டத்தில் அறக்கட்டளைகளும், சமூக சேவைச் சங்கங்களும் ஏராளம். ஆனால் அவைகள் ஆற்றும் சமூகப் பணிகள் என்ன என்று அலசி ஆராய்ந்தால், மிகப்பெரிய கேள்விக் குறிதான் மிஞ்சும். எனினும் நகராட்சி விதிக்கும் நிபந்தனைகளை, கட்டுப்பாடுகளைக் கண்டு, இந்த சமூகநல அமைப்புகள் அஞ்சுகின்றனவோ என்ற ஐயமும் எழாமல் இல்லை.  

இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 

             எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டு 12 மாதங்களில் பயன்பாடுக்கு வரவேண்டும். இல்லையேல் பின்னர் இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்று, அவற்றை நிர்மாணித்த நிறுவனம் தெரிவிக்கிறது. எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நகராட்சி புதிய ஆணையர் பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் நிர்வாகத்தில் உள்ள, சமூகநலனில் அக்கரையற்ற சில நபர்களின் குறுக்கீட்டால், இத்திட்டம் செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார். 

 இதுகுறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது

                 திட்டத்துக்காக வங்கிக் கணக்கில் ரூ. 80 ஆயிரம் உள்ளது. தகன மேடைகளில் வெப்பநிலை பரிசோதனை நடக்கிறது. அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு இருக்கிறோம் என்றார்.   






Read more »

திங்கள், ஜூலை 11, 2011

கடலூரில் மணல் விலை ஏற்றம்: கட்டுமானப் பணிகள் பாதிப்பு


கடலூர் பெண்ணை ஆற்றில் மணல் எடுத்து வரும் மாட்டுவண்டிகள்.
கடலூர்:

         கடலூரில் திடீரென ஆற்று மணல் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.  

              கடலூரில் 6 மாதங்களுக்கு முன்பு வரை மாட்டுவண்டி மணல் ரூ. 350 க்கும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைத்து வந்தது. மழை காலத்தில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது மணல் எடுப்பதில் சிரமம் இருப்பதால் அத்தகைய காலங்களில் மணல் விலை உயர்வது உண்டு. ஆனால் நல்ல கோடை காலத்தில் கடலூரில் மணல் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவது, வீடு கட்டுவோரையும், ஒப்பந்ததாரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  கடலூரில் தற்போது மாட்டு வண்டி மணல் ரூ. 1,000 ஆகவும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 8 ஆயிரமாகவும் உள்ளது. 

              சில தினங்களுக்கு முன் நெல்லிக்குப்பத்தை அடுத்த, பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றில் புதிதாக மணல் குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.  இங்கு இருந்து கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் மணல் கிடைக்கிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் ஒரு லாரி மணல் ரூ. 5 ஆயரம் முதல் ரூ. 6 ஆயிரமாக உள்ளது. பண்ருட்டியில் மாட்டு வண்டி மணல் விலை ரூ. 350 ஆகவும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரம் ஆகவும் உள்ளது. திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் டிராக்டர் இழுக்கும் டயர் வண்டி மணல், ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைக்கிறது. ஆனால் கடலூரில் மட்டும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஏன் இந்த விலை ஏற்றம் என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.  

               கடலூரில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு ஆகியவை கடலூர் நகராட்சி வழியாக ஓடிக் கடலில் கலக்கின்றன. கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க, ஏனோ அனுமதிக்க வில்லை. மணல் விலை ஏற்றம் காரணமாக, கடலூர் கட்டுமானச் செலவுகள் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. மணல் விலை உயர்வால் நகராட்சி மற்றும் அரசு கட்டுமானப் பணிகளில், உப்பங்கழிப் பகுதிகளில் காணப்படும் உவர் மண்ணையும், ஆற்றங்கரைகளில் உள்ள தரம் குறைந்த மண்ணையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள்.  

                 இதனால் அரசுக் கட்டடங்கள் மற்றும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை சிமெண்ட் சாலைகளின் தரம் படுமோசமாகிக் கொண்டு இருக்கிறது. இத்தனை மோசமான மணலைக் கொண்டு கட்டப்படும் கடலூர் பாதாளச்சாக்கடை திட்டப் பணிகளின் கட்டுமானங்கள் என்னவாகும் என்ற கவலையும் கடலூர் மக்களுக்குத் தோன்றி இருக்கிறது.  கடலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நத்தப்பட்டு பெண்ணை ஆற்றில் அள்ளப்படும் மணலுக்கு, மாட்டு வண்டிக்கு பொதுப்பணித்துறை வசூலிக்கும் கட்டணம் ரூ. 48 மட்டுமே. கடலூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றுக் குவாரியில், மணல் அள்ளும் லாரிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 650 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 

              ஆனால் இந்த லாரிகளும், மாட்டு வண்டிகளும் கடலூர் மக்களிடம் அபரிமிதமாகக் கட்டணம் வசூலிப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.  நுகர்வோருக்கு ஏற்பட்டு இருக்கும் மணல் விலை ஏற்றத்தால், அரசுக்கு வருவாய் அதிகாரித்தால்கூட மக்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இடைத்தரகர்கள்தான் மணல் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள், மணல் சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள்.  மேலும் மணல் எடுத்து வரும் வழியில் உள்ள கிராமங்களில், செல்வாக்கு மிக்க நபர்கள் மாட்டு வண்டிகளிடம், கோயில் விழாக்களுக்காக என்று கூறி, ஒரு நடைக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை வசூலிக்கிறார்கள். 

              அதற்கு ரூ. 20 க்கு ரசீதும் கொடுக்கிறார்கள். பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆற்றில், பணம் செலுத்தி மணல் அள்ளுவோரிடம், இத்தகைய நபர்கள் பணம் வசூலிக்க அனுமதி அளித்தது யார் என்று தெரியவில்லை. 

 மணல் விலை ஏற்றம் குறித்து, லாரி உரிமையாளர் சங்கர் கூறுகையில், 

                பட்டாம் பாக்கத்தில் கடந்த ஒரு வாரமாக குவாரி செயல்படுகிறது. இக்குவாரியை இடைத் தரகர்கள் சிலர் கைப்பற்றிக் கொண்டு, மற்ற லாரிகளை உள்ளே அனுமதிப்பது இல்லை. வெளியூர்களில் இருந்து செல்லும் லாரிகள், ஒரு லோடு மணலுக்காக, 3 நாள்கள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.  அப்பகுதித் தரகர்கள் பெருவாரியாக மணல் எடுத்து, தங்கள் சொந்த இடங்களில் கொட்டி வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதுவே மணல் விலை உயர்வுக்குக் காரணம். இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, மாட்டு வண்டிக்காரர்கள் விலை உயர்த்தி விட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.     




Read more »

சனி, மே 28, 2011

கடலூரில் பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டும் வாகனங்கள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி

கடலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாற்றின் கரையில், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் வாகனம்.

கடலூர்:

             கடலூரில் கண்ட இடங்களில் எல்லாம், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறிவருகிறது. 

              கடலூர் கட்டுப்பாடற்ற நகரமாக மாறிவருகிறது. வீடுகளுக்கு நகராட்சிக் குடிநீர் இணைப்புகளை நகராட்சி அனுமதியின்றி இரவோடு இரவாக, தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நகராட்சி உறுப்பினர்களின் மறைமுக ஆதரவு இதன் பின்னணியில் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறது. 

             இதனால் நகராட்சிக்குக் குடிநீர் வரி கிடைப்பது தடைபடுகிறது. நகரில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் மீதமாகும் உணவுப் பொருள்கள், இலைகள் உள்ளிட்ட குப்பைகள் மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் சாலையோரங்களில் எவ்வித பயமும் இன்றி கொட்டப்படுகின்றன. நகரைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை வீதிகளில் ஆங்காங்கே கொட்டி எரிக்கிறார்கள். 

             கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் கரைகளில் கொட்டும் போக்கும் வேகமாகப் பரவி வருகிறது. பல கோடி செலவிட்டு கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டும், அவை ஒன்றுக்கொன்று சரியான மட்டத்தில் கட்டப்படாததால், தனித்தனி தொட்டிகளாக மாறி, சாக்கடை நீர் வெளியேற்றப்படாமல் தேங்கி, கொசு உற்பத்திக் கேந்திரங்களாக மாறிவிட்டன. அண்மைக் காலமாக இச் சுகாதாரக் கேடுகளின் வரிசையில் கைகோர்த்து நிற்பவர்கள், செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும் நபர்கள். அழகாக வர்ணம் தீட்டப்பட்டு, நிறுவனங்களின், உரிமையாளர்களின் பெயர்கள், தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் என பலத்த பந்தாவுடன் நகரில் வலம் வரும் செட்டிக் டாங்க் சுத்தம் செய்வோர், நகரின் சுகாதாரத்தை நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். 

              செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்ய ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கும் இவர்கள், கழிவுகளைக் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டி, மற்றவர்களின் சுகாதாரத்தைக் கெடுத்து வருகிறார்கள். கெடிலம், பெண்ணையாறு, தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாறு, கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால், மஞ்சக்குப்பம் பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் கழிவுகளைக் கொட்டிச் சென்று விடுகிறார்கள். 

             குடலைப் பிடுங்கும் துர்நாற்றத்துடன் விளங்கும் அப்பகுதி சுகாதாரம் பற்றி, யாருக்கும் கவலையற்ற போக்கு கடலூரில் நீடித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையோரம் பாதாளச் சாக்கடை கழிவு நீரகற்றும் நிலையம், சுடுகாடு, கரும காரியக் கொட்டகை உள்ள உப்பனாற்றங்கரைப் பகுதியை, சுகாதாரக் கேட்டின் மையமாக மாற்றி வருகின்றனர், செட்டிக் டேங்க் சுத்தம் செய்வோரும் ஹோட்டல் உரிமையாளர்களும். இவர்களைக் கேட்க நாதியற்ற நிலை, திறமையற்ற நகராட்சி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. 

              கடந்த காலங்களில் இந்த நகராட்சியையே குப்பைத் தொட்டியாக மாற்றிய அதிகாரிகள் அகற்றப்பட்டு, நன்கு செயல்படும் அதிகாரிகள் பொறுப்பு ஏற்று இருக்கும் நிலையில், இத்தகைய புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் விரும்புகிறார்கள். 

இப் பிரச்னை குறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது 

              இத்தகைய புகார்கள் நகராட்சிக்கு நிறைய வருகின்றன. ஜூன் 5-ம் தேதி செப்டிக் டாங்க் வாகன உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க இருக்கிறேன். அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கண்டிப்பாக, நகராட்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேறும்போது, செட்டிக் டாங்க் கழிவு பிரச்னை ஏற்படாது. 

             செப்டிக் டாங்க், மற்றும் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளைச் சுத்தம் செய்வோர், பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். காப்பீடு செய்து இருக்க வேண்டும். விஷ வாயுக்களை கண்டறியும் கருவி நகராட்சியில் வாங்கப்பட்டு உள்ளது என்றார்.



Read more »

புதன், மே 04, 2011

கடலூர் நகராட்சிக் குடிநீர் சுவை குறைந்தது ஏன்?

கடலூர்:

             கடலூரில் 10 ஆண்டுகளுக்கு முன், பெண்ணை ஆற்றில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.  

               கடலூரில் ஆறுகள், வாய்க்கால்கள் கடலில் சங்கமிக்கும் வழியாகவும், உப்பங்கழிகள் வழியாகவும், கடல் நீர் சுமார் 15 கி.மீ. தூரம் வரை, நகருக்குள் புகுந்து உள்ளது. ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக அரசு கண்டு கொள்ளவே இல்லை.  இதனால் கடலூரில் நிலத்தடி நீர், பெரும்பாலும் உவர் நீராக மாறிவிட்டது. பெண்ணை ஆற்றில் போடப்பட்டு இருந்த ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் சுவை குன்றியது. எனவே மாற்றாக கேப்பர் மலையில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் திட்டம், 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.16 கோடியில் தொடங்கப்பட்டது. 

            எனினும் குடிநீர் பிரச்னை தீரவில்லை. கேப்பர் மலை குடிநீர் திட்டத்துக்காக, குடிநீர் வாரியம், நகராட்சி மூலமாக இதுவரை 32 ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.   இவற்றில் இருந்து கிடைக்கும் குடிநீர், ஆரம்பத்தில் நல்ல சுவையாக இருந்தது, தற்போது பெரிதும் சுவை குன்றிவிட்டது. குடிநீர் பகிர்மானக் குழாய்களில் உடைப்பு மற்றும் கசிவு அவ்வப்போது ஏற்பட்டுவதே, குடிநீர் சுவை குறையக் காரணம் என்று பலரும் கருதுகிறார்கள். அவைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக நகராட்சி பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  

               ஆனால் நகராட்சிக் குடிநீர் சுவை குறைவதற்கு, கேப்பர் மலையில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் தொடர்ந்து ஏற்படும் பிரச்னைகளே காரணம் என்று நகராட்சிப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கேப்பர் மலையில் குடிநீர் வாரியம் மூலம் பெரும்பாலான ஆழ்குழாய்க் கிணறுகள், 260 மீட்டர் ஆழத்தில் போடப்பட்டு உள்ளன. இவற்றில் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது, ஆனால் சுவை குறைந்து கொண்டே போகிறது. நகராட்சி மூலம் ஆழ்குழாய்க் கிணறுகள் 110 மீட்டர் ஆழத்தில் போடப்பட்டு உள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கும் குடிநீர் சுவையாக இருக்கிறது. ஆனால் போதிய அளவு நீரூற்று இல்லை.  

            கேப்பர் மலையில் போடப்படடு உள்ள 32 ஆழ்குழாய் கிணறுகளில், குடிநீர் சுவை குறைவுப் பிரச்னை காரணமாக, சுமார் 15-ல் தண்ணீர் இறைப்பது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பல ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் குடிநீரில் இரும்புத்தாது அதிகம் காணப்படுகிறது. இதுவே சுவை குறைவுக்கும், குடிநீர் குழாய்களில் சிவப்புக் கறை படிவதற்குக் காரணம் என்கிறார்கள் பொறியாளர்கள். இரும்புத் தாது பிரச்னைக்குத் தீர்வு காண, மத்திய சிறைச் சாலைப் பகுதியில் உள்ள பிரதான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அனுப்பப்படும் குடிநீர், ஃபில்டர் தொட்டிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு அனுப்படுகிறது.  
           
             ஆனால் திருவந்திபுரம் பகுதியில் ஃபில்டர் தொட்டிகள் அமைக்கப்படாததால், அங்குள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு அனுப்பப்படும் குடிநீர், இரும்புத் தாது கலந்ததாகவே உள்ளது. இங்கும் ஃபில்டர் தொட்டிகள் அமைக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  குடிநீர் ஃபில்டர் தொட்டிகளுக்குத் தேவையான மணல், கெடிலம் ஆற்றில் இருந்துதான் எடுக்கப்பட வேண்டும். அந்த மணல்தான் சரியான அளவில் (6 முதல் 12 எம்.எம்.) இருக்கிறது என்று பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மத்திய சிறைச் சாலை அருகில் உள்ள ஃபில்டர் தொட்டிகளுக்கு மட்டும், மாதம் 140 லாரி மணல் தேவைப்படுகிறது. 

             கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க எங்கும் குவாரி இல்லை. சிறப்புப் பணிக்காக என்று, மணல் எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டும், திருவந்திபுரம் பகுதியில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மணல் எடுக்க முடியாத நிலை உள்ளது என்று, பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  கேப்பர் மலை ஆழ்குழாய் கிணறுகளில் சுவை குறைந்து வரும் குடிநீர், கிடைக்கும் குடிநீரையும் ஃபில்டர்கள் மூலம் சுத்திகரிக்க முடியாத நிலையுமே, நகராட்சி குடிநீர் சுவை குறைந்து வருவதற்குக் காரணம் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். 

             8 ஆண்டுகளுக்கு முன் கேப்பர் மலை குடிநீர் திட்டத்துக்கு ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டது. ஆண்டுதோறும் மேலும் பல கோடி செலவிடப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சி வழங்கும் குடிநீருக்கு ஆகும் செலவு லிட்டருக்கு ரூ.1.47 என்று நகராட்சி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எனவே கடலூர் நகர மக்களுக்கு குடிநீர் வழங்க கேப்பர் மலை ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பியிராமல், மாற்று வழிகளைக் காண வேண்டும் என்பதே, வல்லுநர்களின் கருத்து.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior