உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மின் உற்பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின் உற்பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 26, 2011

கடலூர் மாவட்டத்தில் கடுமையாகும் மின் வெட்டு: பொதுமக்கள் அவதி

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மின் வெட்டு கடந்த ஒரு வாரமாக கடுமையாகி வருகிறது. 
 
               கத்திரி வெயில் கடுமையாக உள்ள நிலையில் மின்வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் 3 மணி நேர மின் வெட்டு, 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது கூடுதலாக ஒருமணி நேரம் மின் துண்டிப்பு, அறிவித்தும் அறிவிக்காமலும் இருந்துவந்தது. நகர்ப் புறங்களைவிட கிராமப் புறங்களில் கூடுதல் நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மின் வெட்டு மிகக் கடுமையாக இருக்கிறது. நிரந்தர மின் வெட்டு 3 மணி நேரம் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் பகலில் 3 அல்லது 4 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

               ஒவ்வொரு முறையும், 20 நிமிடம் என்று இருந்த மின் துண்டிப்பு, கடந்த 3 நாள்களாக ஒரு மணி நேரமாக அதிகரித்து விட்டது. கத்திரி வெயிலின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதிகப்படியான மின்வெட்டு பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. விவசாயத்துக்கு பகலில் 6 மணி நேரம், இரவு 8 மணி நேரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் பகலிலும், இரவிலும் தலா 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும், அந்த நேரத்திலும் பலமுறை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். 

               கடலூர் மாவட்ட விவசாயம் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறுகளையே நம்பி இருக்கிறது. தற்போது புதிதாக நடப்பட்ட கரும்புப் பயிர் 10 ஆயிரம் ஏக்கரிலும், நெற்பயிர் 15 ஆயிரம் ஏக்கரிலும் உள்ளன.  மின் பற்றாக் குறையால் இப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது பெரிதும் சிரமமாக இருப்பதாகவும், கத்திரி வெயிலும் சேர்ந்து கொள்வதால், பயிர்கள் கருகி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். மின் பற்றாக்குறை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கரும்பு, நெல் பயிரிடும் பரப்பளவு வெகுவாகக் குறைந்து விட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

மின்வெட்டு குறித்து வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 

              விவசாயத்துக்கு 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் 6 மணி நேரம்கூடக் கிடைக்கவில்லை. கோடை வெயிலில் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மட்டும் வெகு ஆழத்தில் சென்றுவிட்ட நிலையில், மின்வெட்டு விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. நெல், கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி வாடுகின்றன. மின்சாரம் எப்போது வரும் எப்போது துண்டிக்கப்படும் என்று தெரிவதில்லை என்றார். 

மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 

             விருத்தாசலம்,. திட்டக்குடி தாலுகாக்களில், காலை 6 முதல் 9 மணி வரை விவசாயத்துக்கு மும்முனை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் காலை 7 மணிக்குள் 4 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. பல மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. விவசாயிகள் உதவியுடன் அண்மையில் டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதுபார்க்கப்பட்டு, திறன் அதிகரிக்கப்பட்டது என்றார்.

மின் வெட்டு குறித்து கடலூர் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 

            மின் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. காற்றாலை மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஆகிறது. கடந்த 3 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் மின் துண்டிப்பு மிக மோசமாக இருக்கிறது. தினமும் 3 மணி நேரம் நிரந்த மின்வெட்டு அமலில் இருக்கிறது. மேற்கொண்டு குறைந்தது 3 முறை, தலா ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதற்கான காரணத்தை மின் வாரிய உயர் அதிகாரிகள் யாரும் தெரிவிப்பது இல்லை. கடலூர் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகளும் சரியில்லை. 150 மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றை மாற்றுவதற்கு, புதிய டிரான்ஸ்ஃபார்மர்களை வாரியம் வழங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை என்றார். 


Read more »

திங்கள், மே 23, 2011

நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதி: பழ. நெடுமாறன்


            
             நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதியானது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.  
 
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் அளித்த பேட்டி: 
 
                 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் சிபிஐ கைது செய்திருக்கிறது. எனவே, சிபிஐ வேண்டுமென்று செய்தது எனக் குறைகூறுவது சரியானது அல்ல.  கனிமொழி குற்றம் செய்யவில்லை என்று சொன்னால், அதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டு வெளிவருவதுதான் சரியாக இருக்கும். கனிமொழி கைதுக்கு உள்நோக்கம் கற்பிப்பது குற்றம் உள்ள நெஞ்சின் குறுகுறுப்பைக் காட்டுகிறது.  தன் மீதும், தனது குடும்பத்தின் மீது வஞ்சகம் தீர்க்கும் படலத்தை சிறப்பாக சிலர் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று கூறும் கருணாநிதி, வஞ்சகம் செய்தவர்களை பகிரங்கமாக வெளியில் கூற வேண்டும்.  
 
             அலைக்கற்றை விவகாரத்தில் கைதாகி சிறையிலுள்ள கட்சியின் கொள்கை விளக்க பிரசார குழுச் செயலரான ஆ. ராசாவை பார்க்கச் செல்ல விரும்பாதவர், மகளைப் பார்க்க செல்கிறார். தமிழகத்தில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளுக்கு உரிய தண்டனையை அனுபவிக்கிறது. மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். எனவே, புதிய அதிமுக அரசு நல்ல அரசாகத் திகழ வேண்டும். நெய்வேலியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.  தமிழகத்தில் நிலக்கரியை வெட்டியெடுத்து, தமிழகத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்காமல், தமிழர்களுக்கு எதிரான இலங்கைக்கு வழங்குவது மிகப் பெரிய அநீதியாகும் என்றார் நெடுமாறன்.
 
 

Read more »

என்.எல்.சி.சார்பில் மின் உற்பத்தியை 1 கோடி யூனிட்டாக அதிகரிக்க நடவடிக்கை

            நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) சார்பில், ஒரு மணிக்கு ஒரு கோடி யூனிட்டாக மின் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார். என்.எல்.சி. நிறுவன தின விழா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏ.ஆர்.அன்சாரி பேசியது:

          உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் என்.எல்.சி. 59-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நவரத்னா தகுதி பெற்றுள்ள  19-வது நிறுவனம் என்.எல்.சி. ஆகும். அதற்கு உயர்ந்த நிலையான மகாரத்னா நிலையை விரைவில் இந்த நிறுவனம் அடையும். இப்போது மணிக்கு சுமார் 25 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை ஒரு கோடி யூனிட்டாக அதிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

            இதை மணிக்கு 2 கோடி யூனிட்டாக அதிகரிக்கும் பட்சத்தில் மகாரத்னா இலக்கை அடைய முடியும். 2009-10-ம் நிதியாண்டில் நிறுவனம் ரூ. 1,247 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியில் இயங்கும் புதிய நிலையங்களை என்.எல்.சி. அமைக்க உள்ளது. இதற்காக நிலக்கரி சுரங்கங்களை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.மிகக் குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் இனி நிலைத்து நிற்க முடியும். எனவே உற்பத்தி செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

               நிறுவனத்தின் இயக்குநர்கள் பி.சுரேந்தர் மோகன், ஆர்.கந்தசாமி, கே.சேகர், ஜெ.மகிழ்செல்வன், எஸ்.கே.ஆச்சார்யா உள்ளிட்ட பணியாளர்கள், தொழிற் சங்கங்கள், பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Read more »

புதன், மே 11, 2011

மின்வெட்டு காரணமாக: தவிக்கும் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலைகள்


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை.
கடலூர்:

            மின்வெட்டு காரணமாக, தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து, மின்சாரம் வாங்க வேண்டிய பரிதாப நிலைக்கு, கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் தள்ளப்பட்டு உள்ளன. இதனால் உலகச் சந்தையில் போட்டிகளைச் சமாளிக்க முடியாத நிலை இத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டு உள்ளது.  

                கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அனல் மின் நிலையமான என்.எல்.சி. நிறுவனம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நெய்வேலியில் தனியார் அனல் மின் நிலையம் ஒன்று 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் பலவும் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.  கடலூர் மாவட்டத்தில் 85 ஆயிரம் ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. நிலத்தடி நீர் போதுமான அளவுக்கு கிடைப்பதால், கொளுத்தும் வெயில் நிறைந்த கோடைக்காலத்திலும் 1.10 லட்சம் ஏக்கரில் கரும்பு, 13 ஆயிரம் ஏக்கரில் சவுக்கு, 10 ஆயிரம் ஏக்கரில் வாழை, சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சொர்ணவாரி நெல்பயிர் உள்ளது. 

              என்.எல்.சி. சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், பாதிப்பை ஈடுகட்டும் வகையில், போதுமான மின்சாரத்தையாவது இம்மாவட்ட விவசாயிகளுக்கு மின் வாரியம் வழங்கலாம். ஆனால் அதுதான் இல்லை.  விவசாயத்துக்கு நாளொன்றுக்கு 14 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அரசாணை இருந்தும், 5 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது என்கிறார், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் வெங்கடபதி. இதனால் கரும்பு, நெல் பயிரிடும் பரப்பளவும், உற்பத்தியும் வெகுவாகக் குறைகிறது என்றார்.  

                வேளாண்மை நிலை இப்படி இருக்க, தொழில்துறையின் நிலை மேலும் பரிதாபமாக உள்ளது. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 26 மிகப் பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உயிர்காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பெரும்பாலும் ஏற்றுமதிக்கான பொருள்களாகவும், ஒரு நிமிடமும் உற்பத்தியை நிறுத்த முடியாத, தொடர்ந்து இயங்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் இவைகள் உள்ளன.  ÷ஆனால் இந்த ஆலைகளுக்கு மின் வெட்டு, நாளுக்கு நாள் இறுகிக் கொண்டு இருப்பதாக, ஆலை நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். 

இதுகுறித்து சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்தர் குமார் கூறியது: 

                கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, தினமும் 3 மணி நேரம் நிரந்தர மின் வெட்டு ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கிறது. மேலும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரம், விளக்கு வெளிச்சத்துக்காக மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. இதை யாரேனும் மீறினால் அபராதரம் விதிக்கப்படுகிறது. ÷மற்ற நேரங்களிலும் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளை இயக்குவதே பெரும்பாடாக உள்ளது. 

                     மின்வெட்டைச் சமாளிக்க டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. மின்வாரியம் வழங்கும் மின்சாரத்துக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5. ஆனால் ஜெனரேட்டர் மின்சாரத்துக்குக்கு ஆகும் செலவு யூனிட்டுக்கு ரூ. 7.50 வரை. ஜெனரேட்டர்களின் தேய்மானச் செலவும் ஏற்படுகிறது.  

               இப்போது ஜெனரேட்டர்களாலும் சமாளிக்க முடியவில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வெளி மாநிலங்களில், தனியார் மின் நிலையங்களில் ஒப்பந்தம் போட்டு மின்சாரம் பெறுகிறோம். தனியாரிடம் பெறப்படும் மின்சாரத்துக்குக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 9 வரை ஆகிறது.  இத்தகைய சூழ்நிலைக் காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்திச் செலவு அதிகரித்து விட்டது. இதனால் சர்வதேச சந்தையில் நமது தொழிற்சாலைகளின் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியவில்லை. குறிப்பாக சீனாவின் உற்பத்திப் பொருள்களுடன் நாம் போட்டிபோட முடியவில்லை.  

                  இந்த நிலையில் தமிழக மின் வாரியம், பராமரிப்புப் பணிகளைக்கூட முறையாகச் செய்வதில்லை. பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தும் போதெல்லாம், அவர்களின் மின்னூட்டிகளை மட்டுமே பார்க்கிறார்கள். எங்காவது கம்பங்கள் பழுதுபட்டு இருந்தாலோ, மின் கம்பிகள் சேதம் அடைந்தாலோ அவற்றைப் பழுதுபார்ப்பது இல்லை. இதனால் கிடைக்கும் மின்சாரமும் முழுமையாக வந்து சேர்வதில்லை என்றார் இந்தர் குமார்.

Read more »

வியாழன், ஜனவரி 20, 2011

சிதம்பரம் அருகே 1100 ஏக்கரில் 3600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின் நிலையம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை அருகே 1100 ஏக்கரில் ஐஎல் எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி 3,600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின்நிலையத்தை தொடங்கவுள்ளது.  தற்போது நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் மின்நிலையம் இயங்கும் என தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.  

இதுகுறித்து சிதம்பரத்தில் புதன்கிழமை தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தது:  

              இந்த மின்நிலையம் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தோனேசியாவிருந்து நிலக்கரி கொண்டு வரப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக 1,200 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்.  

            மேலும் தமிழ்நாடு பவர் கம்பெனி, ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து புதுச்சத்திரத்தில் கிராமப்புற மகளிர் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது. இதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் இயந்திரங்களும், உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.  கொத்தட்டை மற்றும் வில்லியநல்லூருக்கு உட்பட்ட கிராமங்களான பஞ்சங்குப்பம், கரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் இயங்கும் சுமார் 20 மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் மகளிர் சுமார் 60 பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு தொழிற்பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.  

           தொழிற்பயிற்சி முடிந்தவுடன் அதில் தேர்வு பெறும் மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க ஏதுவாக மேலும் 70 தையல் இயந்திரங்களை நிறுவவும் ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி திட்டமிட்டுள்ளது.  கொத்தட்டை, அரியகோஷ்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கரிக்குப்பம், வி.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, இந்திராநகர், சின்னூர் பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வெல்டிங், பிட்டர் போன்ற தொழிற்கல்வி வழங்க எங்களது நிறுவனம் மங்களம் ஐடிஐ, முருகேசன் ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களில் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்களின் முழுகல்வி கட்டணத்தையும் வழங்கி படிக்க வைக்கவுள்ளோம்.  

             இதன் மூலம் 2011-ம் ஆண்டில் மட்டும் 75 மாணவர்களை வேலைத் தகுதி பெற முடியும் என எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார். ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் என்.ரமேஷ் உடனிருந்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior