உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மின்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்வெட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 03, 2011

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்கக் கோரிக்கை

சிதம்பரம்:

               தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டை நீக்க நெய்வேலி நிலக்கரி நிறுவன மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சிதம்பரம் கோட்டாட்சியரிடம் தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

             அவ்வமைப்பின் நகர அமைப்பாளர் ஆ.குபேரன் தலைமையில் நிர்வாகிகள் பா.சுரேஷ், ரா.ராஜேஷ்குமார், சு.சுகன்ராஜ், ந.ஜான்பாண்டியன், வே.சுப்பிரமணியசிவா, செ.மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

                அண்மைக்காலமாக தொடர் மின்வெட்டினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சென்னை மாநகர பகுதிகளில் 1 மணி நேரமும், ஏனைய தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் 3 மணி நேர மின்வெட்டும் செய்யப்படுகிறது.  பல்வேறு கிராமம் பகுதிகளில் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் உழவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள், சிறுதொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                       தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் மின்சாரம் நெய்வேலியில் இருந்து வழங்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. பாலாற்றை தடுக்கும் ஆந்திரத்துக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பெரும்பகுதி அண்டை மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. 

                அசாம் மாநிலம் சலகதியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அந்த மாநில அரசு கேட்டுப் பெற்றுள்ளது.எனவே தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும் என மனுவில் தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு அவதிப்படும் பொதுமக்கள்

பண்ருட்டி:

                பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் அறிவிக்கப்படாத மற்றும் தொடர் மின் வெட்டு காரணமாக பொது மக்களும், பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். 

                   தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்சார பற்றாக்குறை காரணமாக பல பகுதியில் சுழற்சி முறையில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி பண்ருட்டி நகரப் பகுதியில் 3 மணி நேரம் என இருந்து வந்த மின்வெட்டை சில தினங்களுக்கு முன் 2 மணி நேரமாக மாற்றியுள்ளதாக அறிவித்த மின்சார வாரியம், அவ்வப்போது ஏற்படும் உயர் மின் அழுத்த சுற்றின் நிலைமையைப் பொருத்து மின் நிறுத்த நேரம் மாறுபடும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக நகரப் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தொடர்ந்து 104 டிகிரிக்கு மேல் வெளுத்து வாங்குகிறது. இதனால் மின் விசிறியோ, ஏசியோ இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டு காரணமாக மின் விசிறி மற்றும் ஏசிகள் இயங்காகதால் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

                   கடந்த சில நாள்களாக கிராமப் பகுதியில் மும்முனை மின்சாரம் ஒரு மணி நேரம் கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாததால் பண்ருட்டி மற்றும் அண்ணாகிராம ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

நீரேற்ற முடியவில்லை: 

                      இரவு பகல் என நேரப்படி மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டது, தற்போது மும்முனை மின்சாரம் முழுமையாக ஒரு மணி நேரம் கூட கிடைக்கவில்லை. இதனால் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை என ஆபரேட்டர்கள் கூறினர்.

விவசாயிகள் வேதனை: 

                 வறட்சி, விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறை, உரம், பூச்சி மருந்து விலை ஏற்றம் உள்ளிட்ட இன்னல்களுக்கு இடையே நெல், வாழை, கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளோம். இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இச்சமயத்தில் மின்சாரமும் கிடைக்காததால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

அதிகாரிகள் விளக்கம்: 

                        இது குறித்து மின்துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் விசாரித்ததில். காற்றாலைகள் மூலம் கிடைத்த மின்சாரம் கடந்த சில நாள்களாக கிடைக்கவில்லை. இதனால் மின் உற்பத்தி குறைந்து தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் விநியோகத்தை செய்து வருகின்றோம். நாளைய நிலை என்ன என்று கூறமுடியாது எனக் கூறினர்.

Read more »

வெள்ளி, ஜூன் 04, 2010

அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக எந்தவித முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மிழகத்தில் காற் றாலை, அனல், நீர் மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கோடையில் நீர்தேக்கத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால் நீர் மின் உற்பத்தி குறைந்தது. இதனை ஈடு செய்வதற்காக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மின் வெட்டு அமல் படுத்தப்பட்டது. ஏற்கனவே 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு பின்னர் 3 மணி நேரமாக உயர்த் தப்பட்டது. "லைலா' புயலுக்குப் பின் காற்றாலை மூலம் எதிர்பார்த்த அளவுக்கு மின்சாரம் கிடைத்ததால் ஒரு வாரம் தடையில்லா மின்சாரம் வழங்கப் பட் டது.

                   இதைக்கண்ட பொதுமக்கள் நம்ப முடியாமல் இந்த மின்வெட்டை வேறு நேரத்தில் பிடித்தம் செய் வார்கள் என அஞ்சினர். இந்நிலையில் மின் வாரியம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தற்போது காற் றாலை மின்சாரம் கைகொடுத்து வருவதால் கடலூர் மாவட்ட மக்களுக்கு 3 மணி நேரமாக இருந்த மின் தடை 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால்தான் என்னவோ, இந்த அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் மீண்டும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. நள்ளிரவு, பகல் என எந்த நேரமும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என கூறமுடியவில்லை. நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 மின்வெட்டுக்கு காரணம் என்ன? 

இந்த மின்வெட்டு குறித்து மின்வாரிய கண் காணிப்பு பொறியாளர் ரவிராம் கூறியதாவது:

                       காற்றாலை மூலம் நமக்கு போதுமான அளவு மின்சாரம் கிடைத்ததால் மின்வெட்டு நேரத்தை குறைத்தோம். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ காற்றில் மழை தொடங்கியுள்ளதால் காற் றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் திடீரென குறைந்தது. அதனால் வேறு வழியின்றி மின் தடை ஏற்படுகிறது என்றார்.

Read more »

வியாழன், ஜூன் 03, 2010

கிராமங்களில் அதிர்ச்சிதரும் மின்வெட்டு

 

கடலூர்:

                 கிராமப்புறங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

                   தமிழகத்தில் அதிகப்படியான கோடை வெயிலின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் நகரம் கடலூர். காலை 7 மணி முதலே வெயில் தகிக்கத் தொடங்கி விடுகிறது. இரவு நேரங்களில்கூட வெப்பம் தணிவதில்லை. காலை 5 மணி முதல் 7 மணி வரை லேசாக வீசும் குளிர்ந்த காற்றுகூட கடந்த 20 நாள்களாக இல்லை. பகலிலும் இரவிலும் காற்றோட்டமே இல்லாமல் உயர்ந்துவரும் வெப்ப நிலை, மக்களை பெரிதும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய தட்பவெப்ப நிலையில் ஈஸ்னோஃபீலியா, நுரையீரலைப் பாதிக்கும் நோய்கள், தோல்நோய் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

                  இத்தகைய சூழ்நிலையில் மின்வெட்டு, மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கடலூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கரில் கரும்புப் பயிர், 2 முதல் 5 மாதப் பயிராக உள்ளது. சொர்ணவாரி பட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நடுவதற்குத் தேவையான நெல் நாற்று தயாராகிக் கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஆழ்குழாய்க் கிணறுகளையும் மின்சாரத்தையுமே நம்பி இருக்கின்றன.  இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கிராமப் புறங்களிலும் நகரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் 3 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. விவசாயத்துக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இது மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு. எனினும், பலமுறை அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

                காற்றாலைகளில் இருந்து மின்சாரம் கிடைக்கத் தொடங்கியதால், மின்வெட்டு 3-ல் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்படுதாக முதல்வர் அறிவித்தது மகிழ்ச்சி அளித்தது. மே 29 முதல் புதிய மின்வெட்டு அட்டவணையை மின்வாரியம் அறிவித்தது. இதனால் கடலூர் மாவட்ட நகர்ப் புறங்களில் மின்வெட்டு, 2 மணி நேரமாக குறைக்கப்பட்டது. எனினும் அறிவிக்கப்படாமல் துண்டிக்கப்படும் மின்வெட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி என்ற பெயரில், மாதம் இருமுறை 9 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில் மின்வெட்டு படுமோசமாக உள்ளது. வீடுகளுக்கும் விவசாயத்துக்கும் மின்விநியோகம் பலமணி நேரம், எவ்வித அறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படுகிறது. 

            கடந்த 3 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி இருண்டு கிடப்பதாகவும், மின்வெட்டு மோசம் அடைந்து இருப்பதாகவும், கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.  விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் 9 மணி நேரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தும் 7 மணி நேரம் கூட வழங்கப்படுவதில்லை என்று விவசாயிகள் அங்கலாய்க்கிறார்கள்

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் வெங்கடபதி கூறுகையில், 

              சித்தரசூர் துணைமின் நிலையத்தில் இருந்து கடந்த 3 நாள்களாக மின்விநியோகம் இல்லை. ஏன் இந்த திடீர் மின்வெட்டு என்று கேட்டால், பதில் அளிக்க அதிகாரிகள் தயாராக இல்லை. மின்வாரியத் தலைவரைக் கேளுங்கள் என்று முகத்தில் அடிப்பதைபோல் பதில் அளிக்கிறார்கள். கரும்புப் பயிரும், நெல் நாற்றுகளும் கருகிக் கொண்டு இருக்கிறன என்றார்.

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், 

                 நகர்ப் புறங்களுக்கு மின்வெட்டைக் குறைக்கிறோம் என்ற பெயரில், சுமையை கிராம மக்களின் தலையில் கூடுதலாக ஏற்றி விட்டனர். முட்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து காலை 7 முதல் 12 மணிவரை மின்விநியோகம் இல்லை. காய்கறிச் செடிகளும் மலர்ச் செடிகளும் கருகுகின்றன என்றார். 

வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 

                 மின்வெட்டு குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல், கிராமங்களில் மின்வெட்டு அறிவிப்பின்றி அதிகரித்து விட்டது. காலை 10 முதல் 12 மணி வரை, பகல் 2 முதல் 4 மணி வரை தினமும் மின்சாரம் இல்லை. மும்முனை மின்சாரம் 7 மணி நேரம் கூட இல்லை. இதனால் 10 ஆயிரம் ஏக்கரில் கரும்புப் பயிர் கருகுகிறது என்றார்.

Read more »

புதன், பிப்ரவரி 17, 2010

காலை நேர மின்வெட்டைக் கண்டித்து போராட்டம்

கடலூர்:

                 கடலூரில் காலை 6 மணி முதல் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதைக் கண்டித்து, போராட்ட நடத்தப் போவதாக, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

 கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் மின்வாரி கண்காணிப்புப் பொறியாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: 

                    கடந்த காலங்களில் மின்வாரியம் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்தது. மாணவர்கள் தேர்வுக்குப் படிக்கும் நேரங்களில் மின் வெட்டில் இருந்து விலக்கும் அளித்து வந்தது. இதை மின்துறை அமைச்சரும் உறுதிப் படுத்தி இருக்கிறார். ஆனால் தற்போது கடலூரில் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் வெட்டு, அரசின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது. மின் வாரியத்தின் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை சிதைந்து விடும். மார்ச் மாதம் அரசுத் தேர்வுகள் நெருங்கும் நேரம், இந்தக் காலை நேர மின்வெட்டு, மாணவர்களின் படிப்பை பெரிதும் பாதிக்கும். காலை நேரத்தில் தண்ணீர் ஏற்பாடுகள், உணவு தயாரித்தல், பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புதல் போன்ற பன்முக வேலைகள் இதனால் பாதிக்கப்படுகிறது. காலை நேரத்தில் வீட்டு உபயோகம் (25 சதவீதம் மட்டுமே) குறைவாக உள்ள நேரத்தில் மின்வெட்டு தேவையற்றது. வணிக நோக்கில் பார்த்தால் இதனால் மின் சேமிப்பு ஏற்படாது. நகராட்சி குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாக நகராட்சித் தலைவர் தெரிவித்தும் சரி செய்யாதது அனைத்துப் பகுதி மக்களையும் பாதிப்பதாக உள்ளது. எனவே காலை நேர மின்வெட்டை விலக்கிக் கொள்ளாவிட்டால், 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மாணவர்கள் கோரிக்கை அஞ்சல் அட்டைகளை முதல்வருக்கும் மின்துறை அமைச்சருக்கும் அனுப்புவர். 1-3-2010 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்களுடன் குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் மருதவாணன் கூறியுள்ளார். காலை நேரத்தில் மின்வெட்டுக்கு எந்தக் கல்வி நிறுவனமும் கோரவில்லை. மற்ற நேரங்களில் மின்வெட்டால், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்பதற்காகவே, அவர்களுக்குச் சாதகமாக மின்வாரியம் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் மருதவாணன் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior