உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மீன்பிடி ​ தடைக்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீன்பிடி ​ தடைக்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 27, 2011

கடலூரில் வஞ்சரம் மீன்கள் ரூ.21 லட்சத்திற்கு ஏலம்

கடலூர் முதுநகர் : 

        கடலூரில் நேற்று, 21 லட்சம் ரூபா#க்கு வஞ்சரம் மீன்கள் ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மீன்பிடித் தடை காலத்திற்கு பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் டன் கணக்கில் பால் சுறாக்கள், வஞ்சரம், சூரை மீன்கள் என, தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் கடலூரில் அதிகளவில் சிக்குகின்றன.

         கடலின் உட்பகுதியில் அதிக அளவு கடல் சீற்றம் காரணமாக, மீன்கள் கரை பகுதிக்கு படையெடுத்து வருவதால், அதிகளவில் இவ்வகை மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலூரில் மீன் வரத்து அதிகமானதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா வியாபாரிகள் ஏராளமானோர் கடலூர் மீன்பிடித் துறைமுகத்திற்கு படையெடுத்துள்ளனர். இதனால், மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

            குறிப்பாக, கிலோ ஒன்று 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சரம் மீன்கள் தற்போது 350 ரூபாயும், 60க்கு விற்ற சூரை மீன்கள் 80 ரூபாயும், 1,500 ரூபாய்க்கு விற்ற 70 கிலோ எடையுள்ள மத்தி மீன் பாக்ஸ் ஒன்று தற்போது 2,700 ரூபாய் வரை விலை போகிறது. மீன்கள் அதிகளவு விலை போவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

           கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், 6 டன் வஞ்சரம் மீன்கள் மற்றும் சுறா மீன்கள், பாறை மீன்கள் சிக்கின. கிலோ 350 ரூபாய்க்கு ஏலம் போன வஞ்சரம் மீன்கள் அனைத்தும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டன. நேற்று சிக்கிய வஞ்சரம் மீன்கள் மட்டும், 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.




Read more »

திங்கள், மே 30, 2011

மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்தது : மீன்பிடிப்பில் கடலூர் மீனவர்கள்

 கடலூர்:

            நாள்கள் மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்ததால், கடலூர் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.62 கி.மீ. தூரம் கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. 

               ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் வசதி கொண்ட 1000 பெரிய படகுகள், கட்டுமரங்கள் மற்றும் 5 ஆயிரம் சிறிய படகுகள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன.ஏப்ரல் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாக இருப்பதால், மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், அந்தக் காலத்தில் வங்கக் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.பெரிய படகுகளில் சென்று சிறிய மீன்களைக் கூட பிடித்துவிடும் வலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

              சிறிய படகுகள், கட்டுமரங்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தன.மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலூர் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்றனர்.90 சதவீதம் படகுகள் மீன்பிடிக்கச் சென்று இருப்பதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார். 

                இவற்றில் பெரும்பாலான படகுகள் மீன் பிடித்து கொண்டு இன்று (திங்கள்கிழமை) காலை கரை திரும்பும் என்றும், மற்ற படகுகள் ஆழ்கடலில் 3 அல்லது 4 நாள்கள் தங்கி மீன் பிடித்துவிட்டுக் கரை திரும்பும் என்றும் சுப்புராயன் தெரிவித்தார். மீன்கள் ஏராளமாகக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




Read more »

வியாழன், மே 26, 2011

மீன்பிடி தடைக்காலம் மே 29-ல் முடிகிறது: மீனவர்கள் தயார்

கடலூர்:

            மீன் பிடித் தடைகாலம் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே மீனவர்கள் மீன் பிடிக்கத் தயார் நிலையில் உள்ளனர். 

            மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ம் தேதி முதல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இழுவை வலைகளைப் பயன்படுத்தும், பெரிய விசைப் படகுகள் மீன் பிடிப்பதால், கடலில் காணப்படும் சிறிய மீன்கள்கூட பிடிபட்டு விடும். இதனால், மீன் வளத்தைப் பெருக்க இத்தடை விதிக்கப்படுகிறது. தடைக் காலத்தில் சிறிய படகுகள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகின்றன. மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையும், இவ்வாண்டு உயர்த்தப்பட்டு இருப்பதால், மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

            மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பழுதுபார்த்தனர். இன்னும் 3 மாதங்களில் வடகிழக்குப் பருவமழை காலம் வர இருப்பதால், அதற்கு ஏற்ற வகையிலும் படகுகளை பழுது பார்த்துள்ளனர். மீன்பிடித் தடைகாலம் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைவதால், மீன்கள் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். பழுதுபார்க்க எடுத்துச் செல்லப்பட்ட வலைகள் அனைத்தும், படகுகளுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளன. பழுதுபார்க்க பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்ட படகுகளும் மீன் இறங்கு தளங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன.



Read more »

வியாழன், மே 05, 2011

கடலூர் மாவட்டத்தில் படகுகளைப் பழுதுபார்ப்பதில் மீனவர்கள் மும்முரம்

கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் மீன்பிடிப் படகுகளைப் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள். (வலது படம்) பழுதுபார்க்கும் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் 
கடலூர்:
            மீன்பிடித் தடை காலத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடலூர் மாவட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 
             சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இப் பணியில் ஈடுபட்டு உள்ளதாக கணக்கிடப்படுகிறது. மீன்கள் இனப் பெருக்கத்தை தடை செய்யாமல், மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை, வங்கக் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலத்தில் கட்டுமரங்கள், சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கலாம். ஆனால் சிறிய மீன்களையும் வாரிக் கொண்டு வரும் வலைகளுடன் செல்லும் தோணி, ஐ.பி., எஸ்.பி.வி. ரக இயந்திரப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
                    கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சுமார் 1,000 கட்டுமரங்கள், 25 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகள், 100 தோணிப் படகுகள், 400 ஐ.பி. படகுகள், 100 எஸ்.பி.வி. என்ற மிகப் பெரிய படகுகள் மீன்பிடித் தொழில் பயன்பாட்டில் உள்ளன. கட்டுமரங்களின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும், கண்ணாடி இழைப் படகுகள் விலை ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், எஸ்.பி.வி. போன்ற பெரிய படகுகள் விலை ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையிலும் உள்ளன.கடலூர் கோரி உப்பனாறு, துறைமுகம், சோனங்குப்பம் ஆகிய பகுதிகளில் படகுகள் பழுதுபார்க்கும் வேலை தற்போது, மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. 
                  வலைகளைப் பழுதுபார்த்தல், புதிய வலைகளை தயாரித்தல், படகுகளில் உள்ள ஓட்டைகளை அடைத்தல், இயந்திரங்களைப் பழுதுபார்த்தல், புதிய வர்ணம் தீட்டுதல், உடைந்து இருக்கும் பலகைகளை பழுதுபார்த்தல், படகுகளின் அடிப்பகுதியில் ஓட்டிக் கொண்டிருக்கும் கிளிஞ்சல்கள் உள்ளிட்டவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பழுதுபார்க்கும் பணிக்கு ஒரு படகுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை செலவாகும் என்று மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தச்சுத் தொழிலாளர்கள், பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
                அவர்களுக்கு உதவியாக அந்தந்தப் படகுகளில் நிரந்தரமாகத் தொழில் புரியும் மீனவர்கள் சுமார் 1,500 பேர் வேலை செய்கிறார்கள். ஏற்கெனவே படகுகள் கட்டும் தொழில் சிறப்பாக நடந்துவரும் கடலூரில் மீன்பிடித் தடை காலத்தில் நூற்றுக் கணக்கான படகுகளை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி வைத்து பழுதுபார்க்கப்படுவதன் மூலம், அவைகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களாகக் காட்சி அளிக்கின்றன. இதன் மூலம் மீன்பிடித் தொழில் அரசின் முதலீடுகளோ, வெளிநாட்டு முதலீடுகளோ இன்றி, பல்லாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பைக் கொடுப்பதுடன், பன்னாட்டு தொழிற்சாலைகளைப்போல் எத்தனை பிரமாண்டமான தொழிற்சாலை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 
               மீன்பிடித் தடைகாலம் மே 29-ம் தேதி முடிவடைந்து, ஆகஸ்ட் இறுதியில் மழைக் காலம் தொடங்கி விடும். அப்போது வடகிழக்குப் பருவமழை, வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் காரணமாக, மீன் பிடித் தொழிலில் மந்தம் அடைவதுடன் வேறெந்த வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதால், தற்போது பழுதுபார்க்கும் வேலை, மும்முரமாக நடந்து வருவதாக மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார் 
                .பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் உணவுத் தேவையில் கணிசமான அளவுக்கு பூர்த்தி செய்யும் இத்தனை பிரமாண்டமான தொழிற்சாலைக்கு, அரசின் உதவிகளும் சலுகைகளும் போதாது, மீன்பிடித் தடை காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை போதாது, மீன் இறங்கு தளங்களில் போதிய அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்து கொடுப்பதில்லை என்றும் அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண நிதி

கிள்ளை: 

             சிதம்பரம் அருகே டி.எஸ்.பேட்டையில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

             மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இதற்கு தடைக்கால நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா 500 ரூபாய் தமிழக அரசின் மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை 800 ரூபாயாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை அடுத்த டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் விழா நடந்தது. 

                    ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன்காந்தி வரவேற்றார். மீன்வள ஆய்வாளர் நாபிராஜ், மேற்பார்வையாளர் புண்ணியராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, மீன்வள உதவி இயக்குனர் இளம்பரிதி ஆகியோர் 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒருலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வழங்கினர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாகிகள் கருணாமூர்த்தி, அன்பழகன், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளி, ஜூலை 23, 2010

சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் மீன் பிடி தடை கால நிவாரண நிதியாக : மீனவர்களுக்கு ரூ.4.19 லட்சம் வழங்கல்

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் மீன் பிடி தடை கால நிவாரண நிதியாக 524 குடும்பத்தினருக்கு 800 ரூ. வீதம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கப்பட்டது.

             கடலில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு  கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு தடை கால நிவாரணமாக கடந்த ஆண்டு 500 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 300 ரூபாய் உயர்த்தி 800 ரூபாயாக வழங்க அரசு அறிவித்தது. கடலூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 160 மீனவ குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வழங்க ஒரு கோடியே 13 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் முதற் கட்டமாக  சுனாமியால் பாதிக்கப்பட்ட  கிள்ளை, சின்னவாய்க்கால், பில்லுமேடு, பட்டரையடி பகுதியைச் சேர்ந்த 524 குடும்பத் தினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கிள்ளை காளியம்மன்கோவில் சமுதாய கூடத்தில் நடந்தது.

                கிராம தலைவர் மலையரசன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் இளம்பரிதி,மீன் ஆய்வாளர் நாபிராஜ், நீதிமணி, அருணகிரி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங் கேற்று பயனாளிகளுக்கு ரூபாய் 800 ஐ வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior