உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வடிகால் வசதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வடிகால் வசதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 22, 2010

வெள்ளம் வடியாத கடலூர் நகர்கள்!

கடலூர்:
 
           மழை ஓய்ந்து 10 நாள்கள் ஆகியும் கடலூர்  நகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ளம் வடியவில்லை.  கடலூர் நகரில் ஒரு மாதமாகப் பெய்த கன மழையாலும், நகரின் வழியாகப் பாய்ந்து செல்லும் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் 150க்கும் மேற்பட்ட நகர்களில், 5 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீர் தேங்கி மக்களை பெரிதும் அல்லல்படுத்தி விட்டது.  
 
            இதனால் இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில நகர்களில் வசிக்கும் மக்கள், தாற்காலிகமாக வீடுகளைக் காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். பலர் இன்னும் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. வில்வராயநத்தம் ஆனந்தன் நகர், கோண்டூர் ராம்நகர், திருப்பாப்புலியூர் காமாட்சி நகர், ராஜம் நகர், சித்ரா நகர், வண்டிப்பாளையம் கண்ணகி நகர், ஆல்பேட்டை தேவநாதன் நகர்,  குண்டுசாலை குமரப்பன் நகர், டெலிபோன் காலனி, திடீர்குப்பம், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்களில், தேங்கிய மழைநீர் இன்னமும் வடியவில்லை. 
 
             பல நகர்களில் இன்னமும் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.   ஏராளமான நகர்களில் கொஞ்சம் இருக்கும் தார்ச் சாலைகளும், இப்போதுதான் வெளியே தலைகாட்டத் தொடங்கி உள்ளன. வீடுகளைச் சுற்றியும், காலியாக இருக்கும் வீட்டு மனைகளிலும் இன்னமும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நகர்களில், மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை வெளியேற்றினோம் என்று சொல்லிக் கொண்டுள்ளது.  
 
                கடலூரில் வடிகால் வசதிகளை ஒழுங்காக நிறைவேற்றாததே இத்தனை இன்னல்களுக்கும் காரணம் என்கிறார்கள் ஆண்டுக்கு 10 கோடிக்கு மேல் வீட்டுவரி செலுத்தும் நகரப் பொதுமக்கள்.  கடலூரில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், மழைநீர் தேங்கி பொதுமக்களை அல்லல்படுத்தும் நிலை மாற, ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் ஒன்றை உருவாக்கி, மாநில அரசின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கிறார், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன்.

Read more »

வியாழன், டிசம்பர் 02, 2010

நீர் தேங்கியுள்ள பயிர்களைப் பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை

சிதம்பரம்: 

                 வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நெற்பயிர் பாதிக்கப்படலாம். மேலும் பூச்சி, பூஞ்சாணங்களால் நெற்பயிருக்கு பாதிப்பு உண்டாகலாம். எனவே விவசாயிகள் கீழ்கண்ட பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என பரங்கிப்பேட்டை உதவி வேளாண்மை இயக்குநர் இ.தனசேகர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

விவரம் வருமாறு: 

                  நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி பயிர் மூழ்காத அளவு நீரை வெளியேற்ற வேண்டும். தற்போது மூழ்கியிருக்கும் பகுதிகளில் இளம்பயிரில் நட்ட குத்துக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அதே ரக நாற்றுகள் கிடைத்தால் போக்கிடங்களில் நடவு செய்ய வேண்டும்.

               சம்பா பயிர் நடவு செய்து 30-40 நாள்களுக்கு மேல் இருப்பின், இப்பயிரில் தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு போன்ற பூச்சிகளும் பயிர் அடர்ந்து வளர்ந்திருக்கின்ற பகுதியில் புகையான், பச்சைத்தத்து பூச்சிகள், எலிகளின் சேதம் போன்றவை காணப்படலாம்.

                இவற்றை கண்காணித்து பூச்சிக் கட்டுப்பாட்டிற்கான மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். பூச்சிகளின் தாக்குதல் தென்படும் இடங்களில் 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் புரோபினோபாஸ் மருந்தை கலந்து கைத்தெளிப்பான் மூலம் மழை இல்லாத நேரத்தில் தெளிக்கவும்.

                  தற்போது குலை நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிகையாக நடவு வயலில் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் கலவையை 30 கிலோ நன்கு மக்கிய மற்றும் உலர் நிலையில் உள்ள சாண எரு கலந்து இட வேண்டும். மேலும் ஏக்கருக்கு கார்பன்டசிம் 100 கிராம் அல்லது டிசைசைக்ளோசால் 200 கிராம் மருந்து 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

                  பாக்டீரியா இலைக்கருகல் மற்றும் கீறல் நோய்களின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீத பசுஞ்சாணக் கரைசல் 100 லிட்டர் நீரில் கரைத்து 12 மணி நேரம் ஊற வைத்து தெளிந்த நீரை வடித்து இத்துடன் 100 லிட்டர் நீரை கலந்து 200 லிட்டராக்கி தெளிக்கவும். அல்லது ஸ்டரெப்டோமைசின் சல்பேட்டுடன் டெட்ராசைக்கிளின் கலந்து மருந்து கலவையை ஏக்கருக்கு 120 கிராமுடன் காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.

                நீர்வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 55 கிலோ யூரியாவுடன் 45 கிலோ ஜிப்சம் மற்றும் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து இத்துடன் 42 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.

                   பயிரின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக 200 லிட்டர் நீரில் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்சல்பேட்டைக் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும் என உதவி வேளாண்மை இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior