உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விநாயகர் சதுர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் சதுர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

கடலூரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: 59 கிலோ எடை கொண்ட மெகா லட்டு தயாரிப்பு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வியாழக்கிழமை கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு தெருவில் இனிப்புக் கடை ஒன்றில் வைக்கப்பட்டு இருக்கும் 59 கிலோ லட்டு
கடலூர்,:
 
           விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடலூரில் இனிப்புக் கடை ஒன்றில், 59 கிலோ எடை கொண்ட மெகா லட்டு தயாரித்து வைக்கப்பட்டு உள்ளது.
 
               கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு தெருவில், இனிப்புப் பலகாரக் கடை வைத்து இருப்பவர்கள் ரமேஷ், விஜய், விநய் சகோதரர்கள். அவர்கள் தங்கள் கடையில் இந்த மெகா லட்டுவைத் தயாரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.இந்த மெகா லட்டு 20 கிலோ சர்க்கரை, 15 கிலோ நெய், 15 கிலோ கடலை மாவு மற்றும் ஏலக்காய், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. 
 
              8 தொழிலாளர்கள் இந்த மெகா லட்டுவை 2 நாள்களில் தயாரித்து உள்ளனர்.9 ஆண்டுகளுக்கு முன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 50 கிலோ எடை கொண்ட லட்டுவைத் தயாரித்த ரமேஷ் சகோதரர்கள், ஆண்டுக்கு ஒரு கிலோ வீதம் எடையை அதிகரித்து வந்து, இவ்வாண்டு 59 கிலோ லட்டுவைத் தயாரித்து உள்ளனர். விநாயகரைப் பூஜிக்கும் பக்தியுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மெகாலட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில், பொதுமக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் என்றும் ரமேஷ் சகோதரர்கள் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 

Read more »

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

ரசாயன வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்: கடலூர் மாவட்ட ஆட்சியர்

 கடலூர்:

            சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்க, அரசு அறிவிக்கும் நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

 இதுகுறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

              ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது பூஜித்த விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் பிளாஸ்டர் ஆப் பாரிஸôல் தயாரிக்கப்பட்டு, இரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடும்.  எனவே பொதுமக்களுக்கு பின்வரும் வேண்டுகோள் விடப்படுகிறது:  களிமண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத எவ்வித ரசாயனக் கலவை அற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே, எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

               இத்தகைய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம்.  ரசாயன வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும். கடலோரத்தில், ஏரிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்காமல், கடலுக்குள் 500 மீட்டர் தூரம் எடுத்துச்சென்று, அரசு அறிவிக்கும் இடங்களில் மட்டும் கரைக்கும்படி கேட்டுகொள்ளப் படுகிறார்கள். கடலூர் மாவட்டத்திóல் தேவனாம்பட்டினம் கடற்கரை, உப்பனாறு, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.  

            விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, கொண்டாடும் படியும், சமய நல்லிணக்கத்தையும் வழுவாது பேணிக்காக்கும்படியும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




Read more »

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

கடலூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி


கடலூர்:
 
           விநாயகர் சதுர்த்தி விரைவில் வரவிருப்பதை முன்னிட்டு, கடலூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  
 
              கடலூர் வண்டிப்பாளையம், மணவெளி ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் ஆண்டு முழுவதும் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் கலையம்சம் நிறைந்த பொம்மைகள் இந்தியா முழுவதும், பல மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.  பொம்மை தயாரிக்கும் இக்குடும்பங்களில் பல, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள், விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் மும்முரமாக ஈடுபடுகின்றன. 
 
              இக்குடும்பங்கள் கடலூரில் சுமார் 10 குழுக்களாகப் பிரிந்து, ஆங்காங்கே சிறிய கீற்றுக் கொட்டகைகளை அமைத்துக் கொண்டு, அவற்றில் விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறார்கள்.  வீடுகளில் பெரிய அளவில் வைத்து பூஜிக்கும் வகையிலும், பொது இடங்களில் பிரமாண்டமான அளவில் வைத்து பூஜிக்கும் வகையிலும், 3 அடி முதல் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை இவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இவற்றின் விலைகள் ரூ. 1000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை இருப்பதாக, பொம்மை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
               விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்படுவது ஐதீகம். எனவே நீர் நிலைகளின் சூழல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருளைக் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருக்கிறது.  எனவே இவர்கள் மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே விநாயகர் சிலைகளைத் தயாரிக்கிறார்கள்.  கடலூரில் விநாயகர் சிலை உருவாக்கப்படும் இடங்கள் ஒவ்வொன்றிலும், இதுவரை நூற்றுக்கணக்கான சிலைகள், மிகச்சிறந்த கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளன. வண்ணங்கள் தீட்டும் வேலைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.  
 
 கடலூர் முதுநகரில் கிழக்கு கடற்கரைச் சாலையோரம் விநாயகர் சிலைகளை உருவாக்கி வரும் மணவெளி சங்கர் (38) இதுபற்றிக் கூறுகையில்,
 
             ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும், குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இது ஒரு கலைத்தொழில். எனவே பல குடும்பங்கள் பாரம்பரியமாக பல்வேறு கலையம்சம் கொண்ட பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.  
 
             விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4 மாதங்கள், பெரும்பாலான குடும்பங்கள் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்றன. எங்களது பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிகளுக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பொம்மை தயாரிக்கும் தொழிலில், ஒத்தாசையாக இருக்கிறார்கள்.  இத்தொழிலில் பெரிதாக வருவாய் ஒன்றும் கிடைக்க வில்லை. கிடைக்கும் சொற்ப வருவாயில் சாப்பிடுகிறோம், குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். விநாயகர் சதுர்த்தி காலங்களில், விநாயகர் சிலைகள் தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்கள் வாங்கவும், கூலியாட்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் ஒவ்வொரு குழுவும் ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்கிறோம். 
 
             எங்களுக்கு எந்த வங்கியும் கடன்தர முன்வருவது இல்லை. ரூ. 1 லட்சத்துக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வீதம் வட்டிக்குக் கடன் வாங்கி, விநாயகர் சிலைகளைச் செய்கிறோம்.  விநாயகர் சதுர்த்தி பொம்மை தயாரிப்புத் தொழிலுக்கு என்று கடன் கேட்டால், அதிக வட்டி கேட்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்து கணக்குப் பார்த்தால்தான், என்ன வருவாய் கிடைத்து இருக்கிறது என்று தெரியும். எங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைத்தால், இத்தொழிலை மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செய்வோம் என்றார் சங்கர்.  
 
 
        ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.  அந்த மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும், விநாயகர் பொம்மைகளைத் தயாரிப்போரின் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் நிதரிசனமான உண்மை.
 
 
 

Read more »

செவ்வாய், ஜூலை 05, 2011

விருத்தாசலம் அருகே ரசாயன கலவையின்றி விநாயகர் சிலைகள் செய்யும் பணி

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் அய்யனார்கோவில் தெருவில் ரசாயன கலவையின்றி மண்ணாலான விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று புதிய விநாயகர் சிலைகளை வைத்து, பக்தர்கள் பூஜை செய்து, பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்றாம் நாள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பண்ருட்டி, விருத்தாசலம் உட்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது.

          விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவில் ரசாயன கலவையின்றி மண்ணாலான விநாயகர் சிலை செய்யும் பணி நடந்து வருகிறது. சிலைகளை கரைக்கும் போது தண்ணீர் மற்றும் மண் மாசுபடாமல் இருக்கும் வகையில் ரசாயன கலவையின்றி, சிலைகளுக்கு பெயிண்ட்டிற்கு பதில் சுண்ணாம்பு மூலம் வர்ணம் பூசப்படுகிறது. இச்சிலைகளை கடலில் கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது.




Read more »

வியாழன், செப்டம்பர் 16, 2010

குப்பை மேடானது சில்வர் பீச்



கடலூர் : 

                விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ததைத் தொடர்ந்து கடலூர் சில்வர் பீச் குப்பை மேடாக காட்சி அளித்தது.
 
                விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 472 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 380 சிலைகளை மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட் டது. அவற்றில் 218 சிலைகளும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 78 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் சில்வர் பீச்சில் கரைக்கப் பட்டது. கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் பெரும்பாலான சிலைகள் 50 முதல் 100 மீட்டர் தூரத்திலேயே கரைக்கப்பட்டது. 

                      இதனால் கடலில் போடப்பட்ட சிலைகள் உடைந்து அலையில் கரைக்கு அடித்து வரப்பட்டது. அதேப்போன்று சிலைகள் வைக்க பயன்படுத்திய பலகைகள், கழிகள் மரத்துண்டுகள் மற்றும் சிலைகளில் போடப்பட்டிருந்த மாலைகள், வேட்டிகள் அனைத்தும் அலையில் மீண்டும் கரைக்கு அடித்து வரப்பட்டன. இதில் மரச்சட்டங்கள், பலகைகள், கழிகளை பலர் அடுப்பெறிக்க எடுத்துச் சென்றனர். சிலைகள் மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப் பட்டன. மாலைகள், எலுமிச்சை பழம், பிளாஸ்டிக் பைகள் கரை முழுவதும் சிதறிக் கிடந்ததால் கடற்கரை அசுத்தமாக காணப்பட்டது.

Read more »

திங்கள், செப்டம்பர் 13, 2010

கடலூர் மக்களைக் கவர்ந்த 58 கிலோ லட்டுப் பிள்ளையார்

கடலூர்:

                      கடலூரில் தனியார் இனிப்புக் கடையில் தயாரித்து வைத்து இருந்த, 58 கிலோ லட்டுப் பிள்ளையார் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் (48) மற்றும் அவரது உறவினர்கள் விஜய், வினய் ஆகியோர் கடலூரில் கடந்த 20 ஆண்டுகளாக இனிப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். கடலூர் திருப்பாப்புலியூர் பகுதியில் இனிப்புக் கடை நடத்தி வரும் அவர்கள், விநாயகருக்குப் பிரியமானது லட்டு என்ற ஐதீகம் காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 58 கிலோ எடை கொண்ட லட்டைத் தயாரித்து உள்ளனர். 

                      கடந்த 8 ஆண்டுகளாக இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிகப்பெரிய லட்டைத் தயாரித்து, பொதுமக்கள் பார்வைக்கு வைத்து வருகிறார்கள். 50 கிலோ எடையில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிலோ வீதம் எடையை அதிகரித்து, இந்த ஆண்டு 58 கிலோ எடைகொண்ட லட்டைத் தயாரித்து உள்ளனர். இந்த லட்டு விற்பனைக்கு அல்ல. விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, மூன்றாம் நாள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டுவிடும் என்றும் ரமேஷ் தெரிவித்தார். 58 கிலோ எடை லட்டை, 8 பேர் 3 நாள்கள் இரவு பகலாக பணிபுரிந்து தயாரித்து உள்ளனர். 20 கிலோ கடலை மாவு, 18 கிலோ சர்க்கரை, 10 கிலோ எண்ணெய், 5 கிலோ நெய், 3 கிலோ முந்திரிப் பருப்பு, 2 கிலோ திராட்சை, மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior