உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

கடலூர் மாவட்டத்தில் வாலாஜா, பெருமாள் ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளான வாலாஜா, பெருமாள் ஏரிகளைத் தூர்வாரி, கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தெரிவித்தார்.  

              கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்டகும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் வாலாஜா ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமானுஜம், பரனாறு பாசனம் மற்றும் வடிகால் மேம்பாட்டுச் சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் அ. ராஜேந்திரன் ஆகியோர் பேசுகையில்

           வாலாஜா, பெருமாள் ஏரிகளைத் தூர்வார வேண்டும், நடுப்பரவனாறு கரைகள் சீரமைப்புத் திட்டத்தில், ஒரு பகுதி விடுபட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.  பதில் அளித்து ஆட்சியர் பேசுகையில், வாலாஜா, பெருமாள் ஏரி விவசாயிகளின் பிரச்சினைகள் அரசின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இரு ஏரிகளையும் தூர் வாரி, கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடுப்பரவனாற்றில் கரைகள் அமைக்கும் திட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, கரைகள் முழுமையாக அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  பெண்ணாடம் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை, உறுதி அளித்தபடி ஆகஸ்ட் உறுதிக்குள் வழங்க வேண்டும். 

                  நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை, 2002-2003 ம் ஆண்டில் வழங்க வேண்டிய பாக்கித் தொகையை விவசாயிகளுக்கு வழங்க, ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பாசனக் கிணறுகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்க ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை பணம் வழங்கப்பட்டும், 564 பேர் மட்டுமே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கினர். 11, 429 பேர் அமைக்க வில்லை. விரைவில் அந்த விவசாயிகள், மழைநீர் சேரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையேல் அத்தொகையை 9 சதம் வட்டியுடன் அரசுக்குத் திருப்பி செலுத்த வேண்டியது இருக்கும் என்றார் ஆட்சியர். 
  
விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகள்:  

நெல்லிக்குப்பம் நரசிம்மன்: 

           நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை 2002-2003 ம் ஆண்டில் வழங்க வேண்டிய கரும்புப் பணம் பாக்கியை (டன்னுக்கு ரூ. 50) வழங்க வேண்டும்.  

முட்லூர் விஜயகுமார்: 

                 சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் செய்யும் அஞ்சலை அம்மாள் வாய்க்கால், 5 ஆண்டுகளுக்கு முன், வெள்ளாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. புதிய வாய்க்கால் அமைக்க வேண்டும். 

 பாசிமுத்தான் ஓடை ரவீந்திரன்: 

              விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதை நெல்லுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். டெல்டா பாசனத்துக்கு காவிரி நீர் முன்னரே திறக்கப்பட்ட போதிலும், பாசனத்துகக்குப் பயன்படுத்தும் அளவுக்கு வீராணம் ஏரி இன்னமும் நிரம்ப வில்லை. கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீரைக் கேட்டுப் பெறவேண்டும். விளை நிலங்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி விலைக்கு வாங்கி வீட்டு நிலங்களாக மற்றுவதைத் தடுக்க வேண்டும்.  

பெண்ணாடம் காமராஜ்: 

          பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு ரூ. 40 கோடி கரும்புப் பணம் பாக்கி வைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், புதிய பயிர்க் கடன் பெற முடியாமலும் உள்ளது. குறுவை நெல் அறுவடை நடந்து வரும் பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வில்லை. மலர் வணிக வளாகம் அமைக்க வேண்டும்.  

பெண்ணாடம் சோமசுந்தரம்: 

           அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்பு பாக்கிப் பணத்தை வழங்க, ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமய வங்களில், மறுகடன் வாங்குவதற்கு வசதியாக பாக்கித் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்றார்.  

                  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Read more »

செவ்வாய், அக்டோபர் 19, 2010

கடலூரில் சம்பா நடவு இலக்கு 2.3 லட்சம் ஏக்கர்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.3 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:

                 நெல் பயிரைப் பொறுத்தவரை, சொர்ணவாரி பருவத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 11,974 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. குறுவைப் பருவத்தில் 8 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 8326 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. சம்பா பருவத்தில் 2.3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

                    செப்டம்பர் முடிய 38,153 ஹெக்டேரில் நடு முடிந்துள்ளது. செப்டம்பர் முடிய கரும்பு 33,642 ஹெக்டேர், கம்பு  2715 ஹெக்டேர், கேழ்வரகு 4459 ஹெக்டேர், மக்காச்சோளம் 12464 ஹெக்டேர், உளுந்து 945 ஹெக்டேர், மணிலா 3718 ஹெக்டேர் எள் 3446 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வீராணம் ஏரியில் 44.9 அடி (மொத்த உயரம் 47.5அடி),கீழணையில் 7 அடி (9 அடி). வாலாஜா ஏரியில் 5.5 அடி (5.5 அடி), பெருமாள் ஏரியில் 5 அடி (6.5 அடி) உள்ளது.  வெலிங்டன் ஏரியில் தண்ணீர் இல்லை. விதைகளைப் பொறுத்தரை நெல் 498.38 டன்கள், தானிய வகைகள் 0.75 டன்கள், பயறுவகைகள் 72.73 டன்கள், மணிலா 5.32 டன்கள் இருப்பு உள்ளது. உரங்கள் தழைச்சத்து 904 டன்கள், மணிச்சத்து 1212 டன்கள், சாம்பல் சத்து 1970 டன்கள் இருப்பு உள்ளது.

                      உயிர் உரங்கள் 1,05,650 பொட்டலங்கள் இருப்பு உள்ளன. 2,28,200 பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கூட்டுறவு மூலம் செப்டம்பர் முடிய பயிர்க்கடன் குறுகிய காலக் கடன்கள் 107.99 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய காலக் கடன் 4.86 கோடி, இதர வேளாண் கடன்கள் 364.07 கோடி (மொத்தம் | 476.92 கோடி) வழங்கப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர்.

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்: 

                              வாலாஜா ஏரி மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளுக்கு என்.எல்.சி. 24 கோடி ஒதுக்கி இருக்கிறது. விரைவில் பணியைத் தொடங்க முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம் ஏரியில் 43 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. வீராணம் ஏரிக்கு லஸ்கர்களை நியமித்து, நீர் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பெண்ணாடம் சோமசுந்தரம்: 

                  பெண்ணாடம் சர்க்கரை ஆலை கரும்பு நடவுக்கு ஏக்கருக்கு | 3 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவித்து, இதுவரை வழங்கவில்லை.

மாவட்ட ஆட்சியர்: 

                  வேளாண் உதவி இயக்குநர் முன்னிலையில், சர்க்கரை ஆலை விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்.

முட்லூர் விஜயகுமார்: 

                  டெல்டா பாசனப் பகுதிகளுக்கு கூடுதல் நீர் வழங்கியதற்கு நன்றி. நுண்ணுயிர் உரத்தின் விலையைக் குறைக்க வேண்டும்.

வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன்: 

                 வீராணம் ஏரியில் நீர் மட்டத்தை 43 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. களங்கள் இல்லாத இடங்களில்,  அறுவடை காலங்களில் சாலைகளில் தானியங்களை உலர்த்த அனுமதிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்: 

                 தேவைப்படும் அனைத்து இடங்களிலும் களங்கள் அமைக்க நிதி வழங்கப்படும். விவசாயிகள் தெரிவிக்கலாம்.

வேணுகோபால்: 

                மக்காச்சோளத்துக்கு களை எடுக்க தகுந்த கோனோவீடர் கருவிகள் வேண்டும்.

மருத்தாசலம்: 

                வெலிங்டன் ஏரிக்கு கூடுதல் நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

                      வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read more »

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

கடலூர் மாவட்ட வேளாண் துறை வழங்கும் தரமற்ற உரங்கள்

கடலூர்:

                 கடலூர் மாவட்ட வேளாண்துறை மூலம் வழங்கப்படும் ரசாயன உரங்கள் தரமற்றதாக இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த புகார்கள்:

திருக்கண்டேஸ்வரம் உழவர் மன்றத் தலைவர் வி.வரதன்: 

                        துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை மானியத்தில் வழங்கும் உரம் எடை குறைவாகவும் விலை அதிகமாகவும் உள்ளது. உதாரணமாக தோட்டக்கலைத் துறை வழங்கும் மோனோ அமோனியம் பாஸ்பேட் உரம் விலை 2448-75. ஆனால் தனியார் உர விற்பனை நிலையங்களில் விலை 1900. விலை வித்தியாசம் 548-75. மானிய விலையில் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு விலையை உயர்த்தி வழங்குவதால் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணம் கொள்ளை போகிறது. மேலும் தோட்டக்கலைத் துறை வழங்கும் உரத்தின் தரம் குறைவாக உள்ளது.இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு 2008-09-ம் ஆண்டில் இடு பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால் ஹெக்டேருக்கு |10 ஆயிரம் வரை பண உதவியும் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்த ஏராளமான விவசாயிகளுக்கு இந்தத் தொகை வரவேண்டியது இருக்கிறது.

மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன்: 

                    வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாளே நிறுத்தி விட்டனர். தலைப்புப் பகுதியில் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்குவதாகப் புகார் தெரிவித்ததால் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், தண்ணீர் வழிந்து ஓடாமல் தேங்கியதே, நாற்றங்கால்கள் மூழ்கியதற்கு காரணம். விவசாயிகளுக்கு போதிய நெல் விதைகள் கிடைக்கும் வகையில், விதை நெல் உற்பத்தியாளர்களுக்குப் பயிற்சியும், ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும். நீர் நிலைகளில் மரங்கள் நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் கருவேல மரங்களுக்கு பதில், வேறு மரங்களை நட வேண்டும்.பாட்டாம்பாக்கம் விவசாயிகள் சங்கத் தலைவர் வேங்கடபதி: தோட்டக்கலைத் துறை வழங்கும் வேப்பம் பிண்ணாக்கு தரம் குறைந்ததாக உள்ளது. 

மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரவீந்திரன்:

                            கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் செய்கிறார்கள். வெள்ளாறு பாசனப் பகுதிகளில் உள்ள டெல்டா நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதில் இந்த ஆண்டும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன்: 

                         கூட்டுறவுத்துறை தொடங்கி இருக்கும் பசுமை ராணுவம் திட்டத்தை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

வெலிங்டன் ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம்: 

                  கூட்டுறவு சங்கத்தில் கடன்பெறும் விவசாயிகளுக்கு, கடன் தொகையில் ஒரு பகுதியை சர்க்கரை ஆலைகளிடமிருந்து உரமாகப் பெற விவசாயிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். அந்த உரம் கரும்பு விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை. எனவே கடன் தொகை முழுவதையும் பணமாக வழங்க வேண்டும். தனியார் உர விற்பனை நிலையங்களில் வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: 

                   பாசன வாய்க்கால்கள் ஓரமாக தேக்கு மரங்கள் நடுவதால் பிரச்னை ஏற்படுகிறது. பல நேரங்களில் வாய்க்கால்கள் அடைப்பட்டு விடுகின்றன. அதைச் சரிசெய்ய முயன்றால் வனத் துறையினர் தடுக்கிறார்கள். எனவே பாசன வாய்க்கால் கரைகளில் மரம் நடக்கூடாது.

பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது: 

                 தோட்டக்கலைத் துறை வழங்கும் உரம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் தரம் பரிசோதிக்கப்படும். இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டு இருந்தால் அதிகாரிகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.கருவேல மரங்களுக்குப் பதில் வேறு மரங்களை நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கும். கூட்டுறவுக் கடன் பெறும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் மூலம் உரம் வழங்குவதைத் தவிர்க்க, சர்க்கரை துறை இயக்குநர்தான் நடவடிக்கை எடுக்க முடியும். 

                           கரும்பு விவசாயிகளுக்கு நடவுக்காக, சர்க்கரை ஆலைகள் அறிவித்த சலுகைகளை ஆலைகள் வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கொத்தட்டை ஆறுமுகம், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

சனி, ஆகஸ்ட் 14, 2010

கடலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் திறப்பதில்லை

கடலூர்:

            மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் சரிவர திறக்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

                 வேளாண் துறை சார்பில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நேற்று கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (வணிகம் மற்றும் விற்பனை) தனவேல், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அமிர்தலிங்கம், கால்நடைத்துறை இணை இயக்குனர் கணேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற் றனர்.
 
ராமமூர்த்தி: 

          குணமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இரவு நேரத்தில் மட்டுமே எடை போடுகின்றனர். பகலில் எடை போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தராசு மற்றும் எடைக்கற்கள் 2007-08ம் ஆண்டில் முத்திரையிடப்பட்டுள்ளது.

இணை இயக்குனர் இளங்கோவன்: 

            புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேல்முருகன்: 

               சேத்தியாத்தோப்பில் கால்நடை மருத்தவமனையில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மணி நேரத்தில் சென்று விடுவதால் மாடுகளுக்கு சினை ஊசி போட முடியவில்லை. கிராமப் பகுதிகளில் இருந்து 8 கி.மீ., தூரத்திற்கு மாடுகளை ஓட்டி வர முடியவில்லை. அதனால் வாரத்திற்கு ஒருநாள் ஒவ்வொரு கிராமத்திலும் சினை ஊசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தட்சணாமூர்த்தி: 

           தூக்கணாம்பாக்கம், சி.என். பாளையம், கண்ணாரப் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை மருத் துவமனைகள் சரியாக திறப்பதில்லை. டாக்டர்களும் வருவதில்லை. இதனால் கால் நடை வளர்ப்பு குறைகிறது. சமீபத்தில் வீசிய சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
 
இளங்கோவன்: 

               65 ஏக்கர் வாழை சேதமடைந் துள்ளது. அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் வழங்கப்படும்.

பஞ்சாட்சரம்: 

             மரவள்ளி, வெண்டை போன்ற தோட்டப் பயிர்களில் சப்பாத்திப் புழு தாக்குதல் உள்ளது. செம்மை நெல் சாகுபடிக்கு 3,000 ரூபாய் மானியத்தை பணமாக வழங்க வேண்டும்.
 
ராமலிங்கம்: 

              கிராமப்புறங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ மையம் ஏற்படுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறை சர்பில் வழங்கப்படும் கருவிகள் குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம்

கடலூர்: 

             விவசாயிகள் குறை கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் ஒரு மணிவரை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகள், விதைச் சான்று, மின் வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பொதுப்பணித்துறை (நீர் பாசனம்) துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே, மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 09, 2010

குறைகேட்புக் கூட்டத்தை அதிகாரிகள்புறக்கணிப்பதாக விவசாயிகள் புகார்

சிறுபாக்கம்:

            மங்களூர் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

                மங்களூர் ஒன்றிய விவசாயிகளின் குறைகேட்புக் கூட்டம், ஒன்றிய வளாகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மார்கெட்டிங் பிரிவு அலுவலர் சிவக்குமார், தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு மானாவாரி நிலங்களுக்கு தேவையான மக்காச்சோள விதைகள், வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்குழாய் கிணறு, மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களுக்கு உரங்கள், பயிர்களை நாசம் செய்யும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதில் அளித்து உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் பேசுகையில், 

               "இது குறித்து சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப் படும்' என்றார்.தொடர்ந்து விவசாயிகள், கடந்த ஆண்டு நவம் பர் முதல் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத் திற்கு மின்துறை, ஊரக வளர்ச்சி, பொதுப்பணித் துறை, வருவாய் மற்றும் வனத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் வருவதில்லை. தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.இதனால் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் தெரிவிக்க முடிவதில்லை என அனைத்து விவசாயிகளும் புகார் தெரிவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior