உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ள நிவாரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ள நிவாரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 01, 2012

பிச்சாவரத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம்

கிள்ளை : 
 
         பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
 
          "தானே' புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள பிச்சாவரம், பெரியகாரைமேடு, கணக்கரப்பட்டு, கோவிலாம்பூண்டி, சிதம்பரநாதன்பேட்டை, மீதிக்குடி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பெரியகாரைமேடு, மீதிகுடி, சிதம்பர நாதன்பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிச் செயலர் பாண்டியன் 25 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். மேலும் நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தானே புயல் கூடுதல் நிவாரணம் வழங்ககோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

           தானே புயல் நிவாரணம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


இச்சந்திப்புக்குப் பின்னர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியது

            கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு கடுமையானது. மக்களின் வாழ்வாதாரமே வீழ்ச்சி அடைந்து விட்டது. பாதிப்புகளை சீரமைக்க நீண்ட காலத் திட்டம் தேவை என்று, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட முந்திரி போன்ற பயிர்களை மீண்டும் உருவாக்க 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே பாதிப்புகளுக்கு நிவாரணம் என்பதைவிட நஷ்டஈடு வழங்க வேண்டும்.

          தேசிய பேரிடர் நிதியில் இருந்து அதிக நிதி பெற்று, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். பயிர்ச் சேதங்களுக்கு நிலத்தின் பட்டாதாரர்கள் மட்டுமன்றி குத்தகை தாரர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரினேன் என்றார்.

Read more »

வெள்ளி, ஜனவரி 27, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரணம் வழங்கியதில் குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள்


பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
கடலூர்:

         கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலை 140 கி.மீ. வேகத்தில் வீசிய "தானே' புயல், கடலூர் மாவட்ட மக்களை, அவர்களின் வாழ்வாதாரங்களை, பொருளாதாரத்தை சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டது. ரூ.100 கோடி சேதம் என்று மாவட்ட நிர்வாகம் முதலில் அறிவித்தது.

           ஆய்வு நடத்தியபோது சேத மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இது அரசின் உத்தேசமான தகவல் என்றாலும் சேதமதிப்பு இன்னமும் அதிகம். மொத்தம் 4,05,889 வீடுகள் (40,064 வீடுகள் முழுமையாக, 3,65,825 பகுதியாக) சேதம் அடைந்ததாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சேதம் அடைந்த வீடுகளுக்கு திங்கள்கிழமை வரை ரூ.112.98 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது. 

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்கள்தான் புயலில் அதிகம் பாதிக்கப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் வட்ட வாரியாக பார்த்தால் கடலூரில் 1,07,301 வீடுகளுக்கும், பண்ருட்டியில் 1,04,771 வீடுகளுக்கும், சிதம்பரத்தில் மாவட்டத்திலேயே அதிகமாக 1,20,191 வீடுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணம் என்று முதலில் வெளியான அறிவிப்பு பின்னர், பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் என்று வெளியானது. 

            மொத்தம் உள்ள 7 வட்டங்களில் சுமார் 6 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள கடலூர் மாவட்டத்தில், மோசமாக பாதிக்கப்பட்ட 4 வட்டங்களில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் நகராட்சிப் பகுதியில் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை தரும் தகவலின்படி, மொத்த குடும்ப அட்டைகள் (போலிகள் உள்பட) 48,240. இதில் முதல் கட்டமாக 43,683 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் விடுபட்டவர்கள் 18 ஆயிரம் பேருக்கு (ரேஷன் அட்டை உள்ளவர்கள்) நிவாரணம் வழங்க 2-வது பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 6,454 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

            அப்படியெனில் நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்றும், இதுவரை நிவாரணம் பெற்றவர்கள் 49,683 என்றும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது. 48 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நகரில், சுமார் 50 ஆயிரம் பேருக்கு நிவாரணமா என்று கேட்டால், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது என்கிறார்கள். நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்று கணக்கிட்டால், சுமார் 19 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் புயல் நிவாரணம் கோரி தினமும் நடைபெறும் போராட்டங்களோ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.அரசுத் துறைகளிடையே முரண்பாடான புயல் நிவாரணப் பட்டியல்கள் உள்ளன. 

            நிவாரணம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் காரணமாகவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை. காரணம் புயலுக்கு அரசு வழங்கிய நிவாரணம் அரசியல் நிவாரணமாக மாறிவிட்டது என்பதே மக்களின் புகார். கிடைக்க வேண்டிய பலருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல கோடிகளை செலவிட்டவர்களுக்கோ, இந்த நிவாரண உதவி வழங்கும் பணி நல்ல வாய்ப்பாகி விட்டது என்கிறார்கள் பொதுமக்கள்.

            பல வார்டுகளில் ரூ.2,500-ஐ வாங்கிக் கொண்டு, ரூ.1500-ஐ மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த இடைத்தரகர்களும் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளித்ததுதான் புயல் நிவாரணப் பட்டியல். தாங்கள் அளிக்கும் பட்டியலுக்கு காசோலையில் கையொப்பமிடு என்று, தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

            இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அமைச்சர்களோ, எப்படியோ போங்கள் என்று வெறுத்து ஒதுங்கிக் கொண்டார்கள். இத்தகைய குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால்தான், அரசு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். 







Read more »

சனி, ஜனவரி 07, 2012

கடலூர் மாவட்டத்தில் நிவாரணம் தொடர்பான விவரங்களை அறிய இலவச தொலை பேசி எண் 1077

          தானே புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நிவாரணம் தொடர்பான விவரங்களை அறிய 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், பொதுமக்களின் மறியலால் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்றும் கடலூர் ஆட்சியர் அமுதவல்லி கூறியுள்ளார். நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல் செய்ய வேண்டாம் என்று கடலூர் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

வியாழன், டிசம்பர் 08, 2011

கடலூரில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்

கடலூர்:

            மழை வெள்ளத்தினால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு, ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை சட்டப் பேரவை உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினார்.  

            கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த வாசுகி (14) மழை வெள்ளத்தில் சிக்கி அண்மையில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப் பட்டது.  இதற்கான காசோலையை வாசுகியின் தாயார் கலாவதியிடம் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். கடலூர் வட்டாட்சியர் எழிலன், ஊராட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அதிகாரி தயாளு, அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பழநிசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாடுகளுக்கு நிவாரணம்: 

          மழை வெள்ளத்தில் சிக்கி இறந்த இரு வண்டி மாடுகளுக்கு நிவாரணமாக அவற்றின் உரிமையாளருக்கு ரூ. 40 ஆயிரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.  கடலூர் தங்கராஜ் நகர் சம்பத்துக்குச் சொந்தமான இரு மாடுகள், கெடிலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன. இதற்கு நிவாரணமாக ரூ. 40 ஆயிரத்தை சம்பத்திடம், மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வழங்கினார். 















Read more »

புதன், நவம்பர் 30, 2011

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு பயிர்களுக்கு நிவாரண உதவி

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களான பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.

              கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையிலும், வெள்ளாற்றிலும், பழைய கொள்ளிடத்திலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 15 முதல் 30 நாள்களுக்குள்ளான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. மேற்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நீர் வடியத் தொடங்கியுள்ளது.

               இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் மற்றும் வோளாண் துறை அதிகாரிகள் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிர் மற்றும் வெள்ள சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். குமராட்சி ஒன்றியம் வக்காரமாரி, தெம்மூர், நந்திமங்கலம், வீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து விபரம் கேட்டறிந்தார். நந்திமங்கலத்தில் விவசாயி ஒருவர் உரம் தட்டுப்பாடாக உள்ளது. உரம் கிடைக்கவில்லை என ஆட்சிரிடம் புகார் தெரிவித்தார். 

    மேலும் இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. தீடீரென ஊருக்கு தண்ணீர் புகுந்து விடுவதால் வெளியேறுவது கஷ்டமாகிவிடுகிறது. எனவே நந்திமங்கலம்-பூலாமேடு இடையே பழைய கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நந்திமங்கலம் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நந்திமங்கலத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றை ஆட்சியர் பார்வையிட்டார். பொதுமக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பின் பாலம் அமைக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.

பின்னர் காட்டுமன்னார்கோயில் பொதுப்பணித்துறை விடுதியில் ஆட்சியர் அளித்த பேட்டி: 

               வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களிலிருந்து 30 நாள்களான பயிர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும். 30 நாள்களுக்கு மேலான பயிர்கள் நீரில் மூழ்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே  அவற்றுக்கு நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதுபோல வெள்ளத்தில் வீடுகளை இழந்த குடும்பத்திற்கும், வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததால் பொது இடத்தில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.  

              மேலும் நந்திமங்கலம், வீரநத்தம் கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமுற்ற சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும் என்றார். நாக.முருகுமாறன் எம்எல்ஏ, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.















Read more »

வெள்ளி, ஜனவரி 14, 2011

கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் ரூ.32 கோடி வழங்கப்பட்டுள்ளது: சீத்தாராமன்

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் இதுவரை 32 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் கூறினார். 

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியது: 

                மழை வெள்ளத்தால் சூழப்பட்ட 65 கிராமங்களுக்கும், தண்ணீர் புகுந்த 126 கிராமங்களுக்கும் மொத்தம் 11,944 குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையாக 11.69கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. கடலூர் பகுதியில் முழுவதும் பாதிக்கப்பட்டதாக 110 வீடுகளும், பகுதி பாதிக்கப்பட்டதாக 1400 வீடுகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

           இது போக இம் மாவட்டத்தில் 88,000 ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய நிவாரணத்தொகை அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெயரில் வரவு வைக்கப்படும். பயிர் பாதிப்புக்காக இதுவரை 20 கோடி ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

               இன்னும் ஓரிரு நாட்களில் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுவிடும். ஒரு சில கிராமங்களில் ஒரே மாதிரியான பெயர்களையுடைய விவசாயிகள் இருந்தால் நிவாரணத்தொகை பெறுவதில் குழப்பம் ஏற்படும். எனவே அவர்களின் தந்தை பெயரினை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரணத்தொகை பெறும் தகுதியுடையவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கப்படும் என கூறினார்.

Read more »

சனி, ஜனவரி 08, 2011

விருத்தாசலத்தில் வெள்ள நிவாரணம் வழங்காமல் அலைக்கழிக்கப்படும் வடக்கு வெள்ளூர் கிராம மக்கள்!

நெய்வேலி:

              மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகையை வடக்கு வெள்ளூர் கிராம மக்களிடம் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், 

                    எங்களிடம் எல்லா ஆவணங்களையும் விஏஓ பெற்றுக்கொண்டார். ஆனால் இதுநாள் வரை பணம் எங்களுக்கு வழங்கவில்லை. கேட்டால் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பொங்கல் பண்டிகை கழித்து வாருங்கள், வந்திருந்தால் தருகிறேன் என்கிறார். பலருக்கு அரசு வழங்கிய தொகையைக் காட்டிலும் குறைவாகவே நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார். மேலும் சொந்த விருப்பு - வெறுப்புகளை வெள்ள நிவாரணம் வழங்குவதில் வெளிப்படுத்துகிறார். தனக்கு பிடிக்காதவர்களுக்கு வந்திருந்த நிவாரணத் தொகையை வருவாய் ஆய்வாளரிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டார் என்றனர் கிராம மக்கள்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் கூறுகையில், 

                  வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட 98  குடியிருப்புகளில் 18 மட்டுமே முழுமையாக பாதிக்கப்பட்டவை, எஞ்சிய 18 மட்டுமே முழுமையாக பாதிக்கப்பட்டது. கூனங்குறிச்சி ஊராட்சியில் பலர் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வெள்ள நிவாரணத் தொகைக்கான ஒதுக்கீடு பெற்றிருந்தனர். அவற்றை ஆராய்ந்தபோது, அவ்வாறு எதுவும் பாதிக்கப்படவில்லை என தெரியவந்ததை தொடர்ந்து 10 பேரின் தொகை வருவாய் ஆய்வாளரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளேன் என்றார் பாலசுப்ரமணியன்.

Read more »

செவ்வாய், டிசம்பர் 28, 2010

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பு ரூ.4.5 கோடி நிவாரணம்

சிதம்பரம் : 

               காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் ஏற்கனவே 22 கிராமங்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. தாசில்தார் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது.

Read more »

நெல்லிக்குப்பத்தில் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லிக்குப்பம்:

              வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதித்த நெல்லிக்குப்பம் 6-வது வார்டு பகுதி பொதுமக்கள் வெள்ள நிவாரணம் கோரி நேற்று  காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
             நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் போலீசாருடன் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். வெள்ள நிவாரண கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்துக:கு கொண்டு செல்லப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior