உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஹைமாஸ் விளக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைமாஸ் விளக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 07, 2010

இருளில் மூழ்கும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம்


 
கடலூர்:
 
                 கடலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் இந்த ரயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.  
 
                மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில்பாதை திட்டப் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், திருப்பாப்புலியூர், துறைமுகம் நகர் சந்திப்பு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், ரயில் நிலையத்தை சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி இருக்கிறது.  
 
                        திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின் தண்டவாளங்களுக்கு மேற்குப் பகுதியில் பயணிகள் முன்பதிவு மையமும், கிழக்குப் பகுதியில் டிக்கெட் கௌன்டர்களும் செயல்படுகிறது. டிக்கெட் கௌண்டர் கட்டடத்தில் பெரும்பாலும் விளக்குகள் எரிகின்றன. ஆனால் கணினி முன் பதிவு மையம், சரக்கு அலுவலகம் மற்றும் மாடியில் நிரந்தர ஓய்வறைகள் உள்ள மேற்குப் பகுதி கட்டடத்தில், மாலை 5 மணிக்கு மேல் மின் விளக்குகள் எரிவதில்லை.   திருப்பாப்புலியூர்- விழுப்புரம் மார்க்கத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் வரை பிளாட்பாரம் அரை வட்ட வடிவில் நீண்டு கிடக்கிறது. 
 
                         ஆனால் இந்த அரை கி.மீ. தூரம் உள்ள இந்த பிளாட்பாரத்தில், இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை. மின் விளக்குகளுக்கான ஃபிட்டிங்குகளே பொருத்தப்படவில்லை.  இதை அடுத்துள்ள போடிச்செட்டித் தெரு, திரௌபதி அம்மன் கோயில் அருகே நகராட்சி ஹைமாஸ் விளக்கு உள்ளது. அதில் இருந்து கிடைக்கும் வெளிச்சமே பிளாட்பாரத்துக்குக் போதுமானது, பிளாட்பாரத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை என்று, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து விட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  
 
                மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பஸ் நிலையம், பெரிய அங்காடி ஆகியவற்றின் மத்தியில், திருப்பாப்புலியூர் பஸ் நிலையம் அமைந்து இருக்கிறது. இதனால் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத சக்திகள் யாரையாவது கண்டுபிடித்துத் துரத்தினால், அவர்கள் ஓடிவந்து எளிதில் பதுங்கிக் கொள்ள ஏதுவாக, இருண்டு கிடக்கும் ரயில் நிலையம் வசதியாக இருப்பதாக போலீஸôர் தெரிவிக்கிறார்கள்.  
 
                  மேலும் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட்டில் இருந்து சிதம்பரம் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்களின் ஒருபுறம் பஸ் நிலையமும், மறுபுறம் மார்க்கெட்டும் இருப்பதால் இரவு, பகல் எந்த நேரமும், மக்கள் அடிக்கடி தண்டவாளத்தை நடந்து சென்று கடக்கிறார்கள். கடந்த 4 மாதங்களில் மட்டும், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி இறந்து உள்ளனர்.  கணினி முன்பதிவு மையத்துக்கு அருகில் உள்ள 14 ரயில்வே குடியிருப்புகளில் 9-ல் மட்டும் ரயில்வே ஊழியர்கள் குடியிருக்கிறார்கள். மற்றவை சேதம் அடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. 
 
                இப்பகுதியும் அதை ஒட்டியுள்ள இருண்டு கிடக்கும் பிளாட்பாரமும், இரவு நேரங்களில் மது அருந்துவாருக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும் மிகவும் வசதியான பாதுகாப்பான இடமாக உள்ளது.  
 
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
                   "மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது விளக்குகளுக்கு, தனித்தனி ஸ்விட்சுகள் இருந்தன. தற்போது திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் முழுவதும் 3 ஸ்விட்ச்களின் கட்டுப்பாட்டில் அடங்கி விடுகிறது. இரவு 8-30 மணிக்கு பயணிகள் ரயில் கடந்து சென்றதும், இரவு 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே எக்ஸ்பிரஸ் ரயில்கள் பலவும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தைக் கடக்கின்றன. அதிலும் 2 ரயில்கள் மட்டுமே இங்கு நின்று போகின்றன. எனவே இரவு 12 முதல் 3 மணி வரை பிளாட்பாரத்தில் விளக்குள் எரிய விடப்படுகிறது. மற்ற நேரங்களில் சிக்கன நடவடிக்கை கருதி விளக்குகள் எரிவதில்லை' என்றார்.  
 
இதுபற்றி தென் ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கூறுகையில், 
 
                       "திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் விளக்குகள் எரியாமல் இருப்பது, மின் விளக்குகள் பொருத்தப்படாத பிளாட்பாரம் மற்றும் இரவு நேரங்களில் பிளாட்பாரம் இருண்டுகிடப்பதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பது ஆகியவை குறித்து ரயில்வே பொது மேலாளருக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறேன். நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார்.

Read more »

வியாழன், ஜூன் 17, 2010

பகலில் எரியும் தெரு விளக்குகளால் மின்சாரம் விரயமாகிறது : உள்ளாட்சி பிரதிநிதிகள்கவனிப்பார்களா?

கடலூர்: 

                   மின்சாரப் பற்றாக்குறை காரணமாக கட்டாய மின் வெட்டு அமல்படுத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் உள்ளாட்சி நிர்வாகிகளின் அலட்சியத்தால் பட்டப் பகலில் தெரு விளக்குகளை எரியவிட்டு மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது.

                    நீரின்றி அமையாது உலகு என் பது போல் இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரமின்றி மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரம் தற் போதைய மக்கள் தொகை பெருக் கத்தினால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இவை தவிர பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒரு நாள் 9 மணி நேரம் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும், மின் வாரியம் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. அதில் அதிக மின்சாரம் உபயோகமாகும் மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிக வீடுகளில் போடப் பட்டுள்ள குண்டு பல்புகளுக்குப் பதிலாக குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதே நேரத்தில் வெப்பத்தை வெளியிடாத "சி.எப்.எல்.,' பல்புகளை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

                    தற்போது நிலவி வரும் மின் வெட்டை தவிர்த்திட ஒவ்வொருவரும் கட்டாயமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் தமிழக அரசின் ஓர் அங்கமான உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பற்ற செயலால் மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 682 கிராம ஊராட்சிகள், 13 ஓன்றியங்கள், 16 பேரூராட்சிகள், ஐந்து நகராட்சிகள் உள்ளன. இதன் மூலமே குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகளே தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவரவர் பகுதிகளில் "ஹைமாஸ்' விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்குகளை அதிக அளவில் அமைத்து வருகின்றனர்.

                     இரவில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக உள்ள பகுதிகளில் கூட அதிக மின்சாரம் செலவாகும் சோடியம் மற்றும் மெர்க்குரி விளக்குகளை அமைத்துள்ளனர். டியூப் லைட் இருந்தாலே போதும் என்ற பகுதிகளில் கூட "ஹைமாஸ்' விளக்குகளை அமைத்துள்ளனர் மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை. இந்த தெரு விளக்குகளை தினசரி மாலை நேரத்தில் எரிய வைக்கவும், மறுநாள் காலை 6 மணிக்கு நிறுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர் தனது பணியை சரியாக செய்வதில்லை. அவர் நினைத்தால் தெரு விளக்கு எரியும். இல்லை என்றால் சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கும் என்ற நிலைதான் உள்ளது.

                           இதன் காரணமாக மாவட்டத்தில் பல பகுதிகளில் பகல் நேரங்களில் வீணாக தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும், மற்றொரு பகுதிகளில் இரவில் தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டிய உள்ளாட்சி பிரதிநிதிகளும் தெரு விளக்குகள் அமைப்பதோடு தங்களது வேலை முடிந்து விட்டது என ஒதுங்கிக் கொள்கின்றனர். அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளும் தினசரி காலை நேரத்தில் தங்கள் பகுதிகளில் வலம் வந்தாலே பகலில் தெருவிளக்குகள் எரிவதை தவிர்க்கலாம். இதன் மூலம் விலை மதிப்பற்ற மின்சாரத்தை சேமிக்க முடியும். இதனை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உணர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

செவ்வாய், ஜூன் 15, 2010

நடுவீரப்பட்டு உயர்மட்ட பாலம் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., ஆய்வு

நடுவீரப்பட்டு :

                    நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் பார்வையிட்டார். அப்போது அவரிடம் பாலத்திற்கான இணைப்பு சாலை போட்டு உடனடியாக பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் அருகில் நடுவீரப்பட்டு பகுதியில் ஹைமாஸ் விளக்கு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

                      அண்ணா கிராம முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், ஒன்றிய கவுன்சிலர் கந்தசாமி, ஊராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், நடுப்பேட்டை கிளை செயலாளர் நடராஜன், சி.என்.பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், அப்துல் அஜிஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

தனியார் தோண்டிய பள்ளத்தால் "ஹைமாஸ்' கேபிள் துண்டிப்பு

கடலூர் : 

               தனியார் தோண்டிய பள்ளத்தால் ஹைமாஸ் விளக்குகளின் கேபிள் துண்டிக்கப்பட்டதால் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் கடந்த 40 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.

                   கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள நகராட்சி மைதானத்தில் மாலை நேரங்களில் முதியோர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருவதோடு, இளைப்பாறியும் வருகின்றனர். பொதுமக்கள் பயன் பாட்டில் உள்ள மைதானம் இருள் சூழ்ந்து காணப்பட் டதால் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அறங் கேறின. இதனை தடுக்கும் பொருட்டு நகராட்சி ஐந்தாண்டிற்கு முன் "ஹைமாஸ்' விளக்கு அமைத்தது. இதனால் சமூக விரோத செயல்கள் குறைந்தன. மேலும் மைதானத்திற்கு மாலை நேரத்தில் இளைப்பாற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிறுவனம் ஒன்று நகராட்சியின் அனுமதி பெற்று மைதானத்தில் பொருட்காட்சி நடத்தியது.

                      அரங்குகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான சாதனங் கள் மட்டுமே அமைக்க அனுமதி பெற்ற தனியார் நிறுவனம் படகு சவாரி நடத்துவதற்காக மைதானத்தில் ஒரு பகுதியில் மிகப் பெரிய அளவில் பள்ளம் தோண்டியது. அதில் மைதானத்தில் உள்ள "ஹைமாஸ்' விளக் கிற்காக பூமிக்கடியில் கொண்டு செல்லப்பட்ட மூன்று கேபிள்கள் அறுந்ததால், பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் அன்று முதல் "ஹைமாஸ்' விளக்கு எரியாமல் கடந்த 40 நாட்களுக்கு மேலாக நகராட்சி மைதானம் இருளில் மூழ்கி கிடக்கிறது. துண்டிக்கப்பட்ட கேபிள்களை இணைக்க முடியாது என்பதால் புதிதாக மாற்ற வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. இதனால் "ஹைமாஸ்' விளக்கு பழுது நீக்க தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து சேர்மன் தங்கராசிடம் கேட்டபோது 

                     "கேபிள் சேத தொகை பொருட்காட்சி நடத்தியவர்களிடமிருந்து வசூலிக்கப்படும்' என்றார்.

Read more »

திங்கள், மே 17, 2010

சிதம்பரம் அருகே பின்னத்தூரில் காட்சி பொருளாக நிற்கும் 'ஹைமாஸ்'

கிள்ளை : 

               சிதம்பரம் அருகே பின்னத்தூரில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு காட்சிப் பொருளாக உள்ளது.

               பரங்கிப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஜமாத் நிர்வாகத்தினரின் கோரிக்கையை ஏற்று பின்னத்தூர் கிழக்கு பகுதிக்கு செல்லும் சாலையில் பள்ளிவாசல், அரசு உயர் நிலைப்பள்ளி என நான்கு முனை சந்திப்பில் ஒருலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் ஹைமாஸ் விளக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஹைமாஸ் விளக்கு அமைத்த சில தினங்கள் மட்டும் அப்பகுதி பிரகாசமாக இருந்தது.

                    இதனால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்கை மாற்றி வேறு இடத்தில் அமைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருளாக உள் ளதால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. தற்போது ஹைமாஸ் விளக்கு அமைக்கப் பட்டுள்ள நான்குமுனை வீதி அருகில் இந்தியன் வங்கி, டி.என். சி.எஸ்.சி. நெல்கொள்முதல் நிலையம், தொலைபேசி கிளை அலுவலகம், ஜமாத் பள்ளிவாசல், அரபிக்கல்லூரி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இரு தனியார் பள்ளிகள் இருப்பதால் இரவில் யார் வருகின்றனர் எனத் தெரியாமல் அப்பகுதியினர் விரக்தியில் உள்ளனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள விளக்கை பொது மக்கள் நலன் கருதி சரி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior