உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

அடிப்படை வசதிகள் இல்லாததால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு

கடலூர் :

          அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென்றால் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

                  இதுகுறித்து மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கெங்கை கொண்டான் பேரூரட்சி தலைவர் சக்திவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

                     மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஓம்சக்தி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர், வடிகால் அமைப்பு உள்ளிட்ட வசதிகள் இதுவரை செய்யப்படாமல் உள்ளது.இதுகுறித்து பல போராட் டங்கள் நடத்தியும் பலன் இல்லை. இதே நிலை நீடித்தால் வாழ்வதற்கு வழியில்லாதவர்கள் என்ற நிலையில் எங்களின் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை தங்களிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் ரயில்வே மேம்பால பணி மந்தம் : உலர் களமாக மாறி வரும் புறவழிச்சாலை

விருத்தாசலம் :

                     விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி மந்த கதியில் நடந்து வருவதால், பணி முடிந்த சாலை பகுதிகள் தற்போது விவசாயிகளின் நெற்களமாக மாறிவருகிறது.

                  விருத்தாசலம் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க "தமிழ்நாடு ரோடு செக் டார் ப்ராஜெக்ட்' மூலம் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. கடலூர் ரோட்டில் உள்ள பொன்னேரியில் இருந்து வேப்பூர் ரோட்டில் உள்ள மணலூர் வரை 9.1 கி.மீ., தூரத்திற்கு புறவழிசாலை 2010 ஜனவரிக்குள் அமைக்க முடிவு செய்யப் பட்டு அதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது.பொன்னேரியில் இருந்து மணலூர் வரை அமைய உள்ள புறவழி சாலையில் மணிமுத்தாறும், ரயில் பாதையும் அமைந்துள்ளதால் அவற் றிற்கு மேலே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதுபோல் சாலை அமைக்கும் இடங் களில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த 2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் துவங்கியது.

                 தற்போது பொன்னேரியில் இருந்து மணலூர் இடைப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து விட்டது. அதுபோல் மணிமுக்தா ஆற்று மேம்பால பணியும் முடிவடைந்து போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைக்க 2.5 கோடி மதிப் பீட்டில் "இர்கான்' எனப்படும் "இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷனிடம்' ஒப்படைத்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி முடியாமல் மந்த நிலையில் நடந்து வருகிறது. இன்று வரை பாதி அளவு பணிகள் மட்டுமே நடந் துள்ளதால் புறவழி சாலை பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட் டுள்ளது.இதனால் வேப்பூர், திட் டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் நகரத்திற்குள் வந்து செல்லும் நிலையே உள்ளது.

                    குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியான கடைவீதி வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு தொடர்ந்து விபத்துகளும் நடந்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கடைவீதி வழியாக சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவி ஒருவர் போக்குவரத்து நெரிசலால் கனரக வாகனத்தில் சிக்கி இறந்தார். இவைத்தவிர தினசரி சிறு, சிறு விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.புறவழிசாலை பயன் பாட்டிற்கு வராததால் பணி நிறைவு பெற்ற சாலைகளை விவசாயிகள் தானியங்கள் உலர வைப்பதற்கும், நெல் அடிக்கும் களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

                     இதனால் சாலையில் சிறு சிறு குழிகள் ஏற்பட்டு சாலை பழுதாகும் நிலை உள்ளது. அதுபோல் நகர பகுதியை ஒட்டிய சில இடங்களில் பொதுமக்கள் சாலையில் மாடுகளை கட்டிவைத் தும், தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாலும் சாலை பழுதாகும் நிலை உள்ளது. வாகன போக்குவரத்து இல்லாததால் குடி பிரியர்களும் தங்கள் பங்கிற்கு இரவு நேரங்களில் புறவழிசாலையை பாராக மாற்றி வருகின்றனர்.தற்போது விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விருத்தாசலம் - வேப்பூர் செல்லும் வாகனங்களும், வரும் வாகனங் களும் நகரத்திற்குள்ளே செல்லும் வகையில் மாற்று வழியில் விடப்பட் டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் புறவழிசாலை பணி முடிந்திருந் தால் வேப்பூரில் இருந்து கடலூர் நோக்கி வரும் வாகனங்கள் புறவழிசாலை வழியாக சென்றிருக்கும்.

                தற்போது அதிக போக்குவரத்து நெரிசலுடன் நகரத்திற்குள் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதியும், நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப் பதோடு விபத்து மற்றும் உயிர் இழப்புகளை தடுத் திட ரயில்வே மேம்பால பணியினை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல பாதையில் மூன்றாண்டுக்கு பின் சரக்கு ரயில் வெள்ளோட்டம்

கடலூர் :

                விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்து நேற்று வெள்ளோட் டம் விடப்பட்டது.

                  விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும் பணி, கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. முதல் கட்டமாக சீர் காழி - மயிலாடுதுறை இடையே 22 கி.மீ., தூரம் பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஜன., 28ம் தேதி முதல், சரக்கு ரயில்கள் இயங்கி வருகிறது. ரண்டாம் கட்டமாக 48 கி.மீ., கடலூர் - விழுப்புரம் பாதை பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி, கடலூர் - விழுப்புரம் ரயில்வே பாதையில், இலகு ரக இன் ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.மூன்றாம் கட்டமாக கடலூர் - சிதம்பரம் வரையிலான பாதை, பணிகள் முடிக்கப்பட்டது.இதையடுத்து, விழுப்புரத்திலிருந்து - மயிலாடுதுறைக்கு நேற்று காலை 7.40 மணிக்கு 3,632 டன் அரிசி ஏற்றிய, 41 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்றும், அதே போல் காலை 7.35 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு 3,630 டன் சர்க்கரை ஏற்றிய 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலும் வெள்ளோட்டமாகப் புறப்பட்டன.

                          இரண்டு ரயில்களும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் செல்லவும், குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் 20 முதல் 30 கி.மீ., வேகத்திலும், செல்ல டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ழுப்புரத்திலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் மதியம் 2 மணிக்கு மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட ரயில் 1.45 மணிக்கும் விழுப்புரத்தையும் சென்றடைந்தன.ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு சோதனை செய்து, "பயணிகள் ரயில்கள் இயக்கப்படலாம்' என தரச் சான்று அளித்தவுடன், ரயில்கள் இயங்கும். இன்னும் முழுமை பெறாமல் உள்ள பணிகள் முடிவடைந்து, சோதனை செய்து தரச்சான்று வழங்க மூன்று முதல் ஐந்து மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

தாமதத்தை மறைக்க வெள்ளோட்டம் :

             சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டாலும், பணிகள் முழுமையாக முடித்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதனால் அனைத்து இடங்களிலும் "பாயின்ட்'களை, ஊழியர்களே இயக்கினர். "கேட்'கள் முழுமையாக மூட முடியாமல், ஸ்டேஷனில் பணிபுரிபவர்கள் கேட் அருகே வந்து, சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, ரயிலை அனுப்பி வைத்தனர். பணி துவங்கி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆவதால், காலதாமதத்தை மறைக்க, அவசர அவசரமாக சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது.சிக்னல்கள் வேலை செய்யாத பட்சத்திலும், எந்த நேரத்தில் ரயில் வரும் என தெரியாத நிலையில், ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்கும் போதிலும் விபத்துகள் நேர வாய்ப்புகள் உள்ளது.

              பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில், "லூப் லைன்' பணிகளே நிறைவடையாத நிலையில் உள்ளது.ஆர்.வி.என்.எல்., நிறுவனம் பணிகளை முழுமையாக முடித்து, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்த பிறகே, பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior