உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்

நடுவீரப்பட்டு: 

               நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முதலில் அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்தது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. 

                கடந்த 11ம் தேதி காலை 10 மணிக்கு குறவன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் மனைவி சாந்தியை (27) பிரசவத்திற்காக நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பரிசோதனையில் சுக பிரசவத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

Read more »

நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம்




சிதம்பரம் : 

           சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது.

             கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி அறநிலையத்துறை சார்பில் முதல் முறையாக நடராஜர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒரு உண்டியல் வைக்கப்பட்டது. உண்டியல் வருமானம் அதிகரித்ததால் கோவிலில் அடுத்தடுத்து பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தற்போது கோவிலில் மொத்தம் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. ஐந்தாவது முறையாக கடந்த ஜனவரி 9ம் தேதி உண்டியல் திறந்தபோது, 2009 வரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வருமானம் கிடைத்தது. கடந்த மார்ச் 10ம் தேதி ஆறாவது முறையாக உண்டியல் திறந்ததில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாயும், ஏழாவது முறையாக மே 13ம் தேதி திறந்தபோது 4 லட்சத்து 17 ஆயிரத்து 751 ரூபாய் இருந்தது. நேற்று எட்டாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் எண்ணினர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது.

               கோவில், அரசு கட்டுப்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில், உண்டியல் மூலம் மட்டும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (வெளிநாட்டு கரன்சி மற்றும் வெள்ளி, தங்க நகைகள் போக) வருமானம் கிடைத்துள்ளது.

Read more »

மாணவர் குடித்து தற்கொலை முயற்சி : கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மறியல்

குறிஞ்சிப்பாடி : 

             குறிஞ்சிப்பாடியில் கல்லூரி மாணவர் பூச்சி மருந்து குடித்ததை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. 

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பாலாஜி (20). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி வகுப்பறையில் சில மாணவிகளை கேலி செய்ததாக வந்த புகாரின் பேரில், மாணவர் பாலாஜியை நான்கு நாட்களுக்கு இடை நீக்கம் செய்து, பெற்றோரை அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் கூறியது.

                       மனமுடைந்த மாணவர் பாலாஜி நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகார் குறித்து விசாரிக்காமல் கல்லூரி நிர்வாகம் அதிரடியாக இடைநீக்கம் செய்ததால் மாணவர் பாலாஜி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி சக மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் ஊர்வலமாக வந்து கடலூர் சாலையில் மீனாட்சிபேட்டையில் காலை 11.40 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
 
                  குறிஞ்சிப்பாடி போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தனர். அதனையேற்று பகல் 12.10 மணிக்கு மாணவர்கள் மறியலை விலக்கிக் கொண்டனர். தொடர்ந்து கல்லூரியில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததையேற்று மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior