உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா

ஸ்ரீமுஷ்ணம் : 

            ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா செய்தனர்.

              ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தை சேர்ந்த ராமாபுரம், கொளத்தங்குறிச்சி, வாலீஸ்பேட்டை, தண்டகாரங்குப்பம் கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஜாதி, வருமான, இருப்பிடச்சான்று கேட்டு ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.,) அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர்.

               மனுவைப் பெற்றுக் கொண்ட ஆர்.ஐ., சுந்தரம் மறுநாள் காலை வந்து மனுக்களை வாங்கிச் செல்லுமாறு கூறினார். அதன்படி 60 பேரும் நேற்று காலை 9 மணிக்கு ஆர்.ஐ., அலுவலகத்திற்கு வந்தனர். அதற்கு முன்பாக ஆர்.ஐ., காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். வெகுநேரம் ஆகியும் ஆர்.ஐ., வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆர்.ஐ., அலுவலகம் முன் தர்ணா செய்தனர். தகவலறிந்த ஆர்.ஐ., சுந்தரம் மாலை 3 மணிக்கு ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்து, சான்றிதழில் கையெழுத்திட்டு கொடுத்தார்.

Read more »

சாலையை சரி செய்யாததை கண்டித்து விருத்தாசலத்தில் திடீர் சாலை மறியல்

விருத்தாசலம் : 

             விருத்தாசலத்தில் காட்டுகூடலூர் சாலையை சரி செய்யாததைக் கண் டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

             விருத்தாசலத்தில் இருந்து காட்டுக்கூடலூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதில் புதிய சாலை அமைக்க டெண்டர் விட்டு ஜல்லிகள் கொட்டி 6 மாதமாகியும் சாலை போடும் பணி துவங்கவில்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

               இதனால் ஆத்திரமடைந்த விருத்தாசலம் அண்ணாநகர், திரு.வி.க., நகர், தாஷ்கண்ட் நகர் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் நேற்று காலை 11 மணிக்கு கடலூர் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் நாகராஜன் ஆகியோர் விரைவில் சாலை போடப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கடலூர் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 110 மாணவர்கள் வாந்தி


சிதம்பரம் : 

              சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு சாப்பிட்டு வாந்தி எடுத்து மயங்கிய, 110 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

               சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தினசரி பள்ளிக்கு வரும் மாணவர்களில், 350 பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.நேற்று காலையில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் கலைச்செல்வன், சிவபாலன் இருவரும் திடீரென வாந்தி எடுத்தனர். அவர்கள் சாப்பாட்டை சோதித்ததில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. மற்ற மாணவர்களும் வாந்தி எடுத்து மயங்கினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.வாந்தி எடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் 110 பேரையும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

                 அவர்களில் 103 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மற்ற 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் தாசில்தார் காமராஜ், குமராட்சி பி.டி.ஓ., ஆண்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களின் சம்பவம் குறித்து விசாரித்தனர். அதனை தொடர்ந்து  சத்துணவு பொறுப்பாளர்  பள்ளிப்படை அன்பழகன் (55), உதவியாளர்கள் பானுமதி, குப்பம்மாள் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து, குமராட்சி பி.டி.ஓ., உத்தரவிட்டார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior