உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

பண்ருட்டி நகராட்சியில் பாழாகும் குப்பை அள்ளும் வாகனங்கள் அதிகாரிகள் அலட்சியம்

பண்ருட்டி:

             பண்ருட்டி நகராட்சி குப்பை லாரிகள் பராமரிப்பின்றி வீணாகியதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதித்துள்ளது.

             பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகளில் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் தினமும் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு 33 பெண்கள் உள்ளிட்ட 120 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். பணிகளை ஆய்வு செய்ய ஒரு துப்புரவு அலுவலர், 2 ஆய் வாளர்கள், 2 மேற்பார்வையாளர்கள் பணிபுரிகின்றனர். குப்பைகள் சேகரிக்க 33 வார்டுகளில் 50 இரும்பு தொட்டிகள் வைக் கப்பட்டுள்ளது. 

              குப்பைகள் அள்ளுவதற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இரண்டு டிராக் டர்கள், ஒரு லாரி, ஒரு ஈஷர் மினி லாரி, ஒரு கேண்டர் மினிலாரி, ஒரு ஃபோர் நாட் செவன் என 6 வாகனங்களும், தள்ளுவண்டிகள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் சேகரிப்பதற்கு 30 வண்டிகள் உள்ளது. ஆனால் கடந்த இரு மாதங்களாக குப்பைகளை அகற்றுவதற்குரிய டிராக்டர், ஒரு ஃபோர் நாட் செவன் வேன் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற வாகனங்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. டிராக்டர் இழுத்துச் செல்லும் டிரெய்லர்களும் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

                   அதிகாரிகளின் அலட்சியத்தால் நகராட்சியின் நான்கு வாகனங்களுக்கு போக்குவரத்து அதிகாரியின் தகுதிச் சான்று பெறாமல் உள்ளது. குப்பைகள் அள்ள வாகனங்கள் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக பல தெருக்களில் குப்பைகள் அள் ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. துப்புரவு ஊழியர்கள் டிராலி மூலம் குப்பைகளை அள்ளினாலும் முழுமையாக அகற்ற முடிவதில்லை. போதுமான பணியாளர்கள் இருந்தும் வாகனங்கள் இல்லாததால் பண்ருட்டி நகரம் முழுவதும் குப்பைகள் மண்டி காணப்படுகிறது.

Read more »

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்

பண்ருட்டி: 

               பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க பொதுப்பணித் துறையினர் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

              பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் தினமும் இரவு நேரங்களில் லாரிகளில் திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. பண்ருட்டி தாசில்தாராக பாபு இருந்த போது தினமும் இரவு வருவாய்த் துறையினர் ரோந்து சென்று மணல் கடத்தலைத் தடுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஒ., மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றனர். 

              இதனையடுத்து வருவாய்த் துறையினர் மணல் கடத்தலைத் தடுப்பதற்கு அஞ்சுகின்றனர்.இதனால் தினமும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் சம்பவம் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வருவாய்த்துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தாசில்தார் பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் குமார், வருவாய் ஆய்வாளர் பூபாலன் ஆகியோர் கண்டரக்கோட்டை, புலவனூர் பகுதியில் மணல் கொண்டு செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

Read more »

புவனகிரியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாணவர் பலி

புவனகிரி:

                 புவனகிரியில் மின் கம்பியில் மாட்டிய பட்டத்தை இழுக்கும் போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். 

             இந்த சம்பவம் புவனகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்புவனகிரி ஆட்டு தொட்டித் தெருவைச் சேர்ந்தவர் அண்ணா துரை. இவர் சிதம்பரத்தில் உள்ள ஓட்டலில் சர்வராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் செல்வமணி (13). இவர் புவனகிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். செல்வமணி நேற்று மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த பின்னர், மேல்புவனகிரி மயானம் அருகே உள்ள மைதானத்தில் சிறுவர்களுடன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பட்டம் அந்த வழியாகச் செல்லும் மின் கம்பியில் சிக்கிக் கொண்டது. உடன் செல்வமணி பட்டத்தை எடுக்க பட்டத்தில் நூலை பிடித்து இழுத்தார். 

             எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து செல்வமணி மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி செல்வமணி உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பு.முட்லூர் உதவி செயற்பொறியாளர் குமார், புவனகிரி கிளை அலுவலக உதவி பொறியாளர் சாமிதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் செல்வமணியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior