உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் : 

             சிதம்பரம் நகர மேம்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. 

             சிதம்பரம் நகரத்தை மேம்படுத்தி, பராமரிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன்,  திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன், டி.எஸ்.பி., மூவேந்தன், மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி, நகராட்சி சேர்மன் பவுஜியாபேகம்,   ஊராட்சித்தலைவர்கள் வேணுகோபால், தனலட்சுமி ரவி, ராஜேந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  

                   கூட்டத்தில்  ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி அமைப்பது குறித்தும், நடராஜர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதி சாலைகளை சரி செய்வது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது,  பொதுக் கழிப்பிடத்தை தூய்மையாக வைத்திருப்பது, நகரில் தெரு  விளக்கை பாதுகாப்பது, பழுதடைந்துள்ள சாலையை சரிசெய்வது, பொது சுகாதாரம் மற்றும் பஸ் நிலையம் பராமரிப்பது குறித்து ஆலோசிக் கப்பட்டது.  கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, விவசாயத் துறைகள்  மற்றும் பிரத்துறை அதிகாரிகள், அரிமா, ரோட்டரி சங்க நிர் வாகிகள்  பங்கேற்றனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 5,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


குறிஞ்சிப்பாடி : 

            குறிஞ்சிப்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,000 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி கீழ் வீதியில் உள்ள 10ம் எண்  வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து வந்த மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜ், பறக்கும் படை தாசில்தார் கண்ணன், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் அரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் அயன்குறிஞ்சிப்பாடி முழுவதும் ஆய்வு செய்தனர்.  கீழ் வீதியில் பாவாடை மகன் வடிவேல் என்பவர் வீட்டின் அறையில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினர். அதில் 5,000 கிலோ அரிசி இருப்பதாகவும் இவற்றின் வெளி மார்க்கெட் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் இருக்கும் என தெரிவித்தனர். அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் "பைக்கா' விளையாட்டுப் போட்டி


கடலூர் : 

                 கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி இன்று (6ம் தேதி) துவங்குகிறது. 

இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவிலான  "பைக்கா' விளையாட்டுப் போட்டிகள் இன்று 6ம் தேதி துவங்குகிறது. 6, 7 தேதிகளில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியிலும், 9, 10 தேதிகளில் இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 

                11 மற்றும் 12ம் தேதிகளில் காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 13, 14 தேதிகளில் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 16, 17 தேதிகளில் தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வடக்குப்பாளையம் தூய இருதய மேல் நிலைப் பள்ளியிலும், 18, 19 தேதிகளில் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 19, 20 தேதிகளில் எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 20, 21 தேதிகளில் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 21, 22 தேதிகளில் புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடக்கிறது. 

                    இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், போட்டி நடக்கும் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அல்லது ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior