உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 29, 2010

மனசாட்சி இல்லாத நகராட்சி; குமுறும் கடலூர்வாசிகள்

கடலூர்:
 
                பாதாள சாக்கடைத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களால், கடலூர் மக்கள் வெறுப்படைந்து சங்கடங்களின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
 
              கடலூரில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் மட்டும், சுமார் 70 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சிதைக்கப்படும் சாலைகளை சீரமைக்க 20 கோடிக்கு மேல் செலவாகிறது. எனவே கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டச் செலவு 100 கோடியை நெருங்கி விட்டது. சாலைகளைச் சீரமைக்க பணம் இல்லை என்று கை விரிக்கிறது நகராட்சி நிர்வாகம். அரசு 15 கோடி தந்தால் சமாளித்து விடுவோம் என்று தெரிவிக்கிறது. பாழ்பட்டுக் கிடக்கும் சாலைகள், அதனால் சிரமப்படும் மக்களைப்பற்றி அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
 
              சாலைகள் மிக மோசமாக இருக்கிறது என்று மக்கள் புகார் செய்தால், நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஓடோடி வந்து பார்வையிடுவதில் எப்போதும் குறை வைப்பது இல்லை. ஆனால் அவரது உத்தரவுகளை நகராட்சி அலுவலர்களும் ஊழியர்களும் முறையாகச் செயல்படுத்துவது இல்லை. நகராட்சித் தலைவரின் உத்தரவு ஒன்றும், அலுவலர்கள்,  ஊழியர்களின் செயல்பாடு மற்றொன்றுமாக இருப்பதாகக் கடலூர் மக்கள் வருத்தப்படுகிறார்கள்.
 
                 பாதாளச் சாக்கடைக்காக அமைக்கப்பட்ட ஆள் இறங்கு குழிகளில், மூடிகள் உடைந்து நொறுங்கியும், மூடிகளே இல்லாமலும், இருக்கும் முடிகள் சரியாக மூடப்படாமல் கிடப்பதும் இங்கே சர்வ சாதாரணமான காட்சிகள். ஆட்சியர் முதல் சாதாரண அரசு ஊழியர்கள் வரை, அமைச்சர் முதல் நகராட்சி கவுன்சிலர்கள் வரை, திட்டத்தை நிறைவேற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்கள் அனைவரும், கடலூர் நகர வீதிகளில்தான் செல்கிறார்கள். ஆனால் யாரும் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.   
 
                 தோண்டப்படும் பகுதியில் எந்த அறிவிப்புப் பலகைகளும் வைப்பதில்லை. நீதிபதிகள் குடியிருப்புச் சாலையில், பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழியில், திங்கள்கிழமை இரவு தனியார் நிறுவனப் பொறியாளர் மணி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார். பலத்த காயங்களுடன் அவர் இச்சம்பவத்தில் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இத்தகைய சம்பவங்களுக்கு கடலூரில் எப்போதும் குறைவில்லை.
 
                இத்தகைய சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற, சட்டம் இருந்தாலொழிய, அரசிடம் மாத ஊதியம் பெறுவோருக்கு மனச்சாட்சியும் பேசப் போவதில்லை, மனநிலையில் மாற்றமும் ஏற்படப் போவதுமில்லை என்கிறார்கள் விவரம் அறிந்த கடலூர் பொதுமக்கள். 
 
இதுகுறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 
 
                   பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் இடங்களில் பிரதிபலிப்பான்கள், தடுப்புக் கட்டைகள், அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்ற விதி, கடலூரில் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. புதுப்பாளையம் பிரதான சாலை போன்ற நெடுஞ்சாலைகளைத் தோண்டும் போது, மாற்றுச்சாலை ஒன்றை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
 
                    எனவே பொறியாளர் மணி விபத்துக்கு உள்ளானதற்கு, பாதாள சாக்கடைத் திட்ட காண்ட்ராக்டர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்தான் பொறுப்பு. அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும். மும்பையில் சாலை விபத்தில் ஒருவர் இறந்ததற்கு, மாநகராட்சி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. அதேபோல் கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் குற்றவியல் வழக்கு தொடர சட்டத்தில் இடம் இருக்கிறது என்றார் மருதவாணன்.

Read more »

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தொடர் முழக்க போராட்டம்

சிதம்பரம்:

               சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

                   மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்றார், பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், கடலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் இரா.சிலம்புச்செல்வி, நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள், பால்ஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வ.அன்பழகன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகட்டும் திட்டத்துக்கு 19 கோடி செங்கல் வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, 19 கோடி செங்கற்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

                கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்கான வீடுகளுக்கு செங்கல் வழங்குவது குறித்து, செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசியது: 

               கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் நடப்பு ஆண்டில் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் 19 கோடி செங்கற்கள் தேவை. இவற்றைத் தங்கு தடையின்றி வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் செங்கல் உற்பத்தியாளர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

           அவ்வாறு உற்பத்தி செய்யும் செங்கற்களில் ஓயயப என்று முத்திரை பதிக்க வேண்டும். நிலக்கரி சாம்பல் மூலம் சிமெண்ட் கற்கள் தயாரிப்பதற்கு, காதி கிராம தொழில் வாரியத்தில், மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 95 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செங்கல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு, குழுக்களுக்கு தலா 4 லட்சம் வீதம் 3.60 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 

                வீடுகள் கட்டும் பணியில் கம்பி கட்டும் தொழிலை மேற்கொள்ள 80 சுயஉதவிக் குழுக்களுக்கு, தலா 4 லட்சம் வீதம் 3.20 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்குத் தேவையான செங்கல் வழங்கப்படும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior