உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு

               பச்சை மையை யார், எப்போது, எந்தத் தருணத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கண்ட இடங்களில் தொட்டதற்கு எல்லாம் பச்சை மையை உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. 

                  தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த காலங்களில் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர். அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள், பதிவு பெறாத அதிகாரிகள் என இரண்டாக பிரிக்கப்பட்டனர்.  இந்தப் பிரிவு அகற்றப்பட்டு, "ஏ, பி, சி மற்றும் டி' பிரிவு ஊழியர்கள் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், உதவி இயக்குநர் நிலையில் இருந்து பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளும் பச்சை மையை பயன்படுத்துகின்றனர்.  

                   முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூட ஊதா மற்றும் கருப்பு நிற மையை உபயோகப்படுத்தும் போது, அதிகாரிகள் பச்சை மையை பயன்படுத்துவது பல்வேறு எதிர்ப்புகளை கிளப்பியது.  இந்த நிலையில், பச்சை நிற மையின் பயன்பாடு குறித்து அரசிடம் கோரப்பட்ட தெளிவுரைகளுக்கு விளக்கம் அளித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை புதிய உத்தரவினை வெளியிட்டுள்ளது.  அரசு அலுவலகங்களில் நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ணத்திலான மைகளை மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத பயன்படுத்த வேண்டும். இவைகளைத் தவிர பிற வண்ண மைகளை பயன்படுத்தக் கூடாது. 

 யார் பச்சை மை பயன்படுத்தலாம்?: 

                   வரைவு உத்தரவுகள், அறிவிக்கைகள், விதிகள் போன்றவற்றில் திருத்தம் செய்யும் போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அதிகாரிகள் பச்சை நிற மையை பயன்படுத்தலாம். சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சிவப்பு நிற மையை உபயோகப்படுத்தலாம்.  அரசு அலுவலகங்களில் மைப் பேனா, பால்பாயிண்ட் பேனா, ஜெல் பேனா ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம். சான்றொப்பம் இடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் பச்சை நிற மையினை பயன்படுத்த வேண்டும்.  பிரிவு "அ' அலுவலர்கள் மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்புகள் எழுத பச்சை நிற மையை பயன்படுத்தலாம்.  

                           இந்த உத்தரவு, அனைத்துத் துறைகளின் செயலாளர்கள், அனைத்துத் தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

Read more »

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தினால் நடவடிக்கை! : தீயணைப்பு துறை அதிகாரி எச்சரிக்கை

கடலூர் :  

                பட்டாசு விற்பனை கடைகளில் பாதுகாப்பு கருதி  25 கிலோவிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி எச்சரித்துள்ளார். 
இதுகுறித்து கடலூர் கோட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமாரசாமி கூறியது: 

                     கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 45 இடங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் சாலையோரங்களில் பட்டாசுகளை விற் பனை செய்யக் கூடாது.பட்டாசு கடைகளில் கண்டிப்பாக 25 கிலோவிற்கு மேல் வெடி பொருள்களை வைத்திருக் கூடாது. 180 டெசிபல்ஸ் மேல் உள்ள பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.கடைகளில் மணல், தண்ணீர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடைகளில் மின் பல்புகளுக்கு சுவிட்சை  வெளியில் வைத்திருக்க வேண் டும். அதிக வெப்பத்தை வெளியிடும் பல்புகளை பயன்படுத்தக் கூடாது. தற்காலிக கூரை தேவையற்றது.

                          பட்டாசு பெட்டிகள் மற்றும் "கிப்ட் பாக்ஸ்'களை  பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். இவற்றை திருமண மண்டபம், வணிக வளாகம்  போன்றவற்றில் வைத்திருக்கக் கூடாது. தரைத் தளத்திற்கு கீழே நிலவறைகள் மற்றும் கட்டடத்தின் மேலும் வைத்திருக்கூடாது. ஜவுளிக்கடைகளில் தீபாவளி நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் சென்று வர விசாலமான வழிகளை ஏற்படுத்த வேண்டும். 

                    கடையை பூட்டும் போது மின் இணைப் புகளை முழுவதுமாக துண்டிக்க வேண்டும். தீபாவளியையொட்டி மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலூரில் தீயணைப்பு நிலையம், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு, ஆல் பேட்டை பகுதியில் தலா ஒரு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

                    மேலும் ஒவ் வொரு நகராட்சி பகுதிகளிலும் தீயணைப்பு வண்டிகள் உடன் நகராட்சி தண்ணீர் வண்டியும் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் போது கைத்தறி துணி அணிந்திருக்க வேண்டும். சிறுவர்களை தனியாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது. குடிசை பகுதிகளில் வாண வெடிகளை பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது.  பட்டாசு வெடிக் கும் போது காயம் ஏற்பட்டால் உடன் குளிர்ந்த நீரை ஊற்றி உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

                     விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடுவது மற்றும் தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப் புதுறை சார்பில் பள்ளி, கல்லூரி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு செயல் விளக்கம்  அளிக் கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பகுதியில் பள்ளி மாணவர்களைக் கொண்டு ஊர்வலம் நடத்தி துண்டு பிரசுரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு  கோட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமாரசாமி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வீதிகள் திறந்த வெளி "பார்'களாக மாறி வரும் விபரீதம் : போலீசாரின் நடவடிக்கை அவசியம் தேவை

கடலூர் : 

                   குடி பிரியர்கள் வீதிகள், குடியிருப்பு பகுதிகளையும் திறந்த வெளி "பார்'களாக பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் மவுனம் காத்து வருவதால் தேவையற்ற பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

                     தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கவும், அரசுக்கு வருமானத்தை பெருக்கிட கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அரசு சார்பில் "டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டன. குடிபிரியர்களின் வசதிக்காக கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு "டாஸ்மாக்' கடைகளின் அருகிலேயே "பார்' துவங்கப்பட்டது. இதனால் குடிபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கிக் கொண்டு அருகில் உள்ள "பார்'களில் அமர்ந்து குடித்து விட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

                     இந்நிலையில் அரசு "டாஸ்மாக்' கடைகளில் "பார்' நடத்துவதற்காக டெண்டர் தொகையை அந்த கடையின் ஆண்டு விற்பனையில் 2.5 சதவீதமாக உயர்த்தியதால் டாஸ் மாக் கடைகளில் "பார்' நடத்த எவரும் முன்வரவில்லை. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 231 "டாஸ்மாக்' கடைகளில் 54 கடைகளில் மட்டுமே "பார்' இயங்கி வருகிறது. 177 கடைகளில் "பார்' இல்லாததால், குடிபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் தங்களுக்கு வேண்டிய சரக்குகளை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகளில் நொறுக்குத் தீனி, வாங்கிக் கொண்டு பஸ் நிறுத்தம், பள்ளிகள், சத்துணவு கூடங்கள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் நகர விரிவாக்க பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து "ஹாயாக' குடிக்கின்றனர்.

                     இவ்வாறு குடிப்பிரியர்கள் கும்பலாக அமர்ந்து குடிக்கும் போது அருகில் வீடுகள் இருப்பதை பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசிக் கொள்வதால் வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் வீதிகளில் குடிக்கும் குடிப்பிரியர்கள் போதை ஏறி தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. குடிப்பிரியர்கள் அடிக் கும் கொட்டத்தை பொறுக்க முடியாமல், அருகில் உள்ளவர்கள் தட்டிக் கேட்டால், அரசு ஒயின் ஷாப் திறந்துள்ளது, நாங்கள் எங்கு சென்று குடிப்பது என நக்கல் கேள்வி கேட்டு தகராறு செய்கின்றனர். இதற்கு பயந்தே எவரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லை.

                         இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் குடிபிரியர்கள் சமீப காலமாக விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற் றும் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களிலேயே குடித்துவிட்டு கும் மாளம் அடிக்கின்றனர். இவ்வாறு பொது இடங் களில் குடித்து விட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குடிபிரியர் களை போலீசார் கண் டிக்கா விட்டால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனை உணர்ந் தாவது பொது இடங்களில் குடிப்போர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் ஒத்துழைப்பில்லை :

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி கூறியது

                      "டாஸ்மாக் கடைகளில் "பார்' நடத்த கடையின் ஆண்டு விற்பனைத் தொகையில் 12ல் ஒரு பங்கை ஏலத் தொகையாக நிர்ணயிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு கடைகளிலும் விற்பனை உயர்ந்துள்ளது. இதனால் "பார்' நடத்த குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். மேலும், இரண்டு மாத தொகையை வைப்புத் தொகையாக கட்ட வேண்டும். ஏலத் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் "பார்' நடத்த எவரும் முன் வருவதில்லை.

                          இதன் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குபவர்கள் பொது இடங்களில் குடிக்கின்றனர். இவ்வாறு பொது இடங்களில் குடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், போலீசுக்கு பயந்து "பார்' களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும். இதுகுறித்து எங்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள் ளோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior