உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

கடலூர் மாவட்டத்தில் கன மழை பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு : அடித்துச் செல்லப்படும் மணல் குன்றுகள்

பரவனாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், கடலூரை அடுத்த திருச்சோபுரம் பகுதியில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் புகழ்பெற்ற மணல் குன்றுகள்.
கடலூர்:

             பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூர் அருகே புகழ் வாய்ந்த மணல் குன்றுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன.

               வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. வியாழக்கிழமை பகல் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. கன மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி, உபரிநீர் பெருமளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. திட்டக்குடி வெலிங்டன் ஏரி நீர்மட்டம் வியாழக்கிழமை 21.5 அடியாக இருந்தது. மொத்த உயரம் 29.7 அடி. ஏரிக்கு 1060 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

                      கொள்ளிடம் கீழணை மொத்த உயரம் 9 அடி. வியாழக்கிழமை அணை நிரம்பி விட்டது. அணைக்கு 19,929 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்த, 23,270 கனஅடி நீர், கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு கடலுக்குச் செல்கிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 5,291 கனஅடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, கடலுக்குச் சென்று கொண்டு இருக்கிறது. வாலாஜா ஏரியில் இருந்து, 1,520 கனஅடி நீரும், பெருமாள் ஏரியில் இருந்து 2,215 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

               இந்த உபரி நீர் முழுவதும் பரவானாற்றில் திறந்து விடப்பட்டு, கடலுக்குச் சென்று கொண்டு இருக்கிறது. பரவனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூரை அடுத்த திருச்சோபுரம் பகுதியில் உள்ள, மணல் குன்றுகள் பெருமளவு அடித்துச் செல்லப்படுகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தால் உருவான இந்த மணல் குன்றுகளில் சில, 100 அடி உயரம் கொண்டவை. பல திரைப் படங்கள் இங்கு எடுக்கப்பட்டு உள்ளன.

                    இயற்கை எழில் கொஞ்சும் இந்த மணல் குன்றுகள், முந்திரிக் காடுகள் அழிக்கப்பட்டதாலும், பரவனாறு வெள்ளப் பெருக்காலும் தொடர்ந்து அழிவைச் சந்தித்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், மணல் குன்றுகள் பெரிதும் சேதம் அடைந்து வருகின்றன. கன மழை காரணமாகவும் பரவனாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்காலும் தீர்த்தனகரி, தாணூர் உள்ளிட்ட பெருமாள் ஏரி பசனப் பகுதிகளில், 100 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நொச்சிக்காடு, நடுத்திட்டு பகுதிகளில் 300 ஏக்கரில் வெட்டி வேர் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் 100 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

Read more »

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


கொள்ளிடம் ஆற்றில் இருகரையும் தொட்டு செல்லும் நீர்.
 
சிதம்பரம்:

                கல்லணையிலிருந்து கீழணைக்கு அதிகநீர் வருவதால் கீழணையிலிருந்து வியாழக்கிழமை 24 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு அனுப்பப்படுகிறது.

              இதனால் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருகரையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. மேலும் கல்லணையிலிருந்து வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு 34 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நீர் வெள்ளிக்கிழமை கீழணையை வந்து சேரும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

              கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் 45.5 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டு கூடுதலாக வரும் நீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக விவசாயிகளுக்கு பாதிப்பின்றி சிறிது சிறிதாக திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.சிதம்பரம் பகுதியில் பலத்த மழைசிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை முதல் கருத்த மேகமூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்தது. 

             இதனால் குண்டும், குழியுமாக உள்ள சிதம்பரம் நகர சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு நகர்களில் நீர் வடிய வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

மழையளவு விவரம்: 

 சிதம்பரம்-10 மி.மீ, 
புவனகிரி-15 மி.மீ, 
சேத்தியாத்தோப்பு- 11.5 மி.மீ, 
பரங்கிப்பேட்டை- 16 மி.மீ, 
அண்ணாமலைநகர்- 3.6 மி.மீ. 

சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை விடப்பப்பட்டது.

Read more »

தமிழகத்தில் 2011 பிப்ரவரி 9-ல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

              தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 9-ல் தொடங்கி 28 வரை நடைபெறுகிறது.
 
               இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம். 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2011-ல் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.இதற்கான தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9-ம் தேதி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குகிறது.
 
என்னென்ன விவரங்கள்: 
 
                முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் குறித்த விவரங்களை சேகரிக்கவும், தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்காகவும் கடந்த ஜூன் 1 தொடங்கி ஜூலை 15 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் வீடுகள், அதில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்கிற விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பே முழுமையான கணக்கெடுப்பு என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியது:
 
                  இந்தக் கணக்கெடுப்பில் தனிநபர்களின் விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்படும். அதாவது, குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? படிப்பு, தொழில், வருமானம், திருமணம் ஆனவர்கள் எத்தனை பேர்? குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கேட்கப்படும். தமிழகம் முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.
 
யார் கணக்கெடுப்பை மேற்கொள்வர்? 
 
              மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக 3 நாள்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அவர்கள் பணி செய்ததாகவே கருதப்படும் என்று பொதுத் துறை செயலாளர் கருத்தையா பாண்டியன் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை அல்லது பிற்பகல் வேளை என ஏதாவது ஒரு வேளை மட்டுமே கணக்கெடுப்புப் பணிக்கு அனுமதிக்கப்படும். மீதியுள்ள அரை நாள் பணிக்குச் செல்ல வேண்டும். கணக்கெடுப்பு முடிந்ததும் விடுபட்ட இடங்கள் குறித்த பணிகள் மார்ச் 1-ம் தேதி 5-ம் தேதி வரை நடத்தப்படும். 
 
                இந்த ஆறு நாட்களிலும் கணக்கெடுப்புப் பணி முழு நாளாக மேற்கொள்ளப்படும் என பொதுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்
 
கணக்கெடுப்பு அதிகாரிகள் யார்? 
 
                மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளின் ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், இதர மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதன்மை அதிகாரிகளாகவும், மாவட்ட கூடுதல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை 
 
                பிப்ரவரியில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பில் ஜாதி குறித்த விவரங்கள் கேட்கப்பட மாட்டாது என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூனில் நடைபெற்ற கணக்கெடுப்பில் வீட்டுப் பட்டியல் அதாவது வீட்டில் உள்ள விவரங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள தனிநபர்களின் அனைத்து விவரங்களும் எடுக்கப்பட உள்ளன. 
 
                  ஆனால், அதில் ஜாதி குறித்த தகவல் கேட்கப்பட மாட்டாது.தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து கேட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior