உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 20, 2011

சிதம்பரம் அருகே 1100 ஏக்கரில் 3600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின் நிலையம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை அருகே 1100 ஏக்கரில் ஐஎல் எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி 3,600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின்நிலையத்தை தொடங்கவுள்ளது.  தற்போது நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் மின்நிலையம் இயங்கும் என தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.  

இதுகுறித்து சிதம்பரத்தில் புதன்கிழமை தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தது:  

              இந்த மின்நிலையம் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தோனேசியாவிருந்து நிலக்கரி கொண்டு வரப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக 1,200 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்.  

            மேலும் தமிழ்நாடு பவர் கம்பெனி, ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து புதுச்சத்திரத்தில் கிராமப்புற மகளிர் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது. இதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் இயந்திரங்களும், உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.  கொத்தட்டை மற்றும் வில்லியநல்லூருக்கு உட்பட்ட கிராமங்களான பஞ்சங்குப்பம், கரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் இயங்கும் சுமார் 20 மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் மகளிர் சுமார் 60 பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு தொழிற்பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.  

           தொழிற்பயிற்சி முடிந்தவுடன் அதில் தேர்வு பெறும் மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க ஏதுவாக மேலும் 70 தையல் இயந்திரங்களை நிறுவவும் ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி திட்டமிட்டுள்ளது.  கொத்தட்டை, அரியகோஷ்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கரிக்குப்பம், வி.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, இந்திராநகர், சின்னூர் பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வெல்டிங், பிட்டர் போன்ற தொழிற்கல்வி வழங்க எங்களது நிறுவனம் மங்களம் ஐடிஐ, முருகேசன் ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களில் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்களின் முழுகல்வி கட்டணத்தையும் வழங்கி படிக்க வைக்கவுள்ளோம்.  

             இதன் மூலம் 2011-ம் ஆண்டில் மட்டும் 75 மாணவர்களை வேலைத் தகுதி பெற முடியும் என எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார். ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் என்.ரமேஷ் உடனிருந்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் மது விற்பனை ரூ. 8.50 கோடி

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் 3 நாள்களில் ரூ. 8.5 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகி இருக்கிறது.  

            தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பொங்கல் கொண்டாட்டங்களில் மக்களின் ஈர்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.  மேலும் பொங்கல் புத்தாண்டை முன்னிட்டு, தொடர்ந்து 4 முதல் 5 நாள்கள் வரை விடுமுறை நாளாகும் நிலை ஆண்டுதோறும் இருப்பது, மக்களின் மகழ்ச்சிக் கொண்டாட்டங்களை மேலும் தீவிரப்படுத்தி விடுகிறது.  

           அந்த வகையில் இவ்வாண்டும் பொங்கல் பண்டிகை, களைகட்டி இருந்தது. 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் தாண்டவம் ஆடிய மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.  இதன் விளைவு இளைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரையும் மதுபானக் கடைகள் சுண்டி இழுத்துக் கொண்டன.  திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்பட்ட 16-ம் தேதி, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. எனவே 14, 15, 17 ஆகிய 3 நாள்களில் கடலூர் மாவட்ட மதுக்கடைகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது.  3 நாள்களிலும் மொத்தம் ரூ. 8,55,32,825-க்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 

14-ம் தேதி ரூ. 1,72,35,750-க்கும் 
15-ம் தேதி ரூ. 3,39,82,320-க்கும் 
17-ம் தேதி 3,43,14,755 க்கும் 

          மது விறப்பனை ஆகி இருக்கிறது.  

               இதுதவிர கடலூர் மாவட்ட மற்றும் புதுவை மாநில எல்லையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர், மது விலை குறைவு காரணமாக புதுவை மாநிலம் சென்று மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.  எனவே மேற்கண்ட 3 நாள்களில் தமிழக மக்களின் வருவாயில் கணிசமான ஒரு பகுதி, புதுவை மாநிலத்துக்கும் சென்று இருப்பதை மறுக்க முடியாது.    

கோரிக்கை அட்டை அணிந்த டாஸ்மாக் பணியாளர்கள்  

              இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், தங்கள் கோரிக்கைளை வலயுறுத்தி செவ்வாய்க்கிழமை, கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நடத்தினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு விருது போட்டி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

            கைவிணை கலைஞர்களுக்கு தேசிய விருதுக்கான போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு: 

           டில்லி மத்திய அரசின் கைவினை பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த கைவினை கலைஞர்களுக்கு போட்டி நடத்தி அதன் மூலம் தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சான்றிதழ், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் அங்கவஸ்திரம் ஆகியவற்றை ஜனாதிபதி நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

 இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள கலைஞர்கள் உரிய விண்ணப்பத்துடன் 

உதவி இயக்குனர் 
(கைவினைப் பொருட்கள்) கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையம், 
எண்.14, பொன்நகர் மெயின்ரோடு, 
ரெட்டியார்பாளையம், 
புதுச்சேரி-605010 (போன் 0413-2206615) 

            அல்லது கடலூர் மாவட்ட தொழில் மையத்தில் வரும் மார்ச் 25ம் தேதிக்குள் நேரடியாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior