உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 08, 2011

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி அலசல்

தொகுதி பெயர் : 
 
சிதம்பரம்

தொகுதி எண் :

158

அறிமுகம் : 

          கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது.

எல்லை : 

           தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நகராட்சி: 

சிதம்பரம் நகராட்சி - 33 வார்டுகள்

பேரூராட்சிகள்: 

 கிள்ளை பேரூராட்சி -15 வார்டுகள் 
பரங்கிப்பேட்டை பேரூராட்சி - 18 வார்டுகள்
அண்ணாமலைநகர் பேரூராட்சி - 15 வார்டுகள்

கிராம ஊராட்சிகள்: 69 

மேல்புவனகிரி ஒன்றியம் (7) : 

      சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், லால்புரம்.

குமராட்சி ஒன்றியம்(21): 

             அகரநல்லூர், சிதம்பரம் நான்-முனிசிபல், இளநாங்கூர், ஜெயங்கொண்டப்பட்டினம், கடவாச்சேரி, காட்டுக்கூடலூர், கீழகுண்டலப்பாடி, கூத்தன்கோயில், நாஞ்சலூர், பெராம்பட்டு, பூலாமேடு, சாலியந்தோப்பு, சிவபுரி, சிவாயம், சி.தண்டேஸ்வரநல்லூர், தவர்த்தாம்பட்டு, உசூப்பூர், வையூர், சி.வாக்காரமாரி, வல்லம்படுகை, வரகூர்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் (41) : 

         மணிக்கொல்லை, பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, கொத்தட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, கீழமணக்குடி, பு.அருண்மொழிதேவன், குரியாமங்கலம், ஆயிபுரம், பு.ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, பு.முட்லூர், நஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி, பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, மீதிகுடி, நக்கரவந்தன்குடி, உத்தமசோழமங்கலம், குமாரமங்கலம், கணக்கரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கவரப்பட்டு, வசப்புத்தூர், பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, பு.மடுவங்கரை.

வாக்காளர்கள் : 

ஆண் -   94,192 
பெண்  -    92,427  
மொத்தம்   -   1,86,619 

வாக்குச்சாவடிகள் :

மொத்தம்  215  

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்: 

கோட்டாட்சியர் எம்.இந்துமதி   : 94450 00425.

Read more »

மறுசீரமைப்பில் காணாமல் போன நெல்லிக்குப்பம் தொகுதியின் வரலாறு

கடலூர் : 

     சுதந்திரத்திற்கு பிறகு நடந்த 13 சட்டசபை பொதுத் தேர்தல்களில் 12 முறை இடம் பெற்றிருந்த நெல்லிக்குப்பம் தொகுதி தற்போது மறுசீரமைப்பில் காணாமல் போயுள்ளது.

            நாடு சுதந்திரம் அடைந்த பின் 1951ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி மற்றும் சிதம்பரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மட்டுமே இருந்தன. பின்னர் 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பமாக பெயர் மாறியது. அதன்பின் 1967ம் ஆண்டு தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியின் ஒருபகுதியை பிரித்து மீண்டும் பண்ருட்டி தொகுதி உருவானது. 

               தற்போதைய மறுசீரமைப்பில் காணாமல் போன நெல்லிக்குப்பம் தொகுதியின் முதல் தேர்தலில் காங்., கட்சி வெற்றி பெற்றது. பின்னர் நடந்த 62ல் தி.மு.க., 67ல் மா.கம்யூ., 71ல் தி.மு.க., 77ல் மா.கம்யூ., 80ல் தி.மு.க., 84ல் அ.தி.மு.க., 89ல் மா.கம்யூ., 91ல் அ.தி.மு.க., 96ல் தி.மு.க., 2001ல் அ.தி.மு.க., 2006ல் தி.மு.க., வெற்றி பெற்றன. மேலும் 1996ல் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., மணி இறந்ததால் 2000ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சண்முகம் வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியை நீக்கி, பண்ருட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Read more »

தொகுதி ஒதுக்குவதில் சிக்கலை தரும் "கடலூர் மாவட்டம்'

கடலூர் : 

             கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

             கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க., மூன்று தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க., ஒரு தொகுதியிலும், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி தலா இரண்டு தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.கடந்தமுறை தி.மு.க., அணியில் இருந்த கம்யூ., கட்சிகள் அ.தி.மு.க.,வுடனும், அங்கிருந்த வி.சி., தி.மு.க., அணிக்கு மாறியுள்ளன. 

             மேலும், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., அ.தி.மு.க., அணியில் சேர்ந்துள்ளது.மாவட்டத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., சமபலத்தில் உள்ள நிலையில், கணிசமான ஓட்டு வங்கியை வைத்துள்ள பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியும் இணைந்துள்ளதால் தி.மு.க.,விற்கும், தே.மு.தி.க., வரவால் அ.தி.மு.க.,விற்கும் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.மாவட்டத்தில் இரு அணியும் சமபலத்தில் உள்ளதால் கட்சி தலைமையிடம் தொகுதியை பெற்று விட்டால், கூட்டணி பலத்தில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என ஒவ்வொரு கட்சியினரும் கருதுகின்றனர். 

             இதனால் இரு அணிகளிலும் தொகுதியைப் பெற கடும் போட்டி நிலவுகிறது.தி.மு.க., அணியில் இடம் பெற்றுள்ள வி.சி., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய திட்டக்குடி (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு பொது தொகுதியை கூட்டணி தலைமையில் பெற்றிட முயன்று வருகிறது.அதேகூட்டணியில் உள்ள பா.ம.க.,வோ தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள புவனகிரி, நெய்வேலி மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்கு குறி வைக்கிறது. 

              கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளோடு கூடுதலாக விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகிறது.அதேப்போன்று அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி நிர்வாகிகள் முயன்று வருகின்றனர்.

             இந்நிலையில் அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்காக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பெற்றிட முயற்சித்து வருகிறது.மற்றொரு கட்சியான ம.தி.மு.க., கடலூர், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகள் மீதும், மா.கம்யூ., கட்சியோ கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சிதம்பரம் அல்லது தங்களுக்கு செல்வாக்கு உள்ள மறுசீரமைப்பில் நீக்கப்பட்டுள்ள நெல்லிக்குப்பம் தொகுதியை உள்ளடக்கிய பண்ருட்டி தொகுதி மீது கண் வைத்துள்ளது.

            இப்படி இரு அணியிலும் இடம் பெற்றுள்ள கட்சி நிர்வாகிகள், தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெற்றிட போட்டா போட்டி போட்டு வருவதால், யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்கீடு செய்வது எனப் புரியாமல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் தலைவலிக்கு ஆளாகி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior