உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 10, 2011

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 23ம் தேதி முதல் 43 மையங்களில் நடக்கின்றன

                 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை, வரும் 23ம் தேதி துவக்கி, ஏப்ரல் 11ம் தேதிக்குள் முடிப்பதற்கு, தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்கள், வரும் 17ம் தேதி பொறுப்பேற்கின்றனர். 

               கடந்த 2ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள், இத்தேர்வை எழுதி வருகின்றனர். இதுவரை, மொழிப்பாட தேர்வுகள் முடிந்துள்ளன. அறிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள், வரும் 11ம் தேதி முதல் நடக்கிறது. தொடர்ந்து, 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. இதற்கிடையே, விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிப்பது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

                 தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்களான முதன்மைக் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். "எந்தவித குளறுபடிகளும் இன்றி, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்' என, இயக்குனர் கூறியதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், வரும் 23ம் தேதி முதல், 43 மையங்களில் நடக்கின்றன. 

                 முன்னதாக, விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்கள், வரும் 17ம் தேதி பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர். சட்டசபை தேர்தல், ஏப்ரல் 13ம் தேதி நடக்கிறது. இதற்கு முன்னதாக 11ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க வேண்டுமென, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 14ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டும், மே இரண்டாவது வாரத்திற்குள் முடிவுகளை வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

கடலூர்:

                 கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  

            கல்லூரி நிர்வாகம் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் ஜூனியர் சேம்பர் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. விழாவுககு கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் தலைமை வகித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணா சிங்காரவேலு சிறப்புரை நிகழ்த்தினார்.  

               பெண்களுக்கான சட்டங்கள், நுகர்வோர் உரிமைகள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், நுகர்வோர் ஆலோசகரும் பி.எஸ்.என்.எல். கோட்டப் பொறியாளருமான பால்கி, நுகர்வோர் சட்டப் பிரிவு பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் ஆகியோர் பேசினர். ஜூனியர் சேம்பர் பெண்கள் பிரிவு சார்பில் மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. போராசிரியை கோமதி நன்றி கூறினார். 


Read more »

கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு புதிய நிபந்தனைகள்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

              இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப் படி சட்டமன்ற தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்டத்தில் இணைந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் நேரடியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழுக்கள் எதுவாக இருந்தாலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்திய தேர்தல் ஆணை யத்தின் நடத்தை விதிகளுக்கு முரணாக செயல்படக் கூடாது.

                  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வேட்பாளர்களிடமிருந்து கையூட்டு பெறுவது, இலவச பொருட்கள் பெறுவது, விருந்து உபசார நிகழ்ச்சிகள் ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது. புதிய திட்டங்களோ, கடன் உதவிகளோ மகளிர் திட்டக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு அனுமதிக்கப்படக்கூடாது.

              மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு எந்த ஒரு அரசியல் கட்சியோ அலலது வேட்பாளரோ நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. சட்டமன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கட்டிடங்கள், கூட்டமைப்புகளின் கட்டிடங்கள் மற்றும் இதர அரசு கட்டிடங்களை எந்தஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பயன்படுத்தக்கூடாது. எந்த சமுதாயம் தொடர்பான பயிற்சிகளும் அரசு கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி அலுவலக கட்டிடங்களில் நடத்தக் கூடாது. மகளிர் சுய உதவிக் குழுக்களை வகைப்படுத்துதல் மற்றும் தர மதிப்பீடு செய்தல் ஆகியவைகள் தேர்தல் முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

                   மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மற்றும் கூட்டமைப்புகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான பயிற்சிகள் மற்றும் பட்டறிவு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 192 துப்பாக்கிகள் மட்டுமே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                 எனவே தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் 9-3-2011 மாலைக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்க தவறும் நபர்களின் துப்பாக்கிகள் 10-ந்தேதி பறிமுதல் செய்யப்படும்.  இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறியுள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior