உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 18, 2011

பிளஸ் 2 கணித பாட கேள்வித் தாளில் குளறுபடி


ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள்.

              ப்ளஸ் 2 கணித பாட கேள்வித் தாளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

                  ப்ளஸ் 2 கணிதத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கணித பாட கேள்வித் தாளில் உள்ள சில கேள்விகளில் குளறுபடிகள் ஏற்பட்டதால் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளதாக மாணவ மாணவியர்கள் புகார் தெரிவித்தனர்.  ராசிபுரம் அருகே கீரனூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்களை பெற்ற மாணவ மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

              இதில் பி டைப் கணித பாட கேள்வித் தாளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவ மாணவிகள் குழம்பி போய் பதில் அளிக்க தடுமாறினர். ஒரு மார்க் 11-வது கேள்வியில் டிவைடர் குறி மறைந்துள்ளது.  அதேபோல் 16-வது கேள்வியில் மைனஸ் குறி பிரிண்ட் ஆகவில்லை. 27-வது கேள்வியில் பை இல்லை. 28வது கேள்வியில் பேக்டோரியல் எண் இல்லை.  6 மார்க் கேள்வியில் 41-வது கேள்வியில் மைனஸ் இல்லை. 42-வது கேள்வியில் சமன் குறி இல்லை. 51-வது கேள்வியில் 16 என்ற எண் இல்லை. 55-வது கேள்வியில் மைனஸ் குறி இல்லை. 10 மார்க் கேள்வியில் 57-வது கேள்வியில் சமன் குறி இல்லை. 

                அதேபோல் 64 மற்றும் 70-வது கேள்விகள் சரியாக பிரிண்ட் ஆகவில்லை.  மொத்தம் 58 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் பல குறியீடுகள் மற்றும் எழுத்துகள் சரியாக பிரிண்ட் ஆக வில்லை என மாணவர்கள் குறிப்பிட்டனர்.  இதனால் மதிப்பெண்கள் பெறுவது பாதிக்கும் என்பதால் மாணவர்கள் தேர்வு எழுதியபின், மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். 

              பல மணி நேர மறியலால் போக்குவரத்து பாதித்தது. பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயராகவன் மற்றும் காவல்துறையினர் மாணவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். இந்த பிரச்சினையில் பள்ளிக் கல்வி துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.

Read more »

வங்கிப் பணிக்கு பொறியாளர்கள் தேவை அதிகரிப்பு


சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் நரேந்திரா
              
           வங்கித்துறை நவீனமாக்கப்பட்டு வருவதால்,வங்கிப் பணிக்குப் பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துள்ளது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா தெரிவித்தார். 
 
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கைத் துவக்கி வைத்து மேலும் ந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா பேசியது:
 
              வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் சாதனை நிகழ்த்தி வரும் இந்தியாவின் விலைமதிப்பில்லா சொத்து, மாணவ சமுதாயமும், அவர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களும்தான்.  மாணவர்களின் மனிதவள ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,நடப்பு ஆண்டில் கல்விக்கடனாக ரூ.1,800 கோடி வழங்கி உள்ளது.  பணப் பரிமாற்றம் நடைபெறும் வங்கித் தொழிலில் தற்போது தகவல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு இருப்பதால், பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துள்ளது. 
 
             விரைவில் வளாக பணித் தேர்வு முறை மூலம் 525 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.  வங்கித் துறையில் ஏராளமான ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில்,தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வகை பொறியியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.  எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் பி.சத்யநாராயணன் பேசும் போது,மாணவர்கள் படிப்புடன் ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 
 
              தற்போது பெங்களூரில் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஆராய்ச்சி நிறுவனத்தை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் ரூ50 கோடி செலவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் அதிநவீன ஆராய்ச்சி மையத்தை இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல், இதர மாணவர்களும் பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார்.  பல்கலைக்கழக இயக்குநர் முத்தமிழ் செல்வன், துறைத்தலைவர் எஸ்.மலர்விழி, பேராசிரியர்கள் ஆர்.ரமேஷ்,ஜெ.மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   .
 
 
 
 
 

Read more »

கடலூரில் தையல் தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரதம்






கடலூர் : 

                பிள்ளைக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி, தையல் தொழிலாளி குடும்பத்துடன் கடலூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். கடலூர் மாவட்டம், நெய்வேலி ஏழாவது வட்டத்தைச் சேர்ந்தவர் லெனின். தையல் தொழிலாளி. இவரது மனைவி ஜெயமணி. மகன்கள் தீ (14), இளந்தீ (12). நெய்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் தீக்கு, "கொட்டா' ஜாதிக்கான சான்றிதழ் கோரி கடந்த ஒன்றரை ஆண்டாக, கலெக்டரிடம் மனு கொடுத்து வருகிறார். 

             இருப்பினும் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, கடலூர் கலெக்டர் அலுவலகம் முன், லெனின், திடீரென தனது குடும்பத்தினருடன் நேற்று காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். போலீசார் அனுமதி மறுத்தும் லெனின் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து போலீசார், லெனினை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். இன்னும் ஒரு வாரத்தில் ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என உறுதியளித்தைத் தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior