உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 11, 2011

தூர்வாரப்படுமா கடலூர் கெடிலம் ஆறு




தூர்ந்து கிடக்கும் கடலூர் திருவந்திபுரம் அணை.

 
கடலூர்:
 
              காமராஜர் ஆட்சி காலத்தில் கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை, 40 ஆண்டுகளாக தூர்ந்து கிடக்கிறது. அணையைத் தூர்வாரி அங்கு மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். 
 
                கெடிலம் ஆறு கல்வராயன் மலைப் பகுதியில் கருடன் பாறை என்ற இடத்தில் உற்பத்தியாகி விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி, கடலூர் உப்பனாற்றில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது. கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம், திருவதிகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு உள்ளன. காமராஜர் ஆட்சி காலத்தில் இவைகள் கட்டப் பட்டவை. இந்த அணைகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் வரை பாசன நிலங்களைக் கொண்டது. 
 
                  திருவந்திபுரம், திருவதிகை அணைகள் கடந்த 40 ஆண்டுகளாகத் தூர்ந்து கிடக்கின்றன. கெடிலம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள நிலங்களில், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீóர் தாரளமாகக் கிடைப்பதால், இந்த அணைகளில் இருந்து கிடைக்கும் நீரை விவசாயிகள் எதிர்பார்ப்பது இல்லை. இதனால் தூர்ந்து கிடக்கும் அணைகள் பற்றி பொதுப் பணித்துறை கவலை கொள்வது இல்லை.  கடலூர், பண்ருட்டி தாலுகாக்களில் மலைப் பாங்கான புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில், நீர் வடி முகடுகள் அமைக்கும் திட்டத்தில், பல கோடி ரூபாய் கடந்த காலங்களில் செலவிடப்பட்டு இருக்கிறது. 
 
                மழை காலத்தில் வழிந்தோடி வீணாகும் நீரை, ஆங்காங்கே தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.  இதற்கெல்லாம் கோடிக் கணக்கில் செலவிடும் பொதுப்பணித் துறை, தூர்ந்து கிடக்கும் கெடிலம் அணைகளைத் தூர்வாரி, அவற்றில் மழைநீரைச் சேமிப்பது குறித்தோ, ஆண்டு தோறும் மழை காலத்தில் கெடிலம் ஆற்றில் பல டி.எம்.சி. தண்ணீர், வீணாக வங்கக் கடலில் கலப்பது குறித்தோ, சற்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.  திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு இருக்கும் அணை, 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது. 132 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில், அதிக பட்சம் 7.9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகக் கட்டப்பட்டு உள்ளது. 
 
                ஆனால் இப்போது ஒருமீட்டர் உயரத்துக்குகூட தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு, தூர்ந்து கிடப்பதுதான் அணையின் பரிதாப நிலை.  அணையைத் தூர் வாருவதற்கு பொதுப்பணித் துறை, கோடிக்கணக்கில் பணம் செலவிட்டாக வேண்டியது இல்லை. கடலூர் பகுதியில் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறுகளில் எங்கும் மணல் குவாரி இல்லை. இதனால் மணல் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. திருவந்திபுரம் அணையில் குவாரி அமைத்து மணலை அகற்றினால், கடலூர் மக்களுக்குக் குறைந்த விலையில் மணல் கிடைக்கும். அதே நேரத்தில் அணையும் தூர்வாரப்படும். அணைக்குச் செல்ல சாலைவசதி அமைத்துக் கொடுத்தால் போதும். 
 
                 திருவதிகை, திருவந்திபுரம் அணைகளைத் தூர்வாரினால் பல்லாயிரம் ஏக்கரில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே அணைகளைத் தூர் வாருமாறு, 2 ஆண்டுகளுக்கு முன் அரசுக்குக் கோரிக்கை வைத்தோம், எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் பட்டாம்பாக்கம் வெங்கடபதி.  அருகில் கேப்பர் மலையில் அமைந்து உள்ள, கடலூர் நகராட்சிக் குடிநீரேற்று நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு தொட்டிகளுக்கு, மாதம் 140 லாரி லோடு கெடிலம் மணல் தேவைப்படுகிறது. மேலும் திருவந்திபுரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்புத் தொட்டிகள் புதிதாகக் கட்டப்பட உள்ளன. அவற்றுக்குத் தேவையான மணலையும் இந்த அணையில் இருந்து பெறமுடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 
 
 
 இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது 
 
                 அணை தூர்ந்து கிடப்பது உண்மை. அணையைத் தூர்வாரினால் நல்லதுதான். ஆனால் ஆறுகளைத் தூர் வாருவதற்கு பொதுப்பணித் துறையில் திட்டம் எதுவும் இல்லை. கெடிலம் ஆறு நீர்வள நீலவள ஆதாரத் திட்டத்தில், கெடிலம் ஆற்றின் கரைகளை பலப் படுத்தும் திட்டம் தற்போது, ரூ. 30 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அணையைச் சீரமைக்க நிதி பெறலாம். ஆனால் அணையத் தூர்வார நிதி கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கான திட்டமும் இல்லை. அணையில் குவாரி அமைத்து மணலை அப்புறப் படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 
 
             திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு இருக்கும் அணை, 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது. 132 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில், அதிக பட்சம்  7.9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகக்  கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது ஒருமீட்டர் உயரத்துக்குகூட தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு, தூர்ந்து கிடப்பதுதான் அணையின் பரிதாப நிலை. 
 
 
 

Read more »

குரூப் 2 தேர்வு ஜூலை 31-ம் தேதிக்கு தள்ளி வைப்பு

            தமிழகத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த குரூப் 2 தேர்வு, ஜூலை 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  

                தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்பட 900 கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்படுவதால், தேர்வில் பங்கேற்க விரும்புவோர் புதிதாக விண்ணப்பிக்கலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலர், வணிக வரித் துறை உதவி அலுவலர் உள்பட 4 ஆயிரத்துக்கும் கூடுதலான பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

                  அதில், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், ஊரக வளர்ச்சித் துறை உதவி அலுவலர் போன்ற பணியிடங்கள் விடுபட்டு இருந்தன. இந்தப் பணியிடங்கள் குரூப் 2 தேர்வில் சேர்க்கப்படாமல் இருந்தது.  தேர்வு ஒத்திவைப்பு: இந்த நிலையில், ஜூலை 3-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிக்கையை சனிக்கிழமை வெளியிடுகிறது. தேர்வை ஜூலை 31-ம் தேதி நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.  

கூடுதல் பணியிடங்கள்: 

                  ஏற்கெனவே உள்ள 4 ஆயிரத்துக்கும் கூடுதலான பணியிடங்களுடன் மேலும் 900 பணியிடங்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் தேர்வை எழுத விரும்புவோர் விண்ணப்பிக்க வசதியாக 10 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தத் தேர்வை எழுத 5 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். இப்போது கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்படுவதால் மேலும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிப்பார்கள் எனத் தெரிகிறது.

                    சிறப்பான பதவிகள்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குரூப் 2 தேர்வு அறிக்கையில் சில குறிப்பிட்ட பதவிகளைத் தவிர்த்து, சிறந்த துறைகளில் பணியிடங்கள் இல்லை. குறிப்பாக, தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள் போன்றவை குரூப் 2-வில் சேர்க்கப்படவில்லை. இப்போது சேர்க்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே உள்ளதை விட மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி மைலம் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல்துறையும், புதுச்சேரி புதுச்சேரி மைலம் இந்தியா லிமிடெட் நிறுவனமும் வெல்டிங் துறையில் முழு ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொகை வழங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

                  அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புலத்தில் உள்ள உற்பத்தியியல்துறை சார்ந்த உலோகங்கள் இணைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கழகம், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகிய அமைப்புகள் இந்த மையத்தின் ஆராய்ச்சிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 6 கோடி நிதிஉதவி செய்துள்ளன.

             தற்போது வெல்டிங் எலக்ட்ரோட் உற்பத்தி செய்யும் புதுச்சேரி மைலம் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்துடன் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப்பல்கலைக்கழக கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, புதுச்சேரி மைலம் இந்தியா லிட் நிறுவன உரிமையாளர் சிவகுருநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு கோப்புகளை பரிமாறிக்கொண்டனர். 

               இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைலம் இந்திய ரிசர்ச் ஃபெலோஷிப் உதவித்தொகை பெற ஆண்டு தோறும் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தெடுக்கப்படும் மாணவருக்கு முதல் வருடத்தில் மாதம் ரூ. 18ஆயிரமும், இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ. 20ஆயிரமும், மூன்றாவது வருடத்தில் மாதம் ரூ.22 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும். இதுதவிர ஆண்டு தோறும் இதர செலவுகளுக்காக ரூ. 50ஆயிரம் வழங்கப்படும். 

                      இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தொழில்துறை சார்ந்த வெல்டி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக்கான அனைத்து நிதிஉதவிகளையும் நிதிஉதவியை மைலம் இந்தியா நிறுவனமும், ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அண்ணாமலைப் பல்கலை வழங்கும். உற்பத்தி பொறியியல், உலோக பொறியியல், உலோக இணைப்பு பொறியியல் முதுநிலைப்பட்டம் பெற்று முழுநேர முனைவர் (Ph.D) பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். 

                இந்நிகழ்ச்சியில் பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன், உற்பத்தியியல் துறைத்தலைவர் முனைவர் ரகுகாந்தன், உற்பத்தியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மைலம் இந்தியா லிட் நிறுவன இயக்குநர் பென்னத்தூர், ஆலோசகர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior