உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 25, 2011

கடலூரில் மீன்கள் வரத்து குறைவு: மீன் விலை கடும் உயர்வு


கடலூர் கடலில் வெள்ளிக்கிழமை கிடைத்த வஞ்சரம் மீன்கள்.
 
கடலூர்:

             கடலூரில் மீன்கள் வரத்து பெருமளவுக்குக் குறைந்ததால், மீன்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன.  தமிழக மக்களின் உணவுத் தேவையில் பெரும்பகுதியை கடல் உணவுகள் பூர்த்தி செய்கின்றன. 

              ஆனால் தமிழக தென் மாவட்டங்களில் இலங்கை கடற்படையினரின் தொல்லை, வட மாவட்டங்களில் அந்நிய நாட்டு மீன்பிடிக் கப்பல்கள், கடலில் கலக்கும் ரசாயன ஆலைக் கழிவுகள் உள்ளிட்ட காரணங்களால் மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.  62 கி.மீ. நீளம் கடற்கரை கொண்ட கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்படுவதாக, மீன் வளத்துரையின் பழைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளன. 

                சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனக் கழிவுகள், மீன் பிடித் தொழிலைக் கேள்விக் குறியாக மாற்றி வருவதுடன், மக்கள் உடல் நலனுக்கு ஏற்ற உணவான மீன்கள் உள்ளிட்ட கடல் பொருள்களின் தட்டுப்பாடு விலையேற்றத்தை உருவாக்கி, மக்களுக்குக் கடல் உணவு கிடைக்காத நிலையைத் தோற்றுவித்து வருகிறது.   மீன்களின் இனப் பெருக்கத்துக்காக ஏப்ரல் 15-ம் தேதிமுதல் 45 நாள்கள் தடை விதிக்கப்பட்டபோதிலும், அடுத்து வரும் காலங்களில் அப்படியொன்றும் மீன்கள் அபரிமிதமாகக் கிடைத்துவிடவில்லை என்கிறார்கள் மீனவர்கள். 

                 நாளொன்றுக்கு 100 டன் மீன்கள் கிடைத்து வந்த கடலூரில், மக்கள் விரும்பும் மீன் ரகங்களுக்கு சமீபகாலமாக பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. அவைகளை கடலூர், அருகாமை மாவட்டங்களில் விரும்பி உண்பதில்லை. எனவே கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு  அனுப்பப்படுகின்றன.   அவ்வப்போது குறைந்தளவில் கிடைக்கும் பால் சுறா, சூரை, கோலா, திருக்கை,  வஞ்சரம் உள்ளிட்ட சில வகை மீன்கள், திடீர் திடீர் என அதிகமாக 5 டன்கள் வரை கிடைக்கின்றன. 

              இந்த வகை மீன்களும், வெளி நகரங்களுக்கே அனுப்பப்படுகின்றன. பிற கடலோர மாவட்டங்களிலும் மீன்கள் கிடைப்பது குறைந்து வருவதால், கடலூரில் கிடைக்கும் கொஞ்ச மீன்களும், நல்ல விலை கருதி, வெளி மாவட்ட வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு விடுகின்றன.  இதனால் கடலூரில் மீன்கள் கிடைப்பது அரிதாகி, விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. எப்போதும் 50 பேருக்குக் குறைவின்றி மீன் விற்கும் பெண்களால் நிரம்பி வழியும் கடலூர் முதுநகர் மீனவர் அங்காடியில், வெள்ளிக்கிழமை 3 பேர் மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்தது வியப்பை அளித்தது.   

             முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை வஞ்சரம் மீன் விலை கிலை ரூ. 500 ஆக உயர்ந்தது. இதனால் மீன் வாங்க வந்த பலரும், கோழிக்கறி வாங்கிக் கொள்ளலாம் என்று திரும்பிச் சென்றனர். கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்கும் சங்கரா மீன் வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 180 ஆகவும், கிழங்கா மீன் ரூ. 200 ஆகவும் உயர்ந்து விட்டது.  கடலூரில் பிடிபடும் மீன்கள் பெரும்பகுதியை வெளிமாவட்ட வியாபாரிகள் வாங்கிச் சென்று விடுகிறார்கள். வெள்ளிக்கிழமை கடலூர் மீன் இறங்கு தளத்தில் கிலோ வஞ்சரம் மீன் ரூ. 350 க்கும், கிழங்கா மீன் ரூ. 120 க்கும், சங்கரா மீன் ரூ. 80 க்கும், பிற வகை மீன்கள் ரூ. 40 முதல் ரூ. 50 க்கும் வெளிமாவட்ட வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார். 

                 மீன்கள் பற்றாக்குறைக்குக் காரணம் பற்றிக் கேட்டதற்கு சுப்புராயன் கூறுகையில், கடலூர் கடற்கரையிóல் 20 கி.மீ. தூரத்துக்குள் மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது.  அதற்குக்குமேல் 30 கி.மீ. தூரத்தில் ஆழ்கடலில் தைவான், ஜப்பான், நார்வே உள்ளிட்ட பிற நாட்டுக் கப்பல்கள் மீன்களை பெருமளவு பிடித்துத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்று விடுகின்றன.  20 கி.மீ. தூரத்துக்குள் உள்ள நமது கடல் பகுதிகளில், கடல் நீரோட்டம் அடிக்கடி மாறுவதால், மீன்கள் கிடைப்பது இல்லை. ரசாயன ஆலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலேயே தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவது மீன்களை இடம்பெயரச் செய்து விட்டன.

             மக்கள் உணவுத் தேவையையும், மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இப் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதே இல்லை. நவீன விசைப் படகுகளுடன் மீன் பிடித் தொழில் செய்தவர்களில் 25 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர் என்றார். 




Read more »

விருத்தாசலம் ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் வெண்கல சாமி சிலைகள் திருட்டு


திருடுபோன சிலைகள் குறித்த ஆவணங்களை பார்வையிடுகிறார் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன் (இடமிருந்து 2-வது). (வலதுபடம்) காணாமல் போன வெண்கலச் சிலைகள்
 
விருத்தாசலம்:

             விருத்தாசலம் அருகே சத்தியவாடி கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் இருந்த 5 வெண்கல சிலைகளை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு திருடிச்சென்றுள்ளனர்.

             வியாழக்கிழமை மாலை, வழிபாடுகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, காலை கிராம மக்கள் கோயிலில் பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கோயிலில் இருந்த உற்சவ மூர்த்தியான சுமார் 2 அடிக்குமேல் உயரமுள்ள ஆலந்துறை ஈஸ்வரர், அழகிய பொன்மணி அம்மன் சிலை, அதேபோல் சுமார் 2 அடி உயரமுள்ள அஸ்திரதேவர் சிலை, விநாயகர் சிலை, சுமார் அரை அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரர் சிலை உள்ளிட்ட 5 வெண்கலச் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

            இதுகுறித்து அறநிலையத் துறை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியராஜன் போலீசா ருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன், கோயிலுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் கோயில் பின்புறம் உள்ள குளத்தில் சிலைகளை வீசியிருப்பார்களா? என தேடிபார்த்தனர். காணாமல் போன சிலைகள் விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். 

போதிய பராமரிப்பு இன்றி: 

                ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் முகலாயர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என்றும், சிலர் 200 ஆண்களுக்கு முன்னர் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர்.    கோயில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கோயில் இந்து அறநிலையத் துறையின்கீழ் செயல்பட்டும் கோயிலில் போதிய பாதுகாப்பு, பராமரிப்பு வசதிகள் இல்லாமல் கோயில் கோபுரம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

             அதேபோல் மூலவர் அறையில் உள்ள கதவுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. கதவுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் மர்ம நபர்கள் எளிதாக சிலைகளை திருடிச் சென்றுள்ளனர் என அறியப்படுகிறது. இதனால், அறநிலையத்துறை பழைமைவாய்ந்த கோயில்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






Read more »

கடலூர் சிப்காட் பகுதி மக்களுக்கு புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்

கடலூர்:

           கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி, புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
  
வியாழக்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தலைமையில் நடந்த, கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் தெரிவித்த கருத்துகள்:

              கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து மழைநீர் வெளியேற, வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரசாயனக் கழிவுகள் வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வடிகால்கள் மூலம் வெளியேறும் கழிவுநீரை மாசுக் கட்டுபாடு வாரியம் அடிக்கடி சோதனையிட வேண்டும். 

             அத்தகைய வடிகால்களை, பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும். கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வயதானோர் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பரவும் வாய்ப்பு, 2 ஆயிரம் மடங்கு அதிகம் இருப்பதாக, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.எனவே புற்றுநோய் ஆய்வில் ஈடுபடும் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இப்பகுதி மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு சுத்தமான காற்று கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

             பல தொழிற்சாலைகள் ஆம்னி பஸ்களில் ரசாயனப் பொருள்களை அனுப்பி வைக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது.எனவே ஆம்னி பஸ்களில் ரசாயனப் பொருள்கள் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும். ஆபத்தான ஆலைகள் பட்டியலில் உள்ள பல ரசாயனத் தொழிற்சாலைகள், பல ஆண்டுகளாக அனுமதி பெறாமல் இயக்கப்படுகின்றன. அனுமதி பெறாத ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்படும் ரசாயனப் பொருள்களை ஏற்றிச் செல்லும் டாங்கர் லாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

              ரசாயன தொழிற்சாலைகளில் அவசர காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சிப்காட் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அடையாளம் கண்டு, தனியாக வேலி அமைத்து மரங்களை வளர்க்க வேண்டும். தொழிற்சாலைகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டு மேற்கொண்ட, காற்றில் பரவும் ரசாயனங்கள் குறித்த ஆய்வு விவரங்களை, மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior