உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 30, 2011

சிதம்பரம் சிலுவைபுரம் கிராமத்தில் மாசு கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகம்: கிராம மக்கள் சாலை மறியல்

 
 
http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/9f3cdffa-b3e9-4ed3-a6c8-a8092c351368_S_secvpf.gif
 
சிதம்பரம்:

          சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மாசு கலந்த அசுத்தமான குடிநீர் வினியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இதுகுறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தபட்ட துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

               இதையடுத்து கிராம மக்கள் பக்கத்து கிராமங்களுக்கு சென்று குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக குடிநீரில் மழை நீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

             இதனால் ஆத்திரம் அடைந்த சிலுவைபுரம் கிராம மக்கள் ஆண்களும், பெண்களுமாக 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று திங்கட்கிழமை கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் இதனை ஏற்கவில்லை.

              கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வந்து உறுதி கொடுத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து கோட்டாட்சியர் இந்துமதிக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கோட்டாட்சியர் கடலூரில் இருந்து வர தாமதமானதால் தாசில்தார் ராஜேந்திரன் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் கிராம மக்கள் தாசில்தாரிடம் உடனடியாக கோட்டாட்சியர் வர வேண்டும் என்று கூறினர்.

              இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் இந்துமதி சம்பவ இடத்துக்கு வந்தார். மேலும் தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெயபாலன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.   காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரு பக்கமும் அணிவகுத்து நின்றன.

            மறியல் போராட்டம் கைவிட்ட பின்பும் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

எய்ட்ஸ் நோய் பற்றிய விளக்கங்கள்

 
 
 
 
நாளை 01.12.2011..உலக எய்ட்ஸ் தினம்

எய்ட்ஸ் நோய் ஒரு விளக்கம் :

        எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள் :

Acquired - A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது

Immune - I உடலின் எதிர்ப்பு சக்தி

Deficiency - D குறைத்துவிடுதல்

Syndrome - S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு

            இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

எய்ட்ஸ் நோய் வருவது எப்படி ?

                  எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத காரணத்தால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு உட்பட்டு மனிதன் மரணத்திற்கு தள்ளப்படுகிறான்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் :

                 உடல் எடை மிக வேகமாக குறைதல், ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல், ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி ஆகியவை ஆகும். இத்தொற்றுநோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்.

எய்ட்ஸ் நோய் பரவும் விதம் :

             எய்ட்ஸ் நோய்க்கான கிருமி, உடலில் உள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்பு திரவம் மற்றும் இந்நோயினால் பாதித்த தாயின் தாய்ப்பால் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறது. எனவே இந்நோய் கீழ்க்கண்ட விதங்களில் பரவுகிறது.


  1. உடல் உறவு கொள்ளும் இருவரில் யாரேனும் ஒருவர் எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்போது "வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்"
  2. எய்ட்ஸ் வைரஉள்ளவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து, ஊசி குழல் சரியாக சுத்தம் செய்யப்படாமல் மற்றவருக்கு பயன்படுத்தும்போது
  3. இக்கிருமி உள்ளவர் இரத்தத்தை பிறருக்கு செலுத்தும்போது
  4. இவ்வைரஉள்ள தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுவிட்டால் இன்று அதற்கான சிகிச்சை கிடையாது / மருந்து கிடையாது.

              மேலும் எய்ட்ஸ் வராமல் தடுக்க தடுப்பூசி கிடையாது. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து, எய்ட்நோயிலிருந்து தங்களையும் பாதுகாத்து, பிறருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் எடுத்துச் சொல்லி எய்ட்மனித சமுதாயத்திற்கு தந்துள்ள சவாலை எதிர்கொள்ளவேண்டும்.

நோய் தொற்றக்கூடிய அபாயமுள்ளவர்கள் :


  1. பால்வினை நோய்க்கு ஆளானவர்கள்
  2. பிறப்பு உறுப்பில் புண்களை உடையவர்கள்,
  3. பல்வேறு நபர்களோடு உடலுறவு கொள்பவர்கள், 
  4. பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள், 
  5. போதை பொருட்களை உபயோகிப்பவர்கள்

எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ?

1. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது, 2. தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது, 3. தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல், 4. இரத்த தானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாக பெறுவது

எய்ட்ஸ் நோய் எதனால் பரவாது ?

  1. எச்.ஐ.வி.பாதித்த நபருடன் கை குலுக்குவதால், 
  2. காற்று, நீர் போன்றவற்றால்,
  3. கொசு மூலம், 
  4. இந்நோய் உள்ளவர்களுடன் சேர்ந்து விளையாடுவதால்

ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையம் :

நம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆற்றுப்படுத்துதலும், இரத்தப்பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆலோசனை விவரங்களும், பரிசோதனை முடிவுகளும் இரகசியமாக பாதுகாக்கப்படும். பரிசோதனை முடிவில் எச்.ஐ.வி. உள்ளவர்கள் என்று தெரியவந்தால் ஆற்றுப்படுத்துதலும், அவர்கள் தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுவார்கள்.

எச்.ஐ.வி.உள்ள கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி.இல்லாத குழந்தையைப் பெற முடியுமா? முடியும்.

              கர்ப்பிணிப் பெண் பிரசவ வலி ஏற்பட்டவுடன் நெவிரப்பின் என்ற மாத்திரை கொடுப்பதாலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தை எடைக்கு தகுந்தாற்போல் ஒரு கிலோவிற்கு 2.மி.கி. நெவிரப்பின் மருந்து கொடுப்பதாலும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி.பரவுவதை தடுக்க முடியும். இந்த வசதி அனைத்து அரசு மருத்துவனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ளது. இங்கு இவர்களுக்கு எச்.ஐ.வி.இல்லாத குழந்தையை பெற்றெடுக்க ஆலோசனையும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் இந்நோய் பற்றி உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்படவேண்டும். 
 
தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய இணையத்தளம்
 
இந்திய அரசின் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய இணையத்தளம்
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் புதுச்சத்திரத்திரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

சிதம்பரம்:

           சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தை அடுத்த போட்டோடை பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 52). மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (43) என்பவரும் திங்கட்கிழமை  காலை கடலில் படகில் மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்துக் கொண்டு மாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

             நடுக்கடலில் வந்தபோது பலத்த காற்றினால் படகு கவிழ்ந்தது. இதில் வடிவேலு படகின் அடியில் சிக்கிக் கொண்டார்.   வடிவேலுவை ராஜலிங்கம் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து ராஜலிங்கம் கரைக்கு நீந்தி வந்து வடிவேலுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மற்றொரு படகில் சென்று படகின் அடியில் சிக்கிக் கொண்ட வடிவேலுவை மீட்டனர். ஆனால் அவரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior