உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 30, 2011

16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

             "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

            மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இவர்களது பணி தாற்காலிகமானது என்றும் அரசு அறிவித்துள்ளது. 

 இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:  

             இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக, "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் தமிழகத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்புவரை இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.  மொத்தமுள்ள 16,549 பணியிடங்களில் கலைப்படிப்புகளுக்காக 5,253 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் உடற்கல்விக்காக 5,392 பணியிடங்களும், கைத்தொழில் படிப்புகளுக்காக 5,904 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்தப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பரிந்துரைகளை "அனைவருக்கும் கல்வி இயக்கம்' அரசுக்கு அனுப்பியிருந்தது. அவற்றை ஆராய்ந்த பிறகு, இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விதிமுறைகள் விவரம்: தேர்வுக் குழு உறுப்பினர்கள்: 

               மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், பகுதி நேர ஆசிரியர் தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உறுப்பினர் செயலராக இருப்பார்.  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற் கல்வி நிபுணர், மாவட்ட அளவிலான கலைப்படிப்புகளில் நிபுணர், இசை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் படிப்புகள் உள்ளிட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்தத் துறை நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம்  பெறுவர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், இடைநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரிகளாக இருப்பார்கள்.  இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வரவேற்கப்பட வேண்டும். தேர்வுக்குழுவினர் நேர்முகத்தேர்வின் மூலம் பகுதிநேர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். உள்ளூர் விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.  இதில் 10 சதவீத ஆசிரியர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். இந்தப் பட்டியல் ஓர் ஆண்டுவரை இருக்கும்.  பகுதி நேர ஆசிரியர் தேர்வுப் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக தகவல்பலகை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும்.  இதுதொடர்பான பதிவேட்டை தனியாகப் பராமரிக்க வேண்டும். 

 தற்காலிகமான நியமனம் மட்டுமே...  

          பகுதிநேர ஆசிரியர் நியமனம் என்பது இந்தத் திட்டம் அமலில் உள்ள வரையிலான தாற்காலிக பணி நியமனம் மட்டுமே ஆகும். தேவைப்பட்டால் அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.  அரசு விடுமுறை தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அவர்களுக்கு வேறு விடுமுறைகள் கிடையாது. அவர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படாது.  இந்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் கற்பித்தல் பணி வழங்கப்படும். அவர்களுக்கான சம்பளம் "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் கிராம கல்விக் குழுக்களுக்கு வழங்கப்படும். 

              அந்தக் குழுக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சம்பளத்தை வழங்குவார். இந்தப் பகுதிநேர ஆசிரியர்களின் சேவையை அருகில் உள்ள 4 பள்ளிகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும்போது அதற்குரிய சம்பளத்தை அவர் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  இந்த நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















 

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு பயிர்களுக்கு நிவாரண உதவி

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களான பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.

              கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையிலும், வெள்ளாற்றிலும், பழைய கொள்ளிடத்திலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 15 முதல் 30 நாள்களுக்குள்ளான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. மேற்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நீர் வடியத் தொடங்கியுள்ளது.

               இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் மற்றும் வோளாண் துறை அதிகாரிகள் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிர் மற்றும் வெள்ள சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். குமராட்சி ஒன்றியம் வக்காரமாரி, தெம்மூர், நந்திமங்கலம், வீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து விபரம் கேட்டறிந்தார். நந்திமங்கலத்தில் விவசாயி ஒருவர் உரம் தட்டுப்பாடாக உள்ளது. உரம் கிடைக்கவில்லை என ஆட்சிரிடம் புகார் தெரிவித்தார். 

    மேலும் இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. தீடீரென ஊருக்கு தண்ணீர் புகுந்து விடுவதால் வெளியேறுவது கஷ்டமாகிவிடுகிறது. எனவே நந்திமங்கலம்-பூலாமேடு இடையே பழைய கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நந்திமங்கலம் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நந்திமங்கலத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றை ஆட்சியர் பார்வையிட்டார். பொதுமக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பின் பாலம் அமைக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.

பின்னர் காட்டுமன்னார்கோயில் பொதுப்பணித்துறை விடுதியில் ஆட்சியர் அளித்த பேட்டி: 

               வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களிலிருந்து 30 நாள்களான பயிர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும். 30 நாள்களுக்கு மேலான பயிர்கள் நீரில் மூழ்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே  அவற்றுக்கு நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதுபோல வெள்ளத்தில் வீடுகளை இழந்த குடும்பத்திற்கும், வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததால் பொது இடத்தில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.  

              மேலும் நந்திமங்கலம், வீரநத்தம் கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமுற்ற சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும் என்றார். நாக.முருகுமாறன் எம்எல்ஏ, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.















Read more »

கடலூர் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/962dcaf7-644f-4a1b-b88e-fd0d9fd37611_S_secvpf.gif
 
கடலூர்:

       கடலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பக்கிரி வரவேற்றார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 305 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

 
                   தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மடிகணினி, முதியோர், மீனவர் உதவித்தொகை, ஆடு, மாடு உள்பட பல்வேறு திட்டங்கள் வழங்குவேன் என கூறினார். இதன்பின் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 7 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார்.

           இதில் விலையில்லா அரிசி மற்றும் விலையில்லா திட்டங்கள் வழங்குவதற்கு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையும் உருவாக்கினார். இதில் தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் 25 லட்சம் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகிறது. இவை 234 தொகுதிகளுக்கு வழங்கப்படும். இதில் முதலில் ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

                தற்போது வழங்கி வரும் விலையில்லா பொருட்களுக்கு இரண்டு வருடத்திற்கு உத்தரவாதம் உள்ளது. விலையில்லா பொருட்கள் ஒரு மாதத்தில் பழுது ஏற்பட்டால் புதிய பொருட்கள் வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு பின்பு பழுதானால் பழுது பார்ப்பதற்காக சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு தான் பெண் கஷ்டம் தெரியும் என்பதற்கு ஏற்ப முதல்வர் ஜெயலலிதா விலையில்லா பொருட்கள் வழங்கி வருகிறார். இத்துடன் இந்த பொருட்கள் அனைத்தும் தாய் வீட்டு சீதனமாக பெற்று கொண்டு பெண்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.

            விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, பழனிசாமி, துணை தலைவர் பாலாம்பிகை, முத்துகுமாரசாமி, தாசில்தார் எழிலன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.   மேலும் விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பெரியதம்பி விழா தொகுத்து வழங்கினார்கள்.

                மாவட்ட கவுன்சிலர் அழகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, நகரமன்ற உறுப்பினர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், கந்தன் மற்றும் ஆதிபெருமாள், ஜெயச்சந்திரன், ஜெயமூர்த்தி, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வசந்த் நன்றி கூறினார்.  முன்னதாக மேல் அழிஞ்சுபட்டு ஊராட்சியில் 283 பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior