உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 29, 2012

வடலூர் ஓ.பி.ஆர்.நர்சு கல்லூரி மாணவிகள் கலெக்டர் ராஜேந்திரரத்னூவிடம் மனு

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/094b7bec-e094-48b7-87c1-9704bdd2c58e_S_secvpf.gif
கடலூர்:
  

           வடலூர் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமையில் ஓ.பி.ஆர். நர்சு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கடந்த  வெள்ளிகிழமை  கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது:

             இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் நர்சு கல்லூரிகளில் பயின்ற மாணவிகளுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி அரசு பணி வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு நீண்டகாலமாக அரசு பணி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

             இது அரசியல் சாசனத்துக்கு முரணாக இருந்து வந்தது. தனியார் நர்சு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசு மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மூலமாக தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு நர்சு கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

          வெளிநாட்டில், இந்தியாவில் நர்சு பயிற்சி முடித்த நர்சுகளுக்கும் குறிப்பாக தமிழக நர்சுகளுக்கும் அதிக வரவேற்பு உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அரசு வேலை கொடுக்காதது பெரிய அவலநிலையாக இருந்தது. உலக அளவில் தமிழக நர்சுகளுக்கு மிகுந்த மதிப்பு உள்ளது.  இதனை உணர்ந்து திறந்த மனதுடன் பரிசீலனை செய்து பயிற்சி பெற்ற 2 லட்சம் நர்சுகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

             தமிழக அரசு சுகாதாரத் துறைக்காக பட்ஜெட்டில் 3 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. குறிப்பாக அரசு நர்சு பயிற்சிக்காக மட்டும் ஒரு சதவீதம் நிதி செலவாகிறது. தனியார் நர்சு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அரசின் நிதி எதுவும் செலவிடப்படுவதில்லை. இதனால் அரசுக்கு சேமிப்பு ஏற்படுகிறது. இந்த நிதியானது சுகாதாரத்துறையில் மேலும் பயனுள்ள உபகரணங்களை வாங்குவதற்கு பயன்படுத்தலாம். நர்சு பயிற்சி பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். அரசு பணி கிடைக்காத நிலையில் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்தது.

         பெண்களின் இந்த நிலையை தாய் மனதுடன் பரிசீலனை செய்து மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளியில் பயிற்சி பெற்றவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் நர்சு பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பித்துள்ள முதல்-அமைச்சருக்கு தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற நர்சுகள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.   










Read more »

வெள்ளி, ஜனவரி 27, 2012

டான்செட் 2012 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

       அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் டான்செட்-2012 தேர்வெழுத விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
 
          தமிழகத்தில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,. எம்.பிளான்., ஆகிய முதுநிலைப் படிப்புகளில் இந்த டான்செட் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தே சேர்ககை வழங்கப்படுகிறது. 
 
          தகுதி உள்ள மாணவர்கள், விண்ணப்பத்துடன் நுழைவுத் தேர்வுக் கட்டணமாக ரூ.500ஐ (எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்கள் ரூ.250) செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை செலுத்தும் மாணவர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.500 அல்லது 250ஐ ஒரே டிடியாக எடுத்தும் அனுப்பலாம். மாணவர்கள் டிடி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலையின் மையங்களில் நேரடியாக வந்து தங்கள் பெயரை பதிவு செய்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
         அல்லது அண்ணா பல்கலையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து டிடி மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அண்ணா பல்கலைக்கு பிப்ரவரி மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்பலாம். இந்த மாணவர்களுக்கு அனுமதிச் சீட்டும் தபாலில் அனுப்பி வைக்கப்படும். 
 
          எம்.பி.ஏ. படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையும்,
 
      எம்.சி.ஏ. படிப்பிற்கு மார்ச் மாதம் 31ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
 
       எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். 
 
 
 
 
 இணையதளம் 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரணம் வழங்கியதில் குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள்


பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
கடலூர்:

         கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலை 140 கி.மீ. வேகத்தில் வீசிய "தானே' புயல், கடலூர் மாவட்ட மக்களை, அவர்களின் வாழ்வாதாரங்களை, பொருளாதாரத்தை சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டது. ரூ.100 கோடி சேதம் என்று மாவட்ட நிர்வாகம் முதலில் அறிவித்தது.

           ஆய்வு நடத்தியபோது சேத மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இது அரசின் உத்தேசமான தகவல் என்றாலும் சேதமதிப்பு இன்னமும் அதிகம். மொத்தம் 4,05,889 வீடுகள் (40,064 வீடுகள் முழுமையாக, 3,65,825 பகுதியாக) சேதம் அடைந்ததாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சேதம் அடைந்த வீடுகளுக்கு திங்கள்கிழமை வரை ரூ.112.98 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது. 

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்கள்தான் புயலில் அதிகம் பாதிக்கப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் வட்ட வாரியாக பார்த்தால் கடலூரில் 1,07,301 வீடுகளுக்கும், பண்ருட்டியில் 1,04,771 வீடுகளுக்கும், சிதம்பரத்தில் மாவட்டத்திலேயே அதிகமாக 1,20,191 வீடுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணம் என்று முதலில் வெளியான அறிவிப்பு பின்னர், பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் என்று வெளியானது. 

            மொத்தம் உள்ள 7 வட்டங்களில் சுமார் 6 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள கடலூர் மாவட்டத்தில், மோசமாக பாதிக்கப்பட்ட 4 வட்டங்களில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் நகராட்சிப் பகுதியில் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை தரும் தகவலின்படி, மொத்த குடும்ப அட்டைகள் (போலிகள் உள்பட) 48,240. இதில் முதல் கட்டமாக 43,683 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் விடுபட்டவர்கள் 18 ஆயிரம் பேருக்கு (ரேஷன் அட்டை உள்ளவர்கள்) நிவாரணம் வழங்க 2-வது பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 6,454 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

            அப்படியெனில் நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்றும், இதுவரை நிவாரணம் பெற்றவர்கள் 49,683 என்றும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது. 48 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நகரில், சுமார் 50 ஆயிரம் பேருக்கு நிவாரணமா என்று கேட்டால், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது என்கிறார்கள். நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்று கணக்கிட்டால், சுமார் 19 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் புயல் நிவாரணம் கோரி தினமும் நடைபெறும் போராட்டங்களோ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.அரசுத் துறைகளிடையே முரண்பாடான புயல் நிவாரணப் பட்டியல்கள் உள்ளன. 

            நிவாரணம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் காரணமாகவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை. காரணம் புயலுக்கு அரசு வழங்கிய நிவாரணம் அரசியல் நிவாரணமாக மாறிவிட்டது என்பதே மக்களின் புகார். கிடைக்க வேண்டிய பலருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல கோடிகளை செலவிட்டவர்களுக்கோ, இந்த நிவாரண உதவி வழங்கும் பணி நல்ல வாய்ப்பாகி விட்டது என்கிறார்கள் பொதுமக்கள்.

            பல வார்டுகளில் ரூ.2,500-ஐ வாங்கிக் கொண்டு, ரூ.1500-ஐ மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த இடைத்தரகர்களும் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளித்ததுதான் புயல் நிவாரணப் பட்டியல். தாங்கள் அளிக்கும் பட்டியலுக்கு காசோலையில் கையொப்பமிடு என்று, தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

            இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அமைச்சர்களோ, எப்படியோ போங்கள் என்று வெறுத்து ஒதுங்கிக் கொண்டார்கள். இத்தகைய குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால்தான், அரசு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். 







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior