உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 08, 2013

கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 3,731 போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு

  கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அரசு உத்தரவு

தமிழகத்தில் போலி ரேசன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ரேசன்கார்டுக்கும் உணவுப்பொருள் மானியமாக ஆண்டுக்கு 2 ஆயிரத்து 880 ரூபாயை அரசு வழங்குகிறது.

இதுதவிர விலையில்லா பொருட்கள், மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் என பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. இதனால் போலி ரேசன்கார்டுகளால் அரசின் பணம் வீணடிக்கப்படுவதால், அனைத்து மாவட்டங்களிலும் புழக்கத்தில் உள்ள போலி ரேசன்கார்டுகளை கண்டறிந்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

போலிகார்டுகள் கண்டுபிடிப்பு

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலி ரேசன் கார்டுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன் கார்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சிதம்பரம் தாலுகாவில் அதிகபட்சமாக 902 போலி ரேசன்கார்டுகளை வட்டவழங்கல்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து, அரசுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை தடுத்துள்ளனர். இது தவிர விருத்தாச்சலம் தாலுகாவில் 593 போலி ரேசன்கார்டுகளும், திட்டக்குடி தாலுகாவில் 534 போலி ரேசன்கார்டுகளும், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 493 போலி ரேசன்கார்டுகளும், கடலூர் தாலுகாவில் 332 போலி ரேசன்கார்டுகளும், பண்ருட்டி தாலுகாவில் 306 போலி ரேசன்கார்டுகளும், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் 241 போலி ரேசன்கார்டுகளும், பறக்கும் படை தாசில்தாரால் 329 போலி ரேசன்கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

60 நாட்கள் கால அவகாசம்

இந்த கார்டுகளுக்கான உணவு பொருட்கள் ஒதுக்கீட்டை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதில் உண்மையான கார்டுகள் ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்குள் மேல்முறையீடு செய்யாதவர்களின் கார்டுகளை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேல் முறையீடு செய்பவர்களின் கார்டுகளை மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி அல்லது தகுதியின்மைக்கு தக்கவாறு உரிய உத்தரவுகள் பிறப்பிப்பார்கள்.

Read more »

புதன், ஜனவரி 09, 2013

கடந்தாண்டில் கடலூர் மாவட்டத்தில் நடந்த 3,484 சாலை விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்

கடலூர் முதுநகர் :

         சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதில் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் மாவட்டத்தில் நடந்த 3,484 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்.

         மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 340 கி.மீ., மாநில நெடுஞ்சாலை 1,816 கி.மீ., பிற சாலைகள் 5,511 கி.மீ., என மொத்தம் 7667 கி.மீ., தூர சாலைகள் உள்ளன. ஆனால், மாவட்டத்தில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், பாதுகாப்பான முறையில், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

              இதன் காரணமாகவே, மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதனால் உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 2008ம் ஆண்டில் 2,896 விபத்துகளில் 450 பேரும், 2009ல் 2,811 விபத்துகளில் 483 பேரும், 2010ம் ஆண்டில் 2,695 விபத்துகளில் 466 பேரும், 2011ல் 3,092 விபத்துகளில் 523 பேர் இறந்தனர். பெருகி வரும் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்த்திட தமிழக அரசு ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்தி வருகிறது. அதன்படி போக்குவரத்து துறை சார்பில் கடந்த 1ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

         இறுதி நாளான  கடலூர், கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.  முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், முருகேசன், காளியப்பன், நல்லத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் கூறியது:

               மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு 2,695 விபத்துகள் நடந்துள்ளன. இதில்,உயிரிழப்பை ஏற்படுத்திய447 விபத்துகளில் 466 பேர் இறந்துள்ளனர்.  3,453 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டில் மொத்தம் நடந்த 3,092 விபத்துகளில், உயிரிழப்பை ஏற்படுத்திய 498 விபத்துகளில் 523 பேர் இறந்துள்ளனர். 3,790 பேர் காயமடைந்துள்ளனர். கடந்தாண்டு 3,484 விபத்துகள் நடந்துள்ளன. அதில், உயிரிழப்பை ஏற்படுத்திய 524 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர். 4,938 பேர் காயமடைந்துள்ளனர்.

          சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதன் காரணமாக அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்த்திட வட்டார போக்குவரத்து துறையினர் அவ்வப்போது போலீசாருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகிறோம். குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி கடந்தாண்டு குடிபோதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக 5 பேரின் ஒட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 46 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

          வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், வாகன உரிமங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளின் மூலம் கடந்தாண்டு 61.92 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், பதிவு பெறாத வாகனங்களுக்கு அபராதம், நிர்ணய அபராதம் போன்றவற்றின் மூலம் 1.36 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.



Read more »

வியாழன், டிசம்பர் 20, 2012

திட்டக்குடியில்அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

திட்டக்குடி:


திட்டக்குடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரி மாவட்ட கவுன்சிலர் எழிலரசன் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினார்.

மனு விவரம்:

கடலூர் மாவட்டத்தில் மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய ஒன்றியமாக உள்ளது. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறாமல் உள்ளது.மேலும் ஏழை மாணவ, மாணவியர்கள் பட்டப்படிப்பு பயில கல்லூரிகள் திட்டக்குடி பகுதியில் இல்லாததால் மாணவர்கள் தொலைவிலுள்ள விருத்தாசலம் அரசு கல்லூரி, அரியலூர், மயிலாடுதுறை கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மாணவர்கள் அப்பகுதிகளுக்குச் சென்று தங்கிக் கல்வி பயில அதிகம் செலவாகிறது. இதனால் ஏழை மாணவர்களின் பட்டப்படிப்பு கனவாய் போகும் அவலம் உள்ளது. எனவே, மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒன்றியமான மங்களூர் ஒன்றியத்திலுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டக்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. .

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior