உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

பள்ளி வேன் கவிழ்ந்து சிறுவன் சாவு

கடலூர், நவ. 23:

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்கு உள்ளானதில் ஒரு குழந்தை இறந்தது. 47 குழந்தைகள் காயம் அடைந்தன. திங்கள்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்தது. கடலூரை அடுத்த ஆலப்பாக்கம் அருகே கடலூர்- சிதம்பரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெரியப்பட்டு கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளிக்கு, ஆலப்பாக்கம் பகுதியில் இருந்து, மாணவ மாணவியரை ஏற்றிக் கொண்டு வேன் சென்று கொண்டு இருந்தது. டிரைவர் விமல்ராஜ் (25) வேனை ஓட்டினார். பெரியப்பட்டு அருகே வேன் முன்பக்க அச்சு முறிந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பள்ளத்தில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி இருந்தது. இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 48 பேர் மற்றும் ஆசிரியை ஒருவர், வேன் டிரைவர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்.கே.ஜி. மாணவன் ராமு (4) இறந்தார். அவர் ஆலப்பாக்கம் ராஜ்மோகன் என்பவரின் மகன். காயம் அடைந்த ஆசிரியை ராஜதிலகம் (35), நிவேதா (4), அறிவழகன் (4), தீனா (6), விக்ரமன் (4), திலீப் (5), ராஜ் (5), சிந்துஜா (6), கார்த்திகா (5) உள்ளிட்ட 47 மாணவ மாணவியர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் ஆசிரியை ராஜதிலகம், ஓட்டுநர் விமல்ராஜ் மற்றும் 34 மாணவ, மாணவிகள் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுச்சத்திரம் போலீஸôர் விசாரணை நடத்தினர். தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று, குழந்தைகளுக்கு துரிதமாக முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தில்லியில் இருக்கும் கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் மாவட்ட ஆட்சியருடன் தொடர்பு கொண்டு, குழந்தைகளின் உடல் நலம் விசாரித்ததுடன் முறையான சிகிச்சை அளிக்கக் கேட்டுக் கொண்டனர்.

Read more »

25 பேர் பயணிக்கும் வாகனத்தில் 48 பேர்

கடலூர் அருகே திங்கள்கிழமை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன், 25 பேர் பணிக்கும் வசதி கொண்டதாக இருந்தும் 48 மாணவ மாணவியரை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது. விபத்து நிகழ்ந்த சற்று நேரத்துக்கெல்லாம், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தனது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுடன் அந்த வழியாக வந்தார். விபத்து பற்றி அவர் கூறியது: விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக நாங்கள் வந்துகொண்டு இருந்தோம். வேனுக்கு அடியில் யாரும் சிக்கியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில், சேற்றில் கிடந்த வேனை புரட்டிப் பார்த்தோம். உள்ளே யாரும் இல்லை. ஆனால் 25 பேர் பயணிக்கும் வசதி கொண்ட அந்த வேனில் 48 பேர் ஏற்றப்பட்டு இருந்தது மிகவும் கொடுமையானது. மேலும் அந்த வேன் மிகமிகப் பழையது. நன்றாக பெயிண்ட் அடித்து வைத்து இருந்தனர். இத்தகைய வாகனங்ளை எல்லாம் மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. பள்ளிப் பணிக்கு பயன்படுத்தும் வாகனங்களை எல்லாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும், போலீஸôரும் சோதனை செய்ய வேண்டும். பயணிகளை ஏற்றத் தகுதி இல்லாத வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது. இதில் கடுமையா இருக்க வேண்டும் என்றார் தாமரைச் செல்வன். இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.அப்துல்மஜீது கூறுகையில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்து இருக்கும் சட்டத்தில் சிறப்பு அம்சம், அண்மைப் பள்ளி திட்டம் ஆகும். அந்தந்த பகுதி மாணவர்கள் அந்த்தந்த பகுதி பள்ளிகளிலேயே படிக்க வேண்டும். காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்த நடைமுறை இருந்தது. இச்சட்டத்தை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, ஆசிரியர்கள் கடலூர் மாவட்ட உதவிக் கல்வி அலுவலகங்கள் முன் 18-ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தவர் என்றார் மஜீது.

Read more »

பள்ளி வாகனங்களை தணிக்கை செய்ய தனிக்குழு: ஆட்சியர்

கடலூர், நவ. 23:

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களைத் தணிக்கை செய்து அறிக்கை அனுப்ப, தனிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார். ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி கல்லூரி வாகனங்களில் அனுமதிக்கப் பட்ட இருக்கைகளுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் பள்ளி வாகனம், கல்லூரி வாகனம் என்று தெளிவாக எழுதப்பட வேண்டும். வாகனங்களின் இருபுறமும் பள்ளி, கல்லூரி பெயர் முழு முகவரி, தொலைபேசி எண்கள் தெளிவாக எழுதப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் இயக்கக் கூடாது. பள்ளி கல்லூரி வாகனங்களை ஓட்டுபவர்கள் 10 ஆண்டுக்குக் குறையாத அனுபவம் மிக்கவர்களாக, போக்குவரத்துத் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும். வாகனங்களின் ஜன்னல்களில் இரும்பு குறுக்குக் கம்பி பொருத்தப்பட்டு இருக்க வேணடும். முதல் உதவிப்பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும். தாழ்பாள்கள் தரமானதாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஏறிய பின், தாழ்பாள்கள் சரியா மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்புக் கருவிகள் பொருத்தி இருக்க வேண்டும். மேற்கண்ட அறிவுரைகள் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கட்டாயம் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் இதுதொடர்பாக ஒவ்வொரு வட்டத்திலும் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பள்ளி கல்லூரி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆணையிடப்பட்டு இருக்கிறது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior