உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம்

நெய்வேலி:

            நெய்வேலியை அடுத்த கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 9 சென்ட் நிலத்தை கொக்கன்குப்பத்தைச் சேர்ந்த காசிநாதன் மற்றும் முருகேசன் குடும்பத்தினர் தானமாக வியாழக்கிழமை வழங்கியுள்ளனர். அம்மேரி ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கோ.தங்கராசு தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் இருதயமேரி வரவேற்றார். அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மற்றும் முருகேசன்  குடும்பத்தினர் தங்கள் குடும்ப சொத்து 9 சென்ட் நிலத்தை வட்டார மேற்பார்வையாளர் ஜம்புலிங்கம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நடராஜன் முன்னிலையில் பள்ளிக்குத் தானமாக வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கு.பாண்டியன், கல்வியாளர் சாமிக்கண்ணு, ஆசிரியர்கள் இம்மானுவேல்மேரி, கயல்விழி, பிருந்தா உள்ளிட்டோர் விழாவில்  கலந்துகொண்டனர். உதவி ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.

Read more »

தனியார் அனல் மின் நிலையம்: மீனவர் பேரவை எதிர்ப்பு

கடலூர்:

           கடலூர் அருகே அமைய இருக்கும் தனியார் அனல் மின் நிலையத்துக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், செயலாளர்  கே.முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அமைந்து இருக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதால், மீனவர்களின் தொழில் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதுக்குப்பம் அருகே தனியார் அனல் மின் நிலையம் அமைக்க  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் அருகே துறைமுகம் ஒன்றும் கட்டப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் அங்கு அமைக்கப் பட்டால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே இந்த தனியார் அனல் மின் நிலையத்தை மீனவர் பேரவை கடுமையாக  எதிர்க்கிறது. தனியார் அனல் மின் நிலையம் அமைய இருப்பதைக் கண்டித்து, அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, இம்மாதம் 25-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Read more »

வடலூரில் சிறப்பு மருத்துவ முகாம்

நெய்வேலி:

        உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வடலூர் வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமை வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி தாளாளர் செல்வராஜ் தொடங்கிவைத்தார். முகாமின் போது இதய அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, காது மூக்கு  தொண்டை, சிறுநீரகம், கருப்பை நோய்களுக்கு புதுச்சேரி பிம்ஸ் மருத்துமனை மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இதில் 397 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பிம்ஸ் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா மற்றும் வடலூர் வட்டார  மருத்துவ அலுவலர் லட்சுமி சீனுவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior