உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

இன்றுமுதல் பி.இ. விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி


             தமிழகத்தில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 58 மையங்களில் திங்கள்கிழமை (மே 3) முதல் விநியோகிக்கப்படவுள்ளன. விண்ணப்பங்கள் மே 29-ம் தேதி வரை வழங்கப்படும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களின் 16 உறுப்புக் கல்லூரிகளில் 5,905 பி.இ. இடங்கள், 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,560 இடங்கள், 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2,465 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,61,515 இடங்கள் என 456 கல்லூரிகளில் 1,72, 445 பி.இ. இடங்கள் உள்ளன.இவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 58 மையங்களில் மே 3 முதல் வழங்கப்படுகின்றன. குறிப்பாக அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், சில குறிப்பிட்ட அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவற்றில் வழங்கப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

                   ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பத்தை நேரில் பெறுவதற்கான கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.சி.ஏ., (அருந்ததியினர்), எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250. விண்ணப்பத்தைத் தபாலில் பெற, "செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம்', என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், டி.டி. எடுத்து, செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 25 என்ற முகவரிக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்ப வேண்டும். தபாலில் பெறுவதற்கு எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவனர் ரூ.450-க்கும், மற்ற பிரிவினர்கள் ரூ.700-க்கும் டி.டி. எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31-ம் தேதிக்குள் ஏற்கெனவே, மேலே குறிப்பிட்ட முகவரியில் மாலை 5.30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  இணையதளம் மூலம்:  பி.இ. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமும் பதிவு செய்யலாம். அதாவது www.annauniv.edu/tnea2010 என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும். பின்னர், அதை பிரிண்ட் எடுத்து, அதில் சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படத்தை ஒட்டி, கையெழுத்திட்டு, அந்த படிவத்தையும், டி.டி.யையும் இணைத்து மேலே குறிப்பிட்ட முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். பி.இ. தரவரிசைப் பட்டியல் ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும்.  பி.இ. கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை நடைபெறும்.   

சென்னையில் 4 இடங்களில் விண்ணப்பம் 

               சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 4 இடங்களில் பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.   அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. விண்ணப்பம் வாங்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை வழக்கம் போல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதனால் மாணவர், பெற்றோர் வசதிக்காக, முதல் நாளான திங்கள்கிழமை காலை 6 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தவிர, பல்கலைக்கழகத்தில் 20 கவுன்ட்டர்கள் அமைத்து பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படும். மற்ற மையங்களில் காலை 9.30 மணிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

1.80 லட்சம் விண்ணப்பங்கள் 

               பி.இ. மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆண்டு மொத்தம் 1.6 லட்சம் விண்ணப்பங்கள்  விற்கப்பட்டன. அதை அடிப்படையாக வைத்து 2010-11-ம் கல்வி ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கு 1.80 லட்சம் பி.இ. விண்ணப்பங்கள் முதல் கட்டமாக அச்சடிக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் தங்களுக்கு பி.இ. விண்ணப்பம் கிடைக்கும் கிடைக்காதோ என்ற சந்தேகம் கொள்ளவேண்டாம். விண்ணப்ப விநியோக மையங்களில் முதல் நாளே சென்று இடம் பிடிப்பதும் தேவையில்லை.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் தமிழுக்கு இந்த நிலையா


புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கடலூர் நகருக்குள் நுழையும் இடத்தில், சுற்றுலாத் தலங்கள் என்பதற்குப் பதில் "சுற்றுலாத் தளங்கள்' என்று
கடலூர்:

               சமயக் குறவர்கள் நால்வரில் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில், திருமாணிக்குழு வாமனபுரீஸ்வரர் கோயில், எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் கடலுர் மாவட்டத்தில் சமயக் குறவர்களால் பாடல் பெற்றத் தலங்களாக உள்ளன.தமிழகத்தில் கோயில்கள் சமயத்தை மட்டும் அல்ல தமிழையும் சேர்த்து வளர்த்தன. தமிழாய் விளங்கிய கோயில்களையும், தமிழ்க்கடல் ஞானியார் அடிகளாரும், வடலூர் ராமலிங்க அடிகளார், தமிழறிஞர்கள் சுந்தரசண்முகனார், நடேச முதலியார், சிவலிங்கனார் உள்ளிட்டோரும் தோன்றிய கடலூரில், சில நேரங்களில் தமிழ் தடுமாறத் தொடங்கி விடுகிறது.புதுவையில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகக் கடலூர் நகருக்குள் நுழையும் இடமான பெண்ணை ஆற்றின் கரையில், தமிழக அரசின் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த அறிவிப்புப் பலகையில், கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களைக் காணவாரீர் என்று இருப்பதற்குப் பதில், கடலூர் மாவட்ட சுற்றுலாத் தளங்களைக் காணவாரீர் என்று, தலத்துக்கும் தளத்துக்கும் வேறுபாடு தெரியாமல் பிழையாக எழுதப்பட்டு உள்ளது. அதேபோல் பாடலீஸ்வரர்கோயில் என்பதற்குப் பதில் பாடலிஸ்வரர் கோயில் என்றும் பிழையாக எழுதப்பட்டு உள்ளது. அரசு சார்பில் வைக்கப்பட்டு இருக்கும் அறிவிப்புப் பலகையே இப்படி என்றால், தனியார் வைக்கும் அறிவிப்புப் பலகை பற்றி பேசவே வேண்டாம்.சோழர் காலத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள், நடுநாடு என்று அழைக்கப்பட்டது.  
 
                 அதற்கு முன் இப்பகுதி பல காலம் பல்லவர்கள் ஆட்சிக்கு உள்பட்டு இருந்துள்ளது. எனவே இப்பகுதியில் வடமொழி மற்றும் பாலி, பிராகிருதமொழிகளின் ஆதிக்கம் பல காலம் இருந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் தமிழ் மொழியில் சில நேரங்களில் தடுமாற்றம் காணப்படுவது உண்டு. எண்பது (80) என்பதை எண்பழது என்றும், மூங்கிலை முழுங்கில் என்றும் கற்றிந்தவர்கள்கூட உச்சரிப்பார்கள். அந்த வரிசையில் சுற்றுலாத் தலத்தை சுற்றுலாத் தளம் என்று பிழையாக எழுதிவிட்டார்களோ என்னவோ அறிவிப்புப் பலகையில் உள்ள பிழையைத் திருத்துமா அரசு?

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் பலாப்பழ வரத்து அதிகரிப்பு


பண்ருட்டி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஆர்.மாயவேல் (வலது) தோட்டத்தில் விளைந்த 65 கிலோ எடையுள்ள மெகா சைஸ் பலாப்பழம்.
பண்ருட்டி:
 
                சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ150 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி. பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தென் பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடந்து வளர்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் மிகுந்த சுவை கொண்டவை. இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். 
 
இதுகுறித்து பலா விவசாயிகள் சீரங்குப்பம் ஆர்.மணிவண்ணன், சாத்திப்பட்டு எழில், காடாம்புலியூர் டி.சரவணன் ஆகியோர் கூறியது: 
 
             மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பலாப்பழம் சீசன். இக்காலத்தில் பலா மரத்தை பராமரிக்க வேண்டும். அவ்வப்போது காய்கள் பழுத்துள்ளனவா, பூச்சிகள் தாக்கியுள்ளதா, களவு போகாமல் உள்ளதா என பார்க்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பலா மரம் வைத்துள்ளவர்கள் அவர்களே பராமரித்துக்கொள்வர். அதிக அளவில் மரம் வைத்துள்ளவர்கள் குத்தகைக்கு விட்டுவிடுவர்.குத்தகை விடும்போது மரத்தின் தரம், காயின் சுவை மற்றும் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு பிஞ்சு ஒன்று ரூ.20 முதல் ரூ.30 வரையில் விலை பேசி ஒப்பந்தம் செய்வர்.மரத்தின் அளவு மற்றும் வயதுக்கு தகுந்தாற்போல் 20 முதல் 50 பிஞ்சுகள் வரைவிட்டுவிட்டு, மரத்தில் இருந்து கழிக்கப்படும். ஏனைய பிஞ்சுகளை சில சமயத்தில் விற்றுவிடுவோம். அதிக அளவு பிஞ்சுகளை மரத்தில் விட்டால் மலட்டு தன்மை அடைவதுடன் சில சமயத்தில் மரம் இறந்துவிடும். இன்னும் ஓரிரு வாரத்தில் முழு அளவில் பலாப்பழம் அறுவடை தொடங்கிவிடும் என கூறினர்.பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் பலா பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள பி.ஆர்.மாயவேல் கூறியது:விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை விற்று கொடுத்து வருகின்றோம். 
 
                 இதற்கு ஊதியமாக குறிப்பிட்ட அளவு கமிஷன் பெற்றுக்கொள்வோம்.பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், மும்பை, பெங்களூர், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் அனுப்பி வருகின்றோம்.மும்பையில் பலாப்பழத்தின் ஜூஸ் அதிக அளவு விற்பனை ஆவதல் அங்கு அதிக அளவு பலாப்பழங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரு டன் பலாப்பழம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.  கொல்கத்தா மாநிலத்தில் பலா பிஞ்சுக்கு அதிக கிராக்கி உள்ளதால் ஒரு கிலோ ரூ.25 வரை விலை போகிறது என்றார் அவர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior