உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

எம்.பி.பி.எஸ். 18 ஆயிரம் மாணவர்களுக்கு நாளை ரேண்டம் எண்


               தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.​ படிப்பில் சேர ​விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புதன்கிழமை ​(ஜூன் 9) முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ வழங்கப்படுகிறது.​
 
               பிளஸ் 2 தேர்வில் உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவ-மாணவியர் பெற்ற ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் ​(கட்-ஆஃப்)​ அடிப்படையில் ​எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
 
இணையதளத்தில் வெளியீடு:​​ 
 
                   சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகம் தயாரித்து வரும் முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ புதன்கிழமை ​(ஜூன் 9) காலை 11 மணிக்கு சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org  ​மூலம் வெளியிடப்படுகிறது.​ ஒரே ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணை எடுக்கும் மாணவர்களை வரிசைப்படுத்தி ரேங்க் பட்டியல் வெளியிட ஏதுவாக,​​ முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.​ இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-படிப்பில் சேர 18,230 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 11-ல் ரேங்க் பட்டியல்:​ சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை ​(ஜூன் 11) ரேங்க் பட்டியல் ​வெளியிடப்படுகிறது. ​ மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் ரேங்க் பட்டியல் ஒட்டப்படும்.​ முதல் கட்ட கவுன்சலிங் வரும் ஜூன் 21-ம் தேதி தொடங்குகிறது.

Read more »

போபால் விஷ வாயு வழக்கு: 8 பேருக்கு 2 ஆண்டு சிறை


போபால்:

                  மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள விஷவாயு வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.​ இந்தச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.​ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

                 உலகிலேயே மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.​ போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மீதைல் ஐசோசயனைடு நச்சுவாயு கசிந்ததில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.​ 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.​ 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸýப் மஹிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.​ 85 வயதான கேஸýப் மஹிந்திரா இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராக இருந்தார்.

                      திங்கள்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால்,​​ நீதிமன்றத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.​ இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.​ குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். குற்றப்பிரிவு 304-ஏ ​(மரணத்துக்கு காரணமாக இருத்தல்)​ 304-2 ​(பெரும்பாலான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருத்தல் மற்றும் விதி 336 மற்றும் 337 பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.​ ​இருப்பினும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரென் ஆண்டர்சன் ​(89) பற்றி நீதிபதி தனது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை.​ தலைமறைவு குற்றவாளி என்று 23 ஆண்டுகளுக்கு முன்னரே வாரென் ஆண்டர்சன் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் குற்றவாளிகளாக நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸýப் மஹிந்திரா,​​ நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் விஜய் கோகலே,​​ நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கிஷோர் காம்தார்,​​ செயல் மேலாளர் ஜே.என்.​ முகுந்த்,​​ உற்பத்தி மேலாளர் எஸ்.பி.​ செüத்ரி,​​ ஆலை கண்காணிப்பாளர் கே.வி.​ ஷெட்டி,​​ உற்பத்தி உதவியாளர் எஸ்.ஐ.​ குரேஷி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.​

                     இவர்களில் எஸ்.ஐ.​ குரேஷி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இந்த வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த துணை செயல் மேலாளர் ஆர்.பி.​ ராய்,​​ வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்துவிட்டார்.இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 178 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.​ இதில் சாட்சிகள் அளித்த 3008-பக்க ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளரான வாரென் ஆண்டர்சன்,​​ இதுவரை விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை.​ 2,000 டாலர் ஜாமீன் தொகை செலுத்தி அமெரிக்கா சென்ற ஆண்டர்சன் அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை.​ ​மிக மோசமான இந்த விஷ வாயு வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பதிவு செய்யப்பட்டது.​ பின்னர் டிசம்பர் 6-ம் தேதி இந்த வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.​ 1987-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை சிபிஐ தொடங்கியது.​ இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் சி.​ சஹாய் ஆஜராகி,​​ யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள உலை உரிய வகையில் பரமாரிக்கப்படதாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக வாதிட்டார்.​ 

                 இந்த விபத்து நடந்த உடனேயே 2,259 பேர் உடனடியாக உயிரிழந்தனர்.​ காற்றில் பரவிய மீதைல் ஐசோ சயனைடு நச்சால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.​ 1982-ம் ஆண்டே இந்த ஆலையை ஆய்வு செய்தபோது இதில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.​ அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் வந்து பராமரிப்பு குறையை சுட்டிக் காட்டியபோதிலும் அவை மேற்கொள்ளப்படவேயில்லை என்று சஹாய் கூறினார்.இந்த விபத்து நடந்த பிறகு மத்திய குழு இந்த ஆலையைச் சுற்றிப்பார்த்தபோது பாதுகாப்பு மற்றும் நிர்வாக குறைபாடுகள் இருந்தது தெரியவந்ததாக அவர் கூறினார். ஆனால் ஆலை உரிய வகையில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்ததாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் டி.​ பிரசாத்,​​ அமித் தேசாய் ஆகியோர் ​ வாதாடினர்.​ 1982-ம் ஆண்டு இந்த ஆலையில் ஊழியர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனத்திலிருந்து நிபுணர்கள் வந்து ஆலையை சோதித்ததை வழக்கறிஞர்கள் மறுத்தனர் .பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் கார்பைடு ஆலை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது என்றும்,​​ ஆலை நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கென்றே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். 

அனைவருக்கும் ஜாமீன்:

                 குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.​ இதையடுத்து அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.​ ​2002-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கேஸýப் மஹிந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ இவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை. 

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி : 

                 தாமதமாகக் கிடைக்கும் நீதி;​ நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்.​ எனினும் இந்த வழக்கில் நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது.  

பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்: 

                ஏற்கெனவே விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் வலியைத் தருவதாக இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் தேசியச் செயலர் டி.​ ராஜா: 

                    வழக்கை விசாரித்த சிபிஐ,​​ நீதியை நிலைநாட்டுவதில் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது.​ சிபிஐ-யின் தோல்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பேற்க வேண்டும்.

Read more »

சிதைந்து கிடக்கும் கடலூர் சிலவர் பீச் படகு குழாம்


2 ஆண்டுகளாகச் சிதைந்து கிடக்கும் கடலூர் சில்வர் பீச் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுத்துறை.
கடலூர்:
 
                கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பல லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட,​​ வளர்ச்சிப் பணிகளில் பெரும்பாலானவை பயனின்றி கிடக்கின்றன.
 
                           கடலூர் சில்வர் பீச்,​​ கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது.​ இதனால் பல ஆண்டுகளாக 40 லட்சத்துக்கு மேல் செலவிட்டு,​​ உப்பங்கழியில் படகுப் போக்குவரத்து உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவும் உருவாக்கப்பட்டு இருந்தது.​ ஆண்டுதோறும் சுற்றுலா கோடை விழாவும் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,​​ சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும்,​​ தற்போது பயனின்றி கேட்பாரற்றுக் கிடக்கின்றன.​ ​
 
                        ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட,​​ உப்பங்கழியில் உல்லாசப் படகு சவாரிக்கான படகுத்துறை சிதைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.​ உல்லாசப் படகுகளும் உடைந்து ஓரங்கட்டப்பட்டுக் கிடக்கின்றன.​ ​ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குழந்தைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த சறுக்கு மரம்,​​ ஊஞ்சல் போன்றவையும் உடைந்து கிடக்கின்றன.​ ஊஞ்சல் பலகைகள்,​​ குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான இருக்கைகள் அனைத்தும் சமூக விரோத சக்திகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.​ அங்கு அமைக்கப்பட்டு இருந்த நீரூற்றுகளும் ஈரப்பதம் காணாமல் மூடங்கிக் கிடக்கின்றன.​ ​சில்வர் பீச்சில் என்.எல்.சி.​ நிறுவனம் ரூ.5 லட்சத்தில் அமைத்துக் கொடுத்த எழில்மிகு பூங்கா,​​ எங்கிருக்கிறது என்றே தெரியா வண்ணம்,​​ சிதைந்து காணாமல் போய்விட்டது. இத்தகைய சிதைவுகள் காரணமாக,​​ கடலூர் மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாகவும்,​​ சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்து இருந்த சில்வர் பீச் இன்று,​​ பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி,​​ மூளியாகக் காட்சி அளிக்கிறது.​ ​ஆண்டுதோறும் 5 நாள்கள் சில்வர் பீச்சில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலா கோடை விழாவும்,​​ இரு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.கடலூர் மக்களுக்கு கோடைக் காலத்தில் நல்லதொரு பொழுதுபோக்கு விழாவாக அமையும் இந்த விழா நடைபெறாதது,​​ கடலூர் மக்களை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இதில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் கவனம் செலுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.​ ​
 
                        சில்வர் பீச்சில் எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையிலும்,​​ இங்கு வரும் வாகனங்களுக்குக் கட்டணம்,​​ கால நேரமின்றி எப்போதும் வசூலிப்பதுதான் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.​ ​கடல் அலைகளை ரசிக்க வருவோரிடம்,​​ கட்டணம் வசூலிக்கும் ஒரே கடற்கரை கடலூர் சில்வர் பீச்சாகத்தான் இருக்கும்.​ இங்கு வசூல் ஆகும் தொகை எவ்வளவு?​ இதற்கு நகராட்சி ஆண்டுதோறும் ஏலம் விடுகிறதா;​ நகராட்சிக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு யார்;​ ஏலம் எடுத்து இருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior