உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

ஐந்தாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை துவக்கம்

          ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது.

           தமிழகத்தில் ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இப்படிப்பில் சென்னையில் 241, மதுரையில் 171, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா 160 என மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 11ம் தேதி வரை வழங்கப்பட்டன.

            மொத்தம் 2,634 பேர் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 238 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 2,396 பேரின் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதில் 1,509 பேர் ஆண்கள்; 887 பேர் பெண்கள். எஸ்.டி., பிரிவில் 12 பேர், எஸ்.சி., அருந்ததியினர் பிரிவில் 97 பேர், எஸ்.சி., பிரிவில் 1,025 பேர், பி.சி., முஸ்லிம் பிரிவில் 87 பேர், பி.சி., பிரிவில் 628 பேர், எம்.பி.சி., / டி.என்.சி., பிரிவில் 466 பேர், இதர பிரிவில் 81 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

            இந்த ஆண்டு முதல் தொழிற்படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பில் சேருபவர்களுக்கும் கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் 1,331 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம், மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை செயலர் தீனதயாளன், சட்டக்கல்வி இயக்குனர் ஜெயமணி, பல்கலைக்கழக பதிவாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணைவேந்தர் சச்சிதானந்தம் பேசியதாவது: 

                  தேசிய அறிவுசார் நெட்வொர்க் திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளும் இணைக்கப்படவுள்ளன. இதன் மூலம், ஒரு இடத்தில் பாடம் நடத்துவதை மற்ற இடங்களிலிருந்தும் பார்க்க, கேட்க முடியும். சட்டப் புத்தகங்களை தமிழில் மறுபதிப்பு செய்ய, அரசு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. புத்தகங்கள் 3 மாதத்தில் வெளியிடப்படும். பல்கலைக்கழக சீர்மிகு சிறப்பு சட்டப் பள்ளி தேர்வில், வெளி மதிப்பீட்டிற்கு 70 மதிப்பெண், உள் மதிப்பீட்டிற்கு 30 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதே முறையை மற்ற சட்டக் கல்லூரிகளிலும் கொண்டு வந்தால், ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான உறவு மேம்படுவதுடன், தரமும் உயரும்.இவ்வாறு சச்சிதானந்தம் பேசினார்.

Read more »

ஆசிரியர்களே இல்லாத கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி... மாணவர்கள் தவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தும் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்.
கடலூர்:

             தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 2-வது ஷிஃப்ட் (2-வது சுழற்சி வகுப்புகள்) மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றித் தவிக்கிறார்கள். தமிழகத்தில் 69 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கடந்த 3 ஆண்டுகளாக 2-வது ஷிஃப்ட் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 60 ஆயிரம் மாணவ,  மாணவிகள் படிக்கிறார்கள். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மட்டும் 1,000 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.2-வது ஷிஃப்ட் கல்லூரிக்கு ஆண்டுதோறும் தாற்காலிக ஆசிரியர்களை ( கௌரவ  விரிவுரையாளர்கள்) அரசு நியமிக்கிறது. மார்ச் மாதத்தில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு பணிபுரிந்த 600 கெüரவ விரிவுரையாளர்களும் மார்ச் மாதத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.கடந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கியதும், அதற்கு முந்தைய ஆண்டு பணிபுரிந்த  கௌரவ  விரிவுரையாளர்களை, ஜூன் மாதத்தில் பணிக்கு வந்துவிடுமாறும், பணியாணை பின்னர் வழங்கப்படும் என்றும் வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல், தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி கல்லூரி வகுப்புகள் தொடங்கி விட்டன. ஆனால் 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இதனால் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இன்றி காணப்படுகின்றன.

இது குறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பழநி கூறுகையில்,

           "2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு, ஆண்டுதோறும் கெüரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவதும், ஆண்டு இறுதியில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதுமாக உள்ளனர். இதனால் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் வாய்மொழி உத்தரவைப் பெற்று, முந்தைய ஆண்டில் பணிபுரிந்த அனைத்து கெüரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கும் போதே பணிக்கு வந்து விட்டனர். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் கெüரவ விரிவுரையாளர்கள் யாரும் இன்னமும் பணிக்கு வரவில்லை. எனவே இனிமேல்தான் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் குறித்து, கல்லூரிக் கல்வி இயக்குநரின் உத்தரவு வரவேண்டும். இது குறித்து கல்வித் துறைச் செயலரை புதன்கிழமை சந்தித்துப் பேசி இருக்கிறோம். எங்களது சங்கம் மேற்கொண்ட முயற்சியால், கெரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி வருகிறோம் என்றார். 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இன்னமும் நியமிக்கப்படாததால், ஆங்காங்கே கல்லூரி மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசிரியர்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்து, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

Read more »

வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாமல் தவிக்கும் நெய்வேலிவாசிகள்

நெய்வேலி:

             வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாத நெய்வேலி வாக்காளர்களில் பெரும்பாலானோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறிஞ்சிப்பாடி தாலுகாவுக்கு உள்பட்ட நெய்வேலி நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை நெய்வேலி நகரம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பு காரணமாக புதிய நெய்வேலி தொகுதி உருவாக்கப்பட்டதால், குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்த நெய்வேலி நகரம் நெய்வேலித் தொகுதிக்கு வந்தது. 

             நெய்வேலி நகரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் சுமார் 60 ஆயிரம் பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது குறித்து அப்போதே எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்ததால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடங்கியது. ஆனாலும், அவை முறையாக நடைபெறவில்லை. மேலும் வாக்காளர் சரிபார்ப்புக்கு என நியமிக்கப்பட்ட அலுவலர்கள் எவரும் வீடு தேடிச் சென்று வாக்காளர் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடவில்லை. மாறாக சில பள்ளி மாணவர்கள் வாக்காளர் படிவங்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குச் சென்று படிவங்களைக் கொடுத்ததோடு சரி.மேலும் அவ்வப்போது வாக்காளர் புகைப்படம் எடுக்கும் முகாம் நடத்தப்படுவதாகக் கூறினாலும் நெய்வேலி நகர மக்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு முறையாக செய்யப்படுவதில்லை. வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற வேண்டும் என வாக்காளர்கள் அவர்களாகவே முன்வந்து படிவங்களைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலரிடம் சமர்ப்பித்தபோதும், அதன் மீது நடவடிக்கை இல்லை.

              நெய்வேலியில் வட்டம் 5 மற்றும் 6-ல் அடுக்குமாடி குடியிருப்புகளே உள்ளன. இவற்றில் நான்கு குடியிருப்புகளை கொண்ட கட்டடத்தில் 2 குடும்பத்தினர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சுமார் 90 ஆயிரம் வாக்காளர்கள் வசிக்கும் நெய்வேலியில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியலில் 60 ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்களே இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள வாக்காளர்கள் மாயமானது எவ்வாறு என்பது புரியாத புதிராக உள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என வாக்காளர்கள் ஆர்வமாக இருந்தும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அலட்சியம் காரணமாக பட்டியல் சரியாக தயாரிக்கப்படவில்லை. தற்போது விடுபட்டுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் முகாம் 9, 10 தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தப் பணியாவது முறையாக நடைபெறுமா இல்லை, கண்துடைப்புக்காக நடத்தப்படுமா என்பது நெய்வேலிவாசிகளின் ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior