உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

பி.எஸ்ஸி. (நர்சிங்): அரசு இடங்கள் நிரம்பின


சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு
 
 
         அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு உரிய 125 இடங்களில் பெரும்பாலான இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரம்பிவிட்டன.
 
           பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பில் அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரியவற்றில் சில இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.ஃபார்ம், பி.பி.டி. உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 12) முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டு வருகிறது.பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு அடுத்தபடியாக பி.ஃபார்ம். படிப்புக்கு உரிய 110 அரசு இடங்களில், சில இடங்களே காலியாக உள்ளன. 
 
               பி.பி.டி. (ஃபிஸியோதெரப்பி  படிப்பு) படிப்பில் மொத்தம் உள்ள 50 இடங்களில், பாதிக்கும் மேற்பட்ட அரசு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடங்கள்: கலந்தாய்வு வரும் சனிக்கிழமை (ஜூலை 17) வரை நடைபெறுகிறது. சுயநிதி கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு உரிய 3,703 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பி.ஃபார்ம். படிப்புக்கு உரிய 1,228 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பி.பி.டி. படிப்புக்கு உரிய 736 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 
கட்டணம் என்ன? 
 
                 சுயநிதி கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.30,000; பி.ஃபார்ம்.-பி.பி.டி. படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ஆண்டுக்கு ரூ.28,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more »

நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா

கோவையில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் மக்கள் வெள்ளமாகக் காட்சியளிக்கும் வஉசி
              தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி அமையும் காலம் நெருங்கிவிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அதிமுக அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்; ஜனநாயக முறையில் திமுகவை அகற்றும் பணியை நீங்கள் நிறைவேற்றுங்கள்; தேர்தல் பணிக்குத் தயாராகுங்கள் என்றும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோவை வஉசி பூங்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:
            கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை. தமிழ் மொழியும் வளர்ச்சி அடையவில்லை, தமிழர்களும் வளர்ச்சி அடையவில்லை. தமிழின் பெயரால் ஒரு குடும்பம் மட்டுமே  அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்பட தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஐந்தாவது ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைத்திருக்கிறது. இது தேர்தலுக்கான ஆண்டு; எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற, தங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதையும், வாக்களிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். திமுக அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்கு  போடுவதற்கான நல்ல தருணமும் இதுவே. 
               திமுக அரசின் தோல்விகளே ஏராளம். சாதனைகள் என்று சொல்லக் கூடியவை மிகக் குறைவானவை என்பது மட்டுமல்லாமல் அவை வெறும் மாயத் தோற்றங்கள்தான். இந்த அரசின் முதல் தோல்வி அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு. அடுத்ததாக, மின்சாரப் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது பிற மாநிலங்களை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டைக் கட்டாயமாக மக்கள் மீது திணிக்க வேண்டிய அளவுக்கு மின்உற்பத்தியில் பின்னடைவை தமிழகம் சந்தித்து வருகிறது.விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு திருப்பூர் ஜவுளித் தொழில் முதல் சிவகாசி அச்சுத் தொழில் வரை தெளிவாகத் தெரிகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் பாறைகள் வெளிப்படும் அளவுக்கு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு செ.மீ. மண் இயற்கையாக உருவாவதற்கு 200 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இப்போதைய நிலையில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய 10 லட்சம் ஆண்டுகள் தேவைப்படும். பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. இலவச கலர் டிவி திட்டம் சாதனையாக சொல்லப்பட்டாலும், அதற்கு கேபிள் கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.200 வரை முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினருக்குத் தான் செலுத்த வேண்டியுள்ளது. 
             ரேஷனில் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது. அரசு இருப்பில் இருந்து மக்களுக்காக அளிக்கப்படும் தரமான அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. பழைய கெட்டுப்போன அரிசி ரேஷன் கடைகள் மூலமாக மக்களைச் சென்றடைகிறது. அரிசி கடத்தலில் அரசு அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் கைகோர்த்துச் செயல்படுகின்றனர்.  மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு இத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாது. அறுவைச்சிகிச்சைகளுக்கு மட்டுமே இத் திட்டத்தில் பயன்பெறலாம். ஆனால், இந்த அறுவைச்சிகிச்சைகள் ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன.  இதற்கு காப்பீட்டுத் திட்டம் தேவையில்லை. செம்மொழி மாநாடு என்ற போர்வையில், கோவையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்காக தமிழகம் முழுவதும் திமுகவினரால் ரூ.2 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 
                உணவுப் பொட்டலங்கள் வழங்கியதில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக அரசை அகற்ற வேண்டும். மீண்டும் நல்லாட்சி மலர அதிமுகவுக்கு வாக்களிப்பது என அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

Read more »

புத்தகங்களை படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம்: என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம்


  நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் (இடமிருந்து)
நெய்வேலி:
 
        நல்ல புத்தகங்களை படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்று என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம் பேசினார்.
 
நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் 5-ம் நாள் விழாவில்என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம் பேசியது:
 
              புத்தகங்களை நாம் தலைகுனிந்து படிக்கிறோம். அப் புத்தகமே எதிர்காலத்தில் நம்மை தலைநிமிர்ந்து வாழ வைக்கும். ஒரு மனிதன் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அவன் வாழும்போது அவன் படைக்கும் படைப்புகளே அம் மனிதன் வாழ்ந்த காலத்தை மேல்நோக்கி நிறுத்துகிறது. மாணவர்களும் இளைஞர்களும் புத்தக வாசிப்பை ஒரு கடமையாக கொள்ள வேண்டும். புத்தகத்தில் கிடைக்கும் நல்ல செய்திகளை விதையுங்கள். 
 
               கெட்ட செய்திகளை புதையுங்கள் என்றார் ராமலிங்கம்.தினமும் எழுத்தாளர் பாராட்டப்படுபவர் என்ற வரிசையில் எழுத்தாளர் உத்தமசோழன் விழாவில் பாராட்டப்பட்டார். அவர் பேசியது:நான் வருவாய்த் துறையில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும் சம்பவங்களையும் வைத்தே நாவல் எழுதியுள்ளேன். நெய்வேலி புத்தகக் கண்காட்சி சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு நிகராக விளங்குகிறது என்றார் உத்தமசோழன்.
 
நெருஞ்சி என்னும் சிறுகதை நூலை வெளியிட்டு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேசியது:
 
               குழந்தைகளுக்கு உண்டியல் வழங்கி சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புத்தகம் வாங்கும் யுக்தியை ஈரோடு புத்தகக் கண்காட்சி குழுவினர் செய்து வருகின்றனர்.   குழந்தைகள் உண்டியல்களில் சேமிக்கும் பணத்தை கொண்டு புத்தகங்களை வாங்கும்போது அதைக் காட்டிலும் 2 மடங்கோ அல்லது 3 மடங்கோ புத்தகங்களை பரிசாக வழங்குகின்றனர். புரவலர்களும் பதிப்பகத்தாரும் செய்துவரும் இந்த ஊக்கமிகு நிகழ்வை நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரும் ஏனைய புத்தகக் கண்காட்சி நடத்தும் குழுவினரும் பின்பற்ற வேண்டும்.
 
               நெய்வேலியில் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடத்தி, தமிழுக்கும் இலக்கியத்திற்கும், தொண்டாற்றிவரும் என்.எல்.சி. நிறுவனத்தைப் பாராட்டி  தமிழக அரசு பரிசு வழங்க வேண்டும் என்பது எனது அவா.சாதாரணமாக இது போன்று நிறுவனங்கள் நடத்தும் விழாவில் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் இந்த அரங்கில் தமிழுக்கு முதலிடம் அளித்துப் பெருமை சேர்த்துள்ளீர்கள். 
 
நெய்வேலியை தமிழகம் பின்பற்றுமா? 
 
             தொலைக்காட்சிப் பெட்டிகளும் கணினிகளும் அறிவியல் உலகுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். தட்டிவிட்டால் தகவல்கள் கிடைக்கின்றன.ஆனால் வெளிநாடுகளில் உள்ள குழந்தைகள் கம்ப்யூட்டரை தட்டிவிட்டால் எழுத்துகள் வந்துவிடுகின்றன. இதனால் அவர்களுக்கு எழுத்துகளை எழுதக்கூட தெரியாத நிலை ஏற்பட்டு மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்குள்ள குழந்தைகள் மீண்டும் எழுத்துகளை எழுதிப் பார்க்கும் பழக்கத்துக்கு மாறி வருகிறார்கள் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன். தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்பனாதேவி வரவேற்றார். பேராசிரியர் சோ.சத்யசீலனின் சொற்பொழிவு நடைபெற்றது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior