உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

விபத்தில்லாத நாள்களே இல்லை: மரணச்சாலையாக மாறும் கிழக்கு கடற்கரைச் சாலை...


கடலூரில் போலீஸ் சோதனையில் விதிகளை மீறியதாக பிடிபட்ட ஆட்டோக்கள்.
 
கடலூர்:

              கிழக்கு கடற்கரைச் சாலை தற்போது மரணச் சாலையாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையான கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுவை- கடலூர் இடைப்பட்ட 22 கி.மீ. பகுதியில் (45ஏ) அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

                  இது கடலூர் மாவட்ட மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் இறந்தவர்களில் மூவர் சாலையோரம் நின்றிருந்த பாதசாரிகள். புதுவை- கடலூர் இடையே இரு சக்கர வாகனங்களில் செல்வோர், துணிச்சல் மிக்கவராகவும், உயிரைப் பற்றி கவலைப்படாதவராகவும்தான் இருக்க முடியும் என்பது, இப்பகுதி மக்களின் கருத்து. சராசரியாக ஆண்டுக்கு 500 விபத்துகள் கடலூர்- புதுவை இடையே நடக்கின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகிறார்கள். புதுவை பகுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதற்காக 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தினமும் கடலூரில் இருந்து புதுவை மாநில எல்லைக்குள் 5 கி.மீ தூரம் வரைச் சென்று திரும்புகின்றனர். 

             மேலும் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகள், அரவிந்த் கண் மருத்துவமனை, தொழிற்சாலைகள், பள்ளிகள் என்று பலவற்றுக்கும் கடலூர் மற்றும் கடலூரைச் சுற்றியுள்ள மக்கள் தினமும் கடலூர்-புதுவை சாலையில் சென்றுவர வேண்டிய கட்டாயம் உள்ளது. கோயில் விழாவுக்கு நேர்ச்சைக்காகச் செல்பவர்கள்போல், புதுவை மாநில எல்லையில் உள்ள பிராந்திக் கடைகள் சாராயக் கடைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இதனால் கடலூர்- புதுவை சாலையில் குறிப்பாக கடலூர்- முள்ளோடை இடையே 6 கி.மீ. தூரம் போக்குரத்து நெரிசல் கடுமையாகி வருகிறது. இப்பகுதியில் விபத்து நடக்காத நாள்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு, பல அப்பாவி உயிர்கள் பலியாவதால் இது மரணச் சாலையாக மாறிவிட்டது.  

              இந்த 6 கி.மீ. தூரத்துக்குள் சாலை குறுகி இருப்பது, விளக்குகள் இன்றி இருண்டு கிடப்பது, இரு இடங்களில் வளைவுகள், பெரிய கங்கனாங்குப்பம் பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ந்துள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டும் காணாததுபோல் இருப்பதுதான் கோர விபத்துகளுக்குக் காரணம். மாலை 4 மணிக்கு மேல் அதிவேகத்தில் பறக்கும் ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலானவை உரிமம் பெறாதவைகளாகவும், சாராயக் கடைக்கும் பிராந்திக் கடைக்கும் செல்வோரைச் சுமந்து செல்பவைகளாகவும் உள்ளன. ஒவ்வொரு ஷேர் ஆட்டோ மூலமும்  மாமூல் போக, உரிமையாளருக்கு ரூ.300, ஓட்டுநருக்கு ரூ.700-ம் நாள்தோறும் சம்பாதிக்கிறார்கள் என்றால், இவற்றில் பயணிப்போரின் எண்ணிக்கையையும், அவை செல்லும் வேகத்தையும் ஊகித்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பொதுமக்கள். புதுவை - கடலூர் இடையே இயக்கப்படும் பஸ்களில் குடிகாரர்களின் தொல்லை காரணமாக கடலூரில் இருந்து முள்ளோடை வரை உள்ள பகுதிகளில் பயணிகள் யாரையும் ஏற்றிக் கொள்வது இல்லை. 


இப்பிரச்னை குறித்து கடலூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதாணன் கூறுகையில்

               கடலூர்- புதுவை சாலையில் சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு உடனடியாக, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ÷கனரக வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது, போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை எல்லையில் இருந்து கடலூருக்கு ஆங்கிலேயர் காலத்தில் இருந்த, மாற்றுப் பாதையை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்றார்.

                ""பெண்ணையாற்றுப் பாலம் அருகே இரு தணிக்கைச் சாவடிகள் உள்ளன. இப்பகுதியில் நெருக்கடியைப் போக்க, சதுக்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஏற்றுக் கொண்டும், நகராட்சியும் மாநில நெடுஞ்சாலைத் துறையும் நிலம் அளிக்காததால், அப்பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பெண்ணையாற்றுப் பாலம் முதல் பாகூர் சாலை பிரிவு வரை, சாலை நடுவே டிவைடர் அமைக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலையின் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இவைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

Read more »

கோவை அண்ணா பல்கலை. முதுநிலை படிப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மே-ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட எம்.இ, எம்டெக், எம்சிஏ, எம்.எஸ்ஸி படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இணையதளம் (www.ann​auniv.ac.in) மூலமாக தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற இணையதளத்தின் (www.ann​auniv.ac.in) மூலமாக ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.கருணாகரன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Read more »

உணவு தானியங்களைப் பாதுகாக்க உதவும் மரக்களஞ்சியம்




தமிழகத்தில் இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் மரக்களஞ்சியம்.
 
 
சிதம்பரம்:
 
           உணவு தானியங்களை இயற்கை முறையில் பாதுகாக்க "மரக்களஞ்சியம்' எனும் முறை விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.
 
              உணவு தானிய விற்பனை சந்தைகளில் ஏற்படும் தொடர்ச்சியான விலை ஏற்ற, இறக்கங்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்களை  வெகுவாக பாதிக்கச் செய்கிறது. நெல் மற்றும் சிறு தானியங்கள் விளைச்சல் முடிந்து அறுவடைக் காலத்தில் குறைந்த விலையே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அடுத்த சில மாதங்களில் அறுவடைக்கு பிந்தைய வரத்துகள் வெகுவாக குறைந்த நிலையில் உணவு தானியங்களின் விலை கடுமையாக உயருகிறது. இடைத்தரகர்கள், வியாபாரிகள், தனியார் வேளாண் நிறுவனங்களே அதிகளவு பொருளாதார லாபங்களை பெரும் நடைமுறை சூழல் நிலவுகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள், நலன்களை பாதுகாக்க பாரம்பரியமிக்க மரக்களஞ்சியம்  பெரிதும் உதவியாக இருக்கும்.
 
சேமிப்பு முறைகள்: 
 
               இயற்கை முறையில் உணவு தானியங்களை மரக்களஞ்சியம் மூலம் பாதுகாக்கலாம். சிறு மற்றும் குறு விவசாயிகள் வேளாண் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மரக்களஞ்சியங்களை தேர்வு செய்து விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டும். முதலில் மரக்களஞ்சியம் உறுதியான மரத்தால் செய்யப்பட்டு துவாரங்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். மரக்களஞ்சியம் வடிவமைப்புகள் மாறுபட்டாலும் விவசாயிகள் தங்கள் பண்ணை வீடுகளில் மற்றும் சிறு வீடுகளில் எளிதாக வைக்கும் வண்ணம் உள்ள வடிவமைப்புகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.  சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள மரங்களைக் கொண்டு தச்சர்கள் மூலம் தேவைக்கேற்ப மரக்களஞ்சியங்களை தேவையான வடிவமைப்பில் செய்து கொள்ளலாம்.
 
                சாகுபடி பணி முடிந்து அறுவடைப் பணிகள் துவங்கும் போது விவசாயிகள் மரக்களஞ்சியத்தை நன்றாக சுத்தம் செய்து வெயிலில் வைக்க வேண்டும். பின்னர் புங்கன் எண்ணெய்யை ஒரு துணி கொண்டு மரக்களஞ்சியத்தின் உள்ளே நன்றாக தடவ வேண்டும். புங்கன் எண்ணெய் வாசனையே பல உணவு தானியங்களை தாக்கும் சேமிப்பு பூச்சிகளை  விரட்டிவிடும் தன்மை கொண்டது. பின்னர் நன்றாக வெயிலில் காய வைக்கப்பட்ட பதர் இல்லாத உணவு தானியங்கள் வேப்ப இலை, புங்கன் இலை அல்லது நொச்சி இலைகளுடன் கலந்து மரக்களஞ்சியங்களில் பல பருவங்களுக்கு சேமித்து வைக்கலாம். மிக நீண்ட காலத்துக்கு உணவு தானியங்களை விவசாயிகள் சேமிக்க விரும்பினால் மரக்களஞ்சியங்களில் இருந்து வெளியில் எடுத்து நன்றாக சுத்தம் செய்துவிட்ட காய்ந்த நொச்சி, வேம்பு மற்றும் மஞ்சள் (சிறிய துண்டுகள்) போட்டு மீண்டும் மூடிவிட வேண்டும். மரக்களஞ்சியத்தை விவசாயிகள் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் மண் தொடர்பு இல்லாத வகையில் அமைக்க வேண்டும்.
 
பிற பயன்கள்: 
 
                சிறு விவசாயிகள் வேளாண் பொருள்களை குறைந்த செலவில் இயற்கை முறையில் பாதுகாத்து வேளாண் சந்தைகளில் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம். பெரு விவசாயிகள் மரக்களஞ்சியம் வாயிலாக விதை நெல்லை எளிதாக பாதுகாத்து பயன்பெறலாம். சிறு மற்றும் குறு தானியங்கள் மரக்களஞ்சியம் வாயிலாக நீண்டநாள் பாதுகாத்து வியாபாரிகள் விற்பனை செய்ய முடியும். எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் மரக்களஞ்சியத்தை பயன்படுத்தி வளம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior