உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.யில் விரைவில் பி.ஜி.எல். படிப்பு

                  தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பி.ஜி.எல். (இளநிலை பொது சட்டப் படிப்பு) பட்டப் படிப்பை விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

                தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் 105-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக பி.ஜி.எல். எனப்படும் இளநிலை பொது சட்டப் படிப்பை விரைவில் அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இந்தப் படிப்பைத் தொடங்க முதல் கட்டமாக பொதுவான சட்டம் சார்ந்த பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டவுடன் கல்விக் குழு மற்றும் ஆட்சி மன்றக் குழு அனுமதி பெற்ற பின் பொது சட்டக் கல்விக்கென தனித் துறை அமைக்கப்படும். 

            பல்வேறு சட்டப் பிரிவுகளைச் சார்ந்த சட்டவியல் வல்லுனர்களின் ஆலோசனையுடன் சட்ட கவுன்சிலின் அனுமதியுடன் இந்த பி.ஜி.எல்.- இளநிலை பொது சட்டப் படிப்பு அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் படிப்பில் சேர முடியும்.இப்போது சில பல்கலைக்கழகங்கள் வழங்கும் பிஜிஎல் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றால், சட்டங்கள் குறித்த பொதுவான அறிவை மட்டுமே பெற முடியும்.

                         ஆனால், தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பிஜிஎல் இளநிலை பொது சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரிடம், ஒரு மாதம் நீதிமன்ற நடைமுறைகள் குறித்து பயிற்சி பெறுவது அவசியம். இதன் பின்னரே பிஜிஎல் பட்டம் பெற இயலும். இதற்கு முறையான அங்கீகாரம் பெற சட்ட கவுன்சிலிடம் அனுமதி பெறவும்  திட்டமிடப்பட்டுள்ளது.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.பி.வெங்கட்ரங்கன் காலமானார்


 
சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.பி.வெங்கட்ரங்கன் (72) திங்கள்கிழமை காலை, சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் காலமானார்.
 
              எல்.பி.வெங்கட்ரங்கன் 20-10-1938 அன்று கடலூரில் பிறந்தவர். அண்ணாருக்கு சித்ரலேகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. மக்கள் தொகையியல், எம்.ஃபில், பிஎச்டி முடித்து அதே பல்கலையில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் மக்கள்தொகையியல் துறைத் தலைவராகவும், 1999-2002 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மைய இயக்குநராகவும், 2002 முதல் 2008 வரை துணைவேந்தராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.
 
                இவர் துணைவேந்தராக இருந்த காலத்தில் பல்கலைக்கழக 75வது ஆண்டு விழா, 93வது அறிவியல் மாநாடு ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. இவ் விழாக்களில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 
இரங்கல் கூட்டம்: 
 
               அண்ணாரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமையில் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், தொலைதூரக்கல்வி மைய இயககுநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.பல்கலை. 
 
விடுமுறை: 
 
                    வெங்கட்ரங்கனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

காலமானார் தமிழறிஞர் இரா.சாரங்கபாணி


சிதம்பரம்:

            முதுபெரும் தமிழறிஞர் முனைவர் இரா.சாரங்கபாணி (85) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானார். இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் மாரியப்பாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

               சிதம்பரத்தை அடுத்த தேவன்குடி கிராமத்தில் 21-3-1925 அன்று பிறந்தவர் இவர். அண்ணாருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், அந்துவன் என்ற மகனும் உள்ளனர். இரா.சாரங்கபாணி 1949-82 வரை 32 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும், உயர் ஆராய்ச்சி மைய நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1982-86 வரை 4 ஆண்டுகள் துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1988-94 வரை சிறப்பு நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

                     இவருக்கு தமிழகஅரசின் திருவள்ளுவர் விருது 1998-ல் முதல்வர் மு.கருணாநிதியால் வழங்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு உரை வேற்றுமை 3 தொகுதிகளாக வெளியிட்டவர். சங்கப் பாடல்களுக்கும், திருக்குறள் ஆய்வுக்கும் உலகளவில் பேரறிஞராக மதிக்கப்பட்டவர். நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரும், என்எல்சி நிறுவனமும் இணைந்து சிறந்த எழுத்தாளர் விருது அளித்து பாராட்டியுள்ளன. சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம். மேல்நிலைப் பள்ளிக்குழுத் தலைவராகவும் இருந்து வந்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior