உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 13, 2010

கடலூரில் பேனருக்கு கட்டுப்பாடு சாரத்துக்கு இல்லையா?


 
கடலூர்:  
 
                 டிஜிட்டல் பேனர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பேனர்களைக் கட்டுவதற்கான கழிகளால் அமைக்கப்படும் சாரத்துக்கு இல்லையா? என்ற கேள்வி கடலூரில் எழுந்துள்ளது. மேலும் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறிய செயலாகவே, பேனர் பிரச்னை உருவெடுத்து இருக்கிறது.
 
                   அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, சாலை நெடுகிலும் பெரும் பொருள் செலவில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது, நகரங்களில் புதிய கலாசாரமாக மாறி வருகிறது.ஏற்கெனவே தமிழகம் முழுவதும் மிகப் பெரிய விளம்பர பேனர்கள் வைத்ததால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அந்த விளம்பரங்களுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்து, கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.ஆனால் அந்த விளம்பரங்களையும் மிஞ்சும் வகையில் பன்மடங்கு பிரமாண்டமான  டிஜிட்டல் பேனர்களை அரசியில் கட்சிகளைச் சேர்ந்தோர், சாலை நெடுகிலும் வைக்கத் தொடங்கி இருப்பது, நகரங்களில் பெரும் போக்குவரத்துப் பிரச்னைகளைத் தோற்றுவித்து வருகிறது.நிகழ்ச்சிக்கு, 2 நாள்களுக்கு முன்பு வைத்து, நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அகற்றிவிட வேண்டும் என்று பேனர்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது. 
 
                    இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படுவது குறித்து அண்மையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோபம் அடைந்து, உரிய நேரத்தில் பேனர்களை அகற்றிவிடுமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கடலூரில் டிஜிட்டல் பேனர்களுக்காக சவுக்குக் கழிகளால் கட்டப்பட்ட சாரம், பேனர்கள் அகற்றப்பட்ட பிறகும் கடந்த 15 நாள்களாகப் பிரிக்கப்படாமலும் அகற்றப் படாமலும் இருப்பது, தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். டிஜிட்டல் பேனர்களை வைத்த அரசியல் கட்சியினர், ஏனைய பிரமுகர்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, மறுநாளே அகற்றிவிட்டனர். ஆனால் சாரம் கட்டியவர்கள் இன்னமும் அகற்றாமல் இருப்பது, அவர்களுக்கு என்று தனியாக விதிகள் ஏதும் உள்ளனவோ என்ற ஐயத்தைப் பொதுமக்கள் மனதில் தோற்றுவித்துள்ளது. 
 
                 பஸ் நிறுத்தங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை மறைத்தும் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தும், பல இடங்களில் குழித் தோண்டியும் கட்டப்பட்டு இருக்கும் இந்தச் சாரங்களால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.இன்னொரு நிகழ்ச்சிக்கு, பேனர் வைக்க யாராவது வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் சாரத்தைக் கட்டியவர்கள் விட்டு வைத்து இருக்கிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.இது குறித்து கடலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்டற்கு, "பேனர்களையும் சாரங்களையும் உடனே அகற்றிவிடுமாறு கூறிவிட்டோம். எனினும் அவர்கள் ஏன் அகற்றாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை' என்று வியப்பு தெரிவித்தனர்.நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே கைவிரித்தால், யார்தான் நடவடிக்கை எடுப்பது என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவரம் அறிந்த பொதுமக்கள்.

Read more »

விதை நெல் பிற மாநிலங்களை நம்பி இருக்கும் தமிழகம்


தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பயிரிடும் பிபிடி, பொன்னி விதைநெல் ரகங்கள் பெருமளவுக்கு ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு வருகின்றன.
 
கடலூர்: 

                   தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 325 லட்சம் ஏக்கரில் சாகுபடிப் பரப்பளவு 138 லட்சம் ஏக்கர். இதில் 44.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 34.40 லட்சம் ஏக்கரில் சம்பா நெல், ஏனைய இரு குறுகிய கால பருவங்களில் 10.35  லட்சம் ஏக்கரில் குறுகியகால நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறன.சம்பா பருவத்தில் ஏக்கருக்கு 30 கிலோவும், குறுவை பருவத்தில் ஏக்கருக்கு 40 கிலோவும் விதை நெல் தேவை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

                     ஆனால் வேளாண் துறை சம்பா பருவத்துக்கு 24 கிலோவும், குறுவைப் பருவத்துக்கு 16 கிலோவும் விதை நெல் போதும், செம்மை நெல் சாகுபடி முறையில் மிகக் குறைந்த நெல் விதையே போதும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.எனவே சராசரியாக ஏக்கருக்கு 30 கிலோ வீதம் கணக்கிட்டால் ஆண்டுக்கு 44.75 லட்சம் ஏக்கருக்கு 1.34 லட்சம் டன் விதை நெல் தேவைப்படும். விவசாயிகளின் விதை நெல் தேவையில் 17 சதவீதத்தை, வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக வேளாண் துறை வழங்க வேண்டும் என்பது தமிழக அரசின் விதைக் கொள்கை.17 சதவீதம் நெல் விதையை வேளாண் துறை, அரசு விதைப் பண்ணைகள் மூலமாகவும், அனுமதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும் விநியோகிக்கின்றன. 
 
                    தமிழகத்தில் அனைத்துப் பயிர்களுக்கும் கடலூர் வண்டுராயன்பட்டு, மிராளூர் உள்ளிட்ட 37 அரசு விதை உற்பத்தி பண்ணைகள் உள்ளன.இவைகள் தாங்களே பயிரிட்டு கிடைக்கும் விதை நெல் மூலமாகவும், அனுமதி பெற்ற விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும், வேளாண் துறைக்கு வழங்குகின்றன.பல ஆண்டுகளில் இது முடியாமல்போய், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் உள்ள தேசிய விதைக் கழகத்திடம் கொள்முதல் செய்தும் வழங்குகிறது. மொத்தத் தேவையில் 17 சதவீதத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, தேவையான விதை நெல் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் துறை அறிக்கை வெளியிடுகிறது.

                 மேற்கொண்டு தேவைப்படும் விதை நெல் முழுவதும், கூட்டுறவுச் சங்கங்கள் (மிகக்குறைந்த அளவில்) தனியார் விதை நெல் விற்பனை நிலையங்கள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தும், விவசாயிகள் வைத்து இருக்கும் விதை நெல் மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 60 சதவீதம் விதை நெல் ஆந்திரம், கர்நாடகம் போன்ற பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருகின்றன.ஆனால் இவற்றின் தரம் கேள்விக்குறியாக உள்ளன என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவரும் விதைநெல் உற்பத்தி விவசாயியுமான விஜயகுமார் கூறுகையில், 

                   "தமிழக விதை நெல் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவிலேயே தரமான விதைகளை உற்பத்தி செய்கிறது. விதை நெல்லை பதப்படுத்தும் அரசு விவசாயப் பண்ணைகளின் உற்பத்தித் திறன் போதுமானதாக இல்லை. ஒரு கிலோ விதைநெல்லுக்கு நமது அரசு, பிபிடி ரகத்துக்கு  18-24}ம், பொன்னி ரகத்துக்கு  16-55}ம் வழங்குகிறது.ஆனால் வேளாண்துறை தேசிய விதைக் கழகத்திடம் கொள்முதல் செய்யும் விதை நெல்லுக்கு, கிலோ  28 வரை விலை கொடுக்கிறது. ஆனால் நமது விவசாயிகளுக்கு கிலோவுக்கு  25 விலை கொடுங்கள் என்று 10 ஆண்டுகளாக கேட்கிறோம், ஆனால் பதில் இல்லை.விதை நெல்லுக்கு விலை குறைவாக வழங்குவதால், விதைநெல் பயிரிடும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது' என்றார். தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பயிரிடும் பிபிடி, பொன்னி விதைநெல் ரகங்கள் பெருமளவுக்கு ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு வருகின்றன. இந்த விதைநெல்லில் பல நேரங்களில் கலப்படம் நேர்ந்து விடுகிறது.கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பிபிடி ரகம் நெல்லில் கலப்படம் இருந்ததால், 15 ஆயிரம் ஏக்கரில் மகசூல் பாதிக்கப்பட்டதாக மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

                      தமிழகத்தில் விதை நெல்லைச் சேமிக்க இடவசதி இல்லை. செலவு அதிகம் ஆகிறது. விதை நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் அரசு பணம் வழங்குவதில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் விதைநெல் தரம் கேள்விக்குறியாக உள்ளது. விதை நெல் உற்பத்திக்கு கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் அரசு அதிக சலுகைகள் அளிக்கின்றன. நமக்குத் தேவையான விதை நெல்லை தமிழகத்திலேயே உற்பத்தி செய்தால்தான், தமிழகத்தில் நெல் உற்பத்தியை பஞ்சாப், ஹரியாணா போன்று உயர்த்த முடியும் என்றும் ரவீந்திரன் கூறினார்.

Read more »

மேட்டூர் அணையிலிருந்து போதுமான நீர்வரத்து இல்லை: கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தாமதம்


 
கடலூர்:
 
                 மேட்டூர் அணையிலிருந்து போதுமான நீர் திறந்து விடப்படாததால், கடலூர் மாவட்டத்தில் டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி தாமதம் ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   
 
                கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு 1.54 லட்சம் ஏக்கர் நிலத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.   ஜூலை 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதிலும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கல்லணை ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்பட்டது. கடலூர் மாவட்ட பாசனத்துக்காக கொள்ளிடம் கீழணைக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பெரும்பகுதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்குத் திறந்து விடப்பட்டது. 
 
                    இதன் மூலம் சென்னைக்கு குடிநீருக்கு ஏற்றுவது பாதிக்கப்படாமல் இருந்தது. எனினும் பாசனத்துக்கு போதிய தண்ணீர் திறக்கப்படவில்லை.  செப்டம்பர் 11-ம் தேதி வீராணம் ஏரி பாசனத்துக்குத் திறக்கப்பட்டது. வீராணம் முழு அளவுக்கு நிரம்பாத நிலையில், அதன் பாசன வாய்க்கால்களுக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடும் நீரின் அளவு, வெள்ளிக்கிழமை 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.   
                
                கல்லணைக்கு 12,837 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.  கடலூர், நாகை மாவட்ட சம்பா பாசனத்துக்காக கொள்ளிடம் கீழணைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து நாகை மாவட்ட டெல்டா பாசனத்துக்கு தெற்கு ராஜன் வாய்க்காலில் 323 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டப் பாசனத்துக்கு வடவாறில் 800 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 178  கனஅடி வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.   வடவாறில் இருந்து வீராணம் ஏரிக்கு 600 கன அடி நீர் வழங்கப்படுகிறது. இதில் 73 கன அடி நீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படுகிறது. 350 கன அடி நீர் வீராணத்தின் 28 வாய்க்கால்களிலும் திறக்கப்பட்டு உள்ளது. வேளாண் பணிகளுக்கு இது போதுமானதாக இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.  
 
                       மேட்டூர் அணை பாசனத்துக்கு ஜூலை 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான டெல்டா பாசனப் பகுதிகளில் இன்னமும் சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கவில்லை என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.   இதே அளவு தண்ணீரே தொடர்ந்து திறந்து விடப்பட்டால், சம்பா நாற்றுவிடும் பணிகள் அக்டோபர் முதல் வாரத்துக்குக் தள்ளப்பட்டு, நடவுப் பணிகள் நவம்பர் முதல் வாரத்துக்குச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதனால் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதிப்பைச் சந்திக்கும் நிலையும், சம்பா அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடியும் கேள்விக்குறியாகும் என்றும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.   
 
இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
 
                  மேட்டூர் அணை ஜூலை 28-ல் திறந்தும், போதுமான அளவுக்குத் தண்ணீர் விடப்படாததால், கடலூர் மாவட்ட காவிரி கடைமடைப் பகுதிகளை காவிரி நீர் இன்னமும் எட்டிப்பார்க்கவில்லை.   வீராணத்தில் திறக்கப்பட்ட நீர் வயல்களுக்குள் ஏறிப்பாயவில்லை. இதனால் புளியங்குடி, எய்யலூர், மோவூர், முட்டம் பகுதிகளில் வாய்க்கால் நீரை ஏற்றம் அமைத்து நாற்றங்கால் பணிகளைச் செய்து வருகிறார்கள்.   சுமார் 1000 ஆயிரம் ஏக்கரில் சம்பா நாற்றங்கால் தயார் செயப்பட்டு இருக்கிறது. பல பகுதிகளில் நாற்றங்கால் பணிகளே இன்னமும் தொடங்கப்படவில்லை. 
 
                      இதேநிலை நீடித்தால் பெரும்பாலான பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில்தான் தொடங்கும். நடவுப்பணிகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பரில்தான் முடிவடையும்.   இதனால் அறுவடை பின்னுக்குத் தள்ளப்படும். கடைமடைப்பகுதிகள் தண்ணீர் பற்றாக் குறையையும் சந்திக்க நேரிடும். சம்பா அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடியும் இந்த ஆண்டு செய்ய முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். எனவே கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்குக் கூடுதலாக 1000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior