உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 11, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முதல் வீடு: முதல்வர் கருணாநிதி ஒப்படைத்தார்

சிதம்பரம் :  

                சிதம்பரம் அருகே, கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வீட்டை, முதல்வர் கருணாநிதி நேற்று பயனாளியிடம் ஒப்படைத்தார். திருவாரூர் செல்லும் வழியில், முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாளிகையில் தங்கினார். 

                    நேற்று காலை 9.30 மணியளவில் திருவாரூர் புறப்பட்டார். அப்போது, காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியான குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல் லம்படுகையில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். கடந்த மாதம் 2ம் தேதி, துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வீடு, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். வீட்டை பயனாளி கணேசன் - கஸ்தூரி தம்பதியிடம் ஒப்படைத்து, "வீடு வசதியாக உள்ளதா' எனக் கேட்டார். 

                பின், கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்த விவரங்களை கலெக்டர் சீத்தாராமனிடம் கேட்டறிந்தார்.வல்லம்படுகை ஊராட்சியில் மொத்தம் 595 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டு 82 வீடுகள் கட்டப்பட உள்ளன. வல்லம்படுகையில் 69, வேலக்குடியில் 13 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஒரு வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டும், 10 வீடுகள் முடியும் தருவாயிலும் உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து, 9.50 மணிக்கு வல்லம்படுகை வந்த முதல்வர், அங்கிருந்து 10.04க்கு புறப்பட்டு திருவாரூர் சென்றார். 

                 முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., ரவிக்குமார், கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், குமராட்சி சேர்மன் மாமல்லன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ் ணன், வடக்கு மண்டல ஐ.ஜி., ரமேஷ் குடவாலா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் இருந்து புறப்பட்ட முதல்வருக்கு, வல்லம்படுகையில் மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.  

பயனாளிஉருக்கம்: 

                    துணை முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டு, முதல்வர் கையால் எனக்கு வீடு ஒப்படைக்கப்பட்டது, வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத பாக் கியம். ஒவ்வொரு ஆண்டு வெள்ளத்தின் போதும் எனது கூரை வீடு பாதி மூழ்கி விடும். கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தேன்.  இனி எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. போதுமான அளவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரமாக வீடு கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளது என்று, பயனாளி கணேசன் கூறினார்.

Read more »

சர்வதேச யோகா போட்டி கடலூர் மாணவிகளுக்கு தங்கம்




கடலூர்: 

                       சர்வதேச யோகாசனப் போட்டியில், கடலூர் சி.கே.பள்ளி மாணவியர் தங்கப் பதக்கம் வென்றனர். சர்வதேச யோகாசனக் குழுமம் மற்றும் இலங்கை யோகாசனக் குழுமம் சார்பில் உலக அளவிலான யோகாசனப் போட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் 24, 25ம் தேதிகளில் நடந்தது. இதில், 13 நாடுகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்திய அணி சார்பில் பங்கேற்ற கடலூர் சி.கே.பள்ளி மாணவி மதுமிதா மூன்று தங்கப் பதக்கமும், கவிப்பிரியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.


Read more »

மதுரை காமராஜ் பல்கலையில் ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சி படிப்பு: இந்தியாவில் முதன்முறையாக துவக்கம்

              


                 இந்திய பல்கலையில் முதன்முதலாக, மதுரை காமராஜ் பல்கலையில் ஒருங்கிணைந்த ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்பு துவக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்துள்ளார். மதுரை காமராஜ் பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி.,) அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.

                   கடந்த சில மாதங்களுக்கு முன், பல்கலை துணைவேந்தர் மற்றும் உயிரியல் துறை மூத்த பேராசிரியர்கள் இந்த ஆலோசனையை, மத்திய அரசின் உயிர்தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் முதன்மை குழுவிடம் தெரிவித்தனர். மதுரை காமராஜ் பல்கலையின் வசதியை கருத்தில் கொண்டு, ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்புக்கு அரசு 12 கோடி ரூபாயை வழங்கியது. இத்திட்டத்தை பேராசிரியர் குணசேகரன் ஒருங்கிணைத்து நிர்வகிப்பார். இளநிலை (பி.எஸ்சி.,) படிப்பில் உயிரியல் சார்ந்த படிப்பை முடித்தவர்கள், முதுகலை படிப்பும் (எம்.எஸ்சி., ஜீனோமிக்ஸ் மற்றும் ஆராய்ச்சி படிப்பு) ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம். 

                 இதற்கான முறையான அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாகும். இப்படிப்பிற்கு பல்கலை சார்பில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி 24 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். இப்படிப்பில் சேர்ந்த இரு ஆண்டுகள் கழித்து, மேற்படிப்பு அல்லது வேறு கல்வி நிறுவனங்களுக்கு அல்லது வேலைக்கு செல்ல விரும்பினால், அவர்கள் பல்கலையின் எம்.எஸ்சி., பட்டத்துடன் செல்லலாம். தரத்தில் முதலான 15 மாணவர்கள் 14 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் பிஎச்.டி., படிக்க அனுமதிக்கப்படுவர். 

                     இக்கல்வி முறை வாயிலாக இளநிலை மாணவர்கள் ஐந்தாண்டுக்குள் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டங்களை பெறலாம். இத்திட்டத்தின் மறுபகுதியாக மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப துறையில் ஜீனோமிக்ஸ் யுக்திகளை கையாண்டு, நவீன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியின் மூலம் பலவகை நோய்களுக்கு புதிய மருந்துகள், நோயை முன்னதாக அறிந்து கொள்ளும் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படும். இந்த ஆராய்ச்சிக்காக பல்கலை உயிரியல் துறையில் நவீன ஆய்வு வசதிகளை உருவாக்க, மத்திய அரசு ஐந்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது, என துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior