உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 22, 2010

கடலூரில் பள்ளிகளில் "மாணவ வேலைக்காரர்கள்".. புது கலாசாரம்...

கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், காலையிலேயே வந்து, பள்ளி வளாகத்தை துப்புரவு செய்யும் மாணவிகள்.

கடலூர்:

               கடலூரில் பள்ளிகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்தும் பள்ளி நிர்வாகங்களின் போக்கு, அதிகரித்து வருகிறது.பள்ளிகள் கல்விக் கூடங்களாக கலைமகளின் இருப்பிடமாக இருந்த நிலைகள் எல்லாம் மாறி இன்று நல்ல லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டன. தொழிற்சாலைகளை நடத்திய பலர் அவற்றை மூடிவிட்டு, கட்டணக் கல்விக் கூடங்களை நடத்தத் தொடங்கி விட்டனர்.

                     சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் கூட, அரசின் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டன. பல்லாயிரம் ரூபாயை மாணவர்களிடம், கல்விக் கட்டணமாக வசூலித்துக் கொண்டு, பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தல், கழிவறைகளைச் சுத்தம் செய்தல், வகுப்பறைகளை சுத்தம் செய்தல், அருகில் உள்ள உணவகங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், டீ, காபி, குளிர்பானங்கள் வாங்கி வருதல், ஆசிரியர்களின் உணவுப் பாத்திரங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை, மேற்கொள்ளச் செய்து, மாணவ வேலைக்காரர்களாக அவர்களைப் பயன்படுத்தும் நிலையும் உருவாகி இருப்பது வேதனை அளிக்கும் விஷயமாகும்.

                   குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்ய வற்புறுத்துவதே, குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்று குழந்தைகளுக்கான சட்டம் தெளிவாகத் தெரிவிக்கிறது. குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள், வீட்டு வேலைகளைச் செய்த காலம் எல்லாம் மலையேறிப் போய்க் கொண்டு இருக்கிறது. பொது சேவைக்காக கோயில் வளாகங்களையும், சாலைகளை சுத்தம் செய்வது வரவேற்கத் தக்கதுதான்.பெண் குழந்தைகள், வீட்டில் ராணிகளாய் சுதந்திரமாய் சுற்றிவரும் நிலை ஏற்பட்டு இருப்பதை பலர் மனப்பூர்வமாக அங்கீரித்து இருப்பது, சமூகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம். 

                    ஆனால் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாகச் செலுத்திவிட்டு, அதே பள்ளிகளில் நிர்ப்பந்தம் காரணமாக வேலையாள்களைப் போல், துடைப்பம் எடுத்து துப்புரவுப் பணிபுரியும் மாணவிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது.கடலூரில் சில பள்ளிகளில் மாணவர்களை கட்டுமானப் பணிகளுக்கு செங்கல் எடுத்துக் கொடுக்கும் வேலைக்குக்கூட பயன்படுத்தப்பட்டதாக அண்மைக் காலத்தில் புகார் எழுந்தது. கல்வித்துறை எத்தனை கட்டுப்பாடுகளை விதித்தாலும், மாணவிகளை பள்ளியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தும் நிர்வாகங்களின் போக்கில், எந்த மாற்றமும் இல்லை.

                   கடலூரில் சில பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளிகளுக்கு, அரசின் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளை அழைத்து, விழாக்களை நடத்திவிட்டால் போதும், அதை வைத்துக் கொண்டு, அனைத்து விதிமீறல்களையும் அரங்கேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றன.பள்ளி நிர்வாகத்தின் அத்தகையை மனப்போக்குதான் மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்து இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவிக்கிறார்கள். பிள்ளைகள் அந்தப் பள்ளியில் முறையாகப் பயின்று வெளிவர வேண்டுமே என்ற ஆதங்கத்தில், கல்விக் கட்டண உயர்வைக்கூட எதிர்க்கும் துணிவு அற்றவர்களாய் இருக்கும் பெற்றோர், இத்தகைய செயல்களையும் எதிர்த்து போர்க்கொடி தூக்க முன்வருவது இல்லை.

                   பெற்றோர்களால்தான் முடியவில்லை, கல்வித்துறை அதிகாரிகளாவது அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி நிர்வாகங்களின் இத்தகைய மோசமான செயல்களைத் தடுத்து நிறுத்த முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியே.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

                       "மாணவர்களை கல்விப் பணி தவிர வேறெந்தப் பணிகளையும் செய்ய வற்புறுத்தக் கூடாது என்று, கல்வித்துறை விதிகளில் உள்ளது. புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Read more »

ஆலை உரிமையாளர்கள் கூட்டணியால் சிமென்ட் விலை உயர்வு: பொன்.குமார்


பண்ருட்டி:

                  சிமென்ட், செங்கல் விலை எந்த முகாந்தரமும் இல்லாமல் உயர்ந்துள்ளதற்கு ஆலை உரிமையாளர்கள் கூட்டணி அமைத்து கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் விலை ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் கூறினார்.

பண்ருட்டியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் பேசியது:

                    கட்டுமான உயர் பயிலரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அக்டோபர் 30-ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இதில் தமிழகத்தில் இருந்து 50,000 பேர் கலந்து கொள்வர்.இந்த கட்டுமான உயர் பயிலரங்கத்தின் மூலம் ஏற்கெனவே கட்டுமானத் தொழிலில் உள்ளவர்களின் பணித் திறனை மேம்படுத்தவும், நவீன வளர்ச்சிக்கு ஏற்ப கட்டுமானத் தொழிலில் பயிற்சி பெற உதவும்.

                    இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பிளம்பர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், கொத்தனார், பெயிண்டர் என பயிற்சி அளிக்கப்பட்டு அரசு சான்றிதழ் அளிக்கப்படும்.இந்த சான்றிதழ் பெற்றவர்கள் பெரிய கட்டுமான நிறுவனத்தில் பணியில் சேரவும், வெளிநாடு செல்லவும் உதவும், சுயத்தொழில் செய்ய வங்கிக்கடனும் கிடைக்கும்.கட்டுமான மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டையை கொண்டு மருத்துவ சிகிச்சை பெறலாம் என அறிவித்த தமிழக முதல்வருக்கு விழாவில் நன்றி தெரிவிக்கவுள்ளோம்.

                    மேலும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை இந்த விழாவில் முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.கட்டுமான பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 25 நாள்களுக்கு முன்னர்  150 விற்பனையான சிமென்ட் தற்போது  290 விற்பனையாகிறது.மின் கட்டணம் உயரவில்லை, புதிய வரிவிதிப்பு இல்லை, டீசல், பெட்ரோல் விலை உயரவில்லை, தொழிலாளர் சம்பளம் உயரவில்லை.ஆனால் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆலை அதிபர்கள் கூட்டணி வைத்து விலை ஏற்றம் செய்துள்ளனர் என பொன்.குமார் கூறினார்.

Read more »

நீதிபதி கோவிந்தராஜன் கல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு




 
                  தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் தமிழக அரசின் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தமிழக அரசின் www.tn.gov.in  என்ற இணையதளத்தில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.  நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும்இந்தக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகங்களோ, அரசோ வெளியிடவில்லை.
 
                  இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெளியிட  வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் அரசுக்கு நோட்டீசும்  அனுப்பப்பட்டது.இதைத் தொடர்ந்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
                     10 கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் 10 முதல் 11 ஆயிரம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை நடுநிலைப் பள்ளிக்கு ஆண்டுக் கட்டணமாக 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் சமர்ப்பித்த லாப, நஷ்ட கணக்கு விவரங்களின் அடிப்படையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கு மேல்முறையீட்டில் கட்டணத்தை மறுசீரமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
 
 532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது.:
 
                         அதேபோல், கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை தெரிவிக்காத 532 பள்ளிகளும் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புகார் அளிக்கலாம்:
 
                   நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் வசூலித்திருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குழுவின் இறுதி முடிவுக்கு இது கட்டுப்பட்டது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                  நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்யாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம். பெற்றோர்கள் மகிழ்ச்சி: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை வெளியிட்டிருப்பதால், மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எங்களது பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. 
 
                    இந்த விவரத்தைக் கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் நாங்கள் கேள்வி எழுப்பலாம் என்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சாலமன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்பதே இதுவரை தெரியாத ஒன்றாக இருந்தது. இந்தக் கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிபதி குழு இறுதி முடிவு எடுக்கும் வரை பள்ளிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது. இதுதொடர்பாக, பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior