உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் மருந்துகள் விற்பனை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்:
                  கடலூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை (மார்க்கெட்டிங் சொசைட்டி) சங்கங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                57-வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா கடலூரில் திங்கள்கிழமை கொண்டாடப் பட்டது. 

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நலத் திட்ட உதவிகளை வழங்கியும், சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பேசியது:

                    கடலூர் மாவட்டத்தில் 2007-08-ம் ஆண்டில் 400 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12 கோடியும், 2008-09ம் ஆண்டில் 8,300 குழுக்களுக்கு ரூ.72 கோடியும், 2009-10ம் ஆண்டில் 12,462 குழுக்களுக்கு ரூ.106.5 கோடியும் சுழல்நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாக் கடன் வழங்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.130 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. 6 இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

                கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் மருந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், பண்ருட்டியில் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும். பின்னர் மாவட்டத்தின் பிற ஊர்களிலும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மருந்து விற்பனை செய்யப்படும். கடந்த ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் 167 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து உருக்குலைந்து கிடந்தன. அவற்றுக்கு ரூ.42 கோடி மானியம் வழங்கப்பட்டது இந்த ஆட்சியில் என்றார் பன்னீர்செல்வம். 

                விழாவுக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பிரான்ஸிஸ் மேரி ஞானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

                    கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் எஸ்.ஆர். வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் ந.மிருணாளினி திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

கோயில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் 

                          முன்னதாக திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதி வசதி இல்லாத கோயில்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்கர்கள், பூசாரிகள் 399 பேருக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தங்கராஜ், துணை ஆணையர் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் அரசுப் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கழிப்பறைகள் திறப்பு

கடலூர்:

               கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு லண்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் இகோ-சான், ரூ.6 லட்சத்தில் கட்டிக் கொடுத்துள்ள கழிப்பறைகள் திறப்பு விழா திங்கள்கிழமை நடந்தது.

               லண்டன் இகோ-சான் நிறுவனம் கடலூர் பிளஸ் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கு தலா 40-க்கும் மேற்பட்ட நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, மாணவர்களுக்கான கழப்பறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி திறந்து வைத்தார்.

                 மாணவிகளுக்கான கழிப்பறைகளை இகோ-சான் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி மெக்கிராத் மற்றும் பிளஸ் தொண்டு நிறுவனத்தின் வெயரவர் நீட்ஸ் அமைப்பின் பிரதிநிதி டேவிட் கிராஸ்வலர் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.சுப்பிரமணியன் வரவேற்றார். ஆசிரியர் எம்.ஸ்ரீதர், ஆசிரியை ஜே.எஸ். ஹெலன் ஆகியோர் நன்றி கூறினர்.

Read more »

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள்


                     அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
 
                 அதேநேரம், தங்களுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளது என அந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 163 உள்ளன. இவற்றில் மொத்தம் 10 ஆயிரத்து 600 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுதல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசின் அனுமதி பெற்று இக்கல்லூரிகள் நிரப்பிக் கொள்ளலாம். 
 
                  கடந்த 1999 வரை இந்தக் கல்லூரிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் நேரடி அனுமதியின் பேரில், அந்தந்தக் கல்லூரிகளே நிரப்பி வந்தன. இதில் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகள் நேரடியாகவும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் "கல்லூரி குழு' மூலம் பணியிடங்களை நிரப்பி வந்தன. 1999-ம் ஆண்டுக்குப் பின் தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என புதிய நிபந்தனை கொண்டுவரப்பட்டது.
 
                இந்த நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக 4-4-2000 தேதியன்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய ஒழுங்கு முறையைக் கொண்டுவந்தது. இதன்படி, அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் இரண்டும் தேர்வுக் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பின்னர் கல்லூரி குழு மூலம் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
 
                   இந்த உத்தரவை ஏற்காத அரசு உதவி பெறும் கல்லூரிகள், 2000-ம் ஆண்டுக்குப் பின் காலியான பணியிடங்களில் தாங்களாகவே குறைந்த ஊதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை தாற்காலிகமாக நியமனம் செய்து கொண்டன.2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பள்ளிகளில் புதிதாக பணியாளர்களை தேர்வு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2006-ம் ஆண்டு 600 பணியிடங்களையும், 2007-ம் ஆண்டு 2 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்பிக் கொள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 
 
                    அப்போது, சிறுபான்மை கல்லூரிகள் யுஜிசி-யின் உத்தரவை பின்பற்றாமல் தாங்களாகவே பணியிடங்களை நிரப்பிக் கொண்டன. ஆனால், சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் வேறு வழியின்றி, யுஜிசி விதிமுறைப்படி தேர்வுக் குழுவை நியமித்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொண்டன. இருந்தபோதும், 300-க்கும் மேற்பட்ட இடங்கள் எஞ்சின. மேலும், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் செய்யப்படாததால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக சிறுபான்மை அல்லாத கல்லூரிகளிலேயே ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. 
 
                       இவற்றில் ஒரு சில கல்லூரிகளில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகி இருப்பதோடு, பணிச் சுமை அதிகரித்திருப்பதாக அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு சிறப்பு முயற்சி மேற்கொண்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயகாந்தி கூறினார். 
 
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (நிதி) டி.ஆர்.ஏ. தேவகுமார் கூறியது: 
 
                  அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் அரசு அனுமதித்தும் நிரப்பப்படாத இடங்கள் எத்தனை உள்ளன? மேலும் 30-9-2010 அன்று வரை நிரப்பப்படாத இடங்கள் எத்தனை? என்பவை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
                        மேலும் இந்தக் கல்லூரிகளில் புதிதாக 1,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, அடுத்த இரண்டு மாதங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கிவிடும் என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior